JUNE 10th - JULY 10th
மதிய சாப்பாட்டை சாப்பிட்டு அது தந்த சோம்பலில் அரை உறக்கத்தோடு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அந்த அலுவலகத்தில்.. ஏசி குளிர் அவர்களை சுகமான உறக்கத்தில் தள்ள தன்னால் போதுமான முயற்சிகளை செய்து கொண்டிருக்க அவர்கள் கண்முன்னே தன்னுள் முழுவதும் வேலையை நிரப்பிக் கொண்டு என்னை கவனி என்று கொக்கரித்தன கணினிகள்.
" வாசுகி.. இன்னிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.. நம்மளோட லெதர் கம்பெனிக்கு வருண போக சொன்னேன்.. மேனேஜருக்கு ஃபோன் பண்ணி கேட்டா சார் இன்னும் வரவே இல்லன்னு சொல்றான்.. இது எவ்வளவு முக்கியமான மீட்டிங்.. ஒரே பையனு இவனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு.. இன்னைக்கு நம்ம பேச்ச அறவே கேட்க மாட்றான்".. மனைவி வாசுகியிடம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் நல்லசிவம்..
இவர்கள் குடும்பத்தை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கோடிக் கோடியே கோடிஸ்வரர்கள்.. எத்தனை தொழில்கள் இருக்கிறது என்று இவர்களுக்கே மொத்தமாக கணக்கு தெரியாது.. சில பேருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டுவதை போல எந்த தொழிலில் இவர்கள் பொழுது போகாமல் காலை எடுத்து வைத்தாலும் அந்த தொழிலில் கொடிகட்டிப் பறப்பது இவர்களின் ஸ்பெஷல் குவாலிடி..
ஆஸ்திக்கும் ஆசைக்கும் பிறந்த ஒரே செல்வமகன் வருண். கணக்கு வழக்கே தெரியாமல் பணம் கொட்டிக் கொண்டு இருப்பதால் உலகத்தில் உள்ள அனைத்து கெட்ட பழக்கங்களையும் கற்று வைத்துக் கொள்வதே அவனது முதன்மைக் கடமையாக இருந்தது.. சிறுவயதில் இருந்து வருண் எந்த தவறு செய்தாலும் பணத்தை கொடுத்து அதை சரி செய்து விடுவார் நல்லசிவம்..
அந்தப் பழக்கம்தான் அவனை இந்த அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது.. மது மாது போதை இப்படி என்னேரமும் மது உண்ட வண்டின் தள்ளாட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தான் வருண்..
" நீங்க டென்ஷன் ஆகாதீங்க.. ஏற்கனவே உங்களுக்கு பிபி எக்கச்சக்கமா இருக்கு.. இருங்க நான் அத்தைக்கு கால் பண்ணி கேட்கிறேன்.. " வாசுகி கணவனை சமாதானப்படுத்தி விட்டு தனது மாமியாருக்கு அழைத்தார்.
ட்ரிங் ட்ரிங்..
" ஹலோ"
" ஹலோ அத்தை நான் தான் வாசுகி பேசுறேன்.. வருண் வீட்ல தான் இருக்கானா.. இன்னிக்கு ஒரு இம்போர்ட்டண்ட் மீட்டிங் இருக்கு அத அவன் அட்டன்ட் பண்ணியே ஆகணும்.. எங்க போய்ட்டான்"..
" தூங்குறான் வாசுகி.. காலையிலிருந்து அவன் ரூம விட்டு வெளிய வரவே இல்ல.. சாப்பிட கூட எத்தனையோ தடவை ஆளுங்க போய் கதவ தட்டினாங்க..திறக்கவே இல்ல.. இது என்ன புதுசா உன் மகனுக்கு.. ராத்திரி பூரா பார்ட்டி அது இதுன்னு சொல்லிட்டு குடிச்சு கூத்தடிச்சு பகல் பூரா தூங்குறது.. என்னதான் ஆனைகட்டி போரடிக்குற பரம்பரையா நாம இருந்தாலும் இப்படியா செய்ய சொல்லுது..".. அத்தையம்மாள் எப்போதும் போல பேரனின் நலனுக்காக மருமகளை கடிந்து கொண்டார்.
"அத்தை இப்போ எதுக்கு தேவை இல்லாம பேசுறீங்க..அவன் இதனால வீணா போறான்னு சொல்றீங்களா.. கையில காசு இல்லாம அடுத்த வேளை சோத்துக்கு வக்கில்லாத பசங்களே குடியும் கூத்துமா இருக்காங்க இந்த காலத்துல.. அப்படி இருக்கும் போது இன்னும் பத்து பதினைந்து தலைமுறை வந்தா கூட நம்ம சொத்து அழியாது.. என் மகன் இருக்கிற சொத்தை அனுபவிக்கிறதுல உங்களுக்கு என்ன வந்துச்சு" காட்டமாக மாமியாரை பிடித்து காய்ச்சினார் வாசுகி..
" ஆமா நான் சொன்னா மட்டும் கேட்கவா போறீங்க.. ஒருநாள் இப்படி உன் பையன வளர்த்ததுக்கு நீ ரொம்ப வேதனைப்படுவ வாசுகி.. அந்த நாள் ரொம்ப தொலைவுல இல்ல.."நல்ல காலத்திலேயே வாசுகிக்கு மாமியாரை கண்டால் பற்றிக் கொண்டு வரும். இந்த அழகில் தனது ஆசை மகனை வசைபாடும் மாமியாரை கொன்று போடும் ஆத்திரம் வாசுகிக்கு..படக்கென்று அழைப்பைத் துண்டித்தார்.
இது இப்படியே இருக்க அடுத்த சில தினங்களில் கல்லூரி மாணவி ஒருத்தியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்தில் வருணின் பெயர் அடிபட்டது.. நல்லசிவம் மகனை தனியாக அழைத்து விசாரித்தார். முதலில் தான் இதனை செய்யவில்லை என்று மறுத்த வருண் பின்பு என்ன நினைத்தானோ திமிராக அதனை ஒப்புக் கொண்டான்.
"டேட் ஆமா அத நான் தான் பண்ணேன்.. இப்போ என்ன நடந்துச்சு.. ஊர் உலகத்துல நடக்காததையா நான் செஞ்சிட்டேன்.. ஒழுங்கா கூப்டேன்.. ஓவரா சீன் போட்டா. தூக்கிட்டேன்.. அன்னிக்கு நிதானத்துல வேற இல்லையா அதான் கொஞ்சம் ஹார்ஸா நடந்துகிட்டேன்.. பட் டேட் நான் அவள தூக்கி சாக்கடையில வீச சொல்லல.. பவின் கிட்ட மச்சான் மேட்டர முடிச்சிட்டு அவள எங்கயாச்சும் கொண்டு போயி எரிச்சிடுனு சொன்னேன்.. இடியட் போதையில இப்படி பண்ணிட்டான்..லீவ் இட் டேட்.. இதெல்லாம் ஒரு இஸ்சுவே இல்ல" எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் வாழ வேண்டிய ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டு தோள்களைக் குலுக்கினான் வருண்..
காவல்துறையினர் வருணுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி கொண்டிருந்தார்கள்.அந்தப் பெண் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த நேரத்தில் வாக்குமூலம் கொடுத்திருந்தாள்.. ஆதாரங்களை விட வாக்குமூலம் போதுமானதாக இருந்தது வருணை கைது செய்ய..வருணை கைது செய்து பதினைந்து நாள் ரிமைன்டில் வைத்திருக்க நல்லசிவம் தனது செல்வாக்கை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், தங்கை, திருமணமான அக்கா, என அந்தப் பெண்ணின் குடும்பத்தில் இருந்த அத்தனை பெண்களையும் தூக்கினார்..
வருணின் கொடூரத்தால் பிறப்புறுப்பு சீரழிக்கப்பட்டு, ஒரு பக்க மார்பகம் நெருப்பால் பொசுங்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் கிடந்தாள். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு இப்படி ஆனதை மீடியாக்கள் தங்களது சேனலின் டிஆர்பிகாக தீனி போட்டு பெருசாக்கி மிகுந்த மனவேதனையை உண்டாக்கி கொண்டிருந்தார்கள். அப்பெண்ணின் தந்தை உயிரற்ற உடலாய் அலைந்து கொண்டிருந்த வேளையில் வீட்டில் இருந்த பெண்கள் அனைவரும் காணாமல் போக இடிந்து போனார்.
நல்லசிவம் அவரை அழைத்து"தோ பாருய்யா ஏதோ என் பையன் ஆசைப்பட்டு தெரியாம தப்பு பண்ணிட்டான். அவன் எனக்கு ஒரே பையன்.. ஒழுங்கா உன் பொண்ண கேஸ் வாபஸ் வாங்க சொல்லு.. உன் பொண்ணு நான் தெரியாம சொல்லிட்டேன்.. வருண் என்ன கெடுக்கலனு சொல்லிட்டா என் பையன் வெளியே வந்துடுவான்.. அப்படி இல்லன்னா உன் பொண்ணுக்கு நடந்தது உன் வீட்ல இருக்குற மத்த பொம்பளைகளுக்கும் நடக்கும்.. ஒழுங்கு மரியாதையா நான் சொல்றத கேட்டா உங்க எல்லாருக்கும் நல்லது.. " கால் மேல் கால் போட்டுக் கொண்டு விலை உயர்ந்த சிகரெட்டை புகைத்து கொண்டே நல்லசிவம் பேச நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அந்தப் பாவப்பட்ட தகப்பன் வேறு எதை பேசுவார்?
வருண் குற்றவாளி அல்ல என்று போலீசாரே அவனை விடுதலை செய்து விட்டனர்.. பாதிக்கப்பட்ட பெண் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை எதுவுமே செய்ய முடியாத மன விரக்தியில் மாண்டு போனாள்.. அங்கே பப்பில் வருண் தன் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்க இங்கே பச்சைப் பாடை பின்னி, தினமும் போண்ட்ஸ் கிரீம் போட்டு பளபளத்த முகத்தில் மஞ்சளை பூசி, கண்ணுக்கே தெரியாமல் பாவையவள் வைக்கும் கருப்பு பொட்டுக்கு பதிலாக பெரிய குங்குமப் பொட்டு வைத்து, நல்லநாள் பெருநாளுக்கு இன்னைக்கு ஒரு நாளாச்சும் சேலை கட்டுடி என அம்மா கெஞ்சியது போக, இப்போது புத்தம் புது குங்கும நிற பட்டுச்சேலையில் தனது இறுதி பயணத்தை மேற்கொள்ள, கலங்கம் சுமந்து புறப்பட்டாள் பாவப்பட்ட நங்கை.
"ஐயோ எம்பொண்ணு.. கடவுளே நான் கும்பிட்ட சாமி எல்லாமே என்ன கை விட்ருச்சே..படிச்சு பெரிய ஆளா வருவேன்.. உன்னயும் அப்பாவயும் ராஜா ராணி மாதிரி பாத்துப்பேனு நாள் முச்சுடும் சொல்லுவாளே.. என் தங்கமே.இப்படி அள்ளி கொடுக்கவாடி உன்ன பெத்து வளத்தேன்.. ஐயோ என் பெத்த வயிறு பத்தி எரியுதே.. என் பொண்ண இப்படி பண்ணவன் அங்க சொக போகமா இருக்கான்.. இந்த உலகத்துல சாமி கூட மண்ணா போய்டுச்சே.." பத்து திங்கள் சுமந்து பெற்ற மகளை வாரிக் கொடுத்த வயிற்றெரிச்சலில் அந்தத் தாய் மயங்கி விழுந்தார்..
தெரு முனையை தாண்டும் போது அங்கே ஆலமரத்தடியில் வீற்றிருந்த பிள்ளையாரை கண்ணீரோடு பார்த்தாள் பாதிக்கப்பட்ட நங்கை..
" எப்பயும் நான் வெளிய போகும்போது உன் கிட்ட சொல்லாம போனதில்ல. அன்னைக்கும் உன்கிட்ட சொல்லிட்டு தானே போனேன்.. என்ன இப்படி கை விட்டுட்டியே.. உனக்கும் மனுஷங்களுக்கும் என்ன வித்தியாசம்? பணம் இருந்தா போதுமா? பண்ண தப்புக்கு தண்டனை இல்லையா?"கல்லாய் இறுகிப்போன கணபதியிடம் காற்றாய் அவள் கண்ணீர் விட்டு சென்றாள்.
வீட்டில் அத்தையம்மாள் மகன் மருமகளை முடிந்த மட்டும் வார்த்தையால் வறுத்தெடுத்தார்" மா இப்ப என்ன நடந்து போச்சுனு நீ இந்த குதி குதிக்கிற"
"அதானே.. இந்த மாதிரி பெரிய இடத்துல இதெல்லாம் சகஜம்.. நீங்க எதுக்கு சும்மா ஓவரா சீன் போடுறீங்க.. என் பையன எப்படி வளக்கணும்னு எனக்கு தெரியும்.. உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க.. வயசாயிருச்சு தவற மண்டையில அறிவே கிடையாது. போடுறத தின்னுட்டு ஓரமா ஒக்காந்தா என்ன.." வாசுகி பேசிய பேச்சில்
" இந்தாடியம்மா.. நீ ஒன்னும் எனக்கு பிச்சை போடல.. இது எல்லாமே என் மாமனார் சொத்து.. இன்னும் என் பேர்ல கொஞ்சம் சொத்து இருக்கு. பேராசைல்ல அதையும் புடுங்க தானே என்னை இன்னும் கூடவே வச்ச சோறு போடுறீங்க.. ரொம்ப நடிக்காதடி..உன் பையன் பண்ண தப்புக்கு மூல காரணமே நீதான்.. சின்ன வயசுலயே அவனக் கண்டிச்சு வளர்க்காம இந்த அளவுக்கு அவன் நாசமா போக காரணம் நீ கொடுத்த செல்லம்தான்..இப்போ சொல்றேன் கேட்டுக்கோ.. அந்தப் பொண்ணோட சாபம் உங்களையும் உன் பையனையும் சும்மா விடாது..
அனுபவிப்பிங்க நீங்க ரெண்டு பேருமே அனுபவிப்பிங்க..இந்த கேடுகெட்ட குடும்பத்துல இனியும் இருக்க எனக்கு இஷ்டமில்ல..என் வழிய பாத்துட்டு நான் போறேன்" வக்கீலை வரவழைத்த அத்தையம்மாள் அவர் பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் ஏழை குழந்தைகளின் படிப்பு செலவிற்கு எழுதி வைத்துவிட்டு காசிக்கு பாதயாத்திரையாக சென்று விட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இன்று பதினாறாம் நாள் காரியம் செய்யப்பட்டுக் கொண்டு இருந்தது.. இன்னும் சற்று நேரத்தில் அவள் இங்கிருந்து சென்று விடுவாள்.. இந்த உலகத்தில் தான் ஏன் பிறந்தோம்? எதை சாதித்தோம்? நிறைய கனவுகளோடு ஒரு சராசரிப் பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்தவள் வாழ்வில் எதற்காக இப்படி ஒரு சாபம்? மனம் நிறைய வேதனையோடு தன் உறவுகளை முடிந்த மட்டும் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தாள் காற்றாக உருமாறிருந்த கன்னியவள்.
இங்கே விடிய விடிய நண்பர்களோடு குடித்து கும்மாளம் அடித்து விட்டு காலையில் வீடு வந்து சேர்ந்தான் வருண்.அன்று நல்லசிவம் ஊரில் இல்லை..முக்கியமான மீட்டிங் ஒன்றுக்கு வாசுகி செல்ல வேண்டும். அதேபோல் இன்னொரு மீட்டிங் இருந்தது. நல்லசிவம் ஊரில் இல்லாததால் வருண் தான் அதனை சென்று பார்க்க வேண்டும்.. மகனை எழுப்ப அறைக்குச் சென்றார் வாசுகி..
அங்கே பல விதமான போதைகளை கலந்தடித்து பெரும் போதையில் சுய நினைவில்லாமல் கிடந்தான் வருண்.. மகனை இந்த நிலையில் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்கள் கண்டால் மானம் போய் விடும் என கதவை சாத்திவிட்டு எழுப்பினார் வாசுகி.அவன் அப்பொழுதுமே எழாமல் இருக்க பாத்ரூம் சென்று ஒரு பக்கெட் தண்ணீர் எடுத்து வந்து அவன் முகத்தில் ஊற்றினார். அப்படியும் இப்படியும் புரண்ட வருண் லேசாய் போதை தெளிய கண் விழித்துப் பார்த்தான். அவன் கண்களுக்கு அங்கே நின்று கொண்டிருந்தது தன்னுடைய அம்மா என்றெல்லாம் புரியவில்லை.
சேலை உடுத்திய ஒரு பெண்.. முக்கியமாக பெண்.அவ்வளவுதான் எந்தப் பெண்ணுக்கு நடந்த கொடூரத்திற்கு பணக்கார பையன் என்றால் இப்படி தான் என்று சாதாரணமாக வாசுகி கூறிச் சென்றாரோ இப்பொழுது அதே கொடூரம் பெற்ற மகனால் வாசுகிக்கு நிகழத் தொடங்கியது..
தலைக்கேறிய போதைக்கு அம்மா தெரியுமா? கட்டிய மனைவி தெரியுமா? பெற்ற மகள் தெரியுமா? வயதான மூதாட்டி தெரியுமா? ஒரு வார குழந்தை தெரியுமா?வாசுகியின் குரலும் கதறலும் வருண் காதுக்கு எட்டவே இல்லை.. வருண் அறக்கனாக இருக்க வாசுகியின் பலம் அங்கே எடுப்படவில்லை..வாசுகியை பிடித்து இழுத்து மெத்தையில் தள்ளி அவர் மேல் படர்ந்து,முந்தானையை கிழித்து, ப்ளவ்ஸையும் கிழித்து வாசுகி பாலூட்டிய இடத்தையே காம இச்சையோடு முத்தமிட முயன்ற மகனை பெரும் சிரமத்துடன் பிடித்து தள்ளி எழுந்தவர்,
அவனது பிறந்தநாளுக்கு ஆசையாக தான் தங்கமும் வைரமும் சேர்த்து செய்து தந்த வருணின் உருவ சிலை கையெட்டும் தூரத்தில் இருக்க அதனை எடுத்து தன்னை மீண்டும் பிடிக்க வந்த மகனின் தலையில் ஓங்கி அடித்தார்..
அம்மா மகனின் அலறலை கேட்டு வேலையாட்கள் அனைவரும் கதவை திறந்து கொண்டு உள்ளே வர அங்கே வருண் தலையில் ரத்தம் வழிந்தபடி கீழே உருண்டு கொண்டிருந்தான். வாசுகி சேலை கிழிக்கப்பட்டு அலங்கோலமாய் நின்று கொண்டிருந்தார் பிரமை பிடித்த மாதிரி.. வேலையாட்களின் சலசலப்பில் சுயநினைவடைந்த வாசுகி அப்போதுதான் தன்னுடைய நிலையை உணர்ந்தார். அவமானத்தில் கூனிக்குறுகி எட்டி போர்வையை இழுத்து தன்னைப் போர்த்திக் கொண்டவரை தட்டுத்தடுமாறி எழுந்து வருண் தன்னை அடித்த கோபத்தில் பெற்ற தாய் என்று புரியாமல் வாசுகியின் முடியைப் பிடித்து சுவரில் ஒரே மோது..
நிலைமையின் தீவிரம் உணர்ந்து ஓடிவந்து வருணை இழுத்துப் பிடித்து வாசுகியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று அனுமதித்தார்கள்.. நல்ல சிவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட அடித்துப் பிடித்து ஓடி வந்தார்.. தலையில் அடிபட்ட வாசுகி அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். அன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வேதனையை அவர் உணரவும் இல்லை.. அப்பெண்ணின் தாயாரது கண்ணீரை அவர் மதிக்கவும் இல்லை.. இன்று அனைத்துமே தான் பெற்ற மகனால் தனக்கே நிகழ மரணத்தை விட கொடிய வலியை அனுபவித்தார்.. மனமும் உணர்வும் மறுத்துவிட நிரந்தர கோமாவுக்குள் தள்ளப்பட்டார்..
நல்லசிவம் நேரில் வந்து மனைவியின் நிலையை கண்டு, வாழ்வில் முதல் முறை மகனை சரியாகத் தான் வளர்க்கவில்லை என்ற வேதனையிலும்,அளவுக்கு அதிகமான அதிர்ச்சியிலும் ஒரு பக்கம் ஸ்ட்ரோக் வந்து அப்படியே விழுந்து விட்டார்..வருணுக்கு சிகிச்சை அளிக்கவே பெரும் இம்சையாக இருந்தது. அளவுக்கு அதிகமாக போதை மருந்துகளை உட்கொண்டிருந்தான்.. தாய் தந்தையின் நிலையை அவன் அறியவில்லை. தன்னையே அவன் உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை.
பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் இறுதி படையலை போட்டிருந்தார்கள்..அவள் காற்றாய் அங்கேயும் இங்கேயும் உலாதிக் கொண்டிருந்தாள்..நல்லசிவம் வாசுகி இருவரின் நிலையையும் அருவமாக சுற்றி வந்து பார்த்தவள், அடுத்தது வருண் நீதான் என்ற நம்பிக்கையில் சற்று நிம்மதியான மனதோடு அங்கிருந்து அகன்றாள்..வீட்டில் தனக்கு போடப்பட்ட படையலை அமைதியாக உண்டவள் இதோடு அடுத்து தெவசத்துக்கு தான் வர முடியும் என்பதால் தன் உறவுகளை தன்னுள் நிறைத்துக் கொண்டு கிளம்பினாள்..
தெருமுனையில் ஆலமரத்தடி பிள்ளையார் நிர்மலமான முகத்தோடு அமர்ந்திருந்தார்.. அவரையும் சற்று தள்ளி அவளுக்கு மிக பிடித்தமான குங்கும நிற காகிதப் பூக்கள் பூத்துக் குலுங்கும் செடியையும் பார்த்தாள்..கண்டிப்பாய் கர்மா தனுக்கு தீங்கு இழைத்தவனை பழித் தீர்க்கும் என்ற நம்பிக்கையில் காற்றாய் மிதந்து ஆலமரத்தடி பிள்ளையாரையும், காகித பூக்கள் செடியையும் ஒரு சுற்றுச் சுற்றி விட்டு அவள் காற்றோடு கலந்துப் போனாள்..
காற்றினால் அடித்து வரப்பட்ட குங்கும நிற காகிதப் பூக்கள் ஆலமரத்தடி பிள்ளையார் காலடியை வந்து சேர்ந்தன.
முற்றும்..
#407
Current Rank
40,750
Points
Reader Points 750
Editor Points : 40,000
15 readers have supported this story
Ratings & Reviews 5 (15 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
ajthi2007
மிகவும் அருமை படிக்கும் போது மனது மிகவும் கனமாக இருந்தது இந்த மாதிரி கேடுகெட்ட பிள்ளைகளை பெற்றவர்களும் பாவிகளே அவர்களுக்கு இந்த தண்டனை சரியானதுதான்.
bharu.kavia88
ரொம்ப ரொம்ப அருமையான கதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points