நாம் வாழும் இந்த உலகம் நம்பமுடியாத பல அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்தது. இந்த மர்மங்களைத் தேடிச்சென்றால் நாம் முடிவிலா ஒரு பயணத்தில் மாட்டிக் கொள்வோம். மர்மங்கள் மீது அனைவருக்குமே ஒரு இனம் புரியாத ஆர்வம் இருக்கும். அறிவியல் அறிஞர்களாலும் விடை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு விடைதெரியாத சில விசித்திரமான நிகழ்வுகளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. வசந்த காலத்தில் வந்து குரலில் தேனைத் தூவும் குயில் குளிர் காலத்தில் எங்கே போகிறது என்பது கூட மனித அறிவுக்கு எட்டாத புதிர் தான். இது போல அறிவுக்கு எட்டாத எத்தனை எத்தனையோ புதிர்கள் இந்த புவிக் கோளத்தில் இன்னும் புன்முறுவல் பூத்துக் கொண்டிருக்கின்றன.
ஏன்? எதற்கு? எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்குள் அடங்காத அந்த புதிர்களின் கதகதப்பை உணரச்செய்கிறது இந்தப் புத்தகம். நாம் இதற்கு முன்பு அறிந்த வேற்றுகிரகவாசிகள், பறக்கும் தட்டுகள், ஆவி, பேய் எனும் குறுகிய வட்டத்திற்குள் இது அடங்காது. அதற்கும் மேலாக பல்வேறு சுவாரஸ்யமான விடை தெரியாத மர்மங்களின் கருப்பு பக்கங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள பல்வேறு வகையான ஆச்சர்யமான தகவல்கள் வாசகர்களாகிய உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தரவுகள் மற்றும் புகைப்படங்களோடு தொடர்புடைய இணையதளங்கள் மற்றும் நூலாசிரியர்களுக்கு எனது இதய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.