சி.வி. ராஜன்
'சாந்தீபிகா' எனும் புனைப்பெயரில் தமிழில் சிறுகதைகளும் குறுநாவல்களும், சி.வி. ராஜன் எனும் பெயரில் ஆங்கிலத்தில் கதை கட்டுரை நூல்களும் எழுதும் சி. வரதராஜன், ஒரு ஓய்வு பெற்ற இயந்திரப் இயந்திரவியல் எஞ்சினீயர். ஓய்வு பெற்ற பின், தம் மனைவியுடன் கேரளாவிலுள்ள அமிர்தபுரி ஆசிரமத்தில் தமது சத்குருவான (அம்மா) மாதா அமிர்தானந்தமயி தேவியின் திருவடி நிழலில் வாழ்ந்துகொண்டு ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு வருகிறார்.
படிப்பதும் எழுதுவதும் இவரது பொழுதுபோக்குகள். தமது இருபதாம் வயதிலிருந்தே தமிழில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். பிரபல தமிழ் வார, மாத இதழ்களான கலைமகள், கல்கி, ஆனந்த விகடன், சாவி, மங்கையர்மலர் போன்றவற்றில் இவரது சிறுகதைகள் 1976-90களில் வெளிவந்தன.
இவரது பத்தொன்பது சிறுகதைகளைத் தவிர, இவர் எழுதியுள்ள மூன்று குறுநாவல்களும், மின் நூல்களாக அமேஸான் கிண்டில் வழி வெளிவந்துள்ளன.
இவை எல்லாவற்றையுமே, பிரபல பன்னாட்டு ஒலி நூல்கள் வெளியிடுவோரான ‘Storytel’ நிறுவனத்தார் ஒலி நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்.
இவரது இந்த ராமாயண நூலும், ‘ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மிகம்’ எனும் தொகுப்பும், ‘கதையில் வராத பக்கங்கள்’ எனும் சுவையான வாழ்க்கை அனுபவங்களும், ‘கதை ஓசை’, ‘Storytel ஒலிநூல் தளங்களில் தொடர்களாக ஒலி வடிவில் வந்துள்ளன.
2020-21 இல் இவர் எழுதிய வேறு இரு குறு நாவல்களும், ஒரு சிறுகதையும் எழுத்துவடிவில் எங்கும் பிரசுரிக்கப் படாமல், முற்றிலும் ஒலிப்புத்தக வடிவில் ஏற்கனவே ‘ஸ்டோரிடெல்’ நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன.
தவிர இவரது நான்கு ஆங்கில நூல்களும் அமேஸானில் பிரசுரமாகியுள்ளன.
இவரது முப்பதாவது ஆவது வயது தொடங்கி இவருக்கு இந்து மதம் காட்டும் ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் வந்தது. காஞ்சி மஹா சுவாமிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பகவான் ரமணமகரிஷி போன்ற மகான்களின் வாழ்வும், வாக்கும் இவரில் ஏற்படுத்திய தேடல், இவரை அம்மாவின் திருவடி நிழலில் கொண்டு சேர்ப்பித்தது.
இவரது கதைப் படைப்புகள் பலவற்றிலும் ஆன்மிகத்தின் ஒரு சிறு தாக்கமாவது இருப்பதைக் காணமுடியும்.
இவரது 50+ வயதில் இவர் எழுதிய தமிழ் கட்டுரைகள் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தினரின் 'ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்' ஆன்மிக மாத இதழ்களில் அவ்வப்போது வெளி வந்தன. அம்மடத்திற்கு சில ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் தந்தார்.
சமீப காலத்தில் இவர் பிரபல 'கேள்வி-பதில்' இணைய தளமான' Quora.com (கோரா) - இல் ஆங்கிலத்திலும் தமிழிலும் தலா ஆயிரத்துக்கும் மேலான பதில்களை எழுதியுள்ளார்.
இந்து மதத்தின் பற்பல பக்கங்களைப் பற்றி இக்கால இளைஞர்களும் ஆழமாக அறிந்து கொள்ள உதவும் வகையில் இவர் hinduismwayoflife.com எனும் இணைய தளத்தையும் உருவாக்கியுள்ளார்.