ஒரு அகதியின் கடிதம்

venba.68
சரித்திரக் கதைகள்
4.9 out of 5 (9 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

ஒரு அகதியின் கடிதம்

அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நடுநிசி நேரத்தில்‌ அவன் கண்கள் மட்டும் ஏதோ ஒன்றை நினைத்து கலங்கிக் கொண்டிருந்தது. இமைகளை தாண்டும் வலிமையை இழந்த அவன் கண்ணீர் அந்த புகைப்படத்தை மட்டுமே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. படபடத்துக் கொண்டிருந்த இதய துடிப்பை கட்டுப்படுத்த கடந்த பத்து ஆண்டுகளாக அவன் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறான். வெறும் முயற்சி மட்டும் தான் செய்கிறான். ஆனால் அவன் காயத்தின் ஆழம் அவன் முயற்சியை தடுத்து, அவனை ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கிறது. நினைவுகளின் அடர்த்தியை ஊடுருவி அதன் தரையை தொட்டவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவன் நினைவுகளை கடக்க முயற்சிக்கிறான். அவன் நிம்மதியாக உறங்கி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அவன் கடந்தகால நினைவுகளின் அழுத்தம் கூட அவனை உறங்க வைக்கவில்லை.

அவன் வெகு நேரமாக காத்துக்‌ கொண்டிருந்த அந்த செல்ஃபோன் மணி அடித்தது. அதை எடுத்து பேசியவனின் செவிகளில் டாக்டர் சீதாவின் குரல் ஒலித்தது. "என்ன மதி இன்னும் தூங்கலயா? எப்போவும் போல என்கிட்ட பேசுறதுக்காக காத்திருந்தியா? சரி நாளைக்கு என்ன நாள்னு நியாபகம் இருக்குல. காலைல 10 மணிக்கு வீட்டுக்கு வந்திரு" என்று கூறியவரிடம், "ஆமா மேடம் உங்ககிட்ட பேசுறதுக்காக தான் காத்திருந்தேன். நாளைக்கு உங்க வீட்டுக்கு சரியா 10 மணிக்கு வந்திடுறேன்‌. குட் நைட்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்‌.

டாக்டர் சீதாவை கடந்த பத்து ஆண்டுகளாக அவனுக்கு தெரியும். முதன்முதலில் அந்த அகதிகள் முகாமில் தான் சீதாவை அவன் பார்த்தான். அப்போது அவருக்கு வயது 45 இருக்கும். இவனுக்கோ வெறும் 15 தான். முள்ளிவாய்க்கால் போரில் பிழைத்தவர்களுக்கான அகதிகள் முகாமில் இருந்த அவனை தன் சொந்த பிள்ளையை போல பார்த்துக் கொண்டது சீதா தான். அந்த முகாமில் அழுது புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் இவனின் மௌனம் மட்டும் சீதாவை ஏதோ செய்தது. அவனிடம் நெருங்கி பழக முயற்சித்த சீதாவுக்கு ஆரம்பத்தில் தோல்வியே கிடைத்தது‌. கொஞ்சம் கொஞ்சமாக சீதாவின் அன்பு அவனை மாற்றியது‌. அன்று வரை யாரிடமும் பேசாமல் இருந்தவன் சீதாவிடம் பேசத் தொடங்கினான்‌. அன்று பேச ஆரம்பித்தவன் இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறான். சீதா ஒரு மனநல மருத்துவர்‌. அந்த அகதிகள் முகாமில் அனைவரின் மனநலத்தையும் அவர் கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்படி தான் மதியின் அறிமுகம் கிடைத்தது. ஆம் அவனை அவர் அப்படி தான் அழைப்பார். "மதி" (மதிவண்ணன்).

ஒருவழியாக மதியின் அன்றைய இரவு விடிந்தது. இருளுக்கும் வெளிச்சத்துக்குமான அவனுடைய நெடுந்தூர பயணத்தின் கடினமான பாதைகளை அவன் மட்டுமே அறிவான். அன்று காலை எப்போதும் போல துணியால் செய்யப்பட்ட அந்த தோள் பையை எடுத்துக் கொண்டு அதில் சில புத்தகங்களை அடுக்கிக் கொண்டு சீதாவை பார்க்க அவர் இல்லம் தேடி சென்றான். அங்கு மேசையில் இனிப்புகளுடன் அவனுக்காக காத்திருந்தார் சீதா. அன்று அவனுடைய பிறந்தநாள். சீதாவிடம் ஆசிப் பெற்றுக் கொண்டான். அவனுக்குப் பரிசாக லியோ டால்ஸ்டாய் எழுதிய "போரும் அமைதியும்" புத்தகத்தை சீதா கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டவன் அங்கிருந்து கிளம்பி நூலகத்திற்கு சென்றான். அவன் தினமும் செல்லும் நூலகம் தான் ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருவித புது அனுபவத்தை அவனுக்குள் புகுத்திக் கொண்டிருக்கிறது. வரலாறு சார்ந்த புத்தகங்கள் மீது அவனுக்கு தனி விருப்பம். அன்று அவன் பிறந்தநாளில் அவன் படிப்பதற்காகவே "தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்" என்னும் நேருவின் புத்தகம் மேசையில் இருந்தது. அதை எடுத்துப்‌ படித்துக் கொண்டிருந்தான். கடிதங்கள் எழுதும் பழக்கத்தையே மறந்து போயிருந்தவனுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவனுக்கு கடிதம் எழுதும் அளவிற்கு எந்த உறவும் கிடையாது. அவனுக்கென இருப்பது இரண்டே உறவு தான். ஒன்று டாக்டர் சீதா மற்றொன்று அவன் வாழ்வை புரட்டிப் போட்ட, அவன் வாழ்வில் மறக்க முடியாத ஒருவன். அவன் நினைவலைகள் கடந்த காலத்தைச் சுற்றி சுழல, கடிகார முள் நான்கை தொட்டிருந்தது. தன் தோள் பையை எடுத்துக் கொண்டு நூலகத்தில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையத்திற்கு வந்தான். அவன் அங்கு வந்த அடுத்த ஐந்தாவது நிமிடம் நடுத்தர வயதுள்ள அந்த நபரும் வந்தான்.

மதி அந்த நபரைப் பின் தொடர்ந்து சென்றான். அந்த நபர் சென்ற கார் ஒரு பள்ளிக்கு முன் நின்றது. மதியும் அங்கு நின்றான். எட்டு வயது பெண் குழந்தை ஒன்று அந்த காரை நோக்கி "அப்பா" என்றபடி ஓடி வந்தது. அந்த குழந்தையை காரில் ஏற்றிக் கொண்டு அந்த நபர் புறப்பட்டான். அந்த காரை தொடர்ந்து மதியும் சென்றான். அந்த நபரின் வீடு வரை பின் தொடர்ந்து சென்றுவிட்டு திரும்பி விட்டான். இது இன்று நேற்று நடக்கவில்லை. ஒரு வருடத்திற்கு முன் அந்த நபரைப் பேருந்து நிலையம் அருகே சந்தித்த போதிலிருந்தே இப்படி தான் நடக்கிறது. தினமும் மாலை மதி அந்த நபரை பின் தொடர்வான்.

அன்று இரவு வீடு திரும்பிய மதி நூலகத்தில் படித்த நேருவின் புத்தகத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். தீடீரென்று ஏதோ ஒரு யோசனை வந்தது போல் யாரோ ஒருவருக்கு கடிதம் எழுதினான். அதை மடித்து தன் தோள் பைக்குள் வைத்துக் கொண்டவன், கனத்த இதயத்தோடு எழுந்து அறை ஜன்னலுக்கு அருகே தொங்கிக் கொண்டிருந்த நாட்காட்டியை திருப்பிப் பார்த்தான். அவன் வாழ்க்கையை திருப்பிப் போட்ட அந்த நாள் வர இன்னும் 9 நாட்கள் இருந்தது. பெருமூச்சு விட்டபடி தன் பைக்குள் இருந்த அந்த போட்டோவை பார்த்தான்.

சிரித்த முகத்துடன் ஒரு 11 வயது பெண் குழந்தை தலையில் தொப்பியுடன் தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அம்மா அப்பா இருவருக்கும் நடுவில் தன் அண்ணனின் கையை பிடித்தபடி நின்றிருந்தது. அதில் இருக்கும் குடும்பம் தான் மதியின் மகிழ்ச்சியான குடும்பம். மே 15 முள்ளிவாய்க்கால் போரில் இறந்த ஆயிரக்கணக்கான தமிழர்களில் மதியின் அப்பா அம்மாவும் இருந்தனர். பெற்றோரை இழந்த பிள்ளைகள் இரண்டும் தமிழகத்திற்கு கப்பல் வழியே தப்பிச் செல்ல முயன்றனர். லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்த கடற்கரையில் இந்த பிள்ளைகள் இரண்டும் ஒன்றை ஒன்று பிடித்தபடி போரின் நடுக்கத்தை உடலில் உணர்ந்தபடி நடந்து சென்றது. மக்கள் அனைவரும் தங்கள் உயிரை காத்துக் கொள்ள தாய்நாட்டை துறக்க தயாராக இருந்தனர். போர் உச்சத்தைத் தொட்டிருந்தது. உறவுகளை இழந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வந்த கப்பலை நோக்கி‌ அனைவரும் ஓடினர். அவர்களுக்கு உடைமைகள் என்றால் அது உயிர் தான். கூட்ட நெரிசலில் சிக்கிய மதியும் இலக்கியாவும் கப்பலில் ஏற முயற்சித்தனர்‌. அவர்கள் கப்பலில் ஏறவும், ஈழத்தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த அந்த கொடும்பாவிகள் அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. கப்பலை அந்த கொலைகாரர்கள் முற்றுகை இட்டிருந்தனர். அதில் சிலர் கப்பலுக்குள் ஏறி சின்னஞ்சிறு பிஞ்சுக்களை கரையில் வீசி எறிந்தனர். மதியின் கண் முன்னே இலக்கியாவும் தூக்கி வீசப்பட்டாள். அந்த குழந்தைக் கப்பலில் இருந்து கீழே விழுந்த அடுத்த நொடியே உயிர் துறந்தது. இலக்கியாவை வீசிய அந்த கொடூரன் அவள் அருகில் வந்து, அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தங்க செயினை பிடுங்கி தன் கழுத்தில் மாட்டிக் கொண்டான். அத்தனை குழந்தைகளை கொன்றதற்காக அவன் அணிந்துக் கொண்ட பரிசு மாலையாக அந்த செயினை நினைத்துக் கொண்டான். இந்த காட்சிகள் அனைத்தையும் கப்பலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மதியின் உணர்வற்ற நிலையை யாராலும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது. அந்த நயவஞ்சகன் முகத்தில் படர்ந்த அந்த விஷ சிரிப்பை இன்னும் மதியால் மறக்க முடியவில்லை. அவன் அணிந்திருந்த அந்த தங்க செயின் இலக்கியாவின் பிறந்தநாளுக்கு அவள் அப்பாவின் பரிசு. அதில் "இலக்கியா" என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். அன்று மதியின் வாழ்வில் இருந்த ஒற்றை ரோஜாவும் அந்த போர்க் களத்தில் உதிர்ந்துப் போனது. அந்த கடற்கரையில் கேட்ட அழுகுரல்களும் மரண ஓலங்களும் ஏதோ நேற்று நடந்ததை போல் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உணர்வற்ற நிலையில் வெறும் உயிரை மட்டும் சுமந்து மூன்று நாட்கள் கப்பலில் பயணித்துக் கொண்டு வந்த மதிக்கு அடைக்கலம் கொடுத்தது அந்த அகதிகள் முகாம் தான். தமிழகம் வந்ததும் அவன் பார்த்த முதல் செய்தி,‌ "மே 18 அன்று முள்ளிவாய்க்கால் போர் முடிவுக்கு வந்தது. இந்த போர் மொத்தம் 40000 ஈழத்தமிழர்களை காவு வாங்கியது" என்பது தான்.

இத்தனை ரணத்தையும் தாங்கிக் கொள்ள அந்த பதினைந்து வயது சிறுவன் எப்பாடுபட்டிருப்பான். இவை அனைத்தும் அவன் தூக்கத்தை தடுத்து, மனதை கணமாக்கிக் கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து சரியாக ஒன்பதாவது நாள், மே 15, தன் தங்கையின் நினைவில் மூழ்கி இருந்த மதி எப்போதும் போல அந்த நபரை பின் தொடர்ந்தான். பள்ளி வாசலை அடைந்த அந்த நபரின் காரை நோக்கி வந்த குழந்தை, "அப்பா எனக்கு பஞ்சு மிட்டாய் வேணும்" என்று கேட்டது. பஞ்சு மிட்டாய் விற்பவன் ரோட்டிற்கு அந்த பக்கம் இருந்ததால், குழந்தை, பஞ்சு மிட்டாயை பார்த்த ஆர்வத்தில் ரோட்டிற்கு நடுவே பாய்ந்தது. அப்போது அங்கு வேகமாக ஒரு கார் வந்தது. குழந்தை திடீரென குறுக்கே வந்ததால், கார் ஓட்டுநரால் காரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் குழந்தையை கவனித்துக் கொண்டிருந்த மதி காரின் குறுக்கே சென்று குழந்தையை காப்பாற்றினான்.

குழந்தையை பத்திரமாக காப்பாற்றிய மதியிடம், அந்த நபர், "என் பொன்ன காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி. இந்த உதவிய என்னால மறக்கவே முடியாது. உங்க பேரு என்ன?" என்று தொடர்ந்து தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசியதை மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த மதி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கேட்ட எந்த கேள்விக்கும் மதி பதில் கூறவில்லை. அவன் முன் உணர்ச்சிகளற்று நின்றான்‌. அவன் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென தன் தோள் பைக்குள் வைத்திருந்த கடிதத்தை எடுத்து அவன் கைக்குள் திணித்துவிட்டு, மதி எதுவும் பேசாமல் சென்றான்.

அவனின் இந்த நடவடிக்கை அந்த நபரை உறுத்தியது. வீட்டிற்கு சென்றதும் அந்த கடிதத்தை எடுத்து பிரித்துப் படித்தான். "ஒரு அகதியின் கடிதம்" என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

"என்னை உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உன்னை எனக்கு நன்றாக தெரியும். என் வாழ்வில் மறக்க முடியாத நபர் நீ. வாழ்வில் நீ செய்த அனைத்தையும் உன்னால் நினைவு வைத்துக் கொள்ள முடியாது தான். அதே போல நீ கொன்று குவித்த குழந்தைகளின் முகத்தையும் உன்னால் நியாபகம் வைத்திருக்க முடியாது. இன வெறிப்பிடித்து நீ கொன்றவர்கள் அனைவருக்கும் வாழ்க்கையும் குடும்பமும் இருக்கிறது என்று என்றாவது ஓர் நாள் நீ நினைத்தது உண்டா? அத்தனை உயிர்களை எடுத்த நீ தினமும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறாய். ஆனால் என்னை போல அந்த போரில் வாழ்க்கையை இழந்தவர்களால் ஒரு நிமிடம் கூட உறங்க முடியவில்லையே ஏன்? கடந்த ஒரு வருடமாக நான் உன்னை தினமும் பின் தொடர்கிறேன். உன்னை பழி வாங்குவதற்காக அல்ல. என் தங்கையின் செயின் உன் கழுத்தில் இருக்கிறது. அதை தினமும் பார்ப்பதற்காக தான். பிரியமானவர்களின் பிரிவை என்றாவது நீ உணர்ந்திருக்கிறாயா? உன் இனம் உயர்ந்ததென காண்பிப்பதற்காக பிற இனத்தினரை கொன்று குவிக்கும் அதிகாரத்தை உனக்கு யார் தந்தது? கடலும், காற்றும் ஒரு நொடி அதன் சமநிலையை மறந்தாலும் கூட நீயும் நானும் இந்த மண்ணுக்கடியில் மடிந்து கிடப்போம். ஒரு நிமிடத்தில் உயிர் பறித்து ஆயுள் முழுக்க எனக்கு தண்டனை கொடுத்து விட்டாய். நல்ல புத்தகங்களை ஒரு நாளாவது படித்திருக்கிறாயா? நல்ல கலை, நல்ல இசை இவை அனைத்தையும் என்றாவது ஒரு நாளாவது ரசித்திருக்கிறாயா? இவ்வளவு ஏன் நீ கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கையை உன் அம்மாவிடம் கூறியிருக்கிறாயா? அப்படி கூறியிருந்தால் அவள் உன் முகத்தில் உமிழ்ந்து தள்ளி, உன்னை பெற்றதற்கு தலை குனிந்து நின்றிருப்பாள். மே 18 இந்த தினமாவது உனக்கு நியாபகம் இருக்கிறது. இருந்தால் இதையும் நினைவில் வைத்துக் கொள் நீ கொன்றது வெறும் உயிரை மட்டும் அல்ல. அது சுமந்துக் கொண்டிருந்த கனவுகளையும், ஆசைகளையும், உணர்வுகளையும் தான். இவை அனைத்தும் ஒரு‌ நாள் உன்னை உறங்க விடாமல் செய்யும். அன்று அதன் காரணத்தை உன் பிள்ளையின் முகத்தைப் பார்த்துக் கூறும் தைரியம் உனக்கிருக்கிறதா? தினமும் வாழ்க்கையோடு போராடும் எங்களை போன்ற அகதிகளுக்கு உன்னைப் போன்ற மனிதனோடும் மரணத்தோடும் போராடுவது ஒன்றும் பெரிதல்ல. உன் இனவெறியை உன் அடுத்த தலைமுறைக்கு புகுத்தி விடாதே. உன்னைப் போல் என்னைப் போல் அல்லாமல், அவர்களாவது ஒரு அமைதியான நிம்மதியான வாழ்வை வாழட்டும். உன் பெண் குழந்தைக்கு என் தங்கையின் செயினை பரிசாக வைத்துக் கொள். அவள் அமைதியான ஒரு வாழ்வை தொடங்க, அந்த போர்க்களத்தில் என் தங்கை விட்டு சென்ற செயின் காரணமாகட்டும். சில வலிகள் தான் பல கனவுகளின் அஸ்திவாரம். என்னை போன்ற அகதிகளின் வலி அடுத்த தலைமுறையின் அமைதியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைக்கட்டும்."

இப்படிக்கு

அகதிகளின் பிரதிநிதி.

இந்த கடிதத்தைப் படித்தவனின் கைகள் நடுங்கிவிட்டது. தொண்டையை கமழ்ந்த அவன் குற்ற உணர்ச்சியை அடக்கிக் கொண்டு, அங்கு ஓடி வந்த தன் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டான். மறுநாள் மதியை தேடி அவன் அலையாத இடமில்லை. எங்கு தேடியும் மதியை கண்டுபிடிக்க முடியவில்லை. அன்று முதல் அவன் உறக்கம் பறிபோனது. மதியை தேடும் அவன் தேடல் பயணம் முடியவில்லை. என்றாவது ஒரு நாள் அவனும் மதியும் சந்தித்துக் கொண்டால், நிச்சயம் இந்த பிரபஞ்சத்தில் அமைதி நிலவும்…

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...