பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.(உபாகமம் 32:7) என்ற வசனத்தின்படியாக பூர்வ நாட்களை ஒவ்வொருவரும் நினைத்துப்பார்க்க அழைக்கப்படுகின்றோம். ஒவ்வொரு தகப்பனும், ஒவ்வொரு மூப்பர்களும் பூர்வ நாட்களைக் குறித்ததான காரியங்களை அறிவிக்கும்படியாக கட்டளை பெற்றிருக்கின்றார்கள். இந்தியா தேச்த்தின் தென் பகுதி கர்த்தரால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட பகுதியாகும். இருளில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் காணும்படி செய்தார். ஒவ்வொரு மிஷெனெரிகளும் தங்களை அர்ப்பணித்து நம் பகுதிகளில் செய்த ஊழியங்கள் பலவாகும். பாஷை தெரியாத பகுதி, காலநிலையில் சற்றும் சம்பந்தம் இல்லாத புதிய இடம், உணவு பழக்கவழக்கங்களில் புதிய அத்தியாயம் என்று அனைத்து நிலையிலும் தங்களை மறந்து தாங்கள் வந்த நோக்கத்தை மட்டும் நிறைவேற்றி கடந்து சென்றார்கள். சிறுசிறு ஊர்களாக உருவாக்கப்பட்ட நிலையிலிருந்து, திருமண்டலமாக மாறி இன்று அநேக மக்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கின்றது. கடந்த காலங்களில் மிஷனெரிகள் கடந்து வந்த பாதைகள் இன்று பலரால் மறக்கப்பட்ட நிலையில் உள்ளது. மிஷனெரிகளின் அர்ப்பணிப்பும், அவர்களாற்றிய தொண்டும் மறக்கப்பட்ட நிலையில் உள்ளது. மிஷெனெரிகள் நம் பகுதிகளில் ஆற்றிய தொண்டு ஒவ்வொன்றும் கொண்டாடப்பட வேண்டியதாகும். அறிவிப்பவர்கள் இல்லாமல் அறிந்துகொள்ள முடியாது என்ற வார்த்தையின்படியாக மிஷனெரிகளின் அர்ப்பணிப்பையும், அவர்களாற்றிய தொண்டையும் எதிர்கால சந்ததியாருக்கு அறிவிக்க வேண்டியது என்மேல் விழுந்த கடமை என்றெண்ணி பல நூல்களை ஆராய்ந்து “தடயங்கள்” என்ற நூலை படைத்துள்ளேன்.