அறியாமையாகிய அடரிருள் காட்டில், திசை தெரியாமல் திரிந்தலைந்து, கேள்விகள் கேட்கும் மூடப்பிராணிகளான என் போன்றோர்க்கு, மெய்யறிவு நெறியை புரிந்து கொள்ளும் வகையில் “சில்வகை எழுத்தின் பல்வகைப் பொருளைச் செவ்வன் ஆடியின் செறித்து”, பக்தி, அறிவு (ஞானம்), வினைகள் (கர்ம) வழியான வாழ்வின் செயல்முறைகளை, எளிய ஸமஸ்க்ருதத்தில் அரிய கருத்துகளைக் கொண்ட முப்பத்தி ஒன்று ஸ்லோகங்களாக நமக்கு வழங்குகின்றனர் ஆதி சங்கரரும் அவரது சீடர்களும், “பஜ கோவிந்தம்” எனும் படைப்பினில்.
இந்த செயல்முறைகள், மாற்ற முடியாத கடந்த காலத்தைப் பற்றிய குற்ற உணர்வின்றியும், அறியப்பட இயலாத எதிர்காலத்தைப் பற்றிய கவலையின்றியும், நிகழ்காலத்தில் நாம் வாழ உதவுகின்றன.
வேதாந்த தத்துவங்கள் அடங்கிய இந்த படைப்பின் விளக்கவுரைகள் ஏராளம். எனினும், குருவிடமிருந்து நான் அறிந்தவற்றின் தமிழாக்கமே இந்நூல்.