வாழ்க்கை

உண்மைக் கதைகள்
4.9 out of 5 (36 Ratings)
Share this story

வாழ்க்கை.

"டேய் நேத்து தானேடா சம்பளம் வாங்கின?"

"அது வந்த வேகத்துலயே காலியாகிடுச்சிக்கா. இப்போ உன்னால காசு தர முடியுமா? முடியாதா?"

"என்னடா விளையாடுறீயா? என்னவோ நான் வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கிற மாதிரி கேட்குற? என் புருஷன் காசு கொடுத்தா தான் வீட்டு செலவுக்கே இங்க காசு. இல்லனா கஞ்சி தான்" என்று அடுப்பில் இருந்த கடாயில் வெங்காயத்தை ஒரு கரத்தால் வதக்கிக்கொண்டு மற்றொரு கரத்தால் தன் உடன் பிறந்தவனிடம் பேசிக் கொண்டு இருந்தாள் மது.

"அக்கா ஒரு ஐநூறுரூபா தானே கேட்குறேன்? பைக்ல சுத்தமா பெட்ரோல் இல்ல மது. நடு ரோட்ல நிக்குறேன். ப்ளீஸ் மது ஐநூறுரூபா ஜீபே-ல அனுப்பு. அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் திருப்பி கொடுத்துடுறேன்" என்று முப்பதாயிரம் சம்பளம் வாங்குபவன் ஐநூறு ரூபாயிற்காக அக்காவிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தான்.

"ஒழுங்கா மூடிட்டு போன வை அருண். இதுக்கு முன்னாடி வாங்கின காசு எல்லாம் திரும்ப தரேன் சொல்லி தான் வாங்கின. ஆனா ஒத்த பைசாவாவது திருப்பிக் கொடுத்தியாடா?"

"அதெல்லாம் நீ தம்பிக்காக பண்ணது. தம்பிக்காகப் பண்ணதை கணக்கு பார்ப்பாங்களா? நீ இப்ப அனுப்பு சத்தியமா அடுத்த மாசம் தரேன்"

அதை கேட்டவள், "டேய் வேலைக்கு போற நீ தான்டா அக்காவுக்கும், அக்கா பசங்களுக்கும் செய்யனும். வீட்ல இருக்கற என் கிட்ட காசு கேட்குற. வெட்கமா இல்ல உனக்கு? என்கிட்ட ஒர்ரூபா கூட இல்ல. ஒழுங்கா போனை வச்சிடு" என்று கடுகு போல் பொறிந்தாள்.

அருணோ, "உன்கிட்ட போய் காசு கேட்டேன் பாரு. என்னைய சொல்லனும் போடி" என்றவன் கடுப்பாக அழைப்பை துண்டித்துவிட்டு நெடுஞ்சாலையின் இருபக்கமும் தலையை திருப்பி பார்த்தான், ஏதாவது வண்டி வருகிறதா என்று.

மதுவோ வெந்த வெங்காயத்தில் கத்திரிக்காயைப் போட்டு வதக்கியவள், "காசு வேணும்னா மட்டும் அக்கா சொக்கானு கூப்பிடுவான். இல்ல சொன்னதும் சுத்தமா மரியாதையே இல்ல" என்று புலம்பியவள் மனம் கேளாமல் தம்பி கேட்ட ஐநூறு ரூபாயை அலைப்பேசியின் மூலம் அனுப்பிவிட்டு சமையலைத் தொடர்ந்தாள்.

"அருண்! உங்க அக்கா என்ன சொன்னாங்க. காசு அனுப்புறாங்களா?" என்று கேட்ட நண்பனை சலிப்பாகப் பார்த்து, "காசு கேட்டதும் புலம்ப ஆரம்பிச்சிட்டாடா. காதுல ரத்தம் வராத குறை தான்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவனின் போன் டிங் என்று ஒலி எழுப்பியது.

"இது வேற கண்ட கண்ட நேரத்துல டொய்ங் டொய்ங்னு" என்று சொல்லியபடியே கைப்பேசியை எடுத்து பார்த்தவன் இதழ் தானாக விரிந்துக் கொண்டது.

அவன் அறிவான் என்ன தான் உடன் பிறந்தவள் வசைப்பாடினாலும் அவன் கேட்ட பணத்தை அனுப்புவாள் என்று. இருந்தாலும் இப்படி சம்பளம் வாங்கிய மறுநாளே கையில் பணமில்லை அவசரமாக பணம் வேண்டும் என்று கேட்டால் கோபம் வரத் தானே செய்யும்? அந்த கோபத்தில் பணம் அனுப்பாமல் இருந்து விடுவாளோ என்று தான் அஞ்சினான்.

அருணின் புன்னகையை பார்த்த நண்பனோ, "என்னடா அக்கா காசு அனுப்பிட்டாங்க போல" என்று வாயெல்லாம் பல்லாக கேட்க, அருணும் ஆம் என்று தலையை ஆட்டினான்.

அருண் தன் நண்பனை வண்டியின் அருகிலேயே இருக்க வைத்துவிட்டு அந்த சாலையின் வந்த ஒரு வண்டியில் உதவி கேட்டு பெட்ரோல் நிலையம் நோக்கி விரைந்தான்.

ஆனால், அருணின் நினைவுகளோ அவனின் பழைய கால நினைவிற்குள் சுழன்றது.

சிறுவயதிலிருந்தே மதுவும் அருணும் அவர்களின் அன்னையின் அரவணைப்பிலே வாழ்ந்ததால் வெளியுலகம் என்னவென்று சரியாக புரிந்துக் கொள்ளாத வயது அது. மது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த சமயம் அருண் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான்.

அந்த நேரம் அவர்களின் அன்னையும் எமனிடம் சிக்கிக்கொண்டு தன் உயிரை விட, இரு பிள்ளைகளும் ஆதரவின்றி தவித்தனர்.

அச்சமயம் அவர்களுக்கு துணையாக இருந்தது அவர்களின் அன்னையின் தாய் தான்.

மகளின் பிள்ளைகளை அனாதையாக விட மனம் வராதவர் இருவரையும் அழைத்துக்கொண்டு அவரின் மகனின் வீட்டிற்கு சென்றார்.

மகனும் உடன் பிறந்தவளின் பிள்ளைகள் என்று அரவணைத்து வளர்த்தார்.

மது பத்தாம் வகுப்பு முடித்த கையோடு வரன் ஒன்றை பார்க்க, அறியா வயதில் வாழ்க்கையின் அனுபவத்தை கற்றுக்கொள்ள தன் சிறகை உடைத்துக்கொண்டு கணவனின் இல்லறம் நோக்கி சென்றவள் மனம் முழுவதும் தம்பியின் நினைவு மட்டுமே.

நிறைய படித்து பெரிய ஆளாக வேண்டும். தம்பியை நன்றாக வளர்க்க வேண்டும் என்று பல கனவுகளை கண்டவள் தான் மது.

ஆனால், தாய் தந்தை இல்லாத சிறுபிள்ளையை வலுக்கட்டாயமாக திருமண பந்தத்தில் தள்ளினார் அவளின் அன்னையின் தம்பி. மதுவின் தாய் மாமா என்றும் கூறலாம்

தாய் மாமாவோ, அவர் தாலி கட்டியவளின் வார்த்தையை கேட்டு பழகியதால் மதுவின் படிப்பை நிறுத்தி உடனே கல்யாணம் செய்து வைத்து விட்டார்.

பாட்டியும் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. மதுவும் தன்னால் முடிந்தளவிற்கு போராடியவள் கடைசியில் வேறு வழியின்றி சம்மதித்தாள் கண்ணீரோடு.

அடுத்து அருணின் விசயத்தில் என்ன செய்வது என்று இருந்த தாய்மாமாவின் மனைவியின் சிந்தனையை பாட்டியின் மூலம் நிறுத்தி வைத்தாள் மது.

பெண்பிள்ளை படித்து என்ன செய்ய போகிறாள்? எப்படியோ வேற ஒரு வீட்டிற்கு வாழப் போகிறவளுக்கு எதற்காக பணம் செலவு செய்து படிக்க வைக்க வேண்டும்? என்று பேசியே தன் கணவனின் மனதை மாற்றியவரால் ஆண்பிள்ளை பற்றி எதுவும் பேச முடியவில்லை.

அதற்கு தடையாக இருந்தது என்னவோ அருணின் அன்னையின் தாய் தான். மது மற்றும் அருணின் பாட்டி.

அவரின் துணையோடு அருண் மேல்படிப்பு படிக்க ஆரம்பிக்க, அதுவும் அடுத்த ஐந்து வருடத்திற்கு மட்டுமே சாத்தியமாகியது.

பாட்டியும் இறைவனிடம் சரணடைய, தனித்து விடப்பட்டது என்னவோ ஆண்பிள்ளை தான்.

அன்னை இருந்த போதும் சரி; பாட்டி இருந்த போதும் சரி; வயிறு நிறைய சாப்பிட்டவனுக்கு அவர்கள் போனதும் வெறும் இரண்டு வேளை உணவாக மாறியது.

மாறியதா? இல்லை மாற்றப்பட்டதா? என்று அவன் மட்டுமே அறிவான்.

படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்திக்கொண்டு இருந்தவனுக்கு அவசர பணத்தேவைக்கு உதவ ஆள் இல்லாமல் இருக்க, அந்நொடி தான் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை புரிந்துகொள்ள தொடங்கினான் அருண்.

அந்நிலையிலும் தன் தேவைக்காக அக்காவிடம் சென்று நிற்கவும் அவனுக்கு சங்கடமாக இருந்தது.

உடன் பிறந்தவள் வாழ்க்கையை பற்றி நினைத்தவன் படிப்பு நேரம் தவிர, மற்ற நேரத்தில் தெரிந்த உணவகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தான்.

படிப்பு, வேலை என்று சென்றவனுக்கு அடுத்த இடியாக வந்தது தான், இருப்பிடம் பற்றிய பிரச்சினை.

தன் சொந்தம் என்று எந்த மாமா அரவணைத்தாரோ! அவரே இன்று(ம்) மனைவியின் மந்திரத்தில் மயங்கி சாடையாக குத்திக் காட்ட ஆரம்பித்திருந்தார்.

"என்ன அருண் இப்போ எல்லாம் நைட் ரொம்ப லேட்டா வர்ற? உனக்காக எல்லாம் தூங்காம இருந்து மாமி கதவு திறந்து விட முடியுமா? பாவம் மாமி காலையில எழுந்ததுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் எவ்வளவு வேலை செய்யுறா? நிம்மதியா தூங்க கூட முடில அவளால"

"அது மாமா, ஹோட்டல்ல வேலை முடிச்சிட்டு வர லேட்டாகிடுது" என்றவனின் பேச்சை இடைமறித்தவர்,

"இங்க பாரு அருண். நீ இன்னும் சின்னபுள்ள இல்ல. காலேஜ் முடிக்கப் போற. அப்புறம் வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிச்சி கல்யாணம் பண்ணிட்டு உன் வாழ்க்கையை வாழப் போற. நீ சம்பாதிக்கிற பணத்தை என்ன உன்னையும் உன் அக்காவையும் படிக்க வச்சி நல்லபடியா பார்த்துக்கிட்ட இந்த மாமாவோட குடும்பத்துக்கா கொடுக்கப் போற?" என்று கேட்டவரை விசித்திரமாகப் பார்த்தான் அருண்.

'என்ன நல்லப்படியா பார்த்துக்கிட்டாரா? இவரா? இது எப்போ?' என்று அருண் மனதில் தோன்றாமல் இல்லை.

'படிக்க ஆசைப்பட்ட என் அக்காவின் கனவை மூட்டை கட்டி போட்டது நீங்கள்; சொந்த தாய் மாமாவின் வீட்டில், இல்லை பாட்டியின் வீட்டில் இருப்பதற்கு மாதா மாதம் பணம் கேட்டது நீங்கள்; இப்போது இப்படி மாற்றி பேசுகிறீர்கள்? ஆனால், என் அதே பாட்டியின் வீட்டில் தான் நீங்களும் இலவசமாக தங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். பெற்றோருக்கு பின் சொத்து பிள்ளைகளுக்கு என்ற நிபந்தனையில் பார்த்தால் என் அம்மாவிற்கும் அல்லவா இந்த வீடு சொந்தம்? அப்போது என் அம்மாவின் சொத்து அவருக்கு அடுத்து எனக்கும் என் அக்காவிற்கும் தானே? ஆனால் இங்கே நடப்பது?' என்று அருணின் நாவில் சொற்கள் வெளியே வர துடித்துக்கொண்டு இருக்க, எப்போதும் போல் மதுவின் அறிவுரையே மூளையில் வந்து நின்று அவன் பேச நினைத்த சொற்களுக்கு அணையிட்டது.

'இங்க பாரு அருண்! என்ன தான் மாமாவும் மாமியும் நம்மளை திட்டினாலும் கண்டிச்சாலும் அவங்க தான் பாதுகாப்பா இருக்க நமக்கு இடமும், பசியில்லாம இருக்க சாப்பாடும் கொடுத்து அரவணைச்சாங்க. அம்மா செத்ததும் எப்படியோ போகட்டும்னு விடாம, போனா போகட்டும்னு தான் அவங்க நம்மள பார்த்துக்கிட்டது. ஆனா அந்த போனா போகட்டும்ன்ற நினைப்பு தான் நமக்கான பாதுகாப்பு. உனக்குனு ஒரு வாழ்க்கை அமையுற வரை அவங்க சொல்றதை அமைதியா கேட்டு நட! ப்ளீஸ்' என்ற உடன் பிறந்தவளின் வார்த்தை தான் இன்றும் அருணை அமைதியாக நிற்க வைத்தது.

அன்றிலிருந்து தினமும் ஏதோ ஒரு பேச்சை அவர்களிடமிருந்து கேட்டுக்கொண்டு இருந்தாலும் அமைதியாக கடந்து விடுவான் அருண்.

படித்து முடித்ததும் நல்ல வேலையில் சேர்ந்தான். அந்த ஒரு மாதம் வீட்டில் எந்த குத்தல் பேச்சும் பேசாமல் இருக்க, ஆச்சரியமாக இருந்தது அருணுக்கு. உண்மையாவே இது மாமா வீடு தானா? என்று கூட சந்தேகப்பட்டான்.

அது கூட அருண் முதல் மாதம் சம்பளம் வாங்கும்வரை தான். அதன் பிறகே அவன் சந்தேகம் தீர்ந்து நிம்மதி பிறந்தது.

ஆம், அவனின் சம்பளத்தை எதிர்ப்பார்த்து இருந்த மாமியோ அருணை குத்தி பேசாமல் இருக்க, அருணோ முதல் மாத சம்பளத்தை வாங்கிக்கொண்டு நேரே தன் உடன்பிறந்தவளை பார்க்க புறப்பட்டு விட்டான்.

இதன் பிறகு சொல்லவும் வேண்டுமா? ஒரு ஆட்டம் ஆடிவிட்டார் மாமி.

அதன் பிறகு அவனுக்கு அந்த வீட்டில் இடம் இருக்குமா?

தன் தாயிற்கு அடுத்தப்படியாக அக்காவை தாயாக பார்த்தவன் முதல் மாத சம்பளத்தை தாயாக நினைத்துகொண்டு இருந்த மதுவிடம் கொடுக்க ஆசைப்பட்டான்.

தம்பியை நினைத்து நெகிழ்ந்தவளுக்கு மாமா மாமியின் எண்ணம் அச்சத்தை கொடுத்தது. என்ன தான் அவள் கணவன் வீட்டில் இருந்தாலும், தம்பியின் வாழ்க்கையை நினைத்து அவளுக்கு பயமாக தான் இருந்தது.

அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசித்தவள் அந்த பணத்தை கூட தொடாமல் அவனை மீண்டும் மாமா வீட்டிற்கு அனுப்ப முயன்றாள்.

"அருண் உன்னை நினைக்கும் போது எனக்கு பெருமையா இருக்குடா. ஆனா இது சரியா வராது. என்ன தான் இருந்தாலும் இத்தனை வருஷம் உன்னை பார்த்துக்கிட்டது மாமாவும் மாமியும் தானே? அதனால நீ வாங்கின முதல் நாள் சம்பளத்தை அவங்ககிட்ட கொடுக்கிறது தான் சரி"

"பார்த்துகிட்டாங்களா? என்ன மது பேசற? நீ உன்னோட கனவை விட்டு கொடுத்தது அவங்களால. என்னை தினம் தினம் சாடை பேசியே வாழ்க்கையை வெறுக்க வச்சது அவங்க. அவங்ககிட்ட போய் என்னோட முதல் சந்தோஷத்தை பகிர்ந்துக்க சொல்ற? இங்க பாரு மது! நீ என்ன வேணாலும் சொல்லு. இந்த பணத்தை உன் கையில தான் தருவேன். நீ வாங்கிட்டு உனக்கு தேவையான பணத்தை எடுத்துட்டு மிச்சத்தை கொடு. அதை அவங்ககிட்ட கொடுக்கிறேன்"

"இல்லடா நான் சொல்றது உனக்கு புரில"

"ஏய் மது ஒரு தம்பியா உனக்குனு நான் எதுவுமே பண்ணதில்லடி. ஆனா இப்போ பண்ணனும்னு நினைக்கிறேன். ப்ளீஸ் அதை தடுக்காத" என்று சொல்லும் தம்பியின் ஆசையை மறுக்க முடியுமா என்ன அவளால்?

கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு.

பின், தம்பி கொடுத்த சம்பளத்தை அவர்கள் அன்னையின் புகைப்படத்திற்கு கீழ் வைத்து வணங்கினாள். அதிலிருந்து வெறும் நூறுரூபாய் மட்டுமே எடுத்தவள் மீதி பணத்தை தம்பியிடமே திரும்ப கொடுத்தாள்.

அவனோ புருவம் சுருக்கிப் பார்க்க, மதுவோ, "வீட்ல இருக்க எனக்கு இது போதும்டா" என்று கூற, அவளை அவனால் பெருமையாக பார்க்காமல் இருக்க முடியவில்லை.

மதுவிடம் விடைபெற்றுக் கொண்டு தாய்மாமா வீட்டிற்கு திரும்பியவனை வாசலிலேயே நிற்க வைத்து ஆத்திரம் தீர திட்டிவிட்டு வீட்டை விட்டே துரத்தினர் அந்த ஆகச்சிறந்த தம்பதியர்.

அவனும் விடுதலை கிடைத்த சந்தோஷத்தில் அங்கே இருந்து கிளம்பிய நண்பன் ஒருவன் மூலம் தனியறை எடுத்து தங்கி வேலை செய்ய ஆரம்பித்தான்.

அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் தான், அவன் முதல் முறை ஆசைப்பட்ட இருச்சக்கர வாகனம் ஒன்றை கடன் அட்டை மூலம் வாங்கினான். அதாவது
மாதா மாதம் அதற்கு பணம் கட்ட வேண்டும்.

அவனுக்கென்று எந்த தனிப்பட்ட செலவும் இல்லாமல் இருக்க, துணிச்சலாக வண்டியை வாங்கி விட்டான்.

அப்போது தான் அவனின் தாய் மாமா மூலம் அடுத்த அதிர்ச்சி வந்தடைந்தது.

அவனை படிக்க வைக்க அவர் வாங்கிய கடன் வட்டி குட்டி எல்லாம் போட்டு பெரும் தொகையாக வந்திருந்தது. அதை பார்த்தவன் மலைத்து தான் போனான்.

வேறு வழியின்றி அந்த கடனையும் மாதா மாதம் சிறுக சிறுக அடைக்க ஆரம்பித்தான்.

படிப்புக்கு வாங்கிய கடன் ஒரு பக்கம்; வண்டிக்கு வாங்கின கடன் இன்னொரு பக்கம்; இதற்கு இடையில் அறையின் வாடகை, சாப்பாடு செலவு என்று அவன் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தது. மீண்டும் தான்விட்ட இரவு உணவு வளாகத்திற்கு வேலைக்கு சென்றான்.

"சார் பெட்ரோல் பங்க் வந்துடுச்சி" என்று அருணை நிகழ்வுக்கு கொண்டு வந்தார், உதவி செய்த நபர்.

அவருக்கு நன்றியை கூறிவிட்டு பெட்ரோலை வாங்கிக்கொண்டு மீண்டும் தன் வாழ்க்கையின் ஓட்டத்தை தொடர்ந்தான் அருண்.

எப்போதும் ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியாது என்று சொல்பவருக்கு தெரிவதில்லை; ஒரு ஆணாலும் தனியாக வாழ்வது மிக கடினம் என்று.

என்ன தான் சொந்தங்கள் இருந்தாலும் அனைத்தும் ஒரு கட்டத்திற்குள் தான். அது அக்காவாக இருந்தாலும் சரி.

அவர் அவர்கள் வாழ்க்கையை அவர் அவர்கள் தான் வாழ வேண்டும்.

பெற்றோர்களை இழந்து சொந்தக்காரர்களிடம் அடைக்கலம் தேடிபோகும் ஒவ்வொருவரும் சந்திக்கும் நிலை இது தான். ஆனால், அதை சாதகமாக மாற்றிக் கொள்வதும், சாபமாக மாற்றிக் கொள்ளவதும் அவர்கள் அவர்கள் கையில் தான் உள்ளது.

************************

இதை எனது மற்ற கதை போல் இல்லாமல் அன்றாடம் நாம் சந்திக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை பற்றி கூற வேண்டும் என்று நினைத்தேன். அதை அழுத்தமாக கூற தோன்றவில்லை. அதனாலே இப்படி ஒரு சிறுபடைப்பு. பிடித்து இருந்தால் மதிப்பீடும் கருத்தும் அளியுங்கள்.

என்றும் ப்ரியமுடன்

திக்ஷிதா லட்சுமி.

19/06/2022.

Stories you will love

X
Please Wait ...