அறம்

porkodirameshbabu
பெண்மையக் கதைகள்
4.9 out of 5 (191 Ratings)
Share this story

அறம்
(சிறுகதை)
எழுதியவர் : பொற்கொடி
​“ஹேய் திவ்யா! இந்த இருபத்து மூன்று வருடங்களில் நீ கொஞ்சமே கொஞ்சம் தான் மாறியிருக்கிறாய்! இரட்டை பின்னல் போட்டு ஸ்கூல் யுனிஃபார்ம் அணிந்தால், நீ பள்ளிச் சிறுமி போலவே இருப்பாய்!” என்றாள் அகிலா சிரித்தபடி.
​“உன் பேச்சில் கொஞ்சம் பொய் கலந்திருந்தாலும், கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. தேங்ஸ் அகிலா!” என்று கூறி மனம் விட்டு சிரித்தாள் திவ்யா.
​“உன்னைக் கண்டுபிடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா?” என்றாள் பூமா “ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்று எந்த சோஷியல் மீடியாவிலும் நீ இல்லை. உன்னோட பழைய மாணவி ஒருத்தி, ஆசிரியர் தினத்தன்று உன்னை டேக் (tag) செய்து போட்ட ஃபேஸ்புக் மெஸேஜைப் பார்த்து, அப்படியே சில பல டிடெக்டிவ் வேலையெல்லாம் செய்து உன்னைக் கண்டுபிடித்தோம்” என்றாள் பெருமிதமாய் “உங்கள் முயற்சிக்கு நன்றி! நன்றி! நன்றி!” என்று புன்னகையுடன் கரம் குவித்தாள் திவ்யா.
​“அரசியல்வாதியின் மனைவி என்பதை நிரூபித்து விட்டாய், மை டியர் ஃப்ரெண்ட்!”, என்றாள் விஜி கேலியாய்.
​நொடியில் திவ்யாவின் புன்னகை மறைந்து அதுவரை மனதில் பொங்கிய உற்சாகம் வடிந்து போனது.
​“ஹாய் திவ்யா!” என்று கூவினாள், அப்போதுதான் தோழிகளின் அந்த கான்ஃபரன்ஸ் வீடியோ கால்-இல் இணைந்த பிரியா..
​“ஹாய் ப்ரியா! எப்படி இருக்கே? எத்தனை வருடங்கள் ஆகி விட்டது உன்னைப் பார்த்து?” என்றாள் திவ்யா.
​“ஐயம் ஃபைன் கடைசியாய் உன்னை உன் கல்யாணத்தில் பார்த்தது. அதன் பின் தான் நீ எங்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டாயே!” என்று கேலியாகக் கூறினாள் பிரியா.
​“ஏய் ப்ரியா! திவ்யா மேடம் இப்போது “பெங்களூருவின் பெஸ்ட் ப்ரொஃபெஸர்; தெரியும் இல்லை?” என்று நினைவூட்டினாள்.
​“தெரியும், தெரியும்! அப்படித்தானே ஃபேஸ்புக்கில் அவள் மாணவர்கள் அவளைக் கொண்டாடி இருக்கிறார்கள்” என்ற ப்ரியா, “உன்னைப் பார்த்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது திவ்யா. இந்த காலத்தில் ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் நல்ல் பெயர் எடுப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். நீ அதை சாதித்து விட்டாய்!” என்றாள் உண்மையான மகிழ்ச்சியுடன்.
​“தேங்க் யு ப்ரியா! பிறரை பாராட்டுவதற்கும் நல்ல மனசு வேண்டும். அது உன்னிடம் இருக்கிறது,” என்றாள் திவ்யா.
​“க்கும்!” என்று வேண்டுமென்றே உரக்க தன் தொண்டையை கனைத்தாள் அகிலா. “நாம் க்ரூப் விடியோ கால்-இல் இருக்கிறோம், மை டியர் ஃப்ரெண்ட்ஸ். சட் சட்டென்று ஒவ்வொருவராய் பேசி விட்டு கால்-ஐ டிச்கனெக்ட் செய்யுங்கள். அப்போதுதான் நாம் இரவு சீக்கிரம் தூங்கி நாளை காலையில் சீக்கிரம் கிளம்பி ஸ்கூலுக்கு வர முடியும். நம் பள்ளியின் பொன்விழா ஆண்டை முழுக்க எஞாய் பண்ணலாம்”
​”இந்த வயதில், நாம் ஸ்கூலில் மீட் பண்ணப் போவதை நினைத்தாலே, வயது குறைந்து மீண்டும் ஸ்கூல் டேஸ்க்கு போய் விட்டது போலிருக்கிறது,” என்றாள் லக்குமா.
​”ஓகே! கேர்ள்ஸ்! குட் நைட். நாளை நேரில் நாள் முழுவதும் பேசலாம்,” என்று கீதாஞ்சலி விடைபெற்றுக் கொள்ள, வரிசையாய் அனைவரும் விடை பெற்றனர்.
* * * * *
​”ஹாய் மா! நாளைக்கு சென்னை போக ரெடி ஆகி விட்டாயா?” என்று கேட்டபடி வந்த திவ்யாவின் பதினாறு வயது மகள் ஸ்வாதி, ஆசையாய் தன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
​”இன்னும் இல்லடா, செல்லம்!” என்றாள் திவ்யா மகளின் தலை முடியைக் கோதியபடி.
​”ட்வென்டி த்ரீ இயர்ஸ் கழிச்சு, நீ உன் ஃப்ரெண்ட்ஸை மீட் பண்ணப் போறதை நினைச்சு எனக்கு ஒரே எக்ஸைட்மெண்ட்டா இருக்கும்மா. வா! நாளை நீ போடப்போகிற டிரெஸ்ஸை ஸெலக்ட் செய்யலாம்!” என்று மகிழ்ச்சியுடன் துள்ளி எழுந்தாள் ஸ்வாதி.
​மகளின் உற்சாகம் அவளையும் தொற்றிக் கொள்ள, சுற்றுலா போகப் போகும் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு தன் உடைகளை ஆராய்ந்தாள் திவ்யா. கிட்டதட்ட அனைத்து நிறங்களிலும் தொங்கிய புடைவைகள் ஆர்வத்தோடு தன் உடைகளை ஆராய்ந்தாள் திவ்யா. கிட்டதட்ட அனைத்து நிறங்களிலும் தொங்கிய புடவைகள் சற்று ஆடம்பரமாய் தெரிய அவற்றைப் புறக்கணித்து சுடிதார் வகைகளைப் பார்வையிட்டாள். கண்ணை உறுத்தாத வண்ணங்களில் மெல்லிய சரிகையிட்ட பட்டு சுடிதார்கள் அவளிடம் ஏராளமாய் இருந்தன. ஒவ்வொன்றாய் தள்ளியபடி வந்தவள், ஏறக்குறைய தன் பள்ளிச் சீருடையின் வண்ணத்தை ஒத்திருந்த அந்த பச்சை நிற சுடிதாரை தேர்வு செய்ய, “சூப்பர் மா!” என்று தன் ஒப்புதலை அளித்தாள் ஸ்வாதி.
​முன்பு அந்த சுடிதாரை அணிந்தபோதெல்லாம், “பச்சை நிறமே! பச்சை நிறமே!” என்று பாடியபடி கணவன் தன்னை ஆசையுடன் சுற்றி வந்த காட்சிகள் நினைவுக்கு வர, பெருமூச்சு விட்டாள் திவ்யா. இப்போதெல்லாம், வீட்டையும் அவன் நியமித்த வேலைக்காரர்களையும் நிர்வகிப்பதற்கும் சமூகத்தில் தானும் ஒரு வெற்றிகரமான குடும்பத் தலைவன் என்று சொல்லிக் கொள்ள உதவும் ஒரு கருவியாகவும் தான், கணவன் தன்னை மதிக்கிறான் என்பது அவள் அறிந்ததே.
* * * * *
​வேலைக்காரர்கள் இரவு உணவை பரிமாற, பதினைந்து தொண்டர்கள் புடை சூழ, டைனிங் டேபிளில் அமர்ந்து கன்னட மொழியில் வெகு சரளமாய் பேசி சிரித்தபடி சாப்பிடும் கணவன் அந்நியமாய் தெரிந்தான். உண்டு முடித்து அனைவரையும் இன்முகத்தோடு வழியனுப்பி விட்டு ஹாலில் அமர்ந்து, டி.வி.யை உயிர்ப்பித்து அனைத்து சேனல்களின் செய்திகளையும் உன்னிப்பாய் கேட்டான்.
​அவன் எதிரில் இருந்த ஸோஃபாவில் அமர்ந்தாள் திவ்யா.
​”என்னங்க!” என்றாள்.
​அவன் கண்கள் டி.வி. திரையை விட்டு விலகவுமில்லை; அவளுக்கு அவன் பதிலளிக்கவுமில்லை.
​அவனின் இந்த அநாகரிக நடத்தை பழகியது என்பதால் அவளை பாதிக்கவில்லை. உணர்வுகள் புரியாதவனிடத்தில் அன்பை எதிர்பார்ப்பது மடைமை.” நான், நாளை சென்னை போகிறேன்!” என்றாள்.
​முகம் முழுக்க எரிச்சல் மண்டியிட, அவளை நோக்கினான் அவன். “அதெல்லாம் ஒன்றும் நீ போக வேண்டாம்!” என்று அலட்சியமாய் சொன்னவன் மீண்டும் தன் பார்வையை டி.வி. திரையில் பதித்தான்.
​”நான் படிச்ச ஸ்கூலோட பொன்விழா ஆண்டு. அங்கு படித்த பழைய ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் ஒன்று கூட போகிறோம். எனக்கும் என் ஃப்ரெண்ட்ஸை எல்லாம் மீட் பண்ணனும்னு ஆசையா இருக்கு. நான் போகத்தான் போகிறேன்!” என்றாள் தீர்மானமாக.
​”ஏன், 96 படத்தில் வருவது போல், உன் முன்னாள் காதலன் எவனும் வருகிறானோ?” என்று கேட்டு தன்னைக் கூர்மையாய் நோக்கியவனை, கேவலமான ஜந்துவை பார்ப்பது போல் தன் இழி பார்வையை அவன் மீது வீசினாள் திவ்யா. “தான் திருடி, பிறரை நம்பாள்” என்ற வரி மனதுள் ஓடியது.
​”நான் படித்தது பெண்கள் பள்ளி!” என்று சொன்னவளுக்கு அவனின் வரைமுறையற்ற, சீர்கேடான விலங்கியல் வாழ்வு நினைவுக்கு வந்தது. முதன்முதலாய் அவன் அசிங்கமான அந்தரங்க வாழ்வு தெரிய வந்ததும், எல்லா மனைவிகளையும் போல் நிலை குலைந்து துடித்து போனாள் தான்; சினிமா கதாநாயகி போல் அவனைக் கொன்று விடக் கூட அவள் நினைத்ததுண்டு. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அவ்வகை செயலால் பயனில்லை என்பதோடு, அவன் தீய குணத்திற்க்காக தன் வாழ்க்கையை தொலைத்து தன் மகளை அநாதரவாய் விட்டுச் செல்லவும் அவளுக்கு விருப்பமில்லை. அதனால் ஒரே வீட்டிலிருந்தும் ஒட்டு மொத்தமாய் அவனிடமிருந்து விலகி விட்டாள். எல்லையற்ற வெறுப்பு விழிகளில் ஒளிர தன்னை ஏறிட்டவளை கண்டு,
​”பார்வையாலேயே, ஒரு மனிதனைக் கொல்ல உன்னால் மட்டுமே முடியும்,” என்றவன் “நாளை மறுநாள் நாம் டெல்லி சென்று ஜனாதிபதியை நேரில் காண வேண்டும். ரொம்ப கஷ்டப்பட்டு அப்பாய்ன்ட்மெண்ட் வாங்கியிருக்கிறேன். நினைவிருக்கிறதா? அது தான் இப்போது முக்கியம்!” என்றான் முடிவாக.
​”நாளை, மறுநாள் மதிய ஃப்ளைட்டில் தானே போகப் போகிறோம். நான் நாளை இரவே திரும்பி வந்து விடுவேன்!” என்றாள்.
​அவளை கடுப்புடன் முறைத்தவன், “இப்போதைய சூழ்நிலையில், இது ரொம்ப முக்கியமா?” என்றான்.
​”எனக்கு முக்கியம் தான். நாளை காலை நான் சென்னை செல்கிறேன்!” என்று சொல்லி அவ்விடம் விட்டு அகன்றாள், திவ்யா.
* * * * *
​மறுநாள்; சென்னை. பொன் விழா ஆண்டைக் கொண்டாடும் பொருட்டு, பள்ளி கோலாகலமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பன்னிரெண்டு ஆண்டுகளாய் தன் வாழ்வின் முக்கிய அங்கமாக திகழ்ந்த பள்ளியின் மண்ணில் காலடி எடுத்து வைத்ததும் உணர்ச்சி பெருக்கில் திவ்யாவின் கண்கள் கலங்கின.
​படிப்பு, தோழிகள் என்று கவலையற்று சுற்றித் திரிந்த காலகட்டம் நினைவில் மோதி, நெஞ்சை பாரமாக்கியது.
​”ஹேய் திவ்யா! வெல்கம்! வெல்கம்!” என்று கூச்சலுடன் வரவேற்றனர், அவளின் தோழிகள்.
​பல வருடங்களுக்குப் பிறகு அவர்களை நேரில் பார்ப்பது, திவ்யாவுக்கு மகிழ்ச்சிகரமான புதிய அனுபவமாக இருந்தது. வயது கூடி, தோற்றங்கள் மாறியிருந்தபோதும், பள்ளி அவர்களை மீண்டும் மாணவப் பருவத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதை உணர்ந்தாள்.
​இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்பிருந்த அதே உற்சாகத்தோடு, ஒருவர்க்கு ஒருவர் பேசி சிரித்தபடி பள்ளியின் விளையாட்டுத் திடலுக்கு வந்தனர். அங்கே, முன்பு அவர்கள் வழக்கமாக அமர்ந்து சாப்பிடும் மரத்தின் கீழ் அமர்ந்தனர்.
​படித்த காலத்தில் பெரிதாகத் தோன்றிய சறுக்கு மரமும், ஊஞ்சலும், இலக்கிய மேடையும் – ஏன் மரத்தடியுமே கூட சிறியதாகி விட்டதை போல் தோன்றியது.
​”என்னப்பா, இது? நம்ம ஸ்கூலே அளவுல சின்னதாகி விட்டது போல் தெரிகிறது. இந்த மரத்தடியில் நம் வகுப்பினர் மொத்தமுமே வட்டமாக அமருவோமே!” என்றாள் ப்ரியா நம்ப முடியாத வியப்புடன்.
​சிரித்தபடி அவள் தோளைத் தட்டினாள் திவ்யா.
​”இப்படி சிறியதாய் தெரிவது இயல்புதான் ப்ரியா! நாம் சிறியவர்களாக இருக்கும்போது பெரியதாகவும், அதே இடம் நாம் வளர்ந்த பின்பு சிறியதாகக் காட்சியளிப்பதும் ஒரு தியரி. நம்ம ஸ்கூல், அன்றும் இன்றும் ஒரே அளவில் தான் இருக்கிறது,” என்றாள்.
​“ஓ!” என்ற ப்ரியா, “எனக்கு இப்போதே பசிக்கிறதே, எப்போது சாப்பிட போவோம்?” என்று ஏக்கமாய் கேட்டாள்.
​’பக்’ என்று சிரித்து விட்டாள் நித்யா. “நீ கொஞ்சம் கூட மாறவில்லை டி!” என்றாள்.
* * * * *
​மதிய உணவு, அவர்கள் பள்ளிக்கு அருகிலிருந்த நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட ஏற்பாடு செய்திருந்தனர். தோழிகள் இருபத்தோரு பேரும் வட்ட வடிவில் இருந்த பிரம்மாண்ட மேசையை சுற்றி அமர்ந்தபடி சாப்பிடத் தொடங்கினர்.
​அன்றைய விழாவில் பங்கு பெற முடியாத தோழிகள், தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியைகள், எப்போதுமே சிடுசிடு வென இருந்த கெமிஸ்ட்ரி டீச்சர், வெறுமனே பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவித்த ஃபிஸிக்ஸ் டீச்சர், வெகு கறாரான கணக்கு டீச்சர், ஒரு பக்க பாடத்தை ரசித்து, ரசித்து ஒரு மணி நேரம் விளக்கம் தரும் ஆங்கில ஆசிரியை, நட்புடன் பழகிய பயாலஜி டீச்சர், அவர்களை அமெரிக்க டூர் அழைத்து செல்வதாய் கதை அடித்த வரலாறு. புவியியல் ஆசிரியை, எப்போதுமே தூய தமிழில் பேசும் தமிழ் ஆசிரியை என்று ஒவ்வொருவரைப் பற்றிய தங்கள் பள்ளி கால நிகழ்வை நினைவு கூர்ந்து சிரித்தபடி சாப்பிட்டார்கள்.
​பல வருடங்களுக்கு பிறகு தன் மனம் உல்லாசமாய் இருப்பதை உணர்ந்தாள் திவ்யா.
​“உங்களையெல்லாம் சந்தித்து பேசியது ரொம்ப ரொம்ப ரிலாக்ஸிங்கா இருக்கு. வாழ்க்கையையே ரீ சார்ஜ் செய்தது போல் ஒரு புதுவித சக்தி பிறக்குது. மிகவும் கஷ்டப்பட்டு என்னைத் தொடர்பு கொண்டதற்கு ரொம்ப தேங்க்ஸ் பா!” என்றாள் திவ்யா நெகிழ்ச்சியுடன்.
​“நோ திவ்யா! இப்படியெல்லாம் வோட் ஆஃப் தேங்க்ஸ் போல பேசி நம்ம ரிலேஷன்ஷிப்பை முடிக்கக் கூடாது. வருடத்திற்கு இரண்டு முறையாவது நாம் இப்படி மீட் பண்ணி பேசிக்கணும். ஓகே?” என்றாள் பூமா.
​“ஷ்யுர்!” என்று மகிழ்வுடன் புன்னகைத்து, ஒப்புதலாய் தலையசைத்தாள் திவ்யா.
* * * * *
​மாலை. பொன் விழா நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் தொடங்கின. பின், கல்வி அமைச்சர், மாணவிகளுக்குச் சான்றிதழும் கேடயமும் வழங்கி பள்ளிக் கூடத்தின் பெருமையை வானளாவப் புகழ்ந்தார். இறுதியாய், மாணவிகளின் பலத்த கைத்தட்டல்களிடையே பேசத் தொடங்கினார் தலைமை ஆசிரியை. அவர் தோற்றத்தில் வயோதிகம் தென்பட்டபோதும், அவர் குரல் எப்போதும் போல் கணீரென்று வெளிப்பட்டது.
​”எங்கள் பள்ளியின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்க வந்திருக்கும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி. சமுதாயம், இப்போதெல்லாம் முன் காலம் போல் இல்லை; கெட்டு சீரழிந்துக் கொண்டிருக்கிறது என்று விட்டேற்றியாய் பேசி விட்டு போக முடியாது. இந்த சமுதாயத்தை சீர் திருத்தும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பாய் பெண்களாகிய நமக்கு மிக அதிகமாகவே அந்த பொறுப்பு இருக்கிறது.”
​”சமுதாயம் எக்கேடு கெட்டால் என்ன? நமக்குத் தேவை ருசியான சாப்பாடும், பொழுது போக்கு ஸீரியல்களும் என்று இருந்து விடக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருக்கும் அறத்தை பிழைக்க செய்து தழைத்தோங்கி செழிக்க வைக்க நம்மைப் போன்ற பெண்கள் மனது வைத்தால் முடியும்.
​முந்தைய தலைமுறை வாழ்வில், ஆண் தவறு செய்தால், அதை தட்டிக் கேட்டு அவனை திருத்துபவளாக பெண் இருந்தாள். அவள் சக்தி கண்டு, ஆண் தவறு செய்ய பயந்தான். ஆனால் இன்றைய வாழ்வியலில், கணவன் தவறு செய்ய மனைவியே திட்டம் வகுத்துத் தருகிறாள். வசதியான வாழ்க்கை வாழ்வதற்காக, போதை மருந்து விற்பது; சூதாட்ட விளையாட்டுகள் மூலம் பணம் பறிப்பது, போலி நகைகளை அடகு வைக்க கணவனுக்கு துணை செய்வது என்று அத்தனை குற்றங்களிலும் பெண்ணும் பங்கேற்கிறாள். பெண்ணே! எங்கே போயிற்று உன் அறம்? நிமிர்ந்த நன்னடையையும் நேர் கொண்ட பார்வையையும் எங்கே தொலைத்தாய்? நீ உன் இல்லறத்தை நல்லறமாகப் பேணினால், குற்றங்கள் மறைந்து நல்ல சமுதாயம் உருவாகுமே! வீடு உயர; நாடும் உயரும் என்ற பொன்மொழிக்கு உயிர் கொடுங்கள், எனதருமை செல்வங்களே!”,
​திவ்யா, தன் உடல் சிலிர்க்க உள்ளம் உறுதி பெற கண்களில் திரண்டு விட்ட கண்ணீர் படலத்தின் ஊடே பேசிக் கொண்டிருந்த தன் தலைமை ஆசிரியரை பெருமையுடன் பார்த்தாள்.
* * * * *
​புது தில்லி :ஜனாதிபதியின் மாளிகை. நடுநாயகமாய் இருந்த அந்த சிறிய மேடையின் மீதேறி, மைக் கின் முன் நின்று பேசத் தொடங்கினாள், ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி.
​தன் மகன் குற்றமற்றவன் என்றும், தன் கணவனின் நேர்மையின் மீதிருந்த காழ்ப்புணர்ச்சியால், எதிர் கட்சியினர் தன் மகனின் மீது பொய்க் குற்றம் சாட்டுகிறார்கள் என்று சுட்டிக் காட்டினாள். சம்பவம் நடந்த போது தன் மகன் வீட்டில் இருந்ததாகக் கூறினாள். சரளமான இந்தி மொழியில் தன் மகனை இந்த பொய்க்குற்றத்திலிருந்து விடுவிக்கும்படி கண்ணீர் மல்க மன்றாடினாள். அவளின் உருக்கமான பேச்சு, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களைக் கூட அனுதாபத்துடன் “உச்” கொட்ட வைத்தது.
​இரண்டாவதாக பேசுவதற்கு திவ்யா அழைக்கப்பட்டாள். நிமிர்ந்த நடையுடன் சென்று மேடையேறிய திவ்யா, தெளிவான ஆங்கிலத்தில் நிதானமாய் பேசத் தொடங்கினாள்.
​”மதிப்புக்குரிய ஜனாதிபதி மற்றும் இங்கு குழுமியுள்ள அனைத்து பெரியவர்களுக்கும், வணக்கம்! என் மகன், உல்லாசப் படகில் தன் நண்பர்களுடன் சேர்ந்து போதை மருந்து உட்கொண்டு, தன்னிலை மறந்து, ஒரு மிருகத்தைப் போல் தன் தோழிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதற்கு சான்றாய் வெளியான வீடியோ முற்றிலும் உண்மையானதே! எந்த வித கிராஃபிக்ஸ் டெக்னிக்கும் கிடையாது!” என்று கூறி, சிறிய இடைவெளி விட்டு நிறுத்த, அனைவரும் அப்பட்ட அதிர்ச்சியுடன் அவளை ஏறிட்டனர்.
​“ஏ….ய்ய்ய்!” என்று கூக்குரலிட்டு, எகிறியபடி அவளை நோக்கி ஓடி வந்த அவள் கணவனை, தன் கையசைவில் தடுத்து நிறுத்திய ஜனாதிபதி, “நீங்கள் தொடர்ந்து பேசலாம்!” என்று அவளுக்கு அனுமதி அளித்தார்.
​தொடர்ந்தாள் திவ்யா. “பிறந்த நாள் பார்ட்டி என்று அழைத்ததை நம்பி, தான் வந்ததாகவும், உணவில் போதை மருந்து கலந்து, தான் சுயநினைவை இழந்த பின்பு, என் மகனும் அவன் நண்பர்களும் தன்னை சீரழித்து, அந்த வீடியோவை காட்டி மிரட்டி தன்னை பாலியல் வன்முறை என்ற படுகுழியில் தள்ள முயற்சிப்பதாய் சொன்ன அந்த தைரியமான, பாரதியின் புதுமைப் பெண் கொடுத்த புகார் முற்றிலும் உண்மையானதே! என் மகன் மேலும் அவளை மிரட்டியதற்கான ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. முதல்வரின் மகன், என் மகன், எனக்கு முன் பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன், அடுத்து பேசக் காத்திருக்கும் பிரபல நடிகரின் மகன் என்ற இந்த நால்வர் கூட்டணி, தத்தம் தந்தைகளின் புகழ் என்ற நிழலில் குளிர் காய்ந்தபடி, இந்த சமூகத்தை சீரழிக்கக் கூடிய செயல்களை செய்து வருகிறார்கள். இந்த நால்வருக்கு அடி பணிந்து பணியாற்ற ஒரு தனி நெட்வொர்க்கே இருக்கிறது. கருணை மனு கோரிக்கைக்குக் கூட அருகதை இல்லாத மிருக ஜாதியைச் சேர்ந்தவர்கள், இவர்கள்.
​என் மகனை கண்டித்துப் பார்த்தேன்; அவனை நல்வழியில் திருத்துவதற்கு எவ்வளவோ முயன்றேன். அவன் செய்ய விழையும் தீய செயல்களின் விளைவை விளக்கி அறிவுறுத்தினேன். எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகி போயின. அவன் தன்னைத் திருத்திக் கொள்ள கொள்ள விரும்பவில்லை என்பதே உண்மை. மெல்ல, மெல்ல அவன் செய்யும் தவறுகள் அதிகரித்து, இன்று தன்னுடன் படிக்கும் பெண்ணை தன்னை நம்பி வந்த தோழியை பலாத்காரம் செய்யுமளவு கேடு கெட்டு போயிருக்கிறான். இனி மேலும் இவனை தண்டிக்காமல் விட்டால், மிகப் பெரிய சமூக விரோதியாக ஆவான் என்பது உறுதி. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு செல்வாக்கு பெற்றவர்களாய் இருந்தாலும் அவர்கள் செய்தது குற்றமே. அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்ற நிலை வந்தால் மட்டுமே, தண்டனை குறித்த பயம் வரும் ; தவறுகளும் குறையும்.
​எனவே, இவர்கள் செய்த குற்றத்தை பொது மேடையில் அறிவித்து, அதற்கான தண்டனையாய் இவர்கள் நால்வரையும் நடுவீதியில் நிற்க வைத்து, சற்றும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதே என் கோரிக்கை!” என்று நிறுத்தி, நிதானமாய் சொன்ன திவ்யா, ஜனாதிபதியை நோக்கி கரம் குவித்து விட்டு, மேடையை விட்டு இறங்கினாள்.
​உடன் அவளைச் சூழ்ந்துக் கொண்டனர். ஊடகவியலாளர்கள். “ஒரு தாயான நீங்களே, உங்கள் மகனைக் கொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்க, என்ன காரணம்?” என்று கேட்ட நிருபரை தீர்க்கமாய் பார்த்து, அட்சர சுத்தமாய் பதில் சொன்னாள் திவ்யா.
”அறம் நிலைக்க வேண்டும்!”

Stories you will love

X
Please Wait ...