திருக்குறள் நெறி நின்ற சான்றோர்கள்' என்ற இந்த நூலில், இந்திய அளவில் மட்டும் அல்லாது உலகளாவிய அளவிலும் சான்றாண்மையுடனும், மனித நேயத்துடனும் வாழ்ந்து மறைந்த அரசியல் தலைவர்கள், பண்டைய மன்னர்கள், அறிவியலாளர்கள், தேசத்தலைவர்கள், சமுதாயப் பற்றாளர்கள் இவர்களின் வரலாறு, வாழ்க்கைமுறை, அவர்கள் வாழ்வில் கடைப்பிடித்த வாழ்வியல் தத்துவங்கள், நெருக்கடியான நேரங்களில்அவர்கள் கையாண்ட யுக்திகள் வள்ளுவத்தின் மூலமாக விவரிக்கப்பட்டுள்ளது.
பேராண்மை மிக்க தலைவர்களின் மாட்சிமைகள் மட்டுமன்றி நயவஞ்சகர்கள் மற்றும் கொடுங்கோலர்களின் கயமைத்தன்மையையும் அவரவர் செயலுக்குப் பொருந்திய குறள்களின் வாயிலாக இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சமுதாயத்தில் கணிப்பொறியையும், கைப்பேசியையும் லாவகமாக
இயக்கத் தெறிந்த இளைஞர்களுக்கு வள்ளுவம் காட்டும் சான்றாண்மைக்குரிய
உயரிய குணங்களான அன்பு, நாணுடைமை,கருணை, ஈகை, வாய்மை ஆகிய பண்புகளை வாழ்க்கையில் நெறிப்படுத்த தெரியவில்லை.
இந்த நூல் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல சிந்தனையுடனும் சமுதாயத்தின் மேல் அக்கறையுடனும் நேர்மையுடனும் வாழ வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
பண்டைய காலத்தில் அறிஞர்களும் சான்றோர்களும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்த செயற்கரிய செயல்களை அறிந்து, அதை குழந்தைகளுக்கு நீதிக்கதையாக போதிக்க முனைபவர்களுக்கும் , முக்கியமாக சான்றோர்களாக வாழ விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் ஒரு கையேடாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அறிவியலாலும் தொழில் நுட்பத்தாலும் ஒரு மேம்பட்ட சமுதாயத்தை மட்டும்தான் உருவாக்க முடியும். ஒரு பண்பட்ட சமுதாயத்தை சான்றோர்களால் மட்டும்தான் உருவாக்க முடியும்.