JUNE 10th - JULY 10th
மே மாதக் கனவுகள்’ கதாசிரியர் டெய்சி ஜோசப்ராஜ்
அந்த இளங்காலைப் பொழுதில் இளமங்கையின் கையில் விரியும் கோலத்தைப் போல் விரிந்திருந்தது அந்தக் கிராமம். கோல வளைவுகளில் போல் வரிசைக்கிரமத்தில் புள்ளிகளாய் சிறிதும் பெரிதுமான வீடுகள் இருக்க, தேசம் இன்னும் சேதப்படவில்லை என்பதை பரைசாற்றும் விதமாய் ஒப்பனைகள் எதுவுமின்றி நிர்வாணமய் விரிந்திருந்த்து அந்தக் கிராமம்
சூரியன் சோம்பல்முறிக்கும் பொழுதே கண்விழித்த பாண்டி, நழுவிவிழும் டிரவுசரை அரைஞானில் இறுக்கிக் கொண்டே தன்னை யாரும் பார்க்கிறார்களா என்று திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டு தன் குட்டிவீட்டின் முன்னாலிருந்த வேப்ப மரத்தில் ஒண்ணுக்கடித்தான்.
சில்வர்ஜூப்ளி கண்ட அந்த மரம், நேர்ந்துவிட்டக் கடனுக்காய்த் தலை முழுவதும் முடி சுமக்கும் குழந்தையைப் போல் இலைகளையும், பூக்களையும், காய்களையும், கனிகளையும் அம்பாராமாய் சுமந்து கொண்டு பல கிளைகளோடு வளர்ந்து நிற்க, அவனுக்குப் பின்னால் வந்து அவன் காதைப் பிடித்துத் திருகினார் அவனுடைய அம்மா ஈஸ்வரி
“ஒதுக்குப்புறமா போகணும்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?!”
“போமா இது நான் ஒண்ணுக்கு அடிச்சே வளர்ந்த மரம்மா! எப்படி கொழுக் மொழுக்னு இருக்கு பார்த்தியா?” என்று சொல்லிக் கொண்டே அவர்களின் பத்துக்கு பத்து பங்களாவிற்குள் ஓடி இங்கும் அங்குமாய் உருண்டுகிடந்த தங்கை மீனாவையும் தம்பி கோபாலையும் எழுப்பினான்.
“ஏய் மீனா எந்திரி! வெளிச்சம் வர்றதுக்குள்ள கருவக்காட்டுக்குப் போயிட்டு, ஊரணியில் குளிச்சுட்டு, வீட்டுவேலை முடிச்சு ஸ்கூலுக்குக் கிளம்ப வேணாமா??? அந்தக் கருவைக் காடுதான் அந்த ஊர் மக்களின் திறந்த வெளிப் பொது கழிப்பிடம். சிறுசும் பெரிசுமாக ஒளிந்தும் மறைந்தும் கண்ணாமூச்சி ஆடிவிட்டு; ஆலங்குச்சியோ வேப்பங்குச்சியோ ஒடித்து பல்துளக்கும் தூரிகையாக்கிப் பல்விளக்கிய பின்னர் அந்த ஊரணியில் குளித்து காலைக் கடன்கள் அனைத்தையும் முடித்துவிட்டுத்தான் கரை ஏறுவார்கள் ”
“அண்ணா பிளீஸ் ஒன் மினிட்!”
“ஏய் போடி இந்த ஒன்மினிட்டில் உலகத்தையே சுத்தி வந்துறலாம்! டேய் கோபால், எந்திரிடா” என்று இருவரையும் உருட்டி எழுப்பியவன் மல்லாந்து கிடந்த தந்தைமேல் பாதம் பட்டுவிடாமல்,,,
இருவரையும் இழுத்துக் கொண்டு ஊரணியை நோக்கி ஓடினான்.
திட்டுத் திட்டாய் நீலம் போட்ட வெள்ளை வேட்டியைப் போல் விரிந்திருந்தது வானம். இதோ அந்த ஊரணியே சிறுசுகளின் கும்மாளம் மற்றும் பெருசுகளின் அதட்டல் உருட்டல் என்று இரண்டுபட்டுக் கொண்டிருந்தது.
“ஏய் மீனா ரொம்ப ஆழத்துக்குப் போகாதடி!”
“அண்ணா எனக்கு நீச்சல் கத்துக் கொடேன்!”
“அதெல்லாம் பாவாடை இடுப்பில் டைட்டா நின்னப்புறம் கத்துக்கலாம்! சீக்கிரம் நல்லா மூக்கைப் பிடுச்சுக்கிட்டு முங்கிக் குளி! டேய் கோபால் குளிச்சு முடிச்சாச்சா? பதின்மூன்று வயது பாண்டி, தன் தம்பி தங்கை இருவரையும் விரட்டிக் கொண்டிருந்தான்.
“எப்பவும் உனக்கு அவசரம்தான் ஒரு முறை நீச்சல் அடிச்சுட்டு அக்கரைக்குப் போயிட்டு வர்றேன்ணா!” அவனைவிட ஒருவயது குறைந்த தம்பி கோபால், தண்ணீருக்குள் வாளைமீனாய் வழுக்கிச் சென்றான்.
“நீ சாவகாசமா நீச்சல் அடிச்சுட்டு வா! அடுத்த ஒலிம்பிக்ஸ்லாவது தங்க மெடல் தர்றாங்களா பார்க்கலாம்! எனக்கு நேரமில்லை!” என்று நீரில் முங்கி எழுந்து, படபடவென்று சுழன்று சுழன்று நீச்சல் அடித்து, வெற்றுக் கைகளால் உடம்பை நன்றாக தேய்த்துக் குளித்த பாண்டி, டால்ஃபினைப் போல் சர்ரென்று வெளியேறினான்,
இடையில் கட்டியிருந்த மெல்லிய துண்டைப் பிழிந்து பரபரவென்று தலையைத் துவட்டிக் கொண்டே கழட்டிய ட்ரவுசரை மாட்டிக் கொண்டவன், கோபாலும், மீனாவும் அதே டவலால் உடம்பைத் துவட்டும் வரை காத்திருந்து பின்னர் ஓடத் துவங்கினான்.
“டேய் அண்ணா நில்லேன்! உன் வேகத்துக்கு ஓட முடியலை!”
“பெரிய P.T. உஷாவா வரப்போறேனு தம்பட்டம் அடிக்கிற! இந்த ஸ்பீட் ஓட முடியலியா?”
“ஐயோ அண்ணா காலில் முள் குத்திருச்சு!” மீனாவின் அலறலில் சடன் ப்ரேக்கடித்து அவளிடம் ரிவர்சில் ஓடி வந்து அவள் காலை ஆராய்ந்தவன்,
“சீ! ஒரு நெருஞ்சி முள்ளுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்? துஷ்யந்தனிடம் காலைத் தூக்கிக் காட்டிய சகுந்தலை மாதிரி ஸ்டைலா நிக்கிற?” என்று அவள் தலையில் செல்லமாய்க் குட்டிவிட்டு, “இதுக்கான மருந்தை போன வாரம்தான் எங்க தமிழ் வாத்தியார் கூறினார்.” என்றவன்,
‘பத்துரத புத்திரனின், மித்திரனின், பத்தினியின் கால் வாங்கித் தேய்!” என்று சொல்லிக் கொண்டே முள்ளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, கசிந்திருந்த இரத்தத்தை எச்சில் தொட்டுத் துடைக்க,
“டேய் அண்ணா நீ சொன்னதுக்கு என்னடா அர்த்தம்!” என்று பின்னாடியே ஓடி வந்த கோபால் கேட்க ,
“அம்மா ஐஸ்ப்ரூட் வாங்கக் கொடுக்கிற காசில் பாதி உண்டியலுக்கு வரணும்!” என்று கராராய் பேரம் பேசியவன்,
“பத்துரத புத்திரன் தசரதன், அவர் மகன் ராமன், ராமனின் தோஸ்து வாலி, வாலியோட பொண்டாட்டி தாரை! தாரையின் காலை வாங்கினாத் தரை! தரையில் உன் காலைப் போட்டுத் தேச்சா எல்லாம் சரியாப் போயிரும்!” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்ல,
தரையில் காலை உதைத்துக் கொண்டே சினுங்கத் தொடங்கினா மீனா!
“கரெக்ட் அப்படித்தான் இன்னும் கொஞ்சம் வேகமாய் உதை” என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் ஓடத் துவங்கினான் பாண்டி.
பாண்டி சிறுவர்களுக்குறிய குறும்புகளோடு, அறிவும் அழகும் நிறைந்த புத்திசாலிப் பையன். அந்தக் கிராமத்திலிருந்த நடுநிலைப்பள்ளியில் அவன் எட்டாவதும், கோபால் ஏழாவதும் மீனா ஐந்தாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள்.
பாண்டியின் தந்தை ஓர் கொத்தனார். தாய் ஈஸ்வரி அவருடன் சித்தாள் வேலை பார்த்தார். அரேபியர்கள் எண்ணை விற்ற காசு அவர்கள் கிராமத்தில் தினார்களாகவும் டாலர்களாகவும் கொட்ட, அந்த ஊரின் புதுப் பணக்காரர்கள் பலர் அரேபியாவில் ஒட்டகம் மேய்த்துவிட்டு கிடைத்த காசில் தங்களின் ஊர்களில் வானளாவிய வீடுகளைக் கட்டினார்கள்.
அதனால் அந்தக் கிராமத்திலிருந்த கட்டிடத் தொழ்லாளர்கள் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்தாலும், வயிறு காயாமல் கஞ்சி குடிக்க முடிந்தது.
பாண்டி வீட்டை அடைந்த பொழுது அம்மா முதலாளி வீட்டில் ஓவர்டைம் வேலையாக பத்துபாத்திரம் தேய்க்கக் கிளம்பிக் கொண்டிருந்தார்.
“என்னம்மா எஞ்சின்யர் அப்பா எழுந்தாச்சா!
“இந்தக் குசும்புதானே வேண்டாங்கிறது!” என்று அம்மா சொல்ல,
“உன் செல்லக்கொடுக்கு என்னடிசொல்றான்?” என்ற அப்பாவின் கேள்விக்கு
“உங்க நக்கல்தானே அவன்கிட்டயும் இருக்கும்!” என்று சிரித்தார் ஈஸ்வரி
“அப்பா உங்க அசிஸ்டன்ட் எஞ்சின்யர் டொமஸ்டிக் ஒர்க்குக்கு கிளம்பியாச்சு! உங்களுக்குப் பல்துலக்க கோபால் பற்பசையும் தூரிகையும் தரட்டா!” என்று இது அடுத்த நையாண்டி மேளத்தைக் கொட்டினான் கோபால்.
உன் பசங்களுக்கு நக்கல் கூடிருச்சு! அதுங்களை நான் பார்த்துக்கிறேன் நீ கிளம்பு!
“டேய் பாண்டி! கோபால் இன்னும் கொஞ்சம் வளரணும்! நீ போய் வேப்பங்குச்சி ஒடிச்சுட்டு வாடா!” என்று கூற,
“இதோப்பா!” என்று ட்ரவ்சரை இழுத்துவிட்டுக் கொண்டே ஓடியவன், வேப்ப மரத்தை அன்னார்ந்து பார்க்க, வந்த வேலையை மறந்து மேமாதக் கனவுகளில் மூழ்கிப் போனான்.
மேமாதம் அவனுடைய கனவு மாதம். காற்றைப் போல் கட்டுப்பாடுகளற்ற மாதம். எங்கும் எப்பொழுதும் ஓடலாம், ஆடலாம், சுதந்திரமாய்க் கிரிக்கெட் விளையாடலாம். அந்த வேப்பமர நிழல்தான் அவர்களின் ஓவல் மைதானம். அனைத்துக் குழந்தைகளும் அங்குதான் குதித்துக் கும்மாளமிடும்.
இந்த பதினோரு மாதமும் அவன் ராக்ஷ்க்ஷனாய் உழைப்பதற்கு கடவுள் கொடுக்கும் பரிசுதான் அந்த மேமாதம். அவனுடைய பணக்கார நண்பனிடம் பழைய பேட் பந்திற்கு விலை பேசிவிட்டான். அதற்கான சில்லறைகள்தான் உண்டியலில் சேர்ந்து கொண்டிருந்தது!
பெயின்ட் முழுவதும் உதிர்ந்து, முனை மழுங்கி, ஓரமெல்லாம் நசுங்கி வாழ்ந்து முடித்த பொக்கைவாய்க் கிழவனைப் போலுள்ள அவன் வாங்கப் போகும் அந்த பழைய பேட்தான் அவனுக்குத் தங்கமட்டை. அதற்குப் பொருத்தமான ஜோடியாய் நைந்து, பிய்ந்து உருக்குலைந்த பந்தும் ஒரு அழுக்கு வெள்ளைத் தொப்பியும் சேகரித்து விட்டான். இனி தோழர்களோடு ஒரு டீம் செலக்ட் பண்ணி புற்களை அகற்றி ஒரு மைதானத்தை உருவாக்க வேண்டும்
காலையும் மாலையும் கிரிக்கெட்! இடையில் கிட்டி, பம்பரம், கோலிக்குண்டு, சொட்டாங்கல், நொண்டி, தாயம், பல்லாங்குழி! அப்பப்பா ஒரு மாதம் முழுவதும் ஒரே ஜாலிதான்!’
“என்ன டென்டுல்கர் சார் பகல் கனவா?” அப்பாவின் குரலில் கனவுகள் கலைந்து போக
“இந்தாப்பா!” என்று வேப்பங்குச்சியுடன் ஓடிவந்தான் பாண்டி.
“பாண்டி, உங்கம்மா வந்தவுடன் இன்னைக்கு பெரியவீட்டு ரூஃப் காங்கிரீட் இருக்கு! செத்த விரச கிளம்பணும்னு சொல்லுடா”
“சரிப்பா! எனக்கும் ஒருநாள் ரூஃப் காங்கிரீட் போடும்போது பார்க்கணும்பா! எப்படிப்பா கொத்துக்கரண்டி உன் கையில் மட்டும் நீங்க சொல்ற படியெல்லாம் நடனம் ஆடுது! எனக்கும் கரண்டி பிடுச்சு வேலை செய்யணும்னு ஆசையா இருக்குப்பா!” அதைக்கேட்ட பாண்டியின் அப்பா ரௌத்திரம் அடைய,
“அடி செறுப்பால! எங்களை மாதிரி நீங்களும் நாய் பொழைப்பு பொழைக்கக் கூடாதுனுதானே நாங்க ரெண்டு பேரும் இப்படி மாடா உழைச்சு ஓடாய்த் தேயுறோம். உங்க ஆத்தா பத்தாங்கிளாஸ் படிச்சிருந்தும் நீங்க எல்லாம் படிச்சு ராஜ உத்தியோகம் பார்க்கணும்னு தானே இப்படிக் கிடந்து அல்லாடுறா அவக் கனவைக் கலச்சுறாதீங்க ராசா!
‘நான் முதல்மந்திரியானால்னு’ ஒரு கேனத் தலைப்புல இன்னைக்குப் பள்ளிக்கூடத்தில் பேச்சுப் போட்டி இருக்குனு ராத்திரி பூறா ஒப்பிக்க வச்சு உன் உசிரை எடுத்தாளே! போ போய் படி! ஈர ட்ரவுசரை மாத்திவிட்டு நீட்டா உடுப்பு மாத்திகிட்டு ஸ்கூலுக்குப் போ!” என்றவர் ஊரணியை நோக்கி நடையைக் கட்டினார்.
“அண்ணா பேச்சுப் போட்டிக்குத் தயாராயிட்டியா??”
“ஆச்சுடா இன்னும் ஒருதடவை வாசிச்சா போதும்! போ நீ போய் அடுப்பு மூட்டி காப்பித் தண்ணிக்கு ரெடி பண்ணு! நான் போய் கோனார்கிட்ட பால்வாங்கி விட்டு கோமுட்டிச் செட்டியார் கடையில் எண்ணை, வத்தல், வெங்காயம் பச்சை மிளகாய் வாங்கி வர்றேன்!” என்று நெளிந்த அலுமினியத் தூக்கோடு ஓடினான் பாண்டி.
அதற்குள் மீனா வைத்த சுடுநீரில் கருப்பட்டியும், வாசமில்லாத ஏதோ ஒரு காப்பிப் பொடியும் போட்டு கழுநீர் போன்ற ஒரு காப்பியைத் தயார் செய்தான் கோபால். ஆனால் அந்தக் காலை வேளையில் அதுதான் அவர்களுக்கு அமிர்தம். அது சுடச்சுடத் தொண்டையில் இறங்கும்பொழுது கிடைக்கும் கிக்கே தனிதான்.
காப்பியைக் குடித்துக் கொண்டே “அண்ணா இந்தக் கணக்கில் என்ன மிஸ்டேக்னே தெரியலை!” என்ற கோபாலின் கணக்கு நோட்டை வாங்கிப் பார்த்தவன், இந்தக் கணக்கை மீனுகூட சரியா செஞ்சிருவா! நீ கூட்ட வேண்டிய இடத்தில் கழித்து, கழிக்க வேண்டிய இடத்தில் கூட்டியிருக்க” அவன் கோபாலுக்குப் பதில் சொல்லி முடிப்பதற்குள், அண்ணனிடம் ஓடி வந்த மீனா.
“அண்ணா எனக்கு இரட்டைஜடை போட்டுவிடு!” என்று சீப்புடன் நிற்க,
அவளுக்கு ஜடைபிண்ணி, ரிப்பன் கட்டி, பௌடர் போட்டு ஸ்டிக்கர் பொட்டு வைத்து அழகு படுத்தியவன், அவள் ஆடை உடுத்திக் கொள்ளவும் உதவினான்.
பெற்றோருக்கு தூக்கில் கஞ்சி ஊற்றி, இரவில் மிஞ்சிய புளிக்கூட்டை வைத்தவன், அலுமினிய கோப்பையில் அவர்கள் மூவருக்கும் கஞ்சியைப் பரிமாறினான்.. இரவு மட்டும்தான் சுடச் சுட சோறு. மற்ற நேரமெல்லாம் கஞ்சியும் தொட்டுக்கொள்ள சுள்ளென்ற பச்சைமிளகாயும் வெங்காயமும்தான்.
கஞ்சியிலிருந்த சோற்றை இறுக்கப் பிழிந்து அதை உருட்டி உருட்டி பாண்டி வாய்க்குள் தள்ளிக் கொண்டிருக்க,
“ஏப்படிணா கோல் போஸ்டுக்குள் பந்து விழுற மாதிரி கரெக்டா தொண்டைக் குழிக்குள் கேட்ச் பிடிக்கிற?” என்ற கோபாலின் கேள்விக்கு,
“சீக்கிரம்டா ஸ்கூல் பெல் அடிக்கணும்னா கால்மணி நேரம் முன்னாடிப் போகணும்! இன்னைக்கு அசம்பிளியில் நான் தான் நியூஸ் ரீடர்! உன்னோட சந்தேகத்தை மே மாசம் கேளு! செய்முறை விளக்கத்தோடு புரிய வைக்கிறேன் இப்பக் கிளம்பு!” என்று அவர்களைக் கிளப்ப,
அவர்கள் கிளம்புவதற்குள் வீட்டிற்கு வந்த அம்மா,
“ஏலே பாண்டி! பேச்சுப் போட்டியில் ஒழுங்கா ஏற்ற இறக்கத்தோட ஒப்பிடா!” என்று பரபரக்க,
“அம்மா இன்னைக்கு ரூஃப் காங்க்ரீட்டாம் அப்பா சொல்லச் சொன்னார்!” என்று குறுக்கே புகுந்தான் பாண்டி.
“ஆமான்டா மூணாவது மாடியில அப்பாதான் உச்சில நிக்கணும். அது இருக்கும் நாற்பது அடி உசரம்!”
“ஆம்மாடியோவ் அவ்வளவு உசரமா!?” ஆச்சரியமாய்க் கேட்ட பிள்ளைகளிடம்,
“ஆமா நம்ம ஊரு அரேபியா ஆயிட்டு வருதுல்ல??? என்று வாசல் வரை வந்து தன் பிள்ளைகளை வழி அனுப்பி வைத்தார் ஈஸ்வரி.
“ஏய் மீனா ஓடிவா உலக அழகிப் போட்டிக்குப் போற மாதிரி பூனை நடை நடந்தா எப்படி!? நான் போய் வகுப்பில் சாக்பீஸ் எடுத்து வைக்கணும்; ஹோம் ஒர்க் நோட் கலெக்ட் பண்ணனும்; வகுப்பை சுத்தம் செய்யணும். கரும்பலகை துடைத்து வருகை-பதிவு குறிக்கணும்!”
“ஏன்ணா எல்லா வண்டியும் உன் தலையில் ஓடுற மாதிரி அலட்டிக்கிற?
உன்னால் எப்படி முடியுது?” என்று கோபால் ஆச்சரியமாய்க் கேட்க,
“அதுதான் மே மாசம் முழுசும் லீவ் விடுறாங்களே! இந்த பதினோரு மாசத்துக்கான சுறுசுறுப்பு டானிக் அந்த ஒரு மாசத்தில் கிடைக்கிது இல்லையா!”
அவர்கள் பேசிக் கொண்டே வகுப்பறையை அடைந்தார்கள். கால வெள்ளத்தில் மீதமிருந்த ஒரு மாசமும் கனவு போல் ஓட, இதோ இன்று பாண்டிக்கு கடைசிப் பரிட்சை. படித்துப் படித்து சோர்ந்து போனவனை வரப் போகும் மேமாதம் இயக்கிக் கொண்டிருந்தது.
அப்பாடா எல்லாம் முடிந்தது என்ற பெருமூச்சுடன்
லீவு விட்டாச்சு! மேமாச லீவு விட்டாச்சு!” என்று கத்திக் கொண்டே ஸ்கூலைச் சுற்றி ஓடத் துவங்கினான் பாண்டி. கால் ஓயும் வரை சறுக்கு மரத்தில் சறுக்கினான். இடைவெளியின்றி ஊஞ்சலில் ஆடி கீழே விழுந்து முழங்கையில் சிராய்த்துக் கொண்டான். ஆனால் அது அவனுக்கு வலிக்கவே இல்லை! அவனுக்குப் பூமிக்கும் வானத்துக்கும் குதிக்க வேண்டும் போலிருந்தது! மீனாவையும் கோபாலையும் இழுத்துக் கொண்டு குதிரை வேகத்தில் வீட்டிற்கு வந்தான்
“அண்ணாவுக்கு நட்டு கழண்டிருச்சு!” என்று மினா கிசுகிசுக்க!
“ஏய் அது காதில் விழுந்தா கடிக்கும்!” என்று தங்கையை அடக்கினான் கோபால்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் மண் உண்டியலை நடுவீட்டில் போட்டு உடைத்தான், சிதறிய வெள்ளிக் காசுகளை அள்ளிக் கோண்டு போய் பந்தையும் பேட்டையும் வாங்கி வந்தான். அந்தப் பந்தும் மட்டையும் சொந்தமானதில் இந்த உலகையே விலைகொடுத்து வாங்கியது போல் அகமகிழ்ந்து போனான் பாண்டி.
செதுக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம், பந்து, பேட் டீம் என அனைத்தும் ரெடி. நாளை ஆட்டம் ஆரம்பம் என்று அந்தச் சிறிய குருவிக்கூடு அழகான கனவுகளுடன் உறங்கிப் போனது..
மறுநாள் ரூஃப் காங்க்ரீட் பிரிக்கப்பட்ட வீட்டிற்கு ஃப்ரென்ட் எளிவேஷனாக முகப்புச் சுவரை அலங்கரிக்கும் வேலை தொடங்கப் பொகுது அதற்கு நாற்பது அடி உயரத்திற்குச் சாரம் கட்டணும் என்று பெற்றோர் சீக்கிரமே வேலைக்குச் சென்றுவிட பாண்டியின் தோழர்கள் அனைவரும் வேப்ப மரத்தடியில் குழுமத் தொடங்கினர்.
பாண்டி மீனாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டு கரகரவென்று சுற்றத் தொடங்கினான்.
“அண்ணா உனக்கு என்னாச்சு பைத்தியம் முத்திப் போச்சா?!” என்றவளிடம்
“ஆமான்டி எனக்குப் பைத்தியம்தான். இந்தக் ஒரு கனவு மாசத்துக்காக பதினோரு மாசமும் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்திருக்கேன். இந்த ஒரு மாச லீவை நினைச்சுத்தான் மத்த நாளெல்லாம் என்னால் மாடா உழைக்க முடிஞ்சது. வீட்டிலும் ஓடியாடி களைத்து, ஸ்கூலிலும் மாடாய் உழைத்து கஷ்டங்களையும், வலிகளையும் சிரித்துக்கொண்டே சுமக்க முடிஞ்சது.
அண்ணனை மீனாவும் கோபாலும் ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள். அவன் பேசுவது அவர்களுக்குப் புரியவில்லை யென்றாலும் அவனுடைய அந்த சந்தோஷமான மனநிலை புரிந்தது.
கிரிக்கெட் மட்டையையும், பேட்டையும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவன் அவர்கள் செதுக்கிய மைதானத்திற்குள் ஓட அவனுடைய தோழர்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள். சிறிதும் பெரிதுமாய் ஆண்களும் பெண்களுமாய் பதினோரு பதினோரு பேராய் இரண்டு டீம் பிரிந்தது.
அழகாய் சீவி செதுக்கப்பட்ட கருவைக் கம்புகள் மூன்று ஸ்டம்புகளாய் நடப்பட, வாயால் விசிலடித்து நண்பன் ஒருவன் நடுவராய் மாறி அவர்களின் கனவு ஆட்டத்தைத் துவக்கி வைத்தான்.
மனம் முழுவதிலும் சந்தோஷம் பொங்கி அவை வியர்வைத் துளிகளாய்ப் பெறுக்கெடுத்தோட, கழுதைகூட பொதி சுமக்காத அந்த உச்சி வெயிலில் பாண்டி எதிர் கொண்ட முதல் பந்து ஆகாயத்தில் பறந்து சிக்ஸராய் மாறியது.
எங்கும் எழுந்த ஆரவாரக் கூச்சலும், கைதட்டல்களும், விசில் சப்தமும் வானை எட்ட; கூட்டுப்புழுவாயிருந்து வண்ணத்துப் பூச்சியாய் உருமாறி, வானத்தில் சந்தோஷச் சிறகடிக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியாய் உணர்ந்தான் பாண்டி. அந்த ஏழை மாணவன் கண்ட கனவுகளெல்லாம் இன்று கரையேறுகின்றன! கமா, செமிக்கோலன் ... ஃபுல்ஸ்டாப் இல்லாமல் இன்னும் ஒரு மாதம் இப்படி விளையாடலாம். அந்த எண்ணமே அவன் மனதிற்குள் தொடர் மகிழ்ச்சி அலைகளை பிரசவிக்க,
அந்த எண்ணம் தோன்றி மறைவதற்குள் மனதிற்குள்ளேயே தூக்குப் போட்டுக் கொண்டது போல
“டேய் பாண்டி, கோவாலு மீனா நாம மோசம்போயிடோமேடா ஐயோ!”
என்று கத்திக்கொண்டே தலைவிரி கோலத்தில் அங்கே ஈஸ்வரி தோன்ற,
“அம்மா! அம்மா! என்னம்மா ஆச்சு என்று மூவரும் அம்மாவை ஓடிவந்து கட்டிக் கொண்டார்கள்.
“உங்கப்பா நூறடிச் சாரத்திலிருந்து வேலை பார்த்தப்பக்கூட ஒரு விபத்தும் நடக்கலியே!, இந்த நாற்பதடி சாரத்தில் நின்று அவர் வேலைபார்க்கும்போது அது சரிஞ்சு இப்ப அவர் உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கார்டா!! இனி என்னடா செய்யப் போறோம்!” என்று அவர் மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு கதறியழ, பாண்டி முன்னாளிருந்த கனவு உலகம் சிதறியது!
“நீ ஏன்மா இவ்வளவு கண்ணீரைக் கொட்டுற, உன்னோட புள்ளைங்க நாங்க இல்லையா? வா வா, அப்பா இப்ப எங்க இருக்கார்!?” என்ற கேள்வியோடு ஆறுதலாய் அந்த பிஞ்சுக் கரங்கள் அம்மாவை அணைத்துக் கொள்ள,
“நல்லவேளை நம்ம பெரிய வீட்டு முதலாளி, உடனே அப்பாவை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போக ஹெல்ப் பண்ணினார்!”.
“நீ கவலைப்படாதம்மா, உன்னோட புள்ளை நாங்க இருக்கோமா! எங்க கையில் முழுசா ஒரு மாசம் லீவிருக்கு! என்று தன் மேமாதக் கனவுகளைக் கண்ணீராய்க் கொட்டிவிட்டு, கோபால், மீனா இருவரையும் கையில் பிடித்துக் கொண்டு தன் தந்தையைப் பார்க்கச் சென்றான் பாண்டி.
அன்று அவனுடைய மே மாதக் கனவு மாளிகை தலைகீழாய் சரிந்து; பொடி மணலாய் உதிர்ந்து போனாலும், ஒருநாள் நிஜ மாளிகைகள் கட்டுவான் என்ற நம்பிக்கையும், உழைப்பும் அவனிடமிருந்தது.
அந்த மேமாதம் முழுவதும், சாந்துச் சட்டியையும், அதில் செங்கலையும், மணலையும், சிமிண்டையும் அவன் தலையில் சுமந்திருந்தாலும், அதே மே மாதக் கனவுகளோடு அடுத்த வருடம் வரப்போகும் மே மாத விடுமுறைக்காகக் காத்திருக்கத் தொடங்கினான். முற்றும்
சிறுகதை எழுத்தாக்கம் டெய்சி ஜோசப்ராஜ்
#72
தற்போதைய தரவரிசை
39,143
புள்ளிகள்
Reader Points 5,810
Editor Points : 33,333
120 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 4.8 (120 ரேட்டிங்க்ஸ்)
abivj3600
nagasnarayanan6
No comments
maniking6966
Good
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்