வேத புத்தகம் என்பது தனி மனிதனுக்கு தேவன் அருளிய அவருடைய வார்த்தைகள், அல்லது அவரது உள்ளத்தின் விருப்பு வெறுப்புகள் என்று கூறலாம். பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகம் ஆதியாகமம். நாம் வாழும் இந்த பூமி மற்றும் அதில் உள்ளவைகள், வானம் மற்றும் அதில் உள்ளவைகள், சமுத்திரம் மற்றும் அதில் உள்ளவைகள், வனம் (காடு) மற்றும் அதில் உள்ளவைகள் குறிப்பாக மனிதன் எவ்வாறு இறைவனால் படைக்கப்பட்டான் போன்ற யாவையும் குறித்த ஆரம்ப விவரம் / வெளிப்பாட்டை திரை விலக்கி எமக்கு அறிய தரும் புத்தகமாகும். காணப்படும், அனைத்து ஜீவ ராசிகள், மற்றும் எம் கண்களுக்கு புலப்படாத பல உயிருள்ள மற்றும் உயிரற்ற வைகளை குறித்த விவரணங்கள் யாவும் இந்த ஆதியாகம புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
மனிதன் தோன்றிய விதம், அவனது பணி, அவனது வீழ்ச்சி, அவனுக்கான மறுவாழ்வு திட்டம், அவனது பொறுப்புணர்வு, இறைவனின் ஏகாதிபத்தியம், நீதி, இரக்கம், பாவத்துக்கான பரிகாரம், பாவியின் அக மாற்றம், பாவத்துக்கான நியாய தீர்ப்பு, உலகில் மொழிகள் பிறந்த விவரணம், மனித நாகரீகங்கள் தோன்றிய காரியம், விசுவாசித்து கீழ்படிதல், கிருபையின் உடன்படிக்கை, போன்ற அனைத்துக்குமான தனது வேரினை (roots) இந்த "ஆரம்பங்களின் நூலாகிய" ஆதியாகம புத்தகத்தின் வாயிலாக மட்டுமே நாம் அறிய முடியும்.