‘மனம் போல் வாழ்வு’ – உண்மைதான். ஆனால், அந்த மனதை யார் சீர் செய்வது? பணம் இருப்போர் மனமருத்துவரிடம், அறிவு இருப்போர் ஞானிகளிடம் செல்லலாம். சரி, அவற்றை நம் மனம் ஏற்றுவிடுமா என்ன? ஆனால் புண்ணியம் இருப்போருக்கு இந்த நூல் ஒன்றே போதும், நம் மனம் கட்டாயம் ஏற்கும். இறைவனை அறிய வைத்து, பார்க்க வைத்து, மனதை லயிக்க வைக்கும் தொழில் நுட்பத்துடன் அமைந்துள்ளது. இந்த நூல் இறைவனிடம் நம்மை அழைத்துச் சென்றுவிட்டு, ‘அனுப்பிய இறைவனைப் பிடித்திடு மனமே’ என்று முடிக்கும் போது, உணர்வுகள் சிலிர்க்கின்றன. ‘சுலபமான இந்த ஒற்றைத் தீர்வு இருக்கும் போது ஆயிரம் தீர்வுகளுக்காக ஏன் சுற்றித் திரிந்தாய் மூடனே’ என நம்மைப் பார்த்து நகைக்கிறது. எத்தனையோ துயரங்களும் வலிகளும் காணாமல் போகின்றன. வேண்டியவைகளுக்கான வாய்ப்புகள் தானே அமைகின்றன. இறை அருளைக் கிடைக்க வைத்து, அனுபவிக்க வைக்கிறது. யாருக்கு வாழ்க்கையில் எது லக்ஷியமோ இருந்தாலும் சரி, சிரமங்கள் என்னவோ, தேவையான சாதனங்களும் தீர்வுகளும் என்னவோ, இந்த ஒரு நூல் அனைவருக்கும் உதவும் முக்கியமான சாவி. ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ எதையும் விட சிறந்தது என்று சொன்னது இந்த நூல் எழுத்துக்கு நிச்சயமாகப் பொருந்தும். இந்தப் புத்தம் சிறியதுதான். ஆனால் அது சரியான மாத்திரை. மீண்டும் மீண்டும் படிக்கப் படிக்க நம்மை இறைபலசாலியாக அதிர்ஷ்டசாலியாக ஆக்கிவிடுகிறது. நாஸ்திகர் மேற்கத்தய விஞ்ஞானிகளின் கருத்துக்களில் உள்ள குறைகளை ‘கேள்வி-பதில்’ பகுதியில் எடுத்துக் காட்டி, அவர்களால் நமக்குள் ஏற்பட்டு உள்ள ஆழ் மன பாதிப்புகளை நீக்குகிறது. சில பக்கங்களிலேயே சிறந்த அறிவுத் தெளிவை ஏற்படுத்துகிறது. இந்த ஒரு நூல் நம் வாழ்வில் பல ஆயிரம் நன்மைகளை செய்துவிடும் என்றால் அது ஒரு சிறிய பாராட்டுதான்.