JUNE 10th - JULY 10th
வருடம் 2059
பிரதமர் மேகன் தீவிர கவனத்துடன் ஒரு கோப்பை வாசித்துக் கொண்டிருந்தார்.
கோப்பின் முதல் பக்கத்தில் 100 பெயர்கள் கொண்ட பட்டியலும் , அடுத்த
பக்கங்களில் அந்நபர்கள் பற்றிய குறிப்புகளும் இருந்தன. அந்த கோப்பை அவர்
குறைந்து 100 முறையாவது படித்திருப்பார்.ஒவ்வொரு முறை படிக்கும்போதும்
பதட்டம் அதிகரித்தது. கைகள் நடுங்கின. மானுடத்தின் தலை விதியை
நிர்ணயிக்கும் பெரும் பொறுப்பு தன் தோள்களை அழுத்துவதை உணர்ந்தார்.
பூமியில் மனித இனத்தின் எதிர்காலம் முடிவுக்கு வந்து விட்டது. விரைவில் மனித
இனம் பூமியில் அழிந்து விடும். 10 ஆண்டுகள் முன் தொடங்கிய மூன்றாம் உலகப்
போர், மானுடத்தின் பல்லாயிர ஆண்டுகளின் சாதனைகளை தரை
மட்டமாக்கியது. வட கொரிய நாடு அணு ஏவுகணைத் தாக்குதல் மூலம் நியூயார்க்
நகரைத் தட்டையாக்க, அமெரிக்க அரசு பதிலடி கொடுக்க, சீன மற்றும் ஐரோப்பா
இந்த கேளிக்கை விளையாட்டில் கலந்து கொள்ள, இத்தேசங்கள் அனைத்தும்
அழிவுக்கு வர, ஓரளவு பிழைத்தது அணி சேரா நாடான இந்தியா மற்றும் அண்டை
நாடுகள் மட்டுமே. பிறகு பெரும் வெள்ளங்கள், பஞ்சம், சுனாமி என்று
இயற்கையும் தன் வித்தைகளைக் காண்பித்தது.
பூமியைத் தாண்டி மனித இனம் வேறு கிரகத்தை தேட வேண்டும் என்பது
நிதர்சமானது. பெரும் பொறுப்பிலிருந்த சிறு மனிதர்களின் மொன்னையான
முடிவுகளால் மனித இனம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. அந்த எண்ணமே
மேகன் தான் தற்போது எடுக்க வேண்டிய முடிவு பெரும் அழுத்தத்தை அளிப்பதாக
உணர்ந்தார்.
இந்தியாவிலிருந்து 100 நபர்களை தேர்ந்தெடுத்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப
வேண்டும் என்ற அவர் 3 மாதங்கள் முன் முடிவெடுத்தார் . இவர்கள் மூலம்
மானுடம் தொடரவேண்டும் என்பது அவர் தொலைநோக்குப் பார்வை. அவர்கள்
யார் என்ற பொறுப்பை தன் முன்னாள் உதவியாளர் தேவிடம் அளித்திருந்தார்.
முதல் பட்டியலில் பெரும் பணக்காரர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் பெயர்கள்
மட்டுமே இருந்தன. அந்த பட்டியல் மேகன் மேஜை அடியிலிருந்த குப்பை
தொட்டிக்குள் சென்றது. கூடவே தேவின் பதவியும்.
அடுத்த பட்டியல் புது உதவியாளர் நித்தின் தயாரித்தார். அறிவியல், பொறியியல்,
கலை, விளையாட்டு, அரசியல் ,பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறையின்
ஆகச் சிறந்த வல்லுநர்கள் 100 பேர் . ஆண், பெண் என்ற சரி விகிதத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த பட்டியலை பற்றி விவாதிக்க நித்தினின்
வருகையை மேகன் எதிர்நோக்கி இருந்தார்
கதவை மெதுவாக தட்டி நித்தின் அறைக்குள் நுழைந்தார். கூடவே இஸ்ரோவின்
தலைமை விஞ்ஞானி சந்திரனும்.
சந்திரன் - "இன்னும் இரண்டு நாட்களில் செவ்வாய் செல்லும் விண்கலம்
தயாராகிவிடும்."
மேகன் - "அங்கே ஏற்கனவே குடியிருக்கும் செவ்வாய்வாசிகள் பற்றிய
விபரங்களை உங்கள் இருவரில் யார் கூற முடியும்".
நித்தின் -" தற்போது செவ்வாயில் 5000 மனிதர்கள் குடியிருக்கிறார்கள். 3500
அமெரிக்கர்கள், 1500 சீனர்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டங்களில்
அமெரிக்கர்களும், ரஷ்யர்களும் மட்டுமே விண்வெளிப் பயணங்களில் ஆர்வம்
காட்டி வந்தனர். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் மனிதன்
பெரும் கனவுகள் காண்பதை நிறுத்தினான். கேளிக்கை சார்ந்த
தொழில்நுட்பங்களே மக்களிடையே பிரபலம் ஆனது. 2021ல் ரஷ்யர்கள்
விண்வெளி ஆராய்ச்சிகளைக் கைவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து அமெரிக்க
அரசின் நாசா நிறுவனமும் 2023ல் இழுத்து மூடப்பட்டது. அதன் பின்னர் தான்
டேவிட் மஸ்க் என்னும் அமெரிக்க தொழிலதிபரின் விஸ்வரூபம் தொடங்கியது.
மானுட இனத்தின் நீட்சி செவ்வாயில் குடியேறுவதாலே நிகழும் என்று அப்போதே
அவர் நம்பினார். 2025ல் முதல் முறையாக பத்து நபர்கள் கொண்ட விண்வெளி
கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பினார். பின்னர்
terraforming என்ற அறிவியல் நுட்பம் மூலம் செவ்வாய் கிரகம் பூமிக்கு நிகராக
மனிதர்கள் வசிக்கும் இடமாக மாற்றினார். தொடர்ந்து பல அமெரிக்கர்கள்
செவ்வாயில் குடியேறத் தொடங்கினர். நான்கு ஆண்டுகள் முன் டேவிட் மஸ்க்கும்
செவ்வாய் கிரகம் சென்று அதன் தலைவர் ஆனார். இதனிடையே சீனாவும்
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி
பெற்று தங்கள் நாட்டவரையும் செவ்வாய்க்கு அனுப்ப ஆரம்பித்தனர் . நமது
இஸ்ரோ நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளாக தீவிரமாக முயன்றதன் மூலம்
தற்போது மனிதர்கள் கொண்ட விண்கலனை அனுப்பும் தொழில் நுட்பத்தில்
தேர்ச்சி பெற்றிருக்கிறது .”
மேகன் - "மானுடத்தின் எதிர்கால சரித்திரத்தில் அமெரிக்கர்கள், சீனர்கள்
மட்டுமன்றி நமது இந்தியர்களும் இருக்க வேண்டும் என்பதாலே இந்த முயற்சி மிக
முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகள்
எதுவும் இருக்கக் கூடாது. இது நம் கையில் இருக்கும் கடைசி வாய்ப்பு. அடுத்த
வாரம் நம் அண்டை நாடுகளுடன் அணு ஆயுதப்போர் கண்டிப்பாக நிகழும் என்று
உளவுத்துறை தகவல் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு மாதத்திற்கு பின் நாம்
உயிருடன் இருப்போம் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இது போன்று
இன்னொரு தருணம் நமக்கு அமையாது."
சந்திரன் - "அனைத்து பரிசோதனைகளும் கவனமாக நிறைவேற்றி விட்டோம்.
இம்முயற்சி தோல்வி அடைவதற்கு வாய்ப்பே இல்லை."
மேகன் - "நன்று. அங்கிருக்கும் அமெரிக்கர்களும் சீனர்களும் நம்மவர்களை எப்படி
எதிர்கொள்வார்கள்."
நித்தின் - "செவ்வாய் என்னும் முழு கிரகத்தில் இருப்பதே மிக
சொற்பமானவர்கள்தான். ஆனால் அவர்கள் திட்டமோ பெரிது. ஒரு புது
உலகையே அடித்தளத்திலிருந்து உருவாக்க வேண்டும் அதற்கு அங்கு மேலும்
மனிதர்கள் தேவை. நம்மவர்களை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பார்கள்
என்று தெளிவாக நம்பலாம். "
மேகன் - "அந்த நூறு பேருக்கும் இன்றிரவுக்குள் தெரிவித்து விடுங்கள். நாளை
இரவு அவர்கள் செவ்வாய் செல்ல தயாராக வேண்டும்.”
வந்தவர்கள் வெளியேறியதும் மேகன் மனதை வெறுமை உணர்வு
பற்றிக்கொண்டது. மணி மாலை ஆறு ஆயிற்று. அருகிலிருந்த பூங்காவிற்கு
சென்றார். ஒரு அழகிய குளம், அதனை சுற்றி நடை செல்வதற்கான பாதை.
கதிரவன் மெல்ல கீழிறங்கி வானத்தை வர்ணக்கோலமாக மாற்றியிருந்தான்.
குளத்தின் நீர் செந்நிற ஒளியில் தகதகத்தது. பூங்காவிலிருந்த இருக்கை ஒன்றில்
மேகன் அமர்ந்தார். அருகாமையில் ஒரு குப்பைத்தொட்டி இருந்தது. சரியாக 6
மணிக்கு அந்த பூங்காவிலிருந்த குப்பைகள் அகற்றப்பட வேண்டும் என்பது விதி.
இத்தனை ஆண்டுகளாக ஒரு முறை கூட தவறியதில்லை. அன்றும் இரண்டு
மனிதர்கள் குப்பைகளை தரவாரியாக பிரிக்கும் வேளையில் ஈடுபட்டிருந்தனர். இது
மேகனுக்கு கர்வத்தை அளித்தது. எந்த சூழ்நிலையிலும் தன் ஆட்சி செவ்வனே
நடந்து வருவதன் குறியீடாக அவர் இதை எடுத்துக் கொண்டார்.
சூரியன் மறைந்து நிலவு தன் முகத்தைக் காட்டியது. ஆங்காங்கே சில விண்மீன்கள்
பளிச்சிட்டன. குளத்தில் சிறிதும் பெரிதுமாக மீன்கள் துள்ளி விளையாடிக்
கொண்டிருந்தன.
மேகன் மனதில் இருள் சூழ்ந்தது. அவர் சிந்தனைகள் 100 பேர் கொண்ட
பட்டியலை சுற்றியே இருந்தது. அவர்களைத் தேர்வு செய்த வரன்முறைகள்
(criteria) சரியா என்ற குழப்பம் தொடர்ந்தது. "செல்வம்" என்ற வரன்முறை
தவறென்றால் "ஆற்றல்" என்ற வரன்முறை சரியாகி விடுமா. ஆற்றல் என்பது
பிறப்பிலேயே மனிதனுக்கு கொடையாக அளிக்கப்பட்டதா, இல்லை மனிதன்
தானே தன் முயற்சியால் உருவாக்கிக்கொண்டதா. தான் ஏன் வறுமையில் உழலும்
100 குழந்தைகளை தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது. நூறுபேரைக் காப்பாற்றினேன்
என்று பெருமிதம் அடைவதா, இல்லை எஞ்சியிருக்கும் கோடிக்கணக்கானவரை
கை விட்டு விட்டேன் என்று வருத்தப்படுவதா. இந்த குற்ற உணர்விலிருந்து
தனக்கு விடுதலை கிடையாதா என்ற உழற்சியில் மேகன் மனம் தவித்தது.
எதையும் ஆய்வு நோக்குடன் பார்க்கும் தன் தன்மையை பெரும் பலவீனமாக
மேகன் உணர்ந்தார். மனிதனுக்கு எதன் மீதாவது உறுதியான நம்பிக்கை தேவை.
குறிப்பாக கடவுள் நம்பிக்கை பெரும் பலம். ஒரு முடிவெடுத்து விட்டு ஆண்டவன்
பார்த்துக் கொள்வான் என்று நிம்மதி அடையலாம்.
இரவு மெல்ல தன் வருகையை அறிவிக்க மேகன் தன் வீட்டை நோக்கி
சென்றார்.உணவு முடித்து உறக்கத்தில் ஆழ்ந்தார்.
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு வீட்டின் அழைப்பு மணி அடித்தது. நித்தின்
கவலை சாய்ந்த முகத்துடன் நிலமையை விவரித்தார்.
நேற்று இரவு அந்த நூறுபேருக்கும் செவ்வாய் செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட
விபரம் தெரிவிக்கப்பட்டது. காலை அவர்களை அழைத்துச் செல்ல வீட்டிற்கு
சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. நூறு பேரும் தற்கொலை செய்து
இறந்திருந்தனர். இறப்பதற்கு முன் அவர்கள் அனைவரும் சொல்லி வைத்தார்
போல் ஒரு காகிதத்தில் இதனை எழுதியிருந்தார்கள்.
"ஏன் நான்?"
நேற்று தெரிவித்த செய்தி அவர்கள் நூறு பேரையும் பெரும் மன அழுத்தத்தில்
ஆழ்த்தியிருக்கிறது. மற்றவர்களை விட தாங்கள் எந்த விதத்தில் உயர்த்தி என்ற
எண்ணம் தோன்றியிருக்கிறது. தாங்கள் மட்டும் செவ்வாய்க்கு தப்பித்து செல்வது
மானுடத்திற்கு தாங்கள் இழைக்கும் பெரும் அநீதி என்ற உணர்வே அவர்களை
தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது.
மேகன் உறைந்திருந்தார்.
நித்தின் - "மேற்கொண்டு என்ன செய்வது."
மேகன் - “நூறு ஏழைக் குழந்தைகளை தேர்ந்தெடுங்கள். வயது 10 -15 க்குள்
இருக்க வேண்டும். இன்னும் இரண்டு மணி நேரங்களில் அவர்களின் பெயர்கள்
எனக்கு தெரிவிக்கப்பட வேண்டும்."
நித்தின் சென்றதும் மேகன் அன்றைய உளவுத் துறை செய்திகளை படித்தார்.
அடுத்த வாரம் அண்டை நாடுகள் இந்தியாவின் நீது தாக்குதல் நடத்துவது
உறுதியாக தெரிந்தது. அவர்களுக்கு முன்பாக நாம் தாக்க வேண்டும் என்பது
ராணுவத்தின் ஏகோபித்த கோரிக்கையாக இருந்தது.
தான் முற்றும் செயலற்று இருப்பதை மேகன் உணர்ந்தார். முடிவெடுப்பது என்பது
எவ்வளவு பெரும் சுமை. முடிவே எடுக்காமல் நிகழ்வுகளின் ஓட்டத்தில் அப்படியே
கரைந்து விட்டால் என்ன என்று தோன்றியது.
நித்தின் மீண்டும் வந்தார். யாரும் செவ்வாய் செல்ல முன் வரவில்லை. சிறுவர்
முதல் பெரியவர் வரை, ஆண் முதல் பெண் வரை,அனைவரும் ஒரே கேள்வியை
கேட்கிறார்கள்.
"ஏன் நான்?"
இருவரும் அருகிலிருந்த பூங்காவுக்கு சென்றனர். சிறிது நேரம் இருவரிடையே
எந்த உரையாடலும் இல்லை. பிறகு நித்தின் மெல்ல ஆரம்பித்தார்.
"நான் சொன்னால் நீங்கள் கோபம் கொள்ளக் கூடாது. தேவ் பரிந்துரைத்தபடி
செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகளையே செவ்வாய்க்கு அனுப்பலாம். நம்
வசம் போதுமான கால அவகாசம் இல்லை."
மேகன் பதிலேதும் சொல்லவில்லை. அவர் பார்வை அருகிலிருந்த
குப்பைத்தொட்டியின் மீதே இருந்தது. அன்று ஏனோ யாரும் குப்பைகளை அகற்ற
வரவில்லை. சட்டென அவருக்கு மெலிதான குரல் ஒன்று கேட்டது. அது குப்பைத்
தொட்டியிலிருந்து தான் வந்து கொண்டிருக்க வேண்டும்.
அவர் குப்பைத் தொட்டியை நோக்கி வேகமாக ஓடினார். உள்ளே பிறந்த குழந்தை
ஒன்று வீறிட்டு அழுதுக் கொண்டிருந்தது. மேகன் மெல்ல அக்குழந்தையை தன்
கைகளில் ஏந்தினார். குழந்தை அவரைப் பார்த்து புன்னகைத்து கைகளை
வேகமாக அசைத்தது.
மேகன் முகத்தில் பிரகாசம் தோன்றியது. திடீரென சில முடிவுகள் அவருக்கு
தோன்றியது. நித்தினை நோக்கி வேகமாக சென்றார்.
"இது போன்று தற்போது பிறந்து கைவிடப்பட்ட நூறு குழந்தைகளை
தேர்ந்தெடுங்கள். இந்த பூமிக்கு பாரம் என கைவிடப்பட்டவர்கள் தான் செவ்வாய்
செல்ல தகுதியானவர்கள். அவர்களை பராமரிக்க பத்து செவிலித் தாய்களையும்
தேர்ந்தெடுங்கள்."
நித்தின் கண்களில் நீர் கசிந்தது. குழந்தையை அவரும் கைகளில் ஏந்தினார்.
அதனை தோளில் ஏந்திக் கொண்டு மேகனிடம் விடை பெற்றுச் சென்றார்.
சுகந்தமான தென்றல் காற்று வீசியது. பறவைகளின் குரல் இனிமையாக கேட்டது.
இரவு சூழ்ந்தது. நாளைய இனிமையான உதயத்தை எதிர் நோக்கி பூமி உறங்கியது.
#917
Current Rank
44,207
Points
Reader Points 40
Editor Points : 44,167
1 readers have supported this story
Ratings & Reviews 4 (1 Ratings)
Pavalamani Pragasam
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points