பிள்ளைகள் கடவுளால் நமக்கு அருளப்பட்டவர்கள். அவர்களை தேவ பக்தியில் வளர்ப்பதற்காகவே கடவுள் நம்மிடம் தந்துள்ளார். ஒவ்வொரு பிள்ளையைக் குறித்தும் ஒரு பெரிய திட்டத்தினை தேவன் வைத்துள்ளார்.
பிள்ளைகள் பெற்றோரின் வாழ்வினையே உற்றுக் கவனிக்கிறார்கள்.எனவே பெற்றோர் முன்மாதிரி மிக முக்கியமானதாகும்.அன்பும் அரவணைப்பும் உள்ள பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் சீரான ஆளுமையுள்ளவர்களாக வளர்க்கப்படுகின்றனர். குழந்தை வளர்ப்பில் தாயின் கடமை, தந்தையின் கடமை, குழந்தையின் அறிவு,மனம், ஒழுக்கம் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சி தனி ஜெப வாழ்வு குடும்ப ஜெபம் போன்றவைகளை இப்புத்தகம் விளக்குகிறது.
'பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்' சங்.127:4.
. நம்முடைய வாரிசுகள் கர்த்தரால் நமக்குக் கிருபையாகக் கொடுக்கப்பட்ட ஈவு. அவர்களை கர்த்தருக்கு பயப்படும் பயத்தில் கிறிஸ்துவின் சுபாவத்தில் வளர்ப்பது பெற்றோரின் கடமையாகும். நம்முடைய இன்றைய குழந்தைகள் பின்நாட்களில் ஆண்டவருக்காக பயன்படுத்தப்படும் பரிசுத்த பாத்திரங்கள். ஒவ்வொரு பிள்ளையையும் இறைவன் படைக்கும் போதே ஒரு நோக்கத்துடன் படைக்கின்றார்.
தேவ பக்தியில் பிள்ளைகளை வளர்க்கும் பொது பின்நாட்களில் அவர்கள் கர்த்தருக்காய் பெரிய காரியங்களை செய்கிறவர்களுக்காக மாறுவார்கள். குழந்தையை வளர்ப்பதில் தாயும், தகப்பனும் இணைந்து வளர்த்திட வேண்டும். தேவ பக்தியுள்ள தாயும், தேவ பக்தியுள்ள தகப்பனும் தேவ பக்தியுள்ள சந்ததிகளை உருவாக்க முடியும்.
கடவுள் பயமுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகளை கடவுளுக்கு பயப்படுகிறவர்களாக வளர்க்கின்றனர்.குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பக்தியும், அறிவுத்திறனும் இணைந்து குழந்தைக்கு சிறப்பான பாதிப்பினை உருவாக்குகிறது.