டைம் ட்ராவல்...

அறிவியல் புனைவு
5 out of 5 (4 Ratings)
Share this story

யோகி இறுதியாக அதைக் கண்டு பிடித்தே விட்டான்.
நடந்தது கனவா இல்லை நிஜமா என்று ஒருமுறை தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான். வலித்தது.
அப்போது அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டது. திறந்தான். வெளியே அவனது நண்பன் சிபி.
"என்ன யோகி?.. ஒரே குஷியா இருக்கே?.. ஏதாச்சும் பொண்ணை அஸிஸ்டென்டா சேர்த்திருக்கியா?.." சிபி கேட்டவாறே உள்ளே எட்டிப் பார்த்தான்.
யோகி அவனை உள்ளே இழுத்து கதவைச் சாத்தினான்.
"அங்கே பார்.. என் வாழ்நாள் இலட்சியம்.." வெற்றிப் புன்னகை பூத்தான்.
"என்னடா இது?.. ஏதோ மெஷின் மாதிரி இருக்கு.."
"ஏதோ மெஷின் இல்லடா.. டைம் மெஷின்.."
"டைம் மெஷினா?.."
"ஆமா.. காலத்தைத் தாண்டி இதுல பயணம் பண்ணலாம்.. அதாவது இறந்தகாலத்துக்கும், எதிர்காலத்துக்கும் போகலாம்.. இது உச்சபட்ச அறிவியல் சாதனை.." யோகி கூக்குரலிட்டான்.
"காலத்தைத் தாண்டி பயணிக்கலாமா?.. எப்படி?.."
"ஒளியின் வேகத்தை மிஞ்சும் ஒரு ஊர்தியைக் கண்டுபிடிச்சிட்டா.. நிச்சயம் முடியும்.."
சிபி தலையைச் சொறிந்தான். "அது எப்படி?.. புரியல.."
"ஒளியின் பயண வேகம் ஒரு நொடிக்கு.. ஒரே ஒரு நொடிக்கு இருபத்து ஒன்பது கோடியே தொண்ணூற்று ஏழு இலட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து நானூற்று ஐம்பத்தெட்டு மீட்டர்.. அதாவது 186,000 மைல்.." சிபி வாயைப் பிளந்தான்.
"ஒருவர் ஒரு நொடிக்கு இத்தனை கிலோமீட்டர்கள் பயணிக்க முடிஞ்சா இது சாத்தியம்னு ஸ்டீபன் ஹாக்கிங் கூட சொல்லியிருக்காரு.. ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரில இதைப் பத்தி சொல்லியிருக்காரு.." சிபியின் முகம் போன போக்கைப் பார்த்து,"அதுக்கு கொஞ்சம் டைம், ஸ்பேஸ் பத்தின நாலெட்ஜூம்.. கொஞ்சூண்டு இன்ட்ரெஸ்டும் வேணும்.." சிரித்தான்.
"டேய்.. எனக்கு புரியறமாதிரி சொல்லு.."
யோகி தொண்டையைச் செருமிக் கொண்டான். "இந்த மாதிரி டைம் ட்ராவல் பண்ண வார்ம் ஹோல் தேவை.. அது இந்த ஸ்பேஸோட இரண்டு பக்கங்களை இணைக்கிற ஒரு குழாய் மாதிரின்னு வெச்சுக்கோயேன்.. நம்மளைச் சுத்தி நிறைய வார்ம்ஹோல்கள் இருக்கு.. ஆனா அதெல்லாம் குட்டி குட்டியானது.. க்வாண்டம் மெக்கானிக்ஸ்படி.. ஒரு சின்ன வார்ம்ஹோலை.. உருப்பெருக்கி பெரிசாக்கினா ஒரு முனையில் நாம.. இன்னொரு முனை அண்டவெளியில.. அதையே கொஞ்சம் மாத்தி.. ரெண்டு முனையையும் பூமியைப் பாத்தே வெச்சோம்னா.. இறந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் டைம் ட்ராவல் பண்ணலாம்.." சிபி கண்களை விரித்தான்.
"சரிடா.. இது எப்படி வொர்க் பண்ணுதுன்னு தெரிஞ்சுக்குவ?.. இதுல யாரு முதல்ல ட்ராவல் பண்றது?.."
"அதுக்குத்தான் உன்னை வரச்சொன்னேன்.."என்றதும் அதிர்ந்தான் சிபி.
"ஹய்யோ.. என்னை விட்ருடா.." ஓட முனைந்தவனை யோகி இழுத்துப் பிடித்தான்.
"பயப்படாதடா.. நான்தான் இதுல ட்ராவல் பண்ணப் போறேன்.. அதுக்கு முன்னாடி நீ இங்க என்ன பண்ணும்னு சொல்றதுக்கு தான் உன்னை வரச்சொன்னேன்.."
"அதுக்கு உன்னை மாதிரி சயின்டிஸ்டை நீ கூப்டுருக்கலாம்ல.. எனக்கு ஒண்ணுமே தெரியாது.." என்றவனின் தோளில் தட்டி சிரித்தான் யோகி.
"டேய்.. எனக்கு தேவை தேநீர் ஊத்தி வைக்க ஒரு காலியான கோப்பை.. ஏற்கனவே தேநீர் இருக்கிற கோப்பைல.. இந்தத் தேநீரை ஊத்த முடியாது.."
"நீ எந்தக் காலத்துக்குப் போகப் போறே?.."
"நான் என்னோட தாத்தாவுக்கு தாத்தா காலத்துக்கு.. அதாவது அஞ்சு தலைமுறைக்கு முன்னால.. கிட்டத்தட்ட இருநூத்தி அம்பது வருஷங்களுக்கு முன்னால.. போகப்போறேன்.. இன்னும் தெளிவா‌ சொல்லணும்னா.. 1750க்கு அப்புறம் இருந்த கால கட்டத்துக்கு.."
"எதுக்குடா?.." என்றவனிடம், "எங்க முன்னோர் எதாச்சும் புதையல் கிதையல்..புதைச்சி வச்சிருந்திருக்கப் போறாங்க.. எதுக்கும் ஒரு பார்வை பார்க்கத்தான்.." சிரித்தான்.
"இந்த ட்ராவல்ல.. எனக்கு என்ன வேணா ஆகலாம்.. நான் திரும்ப வரலாம்..இல்லை வராமலும் போகலாம்.. இல்லைனா உனக்கு வயசானப்புறமா வரலாம்.. ஸோ எதையும் நாம கெஸ் பண்ண முடியாது.. அதனால நீ என்ன பண்றேன்னா.. இந்த லேபை வெளியில பூட்டிரு.. ஒருவேளை நான் திரும்பி வந்துட்டேன்னா.. உள்ளிருந்தே திறக்கிற மாதிரி பண்ணியிருக்கேன்.. அப்பப்ப வந்து கதவைத் திறந்து செக் பண்ணிட்டு போ.." என்றவன் சிபியை ஒருமுறை ஆரத் தழுவிக் கொண்டான்.
"இந்த முயற்சி வெற்றி பெற்றா.. இந்திய விஞ்ஞானத் துறையோட புகழ்‌.. உலக அரங்கில் மின்னப் போகுது.." என்றான்.
சிபி அவனிடம் விடை பெற்றுக் கொண்டு ஆராய்ச்சி நிலையத்தைப் பூட்டிக் கொண்டு சென்றான்.
அவன் சென்றதும் யோகி சில நிமிடங்கள் தியானம் செய்தான். சிறுவயதிலேயே தான் இழந்த பெற்றோரின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான்.
ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டு கால எந்திரத்தின் அருகில் சென்று ஏற முயன்றான்.
அப்போது பளீரென்ற பெரிய ஒளியுடன் ஒரு வாகனம் அவனருகில் வந்து நின்றது.
உள்ளிருந்து ஒருவர் இறங்கினார். அவர் அணிந்திருந்த ஆடை வித்தியாசமாக இருந்தது.
அவரைப் பார்த்தவன் திகைத்தான். ஏனெனில் யோகிக்கு வயதானால் எப்படி இருப்பானோ அதேபோல் இருந்தார் அவர்.
"நீ..நீ.. நீங்க யாரு?.. என்னை மாதிரியே இருக்கீங்களே?.." இன்னும் திகைப்பு நீங்காமல் கேட்டான்.
"என் பெயர் ஆதியோகேஸ்வர சிவாச்சாரியார்.. உன் பெயர் என்ன தம்பி?.."
"யோ..யோகி.."
"அப்படின்னா..நீ என்னோட பேரனோட பேரனாத்தான் இருக்கணும்.." குதூகலமாகச் சொன்னவர், "என்னோட குருநாதர் காலச் சித்தர் நிஜமாவே சாதிச்சு காட்டிட்டாரு.. காலப் பயணத்துல என் பேரனோட பேரனைப் பார்க்கணும்னு சித்தரை வேண்டினேன்.. அவர் செய்த ஒரு புதுவித இயந்திரத்தில் என்னை அமர வைத்து.. இங்கே கொண்டு விட்டுட்டாரு.." ஆச்சரியமாக சுற்றும் முற்றும் பார்த்து வியந்தார்.
"ஆமா.. நீங்க எதுக்கு என்னைப் பார்க்க நினைச்சீங்க?.."யோகி கேட்டான்.
"எனக்கு இயல்பாகவே புதிய கண்டுபிடிப்பு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகம்.. அப்போதுதான் காலச் சித்தரின் அறிமுகம் கிடைத்தது.. அவர் காலப் பயணம் என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.. அவரிடம் சீடனாக சேர்ந்தேன்.. என்னுடைய பணிவிடைகளும், கற்கும் ஆர்வமும் அவரைக் கவர்ந்தது.. எனது விருப்பமான எதிர்காலத்திற்கு செல்ல வேண்டும் என்பதை அவர் நிறைவேற்றினார்.." அவர் பேசிக்கொண்டே போனார்.
"என்ன காலச் சித்தரா?.. சித்தர்கள் கூட இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் செய்வாங்களா?.."
"சித்துவேலைன்னா என்ன நினைத்தாய்?.. அறிவியலும், ஆன்மீகமும் இணைந்தது தான் சித்தர்களின் ஆய்வுகள்.." வெண்தாடியை நீவிக்கொண்டு சிரித்தார்.
"சித்தர்களுக்கு இல்லாத திறமையே கிடையாது.. இரும்பைத் தங்கமாக்குவது, கூடு விட்டு கூடு பாய்வது, உடைந்த உடல் பாகங்களை ஒட்டுவது, நினைத்தவுடனே ஆகாய மார்க்கமாக பயணிப்பது, ஒரு இடத்தில் இருந்து கொண்டே இன்னொரு இடத்தில் தோன்றுவது.. இதோ இப்போது காலப் பயணம்.. எல்லாமே சாத்தியம்தான்.."
"அப்படின்னா எல்லாருமே சித்தர்கள் ஆயிடலாமே.. எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம்.." நக்கலாகச் சிரித்துக் கொண்டே கேட்டான் யோகி.
"சித்தனாவது அவ்வளவு சுலபமில்லை தம்பி.." அவரது முகம் மாறியது. அவரது இடுப்பில் இருநத
ஒரு சுவடிக்கட்டை எடுத்தார்.
"இனி இது உனக்கு உபயோகப்படாது.. சித்தரை நம்பியிருந்தால் உன்னிடம் தந்திருப்பேன்.." என்றவாறே அதை நொறுக்கினார். அது பொடிப்பொடியாக உதிர்ந்தது.
"என்ன தாத்தா அது?.."
"சித்த இரகசியங்கள் அடங்கிய ஓலைச் சுவடி.. நான் உன்னிடம் சொன்ன எல்லாவற்றுக்கும் செய்முறை வழிமுறை இரகசியங்கள் இதில் அடங்கியிருந்தன.. ஆனால் சித்தரை முழுமனதோடு.. கேள்விகள் ஏதும் கேட்காமல் ஏற்றுக் கொள்பவர் கைகளுக்கே அந்த சுவடி சொன்னது சேரவேண்டும்.. உனக்கு நம்பிக்கை இல்லையென்று அறிந்து கொண்டேன்.. இனி அது உதவாது.. அதனால் அழித்து விட்டேன்.."
"எதுக்கு என்னைப் பார்க்கணும்னு நினைச்சீங்க தாத்தா?.."
"நான் சித்தர்களோடு இருக்கிறேன்.. என் சந்ததிகள் எப்படி இருப்பார்கள் என்று யோசித்தேன்.. நான்கைந்து தலைமுறைகளுக்குப் பிறகு.. என் வம்சத்தின் அறிவு எப்படி இருக்குமென்று சிந்தித்தேன்.. இந்த சுவடியை உன்னிடம் கொடுக்கலாய் என்றுதான் உன்னைக் காண வந்தேன்.. வேறு ஒன்றும் பிரத்தியேகக் காரணங்கள் இல்லை.."
யோகிக்கு குழப்பமாக இருந்தது.
'என்னை மாதிரியே என் தாத்தாவும் அறிவியல் ஆர்வலரா?.. இல்லை சித்தரா?..அவர் எதிர்காலத்துக்கு வந்ததா சொல்றாரே?.. அப்போ நான் யார்?.. நான் கடந்த காலத்திற்கு போகணும்னு நினைச்சது என்னாச்சு?.. அப்ப நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை?.. நான் பிறந்திருக்கேனா இல்லை இனிதான் பிறக்கப் போறேனா?.." கேள்விகள் மாற்றி மாற்றி வட்டமடித்தன.
ஒரு நொடியில் மண்டைக்குள் ஏற்பட்ட பிரளயத்தால் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் மூளைக்குள் சுற்றிச் சுழன்று நடனமாடினர்.
அழுத்தம் தாளாமல் யோகி மயக்கமடைந்து தரையில் வீழ்ந்தான்.
*****

Stories you will love

X
Please Wait ...