JUNE 10th - JULY 10th
2004
அன்று கல்லூரியில் முதல் நாள்!
கல்லூரி ஹாஸ்டலில் இருந்து தனது வகுப்பிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் அஞ்சுகம்.
தனது அறையில் உடன் தங்கியிருந்த மீனாவுடன் பேசியவாறே கல்லூரி கட்டிடத்திற்குள் நுழைந்தவள் தனது வகுப்பறை எண்ணை கேட்டவாறு அதை நோக்கி நடக்க, மீனா வேறு துறைக்கான தனது வகுப்பறையைத் தேடியவாறு வேறு பாதையில் சென்றாள்.
"இது வரைக்கும் பொண்ணுங்க படிக்கிற ஸ்கூல்லயே படிச்சிட்டு இருந்தவ மொத முறையா பசங்க கூட சேர்ந்து படிக்கிற காலேசுக்கு போற, பார்த்து இருந்துக்கிடனும்த்தா. பசங்க கிட்ட தேவையில்லாம பேச்சு வச்சிக்கக் கூடாதுத்தா! சரியா" தனது பேத்தி அஞ்சுகத்தின் தலைமுடியை பின்னியவாறே கூறிக் கொண்டிருந்தார் அப்பத்தா.
தாயின்றி தந்தையின் கண்டிப்பிலும் அப்பத்தாவின் அரவணைப்பிலும் வளர்ந்த அஞ்சுவை பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடனேயே மணம் முடித்து வைக்க அவளின் தந்தை தீர்மானித்திருக்க, வெகுவாய் போராடியே கல்லூரியில் பயில அனுமதி வாங்கியிருந்தாள் அஞ்சு.
முதன் முறையாக தந்தையையும் தனது அப்பத்தாவையும் விட்டு வந்து தனித்து இருப்பது பெரும் கவலையை அளித்திருந்தாலும், தனது பட்டதாரியாகும் கனவின் முதல் அடியை இன்று எடுத்து வைப்பதில் மட்டற்ற மகிழ்வுடனே வகுப்பறை நோக்கி படிக்கட்டில் துள்ளி குதித்துச் சென்றிருந்தாள்.
அவளின் வகுப்பறை நோக்கி துள்ளி குதித்துச் சென்றவள் வாசலின் உள்ளே செல்லும் போது, கால் இடறி வகுப்பறையின் உள்ளே விழுந்தாள்.
விழுந்த வேகத்தில் கை கால்கள் படபடக்க ஆரம்பிக்க, தன்னைத் தானே நிதானித்துக் கொண்டவளுக்குக் காலின் பெருவிரல் வலி கண்களில் நீரை உற்பத்தி செய்தது.
காலை வேளையாதலால் வகுப்பறைக்குள் எவரும் இல்லாதிருக்க, சிமெண்ட் தரை என்பதால் உடலில் சிராய்ப்பு ஏதும் ஏற்படவில்லை ஆயினும் பெருவிரல் நகம் பாதிப் பிய்ந்த நிலையில் பெரும் வலியை உண்டு செய்தது.
தட்டு தடுமாறி அங்கிருந்த மேஜையில் அமர்ந்தவள், பையில் இருந்த நீரை எடுத்துக் குடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நேரம்,
"ஹாய் இது ஃபர்ஸ்ட் இயர் ஏ செக்ஷன் கிளாஸ் தானே" எனக் கேட்டவாறு வந்து நின்றான் அவன்.
அவளின் நிலையைக் கவனியாது கேட்டவன், மறுநொடி அவள் முகத்தில் இருந்த வியர்வையையும் கண்ணீரையும் அவதானித்தவனாய், "என்னங்க என்னாச்சு ஏன் அழுதுட்டு இருக்கீங்க?" எனக் கேட்டான்.
"ஒன்னுமில்லைங்க விழுந்துட்டேன்" என அவள் கூறி முடிக்கும் முன்பே அவள் பெருவிரலில் இருந்து வழிந்து கொண்டிருந்த ரத்தத்தைக் கண்டவன்,
"அய்யோ அடிப்பட்டிருக்குங்க!" எனப் பதட்டமாய் உரைத்தான்.
"வாங்க ஃபர்ஸ்ட் எய்ட் செய்யச் சொல்லலாம். இங்க எங்க ஃபர்ஸ்ட் எய்ட் இருக்கும்" எனப் பால்கனி புறம் வந்து கல்லூரியை சுற்றி ஒரு பார்வை பார்த்தவன்,
"ஏங்க மெடிக்கல் எமர்ஜன்சினு அங்க ஒரு ரூம் இருக்கு. அங்க ஆள் இல்லைனாலும் வாட்ச்மேன்கிட்ட கேட்கலாம். எதுவும் இல்லைனாலும் வெளில டாக்டர்கிட்ட போகலாம்" என இவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, மயங்கி சரிந்திருந்தாள் அஞ்சு.
அதன் பின்பு காவலாளியை அழைத்து வந்து பார்த்து என அன்றைய நாள் மதிய நேரம் வரை வகுப்பறைக்கு வர இயலவில்லை அவனால்.
இவன் அவளை மருத்துவமனை சேர்த்து விட்டு அன்று மதியம் வகுப்பறைக்கு வந்திருக்க, அவள் மறுநாள் தான் வந்தாள்.
முதல் நாள் போலவே காலை வேளையில் இவள் முதல் ஆளாய் வகுப்பறைக்குள் நுழைய, சிறிது நேரம் கழித்து வந்தான் இவன்.
இவனைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது.
"இப்ப எப்படி இருக்கீங்க அஞ்சு?" எனக் கேட்டவாறே அவள் அமர்ந்திருந்த இருக்கையிலேயே சற்று தள்ளி இயல்பாய் அமர்ந்து கொண்டவனைப் புருவம் இடுங்க பார்த்தவாறு, "தேங்க்ஸ்! இப்ப நல்லா இருக்கேன்" என்றாள்.
"உங்க பேரு எப்படித் தெரியும்னு பார்க்கிறீங்களா?" என அவன் கேட்க,
அவள் ஆமெனத் தலையசைக்க, "நேத்து உங்களைப் பக்கத்துல கிளினிக்ல அட்மிட் செய்யும் போது ஹாஸ்ட்டல் வார்டன் மேம் வந்து சொன்னாங்க" என்றான்.
ஓ என் அவள் அமைதியாய் இருக்க,
"என் பேரு என்னனு கேட்க மாட்டீங்களா? இல்ல உங்களுக்கே தெரியுமா?" எனக் கேட்டான்.
முந்தைய நாள் முழுவதும் இவளின் மனதை நிறைத்த அவனின் பெயரை தெரியாது என எப்படிச் சொல்வாளாம் அவள்.
"ஆனந்த்"
இவனைக் காணும் முன்பு வெகு சாதாரணமாய்க் கடக்கப்பட்ட இப்பெயர் இப்பொழுதோ உச்சரிக்கும் ஒவ்வொரு நொடியும் மனதை சிலிர்க்க செய்திருந்தது.
முதன் முறையாகத் தனது வாழ்வில் குடும்பத்தினர் அல்லாத ஓர் ஆண் மகனின் பரிவும் கனிவும் வெகுவாகவே நெகிழ்த்தியிருந்தது அவளை.
இன்று அவனைக் காணும் இந்த நொடிக்காக நேற்றிலிருந்து போகாத நேரத்தை போகச் சொல்லி விரட்டிக் கொண்டிருந்தாள் அவள்.
இவ்வுணர்வுகள் எதையும் அவனிடம் காண்பிக்காது இயல்பாய், "ஆனந்த்" என அவள் கூறியதும்,
"நீங்க ரொம்பப் பயந்த சுபாவமா? சைலண்ட் டைப்பா? நான்லாம் பேசிட்டே இருப்பேன்ங்க. பேசாம தான் என்னால் இருக்க முடியாது. சட்டுனு எல்லார்கிட்டயும் பழகிடுவேன்" என்று அவன் தனது புராணத்தைக் கூறிக் கொண்டிருக்க,
அவனின் கலைந்த தலைமுடி, நெற்றியில் வழிந்தோடும் வியர்வை, அவனின் முகப்பாவனைகள் எனப் பேசும் அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள் அஞ்சு.
அன்றைய நாளிற்குப் பிறகு இயல்பாய் இவர்களின் கல்லூரி வாழ்க்கை தொடங்கி அதன் போக்கில் சென்று கொண்டிருக்க, ஆனந்த் தனது பேச்சு திறமையாலும், அனைவரிடமும் இயல்பான கலகலப்புடன் பழகும் குணத்தாலும் வகுப்பு தலைவனாகி (class leader) இருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாய் அவனைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் மேலிட, அவனுடைய பண்பான குணமும் ஒழுக்கமான நடவடிக்கைகளும் மேலும் அவளை அவன் பால் கவர்ந்தீர்க்க செய்திருந்தது.
தானுண்டு தன் படிப்பு உண்டு என்றிருந்தாலும், அவளின் நாட்கள் அவனைச் சுற்றியே சுழன்றிருந்தது.
தினமும் காலை வேளையில் இவள் முதல் ஆளாய் வந்த பிறகு, இரண்டாம் ஆளாக அவன் வந்து இவளுடன் அளவளாவி கழிக்கும் அந்தப் பத்து நிமிடங்கள் தான் அன்றைய நாள் முழுவதற்குமான புத்துணர்வு அவளுக்கு.
அதே போல் மாலை வேளைகளில் அவன் மைதானத்தில் விளையாடும் கூடை பந்து விளையாட்டைத் தூரமாய் ஹாஸ்ட்டல் பால்கனியில் இருந்து வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக்கி இருந்தாள் அவள்.
அவன் விடுப்பு எடுக்கும் நாட்களெல்லாம் வெறுமையாய் உணர்ந்தாள்.
வீட்டிற்குச் சென்று வரும் பொழுதெல்லாம் அவனுக்குப் பிடித்தமான உணவு பண்டங்களைத் தனது அப்பாத்தாவிடம் செய்து தரக் கூறி அவனுக்கு வழங்குவாள். அவன் ஆசையுடன் அவ்வுணவை உண்பதை காண்பவளுக்கு உள்ளம் நிறைந்து போகும்.
ஆனந்த்திற்கு மல்லி பிடிக்குமாம் என மல்லி பூ வைத்துக் கொள்வதில் தொடங்கி, ஆனந்த்திற்குப் பிசிக்ஸ் பிடிக்குமாம் என அந்தப் பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்தது வரை என அவனின் பிடித்தங்கள் அனைத்தையும் தனக்கும் பிடித்தமாக்கி கொண்டாள்.
இவ்வுணர்வுகள் எதுவும் தனது படிப்பை தடை செய்யாவண்ணம் நல்ல மதிப்பெண்களே எடுத்து வந்தாள் அஞ்சு.
இந்த உணர்வுக்கான காரணக் காரியங்களை அறிய முற்படவில்லை அவள். இது காதலின் உணர்வா? தான் அவனைக் காதலிக்கிறேனா? இல்லை இது ஈர்ப்பா? தெரியாது அவளுக்கு. விளங்கி கொள்ளவும் விழையவில்லை அவள்.
தன்னைச் சிலிர்க்க செய்து மகிழ்விற்குள் ஆழ்த்தும் அவனின் அண்மையை, அவன் மீதான தனது எண்ணங்களை எக்காரணத்தைக் கொண்டும் விட்டொழிக்க விரும்பவில்லை அவள். அதன் பொருட்டே இவ்வுணர்வின் ஆராய்ச்சியில் இறங்காது முழுதாய் அதனை உணர மட்டுமே முற்பட்டாள் அவள்.
ஆனால் இவளின் உணர்வுகளை அருகிருந்து கண்டு கொண்டிருந்த மீனாவிற்கு அஞ்சுவின் இந்த உணர்வுகள் மீது சந்தேகம் எழுந்தது.
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒலிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் என் நெஞ்சம் பாடாதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஒரு வாரயிறுதி நாளில் மீனா இப்பாட்டைப் பாடியவாறு அஞ்சுவின் முகப்பாவனைகளை அவதானிக்க முற்பட,
"ஹே மீனா இந்தப் பாட்டு ஆனந்த்க்கு செம்மயா செட்டாகுதுல!" என்றாள் துள்ளலுடன் அஞ்சு.
"ஆனந்த்க்குச் செட் ஆகுதா? இல்ல உனக்கு செட் ஆகுதா?" என் கிண்டலாய் கேட்டிருந்தாள் மீனா.
"ம்ப்ச் நான் ஆனந்த்தை லவ் பண்றேன்னு நினைக்கிறியா மீனா?" மீனாவின் ஆராயும் பார்வையைப் பார்த்தவாறு கேட்டாள் அஞ்சு.
"நினைக்கிறது என்ன நினைக்கிறது! ஆனந்த்னு சொன்னாலே பெரிசாகி சிரிக்கிற உன் முட்டைக்கண்ணும் பூரிச்சி உப்பிப் போகுற உன் கன்னமும் நீ லவ் பண்றனு தான் கட்டியம் கட்டி சொல்லுதே" என்றாள் மீனா.
மென்னகை புரிந்த அஞ்சு, "ஆனந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் மீனா!" கூறும் போதே மிருதுவாகும் அவளின் வதனத்தை இமை சிமிட்டாது ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மீனாவின் புறம் திரும்பியவள், "ஆனா இது காதல் இல்ல" என்றாள்.
"என்னாஆஆஆது? பிடிக்குமா? ஆனா காதல் இல்லையா? என்னடி கலர் கலரா ரீல் விடுற?" என் மீனா கிண்டல் செய்ய,
"பாரு நீயே என்னைக் கேலி செய்ற! நான் எதுவும் சொல்லலை" என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகரப் போனாள் அஞ்சு.
"சரி சரி நான் எதுவும் சொல்லலை! நீ சொல்ல வந்ததைச் சொல்லு" என அஞ்சுவின் கையைப் பிடித்து இருக்கையில் அமர்த்தினாள் மீனா.
"ஆனந்த்! அவனோட பேசுறதே அவ்ளோ பிடிக்கும் மீனா. அவன்கிட்ட பேசுற ஒவ்வொரு நேரமும் மனசு ஒரு மாதிரி பூரிச்சி கெடக்கும். அவன் கூட நான் ஸ்பெண்ட் பண்ற ஒவ்வொரு நிமிஷத்தையும் பொக்கிஷமாக வச்சிக்கத் தோணும். ஒவ்வொரு நாளும் அவன் கிட்ட பேசுறதுக்காகவே அவனுக்குப் பிடிச்ச டாபிக்ல ஏதாவது தேடி மனப்பாடம் பண்ணிட்டு போவேன் தெரியுமா! முன்னாடிலாம் எனக்கு ஸ்போர்ட்ஸ்ல இன்ட்ரஸ்ட் இருந்ததே இல்லை. அவனுக்குப் பிடிக்கும்னு அவன்கிட்ட இதைப் பத்தி பேசுறதுக்காகவே இந்த விளையாட்டைப் பத்தி அதுல நடக்கும் போட்டிகள் பத்திலாம் தெரிஞ்சிக்கிட்டேன். அவன் என் மேல் காண்பிக்கிற அக்கறை, பாசம், அவனோட அன்பான பேச்சுக்கள் இது எல்லாமே அப்படியே என் மேல் ஐஸ் மழை பொழியுற ஃபீல் கொடுக்கும் மீனா. ஆனா இது காதல் இல்ல மீனா. உனக்குச் சொன்னா புரியாது. அவன் எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும். சந்தோஷமா இருக்கனும். அது மட்டும் தான் என் மனசு எதிர்பார்க்குது. அவன் கூடவே நான் இருக்கனும்னோ, அவன் அன்பு எனக்கு மட்டும் தான் கிடைக்கனும்னோ நான் எப்பவுமே நினைச்சதே இல்லை. ஆனா அவனை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். என் காதல் முழுக்க என் கணவருக்கு மட்டும். அந்தக் கணவர் இடத்துலே இவனை நான் வைக்கவே இல்லை மீனா. இந்த உணர்வை எப்படி என்னனு சொல்றதுனு எனக்குத் தெரியலை. ஆனா இது காதல் இல்லை மீனா"
'என்னைப் புரிகிறது தானே உனக்கு' என்கின்ற பார்வையுடன் அஞ்சு சொல்லி முடிக்க,
'என்ன சொல்ல வரா இவ?' என்ற குழப்பத்துடன் அவளைப் பார்த்திருந்தாள் மீனா.
காதல் இல்லை என அவள் கூறியிருக்க, அன்றைய வருடம் கல்லூரியில் நிகழ்ந்த கலை விழாவில் ஆனந்தும் அஞ்சுவும் இணைந்து பாடிய டூயட் பாடல் பிரபலமாக, மாணாக்கர்கள் இவர்களைக் காதல் ஜோடிகளாக்கி கல்லூரி முழுவதும் கிசுகிசுக்களைப் பரவச் செய்திருந்தனர்.
சில நாட்களாய் கல்லூரியில் இவளை ஆனந்த் என்ற பெயரிலும், அவனை அஞ்சு என்ற பெயரிலும் அழைத்துக் கேலியும் செய்யத் தொடங்கி இருந்தனர். இருவருமே இதற்கு எவ்வித மறுப்போ எதிர்ப்போ தெரிவிக்காது, இதனைக் காதிலும் வாங்கிக் கொள்ளாது புறகணித்திருந்தனர்.
ஆனந்த் இவளை தோழி என்ற நிலையில் தான் வைத்திருந்தான். கல்லூரியில் இதெல்லாம் சகஜம்! இதனை எதிர்த்து கேட்டால் தான் பெரிதுபடுத்துவார்கள் என இருவருமே அமைதி காத்தனர்.
ஆனால் இத்தகைய கிண்டலையும் கேலிக்களையும் தாங்கள் வளர விடாமல் தடுத்திருக்க வேண்டுமெனப் பின்னாளில் வருந்துமளவு சிறப்பான சம்பவம் அஞ்சுவின் வாழ்வில் நிகழ்ந்தது.
ஆம் அஞ்சுவிற்குத் திருமணம் நிகழ்ந்திருந்தது. இதற்கு மேலும் அவள் படிக்க வேண்டாமெனக் கூறி அவளின் கல்வியை நிறுத்தி மணம் புரிந்து வைத்திருந்தனர் அவளின் குடும்பத்தினர்.
முதலாம் வருடம் முழு ஆண்டுக்குமான செமஸ்டர் தேர்வாய் இருக்க, அந்த வருட தேர்வை எழுதி முடித்து இவள் ஊருக்கு செல்ல வேண்டிய நாள் வரவும், இவளை அழைத்துச் செல்லவென இவளின் தந்தை கல்லூரிக்கு வந்திருந்த பொழுது யாரோ அஞ்சுவை ஆனந்துடன் இணைத்து பேசியதை கேட்டு இவராகவே அஞ்சு ஆனந்த்தை காதலிக்கிறாளென முடிவு செய்து, கோவிலுக்கு அழைத்துச் செல்வதாய் உரைத்து இவளுக்குத் தெரியாமலேயே ஏற்பாடுகள் செய்து மணம் முடித்து வைத்திருந்தனர்.
அஞ்சுவிற்குப் பேரதிர்ச்சி! தன் மீது நம்பிக்கை வைக்காத குடும்பத்தினர் மேல் கட்டற்ற கோபம் எழுந்தது. ஆயினும் யாருக்கும் எந்த விளக்கமும் கொடுக்க முற்படவில்லை அவள். இந்த உன்னதமான உணர்வை ஊராரின் வாயில் அவலாய் மெல்ல வைத்து அதன் புனிதத்தைச் சிதைக்க விரும்பவில்லை அவள்.
தனது கனவு சிதைந்ததை எண்ணி அழுது கரைந்தவளின் மனமோ, 'அய்யோ அவனால் தான் தனது கனவு கலைந்து போனதாய் எண்ணி அவன் வருந்துவானே' என அவனுக்காகவும் வருந்தியது.
திருமணம் முடிந்த பிறகு அவளின் கணவனுடன் டில்லிக்கு பயணமானாள். இனி தன் வாழ்க்கை இது தானென ஏற்றுக் கொண்டு வாழ தொடங்கினாள்.
----
2022
இன்று காலை அலைபேசியில் அழைத்த அஞ்சல்காரனின் பெயரை கேட்டப்பின், அஞ்சுவின் மனம் பழைய நிகழ்வுகளில் சுற்றிச் சுழன்றிருந்தது.
அன்பான கணவன் கிட்டியிருந்தாலும், அவளின் லட்சிய பயணத்தைத் திருமணம் தடை செய்து தான் இருந்தது.
திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய தனிப்பட்ட அடையாளத்துக்கான தேடலையும் ஆசையையும் தனக்குள்ளேயே புதைத்து கொண்டாள் அஞ்சு. அவ்வப்போது அவளுள் எழும் அவனது நினைவுகளையும் சேர்த்தே புதைத்து கொள்ள பழகிக் கொண்டாள்.
மாலை இந்நினைவுகளை அசைப்போட்டவாறே சமையல் வேலையில் ஈடுப்பட்டிருக்க, பள்ளியில் இருந்து வந்து நின்றாள் அஞ்சுவின் மகள் பிரியா.
பதின் பருவத்தில் பதினோறாம் வகுப்பு பயிலும் தனது மகளுடன் அமர்ந்து தேநீர் அருந்தியவாறு அவளின் முக வாட்டத்தைக் கவனித்த அஞ்சு, அதன் காரணத்தை வினவினாள்.
"கௌசிக்னு ஒரு பையன் என் கிளாஸ்ல புதுசா ஜாய்ன் செஞ்சிருக்கான்மா. ஒரு மாசம் ஆகுது" என்றாள்.
அப்பெயரை உச்சரிக்கும் பொழுது மகளின் முகத்தில் தெரிந்த பொலிவில் அஞ்சுவின் நெற்றி சுருங்க, அப்படியா என்றது அவளின் பார்வை.
"ரொம்ப அன்பான பையன் மா. அவன் சிரிக்கிறது அவ்ளோ அழகா இருக்கும்மா. எனக்காக அவன் கேர் செய்றது பேசுறதுலாம் ரொம்பப் பிடிச்சிருக்குமா. ஆனா எனக்கு ஏன் இப்படி ஃபீல் ஆகுதுனு புரியலைமா. அவன்கிட்ட பேசினாலே மனசு சந்தோஷமாகுது. வீ பிகேம் ஃப்ரண்ட்ஸ் நவ்! ஆனா சம்திங் இஸ் ஹிட்டிங் மீ. அவன் மேல ஏற்படுற அதீத ஈர்ப்பு ஒரு மாதிரி என்னைக் கில்டியா ஃபீல் செய்ய வைக்குது. அவனை விட்டு ஒதுங்கி இருக்கலாம்னு நினைச்சா தான் மனசு அவனை ரொம்ப நினைக்குது" கூறும் பொழுதே அவள் உடலில் ஏற்பட்ட படபடப்பையும் முகத்தில் தெரிந்த ஒளிர்வையும் குழப்பத்தையும் கண்டவாறு தேநீரை அருந்திய அஞ்சு,
"அந்தப் பையனை ஒரு நாள் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாடா" என்றாள்.
"நிஜமாவா" கண்கள் விரிய கேட்டாள் பிரியா.
"ஆமா இது ஒன்னுமில்லை டா! ஜஸ்ட் அட்ராக்ஷன். நீ ஏதோ ஒரு வகையில அவனோட செயல்லயோ நடவடிக்கைலயோ அட்ராக்ட் ஆகிருக்க! அது மேலும் மேலும் உன்னை அவனை நோக்கி ஈர்த்துட்டு இருக்குது. இது காதல்னு இன்பாக்சுவேஷன்னுலாம் குழப்பிக்காத. உனக்கு அவன் மேல க்ரஷ் வந்திருக்கு. நம்ம ஷிவாங்கி சொல்லுவாங்களே, ஃப்ரண்ட்டுக்கு மேல லவ்வர்க்கு கீழே அவ்வளவே தான். நீ தொடர்ந்து அவன்கிட்ட நட்பா பேசி பழகும் போது யு வில் பிகேம் நார்மல்"
"அப்பாடா இப்ப தான்மா நிம்மதியா இருக்கு. ஒரு மாதிரி கில்டி ஃபீல்லயே சுத்திட்டு இருந்தேன்மா" எனத் தாயை அணைத்து விட்டு எழுந்து செல்ல,
ஆனந்த் மீதான தன்னுடைய உணர்வுகளையும் இவ்வாறு அன்று அவர்கள் சரியாகப் புரிந்திருந்தால், இன்று தனது நிலை வேறாக இருந்திருக்குமே என்றெண்ணி பெருமூச்செறிந்தவாறு எழுந்து சென்றார் அஞ்சுகம்.
#64
தற்போதைய தரவரிசை
61,970
புள்ளிகள்
Reader Points 6,970
Editor Points : 55,000
144 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 4.8 (144 ரேட்டிங்க்ஸ்)
Selvakalai8696
வளரும் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் எனது கதை https://notionpress.com/ta/story/ssc/19561/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D#.YrfF
rajisivam3017
Asusual very nice story sis ..... தனக்கு நடந்த எந்த தவறும் தன் மகளுக்கு நடக்காம அதை தெளிவாக புரிஞ்சு குழந்தைக்கும் குழப்பம் தீர வைச்சு ஒரு அழகான புரிதல் பிளஸ் ஒரு நம்பிக்கை கொடுத்தது அருமை.....இந்த நம்பிக்கையும் புரிந்துணர்வும் இல்லாம தான் நிறைய பேர் அஞ்சு மாதிரி தங்கள் ஆசை கனவை இழந்துட்டு இருக்காங்க. ஆண்கள் பெண்கள் பேசினாலோ பழகினாலோ உடனே காதல் தானு முடிவு பண்றது எப்பொதான் மாற போகுதோ
m.jayamohansrirajan
உங்களின் படித்தேன், கதை மிகவும் அருமையாக உள்ளது.நான் உங்களுக்கு 5 star கொடுத்துள்ளேன் .படித்து பார்க்கும் பொழுது நன்றாக இருந்தாலும் நிறைய பேர் ரேட்டிங்ஸ் தருவதில்லை. என்னுடைய கதையின் பெயர் லீகார் ஒரே ஒரு கார். இந்த கதைக்கு ஆதரவு தாருங்கள். ஒரு எழுத்தாளராக பெருந்தன்மையுடன் எனது கதைக்கு ரேட்டிங்ஸ் தாருங்கள் நன்றி MJMS !! கிளிக் செய்து ஆதரவு தாருங்கள் https://bit.ly/3caKy2F
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்