ரோம கரங்கள்

Thalaipagai Tamizhi
கற்பனை
5 out of 5 (23 )

பேருந்து நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எத்தனை பெண்கள் எத்தனை ஆண்கள் என்று எண்ணி பார்க்க ஆசை வந்தது ரேகாவிற்கு. எப்படியும் எண்ணிக்கை சரியாக வர போவதில்லை. ஆனாலும் அப்படி ஒரு தோன்றல் எழும்பி விட்டதே. அவளுக்கு தினுசு தினுசாய் திடீரென்று இப்படி ஏதோவது ஒன்று தோன்றி விடும்.

கங்கையம்மன் கோவில் தெப்பக்குளத்தை அலுவலகம் போகும் அவசரத்தில் கடந்து நடக்கையில் கோவிலுக்கு ஒட்டினாற்போல், தீப்பெட்டி அடுக்குகளாய் வரிசை கட்டி இருக்கும், பூஜை பொருள் கடையில் அரிசி பொறி வாங்கி குளத்தில் உதிரி உதிரியாய் தூவி, கூட்டமாய் மேலெழும்பும் குவிந்த வாய் மீன்களை பார்க்க தேடும். அன்று அலுவலக வேலைகள் அனைத்தும் அந்த குவிந்த வாய்களால் கவ்வப்பட்டே மிச்சப்படும். கண்மூடி கங்கை அம்மன் முன் நிற்கையில் அகல் விளக்கு கடை அக்கா முகம் மூக்குத்தி போட்டு, காரியம் வைத்து அம்மனாய் கண்களுக்குள் தெரியும். படக்கென்று கண்ணை திறந்து முன் அமர்ந்திருக்கும் அம்மனை பார்ப்பாள். ‘ அம்மைகளுக்கும் அம்மன்களுக்கும் தனி தனி சாயலா இருந்துவிட போகிறது. எல்லா சாயலும் ஒன்றுதானே' சினிமா வசனம் போல் இப்படி மனதிற்குள் ஓடும். ஒருநாள் அகல் விளக்கு அக்கா முகம் என்றால், இன்னொரு நாள் மாலை கடை அக்கா. இப்படி மாறி கொண்டே போகும்

அப்படி ஒரு நாள் என்றால், இன்னொரு நாள் தெருவில் நடந்து கொண்டே இருக்கும்பொழுது, எதிர் படும் ஏதோ ஒரு சப்பை கல்லை உதைத்து உதைத்து கூடவே கூட்டிக் கொண்டு போவாள். சட்டென்று உதைத்து கொண்டே வந்த கல்லை ஓரமாய் ஒதுக்கி ஒரு உதை விட்டு அது உருண்டு போய் விழுந்து அமைதி அடைவதை பார்த்துவிட்டு, எனக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் திரும்பி பார்க்காமல் நடப்பாள். ஒரு நாள் அப்படி நடந்த பொழுது, சபரி அண்ணனின் உயிர், மெய் என எல்லாமுமாக இருந்துவிட்டு, அப்பா அம்மாவை மீற முடியாது என்று ஒரே வார்த்தையில் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, திரும்பி பார்க்காமல் கடல் கடந்து ஏரோபிளைன் ஏறி போன கெளரி அண்ணி ஞாபகம் வந்தது. ஊரில் மூன்றாமானவர்களின் முன்னால் எப்போதாவது தன்னை அறியாமல் இப்படி கெளரி அண்ணி என்று சொல்ல வருகையில், நாக்கை கடித்து உள் இழுத்து கொள்ள வேண்டும். இப்பொழுது அதற்கு அவசியமற்றது போய்விட்டது.

கெளரி எதை எதையோ கடந்து போன மாதிரி ரேகாவும், எதை எதையோ கடந்து சென்னை வந்து சேர்ந்து விட்டிருந்தாள்.கடக்காமல் கால் நனையாமல் யாரால் வாழ்ந்து விட முடிகிறது.

ஜன்னல் கம்பிகளுக்கு ஊடாக தெரிந்த, பிள்ளையார் கோவிலை பேருந்து கடந்த பொழுது, வலது கை நடு மூன்று விரலும் நாடியில் அனிச்சையாய் இடதும் வலதுமாக போட்டுக் கொண்டது. பிள்ளையாருக்கும் ரேகாவிற்கும் நிறைய கொடுத்தல் வாங்கல்கள் இருக்கிறது.அது பல வருசத்துக்கு தொடர்ச்சி. சென்னையில் குடியேறிய விடுதியிலும்,முதல் முறை வாசல் திறந்து உள் நுழைகையில், குட்டி பிள்ளையார் சம்மணமிட்டு வரவேற்க, ஓடி சென்று ‘உன்ன சுற்றி சுற்றி வந்ததுக்கு, நான் நினைச்ச மாதிரியே படிச்சு முடிச்ச கையோடு ஒரு வேலையை வாங்கி கொடுத்ததோட , இப்ப இங்கேயும் என்ன பாக்க வந்திட்ட. ரொம்ப தேங்ஸ்' என்று தோப்புக்கரணம் போட்டு அவரை அணைத்துக் கொண்டாள்.

விடுதி நடத்தி கொண்டிருந்த உரிமையாளர் மனைவி, வந்ததும் வராததுமாக தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த ரேகாவை குறுகுறுவென்றூ பார்த்ததும், அதன்பிறகு வந்த நாட்களில் 'பிள்ளையார பார்த்ததும் பச்சை பிள்ளைய கொஞ்சுறதுக்கு வந்தாமாதிரி ஓடி வந்த..’ என்றூ அவளை வம்பிழுத்ததுமென விடுதியில் தங்கி இருந்த மற்ற பிள்ளைகளில் அநேக பேருக்கு ரேகா போட்ட தோப்புக்கரணத்தின் மனக்கண் தரிசனத்தை கிடைக்க வைத்ததெல்லாம் தனிக்கதை. சாமியும் குழந்தையும் ஒன்று தான் என்று ரேகா நினைத்துக் கொண்டாள். இரண்டு பேரிடமும் ஐக்கியமாக அவர் அவர் மொழி புரிந்திருக்க வேண்டும். அது யாரும் யாருக்கும் கற்று தர முடியாத, அதிசய மொழி

நின்று கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையை, மனதிற்குள் எண்ண தொடங்கியிருந்தாள். வாய் அவளை அறியாமலேயே லேசாக முணுமுணுத்தது.இடது ஓரத்தில் அத்தனை நெரிசலிலும் எதையும் சட்டை செய்து கொள்ளாமல் காது மாட்டியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த, முக்கால் கால் ஜீன்ஸ் அணிந்திருந்த பெண்ணை ரேகாவிற்கு பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போனது. சிலரால் மட்டுமே எதற்கும் நடுவில் நின்று கொண்டு, எதனோடும் ஒட்டிக் கொள்ளாமல், காலில் ஒட்டிய கடல் மண்ணை உதிர்த்து கரை ஏறுவது போல எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு மேலேறி செல்ல சுலபமாக வாய்க்கிறது. முக்கால் ஜீன்ஸ் பெண்ணிற்கும், அடுத்து நின்று கொண்டிருந்த வட்ட கொண்டைக்காரிக்கும் மத்தியமாக வலது ஓரத்தில் நின்று கொண்டிருந்த நடுத்தர வயது ஆள், கொண்டைகாரியின் பின்பக்க வட்ட வடிவ ஜாக்கெட் வெட்டிற்கு வெளியே தெரிந்து கொண்டிருந்த சதை பரப்பின் முதுகின் மத்தியஸ்த கோடு வழியாக இறங்கி ஜாக்கெட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டிருந்த வியர்வை துளிகளை கணக்கெடுத்து கொண்டிருந்தான். அவனது நெற்றி ஓரத்தில் இறங்கி அவன் முள் குருத்து தாடியை நனைத்து கொண்டிருந்த வியர்வையை பற்றி அவனுக்கு எந்த பிரக்ஞையும் இருந்ததாக தெரியவில்லை.

ரேகா சென்னை வந்திருந்த முதல் வாரத்தில் இப்படி நெரிசலில் இடுக்கி கொண்டு, நின்றிருந்த பயணத்திற்கு இப்பொழுது அவள் மனம் பயணப்பட்டு போனது.

சென்னையில் மேற்கொண்ட முதல் பேருந்து பயணம். அலுவலகத்திற்கு அருகிலேயே விடுதி எடுத்து தங்கியிருந்ததால், நடராஜ வண்டியிலேயே முதல் ஒரு வாரம் ஓடி விட்டது. பேருந்து ஏறி இறங்கும் அவசியம் இருக்கவில்லை. பலரும் சொல்லி கற்பனையில் பலமுறை பார்த்திருந்த ரங்கநாதன் சாலையின் நிஜ நெரிசலை தன் கற்பனை நெரிசலோடு ஒப்பிட்டு பார்க்க ஆசை எழ வார இறுதியில் தோள்பையை மாட்டிக் கொண்டு தனியே கிளம்பி விட்டாள். கற்பனையில் வரைந்து வைத்திருந்த ரங்கநாதன் தெரு நெரிசலை விடவும் பேருந்தில் அதிகமான நெரிசல் இருந்தது.

வியர்த்து கொண்டு வந்தது. வலது ஓரமாக பின்னால் நின்று கொண்டிருந்த ஆசாமி லேசாக உரசினான். வண்டியின் அசைவில் தெரியாமல் படுகிறதென்று நினைத்து கொண்டு உடம்பை குறுக்கி நின்றாள். மீண்டும் உரசல் பட்டது. வேண்டுமென்றே நடக்கிறது புரிந்து, திரும்பி அவன் முகத்தை பார்த்தாள். வயது ஐம்பதிற்கும் மேல் இருக்கும். எந்த சலனமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தான். தனக்கு தான் பிரம்மையோ என்று ஒரு நொடி தோன்றியது அவளுக்கு. அடுத்த கொஞ்ச நேரத்திற்கு எந்த தொந்தரவுமில்லை.

பேருந்து அடுத்த நிறுத்தத்தை கடந்தது. சிலர் இறங்கி சிலர் ஏறிக் கொண்டார்கள். யார் இறங்க வேண்டும், யார் ஏற வேண்டும் என்று நிறுத்தமே தீர்மானிக்கிறது.பயணத்திலும், வாழ்க்கையிலும். நகர்ந்து இடம் மாற்றி நிற்க, தோதுவாய் இடம் தேடி கண்களை படரவிட்டாள். அவள் நின்றுகொண்டிருந்த பகுதிக்கு முன் பக்கத்தில் ஒரு சிறு இடுக்கு கூட தேரவில்லை. பின் பக்கத்தில் ஒரு சிறு இடமிருந்தது. ஆனால் அங்கு ஆண்கள் நெருக்கடி அதிகமாக இருந்தது. அதனால் மாறி போக வழியில்லாமல், நின்ற இடத்திலேயே நின்று கொண்டாள்.

இன்னும் இரண்டு நிறுத்தங்கள் கடந்தது. மீண்டும் உரசல் பட்டது. எத்தனை முறைத்தும் பயனில்லை. உடம்பில் அட்டை பூச்சி ஊருவது போல் உணர்ந்தாள். தெரியாத இடத்திற்கு தனியாக போகும் பதற்றத்தோடு இந்த பதற்றமும் சேர்ந்து கொண்டது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த கூடைக்காரியும் அவன் செயலை கவனித்து, அவனை முறைத்து பார்த்தாள். அவன் எதற்கும் அசந்து போகிறவனாய் இல்லை.

என்ன செய்வதென்றே தெரியாமல், சுற்றி சுற்றி கண்களை படர விட்டபடி இருந்தபொழுது, மூன்று பேருக்கு அடுத்து ஆண்கள் நெருக்கடி ஆரம்பமாகிற இடத்தில், நின்று கொண்டிருந்த இளைஞன், இருக்கை கம்பியை பிடித்துக் கொண்டிருந்த அவனது அடர் ரோம முழங்கைகளில் ஒன்றை தளர்த்தி, அவன் இரண்டு கைகளுக்கும் இடையில் உள்ள இடத்தில் வந்து நின்று கொள்ளுமாறு சைகையில் சொன்னான். தயங்கி போய் அவன் கண்களை பார்த்தாள். அந்த கண்களில் அவளது எல்லா தயக்கங்களையும் தூக்கி எறிவதற்கு போதுமான நேர்மை இருந்தது. தயக்கத்தை தளர்த்தி விட்டு அந்த ரோம கரங்களின் நடுவில் போய் நின்று கொண்டாள். அப்படி அவள் போய் நின்று கொள்வதை பேருந்தில் ஒரு சிலர் ஏற இறங்க பார்த்தார்கள்.

பேருந்தின் அத்தனை நெரிசலிலும், மேடு பள்ள குலுங்கள்களிலும் கூட அந்த கைகளின் ஒற்றை ரோமம் கூட அவள் மீது உரசாமல், அவள் இறங்க வேண்டிய இடம் வரையிலும் அவளை பாதுகாத்து கொண்டு இறக்கி விட்டது.

‘வீழ்' என்ற குழந்தையின் அழுகை சத்தம் ரேகாவை மீண்டும் இந்த பயணத்திற்கு கூட்டி வந்தது. முன் திறப்பின் மூன்றாவது படிக்கு மேல், இடது இடுக்கில் குழந்தையோடும், வலது இடுக்கில் கட்டப்பை மூட்டையோடும் ஒருத்தி ஏறிக் கொண்டிருந்தாள்.

‘ கொஞ்சம் வழி விட்டிருங்கம்மா, உள்ள போயிடுறேன்' முக்கால் ஜீன்ஸ் பெண்ணையும், கொண்டைக்காரியையும் கடந்து ரேகாவிற்கு அருகில் வந்து நின்று கொண்டாள்.

பையை யாராவது வாங்கி வைத்துக் கொண்டால், உதவியாக இருக்கும், என்பதாக இருந்தது, அவள் பார்வை. ரேகா சட்டென்று எழுந்து கொண்டு, கைப்பிள்ளைக்காரியிடம் உட்காரும்படி சைகை செய்தாள். இப்பொழுது ரேகாவின் முழங்கையிலும் அடர் ரோமங்கள் குருக்க ஆரம்பித்திருந்தது.

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...