JUNE 10th - JULY 10th
"என்னங்க, நீங்க இங்க கை வெச்சுப் பாருங்களேன்! குழந்தை, எப்படி எட்டி உதைக்கிறான்னு" என்று மனம் நிறைய சந்தோஷத்துடனும், பூரிப்புடனும் தன் கணவனின் கைகளை எடுத்து, தன் வயிற்றின் மீது வைத்து தன்னுடைய ஆனந்தத்தை பகிர்ந்து கொண்டாள் அந்தப் பெண்.
"அடிக்கடி, நீ இப்படி தான் சொல்ற! ஆனா பாரு, இந்த சின்ன குட்டி, நான் கை வச்சா மட்டும் உதைக்கவே மாட்டேங்குறான்" என்று குறை பட்டுக் கொண்டே, அவன் கையை வயிற்றின் மீது வைக்க, "இதோ இப்போ குழந்தை உதைச்சான். பார்த்தீங்களா! நான் சொன்னேன்ல!" என்று அந்தப் பெண் சந்தோஷமாக கேட்க, இருவருக்குமான உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது.
இவற்றையெல்லாம், ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு, மேடிட்ட என் வயிற்றில் இருந்த குழந்தையை தடவிக் கொடுத்தபடியே அமர்ந்திருந்தேன் நான்.
'நமக்கு தான், இந்த பாக்கியமே இல்லாம போச்சே. யாரை குறை சொல்ல? கடவுள் நம்ம தலையில எழுதின எழுத்து அப்படி, என்று யார் மீதும் குறை சொல்லத் தோன்றாமல், நடக்கணும்னு இருக்கிறது நடக்குது. கண்டதையும் யோசிச்சு, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், நம்மளோட குழப்பம் போய் சேர வேண்டாம், மனசைக் கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா வச்சுக்கலாம்' என்று நினைத்தேன் நான்.
நான் யார்னு உங்களுக்குத் தெரியாது இல்ல, சொல்றேன் கேளுங்க. என்னோட பேரு ராதா. எனக்கு கல்யாணம் ஆகி 11 வருஷம் ஆச்சு. ஆனாலும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கல. நானும் என்னோட கணவர் கிருஷ்ணனும், போகாத கோவில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை. ஆனா எந்த கடவுளும், முக முழிச்சு பாக்கல. பேர் பொருத்தம் கூட எங்களுக்கு அருமையாக அமைந்திருந்தது. ராதா - கிருஷ்ணன் அப்படின்னு. அதே போல தான் மன பொருத்தமும். ஆனா குழந்தை தான் இல்லாம போச்சு.
என்னை அவரு நல்லாப் பார்த்துக்கிட்டாரு. நல்லா போய்கிட்டு இருந்த எங்க வாழ்க்கையில, திடீர்னு ஒரு புயல் வீசியது. 40 வயசுல வந்த ஹார்ட் அட்டாக்ல அவரு போய் சேர்ந்துட்டாரு. யாருமே இல்லாம நிற்கதியானேன் நான்.
எனக்கு அப்போ 35 வயசு நடந்துச்சு. அவர் இறந்ததுக்கு அப்புறம், எங்க சொந்தக்காரங்களோட சுயரூபம் தெரிய ஆரம்பிச்சது.
எல்லா சொத்தையும் என் கொழுந்தனார் பேர்ல மாத்தி எழுதினாங்க. அதுதான் உனக்கு குழந்தை குஞ்சு எதுவும் இல்லையே? உனக்கு எதுக்கு தரணும்? அப்படினு, என்னைக் கேள்வி கேட்டுட்டு, எல்லா சொத்தையும், மாத்தி எழுதிட்டாங்க.
அதை எதிர்த்து நான் பேசவும் இல்ல. எனக்கு போக்கிடம் இல்லாம, அந்த வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். ஏற்கனவே, அம்மா, அப்பா இல்லாத நான், இவங்க எல்லாருக்கும் ரொம்பவே இளக்காரமா போயிட்டேன்.
அவரு, டிரைவரா வேலை பார்த்துகிட்டு இருந்த, சுபாஷினி டாக்டர் அம்மா வீட்டில என்னை வேலைக்குக் கூப்பிட்டாங்க. வேற வழி இல்லாததால, நானும் அவங்க வீட்டுக்கு வேலைக்குப் போனேன்.
அவங்க வீட்ல ஏற்கனவே வேலை செஞ்சுகிட்டு இருந்த பொண்ணு, மாசமா இருந்துச்சு. அந்த பொண்ணுக்கு, பார்த்து பார்த்து நான் உதவி செஞ்சேன். நல்ல மனசோட தான் உதவி செஞ்சேன். ஆனாலும், என் கண்ணில் இருந்த ஏக்கத்தை பார்த்த, அந்த டாக்டரம்மா, என்கிட்ட "உனக்கும், ஒரு குழந்தையை சுமக்குற ஆசை இருந்திருக்கும்ல?" அப்படின்னு கேட்டாங்க.
"ஆமாங்க மா. யாருக்கு தான் குழந்தை பெத்துக்க ஆசை இருக்காது? நானும் எத்தனையோ கனவெல்லாம் கண்டேன். ஆனால் எங்களுக்குனு ஒரு குழந்தை இல்லாமலேயே போயிடுச்சு".
"உனக்கு என்ன வயசு ஆகுது ராதா? 35 வயசு தானே ஆகுது? பேசாம நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாமே? "அப்படின்னு டாக்டர் அம்மா கேட்க, அதைக் கேட்ட எனக்கு ரொம்பவே அதிர்ச்சியா இருந்துச்சு.
"என்னால, அப்படி எல்லாம் யோசிச்சுக் கூட பார்க்க முடியாதுங்க மா. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. அவரு கூட வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சுப் பார்த்து, அப்படியே வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான். இன்னொரு கல்யாணம்லாம் நான் கண்டிப்பா பண்ணிக்க மாட்டேங்க மா".
"அப்போ உனக்கு ஒரு வழி சொல்றேன் கேளு. நீ வாடகைத்தாயா இருக்கிறயா?" என்று கேட்டார்.
"நான் யோசனை பண்ணி பார்த்துட்டு, நாளைக்கு காலைல உங்க கிட்ட சொல்றேங்க மா".
அன்று இரவு முழுவதும், எனக்கு தூக்கம் பிடிபடவில்லை. வாடகைத் தாயா இருக்கலாமா? வேண்டாமானு நிறைய யோசனை பண்ணினேன்.
ஒரு குழந்தையை வயித்துல சுமந்து, பெத்து கொடுக்கிறது அப்படிங்கறது எவ்வளவு ஒரு புனிதமான காரியம்? குழந்தை இல்லாம, நம்ம கஷ்டப்பட்ட மாதிரி தானே, எத்தனையோ பேர் கஷ்டப்படுவாங்க? அவங்களுக்கு உபயோகமா இருக்குறதுல என்ன தப்பு? ஒரு குடும்பத்துக்கு வாரிசு கிடைக்கும். ஒரு வம்சம் தளைக்கப் போகுது.
இன்னொரு பக்கம், இந்த ஊர், உலகம் என்ன சொல்லும்? புருஷனே இல்லாதவ புள்ள பெத்துக்கிறா அப்படின்னு பேசாதா? என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்த ஊர், உலகம் எதை பத்தி தான் பேசல? அப்படி இந்த ஊர், உலகத்துல எல்லாரும், நியாய தர்மமா நடந்துக்கிறாங்களா? என்ன? அவருக்கு சேர வேண்டிய சொத்துல, ஒரு கால்வாசி சொத்தை, எனக்கு எழுதி வெச்சிருந்தாக் கூட, அடுத்தவர்களை நம்பி, பிழைக்க வேண்டிய கஷ்டம் வந்திருக்காதே?
ஏதோ, இந்த டாக்டரம்மா நல்லவங்களா இருக்கப் போயி, என்னை வேலைக்குக் கூப்பிட்டாங்க. அப்படி இல்லனா, என்னோட நிலைமை என்ன ஆகிறதுனு பலவாறு யோசித்து, இறுதியில் அடுத்தவருக்கு உதவி செய்வதற்காக, வாடகைத்தாயாக இருக்கலாம் என்ற முடிவினை நான் எடுத்தேன்.
அடுத்த நாள் காலையில், முதல் வேலையாக டாக்டர் அம்மாவைப் பார்த்து, "அம்மா, எனக்கு இதுல முழு சம்மதம்" என்று முகத்தில் புன்னகையுடன், அவரை பார்த்துச் சொன்னேன்.
"சரி ராதா. இதுல என்னென்ன கஷ்டம் இருக்குனு தெரிஞ்சுக்கோ, குழந்தையை சுமப்பது நீயா இருக்கலாம், அந்த பத்து மாசமும் குழந்தை உன்னோட பொறுப்பு தான். ஆனால் குழந்தை, உன்னோட வயிற்றிலிருந்து வெளியே வந்த அந்த நிமிஷம், அந்த நொடி, குழந்தைக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. குழந்தையை அதோட அம்மா அப்பா கிட்ட கொடுத்துருவோம். நீ குழந்தையை பார்க்க முடியாது. அதற்கு பால் கொடுக்க முடியாது. என்ன குழந்தை? அப்படிங்கிற விஷயத்தைக்கூட, உன்கிட்ட சொல்ல மாட்டாங்க. அதையும் யோசித்துப் பார்த்துக்கோ. அது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். எனக்கும் தெரியும்தான். இருந்தாலும், ஒரு குடும்பத்துக்கு உன்னால வாரிசு கிடைக்கும்".
"சரிங்கம்மா" என்று சந்தோஷமாகத்தான் வாடகைத் தாயாக இருப்பதற்கு ஒப்புக் கொண்டு வந்தேன் நான்.
டாக்டரம்மா அவங்க பிரண்டோட ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிட்டு போனாங்க. என்னென்னவோ செக்கப் எல்லாம் செஞ்சாங்க, ஊசி, மருந்து, மாத்திரை, சத்தான சாப்பாடு அப்படின்னு, நேரா நேரத்துக்கு நல்ல கவனிப்பு. அருமையான சாப்பாடு, சத்தான காய்கறிகள், கீரை, முட்டை அப்படின்னு எல்லா நேரமும், என்னோட நாட்கள், ரொம்ப பரபரப்பா இருந்துச்சு.
எனக்குள்ள குழந்தை உருவாகி இருக்கிறதை, உறுதி பண்ணிட்டாங்க. நான் ஹாஸ்பிடல் பொறுப்பில் இருக்கிற, ஒரு ஹாஸ்டலில் தான் தங்கியிருந்தேன். அங்க, என்ன போல இன்னும் நாலு பேர் இருக்காங்க. எல்லாரும் வாடகைத்தாயா இருக்க வந்தவங்கதான்.
ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும், குழந்தையை பத்தின நினைப்பைத் தவிர, எனக்கு வேற எதுவுமே, மனசுல தோணாது. நடக்கும் பொழுதும், நிற்கும் பொழுதும், உட்காரும்போதும், குளிக்கும்போது அப்படின்னு, ஒவ்வொரு நொடியும், குழந்தையை நாம கஷ்டப்படுத்திடக் கூடாதுன்னு ரொம்பவே கவனமா, அடிமேல் அடிவைத்து நடந்து, அலுங்காம, குலுங்காம இருந்தேன்.
இப்போ, எனக்கு ஏழு மாசம் நடக்குது. என்ன இருந்தாலும், இது என்னோட குழந்தையா இருந்தா, நான் அனுபவிக்கிற, ஒவ்வொரு சந்தோஷத்தையும், என்னோட கணவர் கிட்ட, ஆசை ஆசையா, இந்த பொண்ணு மாதிரி நானும் சொல்லி இருப்பேன். ஆனால் எனக்குத் தான் அந்த பாக்கியம் கிடைக்கலையே? என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
"ராதா உள்ளே வாம்மா, அடுத்தது நீதான்" என்று சிஸ்டர் அழைக்க, சந்தோஷமாக எழுந்து, டாக்டரின் ரூமுக்குள் சென்றேன்.
"ராதா, எப்படி இருக்கே? குழந்தையோட அசைவுகள் எல்லாம், தெரியுதா?" என்று அக்கறையாக விசாரித்தார் டாக்டர்.
"நல்லாவே தெரியுதுங்க மா. குட்டி பையனோ இல்ல பொண்ணோ, நல்லா உதைக்கிறாங்க! துருதுருன்னு இருக்காங்க" என்று என்னுடைய மனதில் இருந்தவற்றை பகிர்ந்து கொண்டேன் நான்.
"சரி ராதா, பெட்ல படு, ஒரு ஸ்கேன் பார்த்துடலாம்" என்று டாக்டர் சொல்ல, 'ஸ்கேனில் குழந்தையை என்னிடம் டாக்டர் காண்பிக்க மாட்டாரா?' என்ற ஏக்கத்துடன், டாக்டரை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் டாக்டர் என்னிடம், குழந்தையை காண்பிக்கவே இல்லை.
நம்ம மனசில் நினைக்கிறதை, சொன்னாதானே அவங்களுக்கு தெரியும்? என்று என்னுடைய உள்மனசு சொல்ல, டாக்டரிடம், "கொஞ்சம் குழந்தையை காட்டறீங்களா? எனக்கும் பாக்கணும்னு ஆசையா இருக்கு" என்று தயக்கத்துடன் கேட்டேன் நான்.
"குழந்தைக்கும், உனக்கும் என்னம்மா சம்பந்தம்? தேவையில்லாமல் குழந்தை மேல, ஆசையை வளர்த்துக்காதீங்க, அது உங்களுக்கு நல்லதில்லை" என்று சற்று கடுமையாக பேசிய டாக்டர், கடைசி வரை குழந்தையை என் கண்ணில் காட்டாமலேயே, "ஸ்கேன் பார்த்தாச்சு, எந்திரிங்க ராதா" என்று சொல்லி விட்டு, அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.
'ஒரு நிமிஷம், இந்த குழந்தையை, என் கண்ணுல காமிச்சா என்ன? குறைஞ்சா போய்விடும்? ஏன் இந்த டாக்டர், இப்படி இருக்கிறாங்களோ?' என்று மனதில் அவரை திட்டியபடியே, அந்த ரூமை விட்டு நான் வெளியே வந்தேன்.
அதன் பின்பு, அருகில் இருந்த ஹாஸ்டலுக்கு நான் சென்றேன்.
அங்கே மஞ்சு, சௌமியா, சத்யா, ரேவதி ஆகிய நால்வரும் சுற்றிலும் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
"என்ன ராதா க்கா, செக்கப் முடிஞ்சுதா?" என்று அக்கறையாக கேட்டாள் மஞ்சு.
"அதெல்லாம் பார்த்தாங்க மஞ்சு, குழந்தையை காண்பிக்கவே மாட்டேன்னுட்டாங்க. அதான் கஷ்டமா இருக்கு".
"இந்த குழந்தைக்கும், நமக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு, அது மேல இப்படி எல்லாம் ஆசைப்படுற ராதா?" என்று உரிமையாக என்னை கடிந்து கொண்டார் ரேவதி அக்கா.
"இல்லக்கா...பாக்கணும்னு ஆசையா இருந்துச்சு...அந்த குழந்தைக்காகத் தானே, ஒவ்வொன்னும் பார்த்துப் பார்த்து பண்றேன். அதை, ஒரு தடவைதான், காமிச்சா என்னவாம்?".
"ராதா, நீ பண்றதெல்லாம் நல்லாவே இல்ல. ஆமா சொல்லிட்டேன்" என்று சௌமியா சொல்ல, "ஆமா ராதா க்கா, உங்க நல்லதுக்காகத்தான் நாங்க எல்லாரும் சொல்றோம். சொன்னாக் கேளுங்க, குழந்தை மேல ரொம்ப எதிர்பார்ப்போட இருக்காதீங்க" என்று சத்யாவும் அறிவுரை சொன்னாள்.
எல்லோரும் அவர்களின் கருத்தை என்னிடம் சொல்ல, எனக்கு கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
"அப்போ, இந்த குழந்தையை ஒரு தடவை கூட நான் பார்க்கவே முடியாதா?" என்ற ஏக்கத்துடன், நான் கேட்டேன்.
"என்ன ராதா? தெரிஞ்சுதான் பேசுறியா? ஆரம்பத்திலேயே, ஒரு பேப்பர்ல எல்லாம் எழுதிக் கொடுத்தாங்களே? படிச்சு பார்த்துட்டு, கையெழுத்து போடுங்கனு கொடுத்தாங்களே? பாக்கலையா நீ? குழந்தையை, ஒரு தடவை கூட நம்ம கிட்ட காமிக்க மாட்டாங்க. அது பொண்ணா, பையனானும் சொல்ல மாட்டாங்க. தெரியுமா? இதையெல்லாம் பார்க்கலையா?" என்று என் மீது அக்கறையாக ரேவதி அக்கா கேட்டார்.
"நானும், அதையெல்லாம் படிச்சுப் பார்த்து தான், கையெழுத்து போட்டேன் க்கா. ஆனாலும், மனசு கேட்க மாட்டேங்குது. தினம், தினம் குழந்தை வளர, வளர அதன் மேல இருக்குற ஆசை யும் வளருதே? நான் என்ன பண்ண?".
"உன்னோட மனசை நீ தான் கட்டுப்படுத்திக்கணும். குழந்தையை சுமந்து பெத்துக் கொடுக்கிறது மட்டும் தான், நம்ம வேலை. அதுக்கு தான், பணம் தர்றாங்க. அவ்வளவுதான். அத்தோட, இந்த வேலை முடிஞ்சுது. நான் ஏற்கனவே, இந்த மாதிரி ஒரு குழந்தையை பெத்துக் கொடுத்தேன்" என்று மஞ்சு சொன்னாள்.
"என்ன மஞ்சு, இத்தனை நாளா, இதைப் பத்தி நீ என்கிட்ட சொல்லவே இல்ல?" என்று ஆச்சரியமாக கேட்டேன் நான்.
"அக்கா, இங்க இருக்க எல்லாருக்குமே இந்த விஷயம் தெரியும். உங்கள் ஒருத்தரைத் தவிர. கஷ்டமாதான் இருந்துச்சு. குழந்தை பிறந்த நிமிஷம், அந்தக் குழந்தையை, என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க. அப்ப நான் எவ்வளவு கஷ்டப்பட்டேனு, வார்த்தையில சொல்ல முடியாது. அவங்க பேசியபடி, பணத்தை கொடுத்துட்டாங்க. ஆனாலும், அந்த குழந்தைக்காக, பால் என்னோட மார்பில் கட்டிக்குச்சு. கிட்டத்தட்ட 15 நாள், நான் ரொம்ப கஷ்டப்பட்டுப் போயிட்டேன். வயித்தை விட்டு வெளியே வந்த குழந்தை, மறுபடியும் வயித்துக்குள்ள இருக்குற மாதிரி தோணும். எந்த குழந்தை அழுகுற சத்தம் கேட்டாலும், அது நம்ம பெத்த குழந்தையா இருக்குமோனு இந்த பாலும் மனசு தவியா தவிக்கும். மார்ல பால் கட்டிக்குச்சு. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் அதை பசி ஆத்தலாம்னு தோணுச்சு. நான் தெளிஞ்சு வர பதினைஞ்சு நாள் ஆச்சு. ஆனாலும், மறுபடியும் எதுக்கு இங்க வந்தே? அப்படின்னு நீங்க கேட்கலாம். அதுக்கு காரணம், என்னோட பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கணும். ஊதாரியாக திரியுற என் புருஷன் எதிர்பார்க்காம, நானே ஒரு சொந்த தொழில் செய்யணும் அப்படின்னு தான்".
மஞ்சுவின் கதையை கேட்ட எனக்கு, என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவளின் கதையை, மேலும் கேட்க சங்கடமாக இருந்ததால், ரூமிற்குச் சென்று எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த பெட்டில் படுத்துக் கொண்டேன்.
மனசு சரியில்லாமல் இருந்ததால், சாப்பிடாமலேயே படுத்துக்கொண்டேன். ஒரு அரை மணி நேரம் கடந்த நிலையில், எனக்கு நன்றாகவே பசித்தது. ஆனாலும் சாப்பிட மனம் வரவில்லை. வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பசித்திருக்கும் போல, வேகமாக அது உதைக்க, என் மனம் பதறியது.
"ஐயோ கண்ணா, என்னை நம்பித் தானே, நீ என்கிட்ட வந்தே? நான் நிச்சயம், உன்னை நல்லாப் பாத்துக்குவேன். உனக்காக நான் போய் சாப்பிட போறேன் டா கண்ணா" என்று வயிற்றிலிருந்த குழந்தையிடம் பேசியவாறே, சாப்பிடுவதற்காக டைனிங் ஹால் நோக்கி நடந்தேன் நான். அன்றிலிருந்து, தினமும் குழந்தையிடம் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டேன்.
பிரசவத்திற்கான நாள் நெருங்க, நெருங்க, இனம் புரியாத ஒரு பயம் வந்து, மனதிற்குள் தொற்றிக்கொண்டது. குழந்தையை பிரியப் போகிறோமே? அதை ஒரு முறை கூட பார்க்க முடியாதே? நம்மால், இதை ஏற்றுக் கொள்ள முடியுமா? என்னை விட்டு பிரிந்து, இந்த குழந்தை இருந்து விடுமா? இன்னும் ஆயிரமாயிரம் கேள்விகள் என் மனதிற்குள் அலைமோதிக் கொண்டிருந்தன.
என் குழந்தை, இல்லை இல்லை அவர்களின் குழந்தை, இந்த உலகத்தை பார்ப்பதற்கான நாளும் வந்தது. செயற்கை முறையில் கருத்தரித்ததால், சுகப்பிரசவத்திற்கான எந்தவித ஏற்பாடுகளும் இன்றி, நல்ல நாளில், நல்ல நேரத்தில் குழந்தையை ஆப்பரேசன் செய்து எடுத்து விடுவது வாடிக்கையான ஒன்றுதான்.
ஆபரேஷனுக்குப் பிந்தைய நாட்களில், என்னை யார் கவனித்துக் கொள்வார்கள்? என்ற பயமும் எனக்குள் ஒருபுறம் இருந்துகொண்டே இருந்தது.
குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு விடுவோமா? இல்லை அதற்குக் கூட, நமக்கு வாய்ப்பு கிடைக்காதா? என்று இந்தப் பேதை மனம், பித்துப் பிடித்தது போல குழந்தை குழந்தை என்று ஜெபித்துக் கொண்டே இருந்தது. என் இதயம் கூட லப்டாப் என்று துடிப்பதை மறந்து விட்டு, குழந்தை குழந்தை என்றே துடிக்கத் தொடங்கியிருந்தது.
அடுத்த நாள் ஆபரேஷன் என்று, அதற்கான முன்னேற்பாடுகளை அனைவரும் கவனித்துக் கொண்டிருக்க, இந்த குழந்தையின் பெற்றோர் யாராக இருக்கும்? அவர்களை எப்படியாவது பார்த்து விட மாட்டோமா? என்று ஒவ்வொருவரையும் முகத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால் யார் என்று தெரியவில்லை.
இந்தக் குழந்தையை நான் சுமப்பதற்கான பாக்கியத்தைக் கொடுத்த, அந்த புண்ணியவான்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார அவர்களையும் வாழ்த்தினேன்.
அந்த இரவு முழுவதும், குழந்தையுடன் பேசித் தீர்த்தேன். இனி காலம் முழுவதும், பேச முடியாது அல்லவா? அந்த ஏக்கத்தை எல்லாம், ஒரு இரவில் பேசியே தீர்த்தேன்.
அடுத்த நாள், ஆப்பரேஷன் தியேட்டருக்கு சந்தோஷமாகத்தான் சென்றேன். என்னை கிழித்து உன்னை எடுத்தாலும் சரி, இல்லை என் உயிரையே கொடுத்தாலும், உனக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் கண்ணே! என்று என் குழந்தையுடன் மானசீகமாக பேசிவிட்டு, ஆபரேஷனுக்காக நான் தயாரானேன்.
என் கண்களை கருப்புத் துணியால் கட்டி விட்டார்கள். ஆனாலும் என் வயிற்றைக் கிழிப்பதும், வயிற்றை அழுத்தி, குழந்தையை வெளியே எடுப்பதும், நன்றாகவே எனக்குத் தெரிந்தது.
அடுத்த நிமிடம், குழந்தையின் அழுகை சத்தம், தேன் போல வந்து என் காதில் பாய்ந்தது. இந்த ஒரே சத்தம் தான், இதை தான் என் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். நினைவு அடுக்குகளில் பதித்துக் கொள்ள வேண்டும். என் குழந்தைக்கான ஒரே ஒரு அடையாளம் இது மட்டும் தான். இனிமேல் இவனையோ இல்லை இவளையோ நான் பார்க்கவே முடியாது என்பதை நான் மானசீகமாக ஏற்றுக் கொண்டேன்.
'கண்ணா, நீ எங்கிருந்தாலும், நல்லா இருக்கணும். நீண்ட ஆயுள், நிறை செல்வம், குறைவில்லாத ஆரோக்கியத்துடன், நீ நல்லா இருக்கணும் டா, கண்ணா!' என்று தாய்மை உணர்வு பொங்க, அந்தக் குழந்தையை மனதார வாழ்த்தி அனுப்பி வைத்தேன்.
அதன் பின்பு, ஏதோ பெரிய சாதனையை முடித்து விட்டவள் போல, கண்களை மூடி, நிம்மதியாகப் படுத்து உறங்கினேன். வெகு நாட்களாகி விட்டது, நான் நிம்மதியான உறக்கம் உறங்கி. அன்று ஏனோ சந்தோஷமாக இருந்தது. நிம்மதியான உறக்கமும் வந்தது.
ஒரு மூன்று மணி நேரம் போல, உறங்கிய எனக்கு, மார்பில் ஒரு சிறு வலி. என்னடா நமக்கு நெஞ்சு வலிக்குதே? என்று நினைத்து எழ முற்பட்ட பொழுது தான், என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை என்பதை நான் உணர்ந்தேன்.
அருகிலிருந்த சிஸ்டரை அழைத்து, "ஏனோ நெஞ்சு வலிக்குதுங்க சிஸ்டர்" என்று சொல்ல, அவரோ என் மார்பை தொட்டுப் பார்த்துவிட்டு, "அது ஒன்னும் இல்லமா, பால் கட்டி இருக்கு. மாத்திரை கொடுக்கிறேன். சரியாயிடும்" என்று சொன்னார்.
"சிஸ்டர், எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? உங்களோட போன் இருந்தா எனக்கு கொடுங்களேன்" என்று சிஸ்டரிடம் போனை வாங்கி, என்னை இங்கே அனுப்பி வைத்த டாக்டரம்மா சுபாஷினி க்கு போன் செய்தேன்.
"அம்மா நான் ராதா பேசுறேங்க மா. எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?".
"நான் நல்லா இருக்கேன் ராதா. நீ எப்படி இருக்க? இன்னைக்குதான் உனக்கு ஆபரேஷன்னு சொன்னாங்களே?".
"ஆமாங்க ம்மா. ஆப்பரேஷன் எல்லாம் முடிஞ்சது. குழந்தை நல்லபடியாக பொறந்திருச்சு னு சொன்னாங்க. அம்மா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணுமே".
"சொல்லு ராதா, என்னால முடிஞ்சா, நிச்சயம் உதவி செய்யறேன்".
"குழந்தையை, சந்தோஷமா சுமந்து பெத்து கொடுத்துட்டேன். இனி எனக்கும், அந்தக் குழந்தைக்கும், எந்தவித ஒட்டும் உறவும் இல்லைனு எனக்கு நல்லாவே தெரியுங்க மா. இப்போ, எனக்கு மார்ல பால் கட்டிக்கிச்சு. இதை நான் வீணாக்க விரும்பல. வேற எதாவது குழந்தைக்கு தேவைப்பட்டா கொடுக்கலாம்னு நினைக்கிறேன். அதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்".
"அட இவ்வளவு தானா? அந்த ஹாஸ்பிடலேயே, தாய்ப்பால் வங்கி அப்படின்னு ஒன்னு இருக்கு. அங்கே போய் நீ பாலை எடுத்துக் கொடுக்கணும். குழந்தைக்கு பால் கொடுக்க முடியாம, கஷ்டப்படுற எத்தனையோ தாய்மார்கள் இருப்பாங்க. அவங்க, இந்த மாதிரி தாய்ப்பால் வாங்கியில் இருக்குற தாய்ப்பாலை வாங்கி, தங்களுடைய குழந்தைக்கு கொடுப்பாங்க. நீ செய்யப் போறது, நல்ல காரியம். நீ தாராளமா இதை செய் ராதா. உன்னை நினைச்சா, எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு".
"ரொம்ப சந்தோஷங்க ம்மா" என்று சொல்லியபடியே, போனை வைத்தேன் நான்.
அந்தக் குழந்தையைப் பிரிந்து, நான் எப்படி இருக்கப் போகிறேன்? என்ற எண்ணமே எனக்கு ஒரு துளியும் இல்லை. இன்னும் எத்தனையோ குழந்தைகளுக்கு, நான் தாய்ப்பால் கொடுக்க போகிறேன் என்ற நினைப்பே, எனக்கு இன்னும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
தாய்ப்பால் வங்கியை நோக்கி, வீல் சேரில், சந்தோஷமாக அமர்ந்து கொண்டு சென்றேன் நான்.
#116
தற்போதைய தரவரிசை
70,487
புள்ளிகள்
Reader Points 3,820
Editor Points : 66,667
79 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 4.8 (79 ரேட்டிங்க்ஸ்)
m.jayamohansrirajan
உங்களின் படித்தேன், கதை மிகவும் அருமையாக உள்ளது.நான் உங்களுக்கு 5 star கொடுத்துள்ளேன் .படித்து பார்க்கும் பொழுது நன்றாக இருந்தாலும் நிறைய பேர் ரேட்டிங்ஸ் தருவதில்லை. என்னுடைய கதையின் பெயர் லீகார் ஒரே ஒரு கார். இந்த கதைக்கு ஆதரவு தாருங்கள். ஒரு எழுத்தாளராக பெருந்தன்மையுடன் எனது கதைக்கு ரேட்டிங்ஸ் தாருங்கள் நன்றி MJMS !! கிளிக் செய்து ஆதரவு தாருங்கள் https://bit.ly/3caKy2F
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
jaynavin16
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்