JUNE 10th - JULY 10th
காலாந்தகன்
மரகதபுரி சாம்ராஜ்யம் கோலாகலத்தின் உச்சத்தில் இருந்தது ... மன்னன் ராஜசிம்மனுக்கு ஆண் மகவொன்று பிறந்திருந்தது....குட்டி இளவரசனுக்கு பெயர் வைக்கும் வைபவம் மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது....
மந்திரவாதி காலாந்தகன் சன்யாசி வேடத்தில்
மரகதபுரிக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.மரகதபுரியின் செழுமை அவன் கண்ணை உறுத்தியது. நாட்டின் முக்கிய ஏரி நீர் ததும்ப... பொங்குமாக்கடலாய் காட்சியளித்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கழனியெல்லாம் பச்சை பசேலென காட்சியளித்தன. அங்காடியில் பொன்னும், மணியும்,குவித்து வைத்து.. விற்பனை செய்து கொண்டிருந்தனர்...
உதட்டில் புன்னகையுடனும், உள்ளத்தே வஞ்சனையுடனும், காலாந்தகன் " ராஜசிம்மா!குதூகலிக்கிறாயா? வருகிறேன்.. உன் சந்தோஷ நெருப்பில் நீரை இறைக்கிறேன் ..முன்னொரு முறை நீ அவமதித்ததை நான் மறக்கவில்லை மந்திரவாதிகளுக்கு இந்நாட்டில் இடமில்லை என்றாய்... நாட்டைவிட்டே துரத்தினாய் . இப்போது என் சக்தியை உனக்குக் காட்டுகிறேன் பார்.."என மனதுக்குள் கருவிக் கொண்டான்.
அரண்மனையின் அந்தப்புர பகுதியை நோக்கிச் சென்றான்.காவலர்கள் கண்ணில்படாமல் கிளியாய் உருமாறி, மரத்திலமர்ந்து கொண்டான். பொறுமையாய் காத்திருந்தான்.அவன் எதிர்பார்த்த தருணம் வந்தது.ராணி நந்தினிதேவி அந்தப்புரம் வந்து, குழந்தையைத் தொட்டிலிலிட்டு விட்டு செல்ல திரும்பியவள் ..அந்தப்புர வாயிலில் சாது ஒருவர் நிற்கக் கண்டாள் ..
"மகளே! உனக்கு சர்வ மங்களம் உண்டாகட்டும். உன் குழந்தை நீடூழி வாழ்வான்..."என்றான் சாது வேடத்தில் இருந்த காலாந்தகன்.
"சுவாமி வணங்குகிறேன் ..தாங்கள் போஜனம் செய்து வரவேண்டும் .."
"அம்மா... நான் சாதுக்களின் தலைவன். எல்லோருடனும் அமர்ந்து போஜனம் செய்வதில் எனக்கு பிரியமில்லை. தங்கள் கையால் சிறிது உணவளித்தால் அதுவே எனக்குப் போதுமானது. பிரியமில்லையெனில் என் வழி செல்கிறேன்."
"சுவாமி நில்லுங்கள்! நானே உணவளிக்கிறேன்" என்றவள் வெளியே வந்து உணவை வட்டிலில் தர, காலாந்தகன் தன் நிஜ உருவத்திற்கு மாறி.... அவளை ஒரு சிறு பறவையாகி... தன் கையில் பிடித்தவாறே விண்ணில் பறந்தான் ..பார்த்துக் கொண்டிருந்த அரண்மனைக் காவலர்கள் அலற . மன்னன் மயங்கி விழ.. நகரமே சோகத்தில் ஆழ்ந்தது.
*********************
வருடங்கள் பதினைந்து ஓடிவிட ..மன்னன் எவ்வளவோ பிரயத்தனம் பண்ணியும் ..ராணியை மீட்க முடியாமல் மனம் தளர்ந்து போனான். இளவரசன் வீரசிம்மன் தன் பாட்டியார் ராஜமாதாவின் பொறுப்பிலே வளர்ந்து வந்தான்.வீரத்திலும் புத்திசாலித்தனத்திலும் சிறந்து விளங்கினான்.ராஜமாதா அவனுக்கு பல கலைகளையும் கற்பித்தாள்.
அடிக்கடி பாட்டியாரிடம், அம்மாவைப் பற்றி கேட்பான். 'காலாந்தகனிடமிருந்து அம்மாவை மீட்க வேண்டும்' என்ற எண்ணம் அவன் மனதை வருத்திக் கொண்டிருந்தது. தளபதியின் மகன் கண்ணபிரான் வீரசிம்மனின் நெருங்கிய தோழன். இவனும் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்தவனாக திகழ்ந்தான்.
"கண்ணா! உடனடியாக அன்னையை மீட்க கிளம்புவோம். ஆனால் மன்னரிடமும், ராஜமாதாவிடமும் உண்மையை கூறினால் அவர்கள் நம்மை அனுப்புவது சந்தேகமே .."
"ஆம் இளவரசே..உண்மையை கூறாமல் திக்விஜயம் செல்வதாக கூறிச் செல்வோம். "
தந்தையின் அனுமதி பெற்று ..நண்பர்கள் இருவரும் மன்னரிடமும், ராஜமாதாவிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர்.
*********************************
"கண்ணா! ராஜகுருவை சந்தித்து ஆசி பெற்றுச் செல்வோம் .நாம் செல்லும் நோக்கம் அவருக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும் .."என்றான் வீரசிம்மன்.
அவர்களை வரவேற்ற ராஜகுரு," வா ராஜகுமாரா! நீ கிளம்பியதின் நோக்கம் எனக்கு தெரிகிறது . தாயை மீட்க வேண்டியது உன் கடமை. வெற்றி உண்டாகட்டும்"
"குருவே! தாங்கள் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்"
என்றனர் அவர் பாதம் பணிந்து..
கண் மூடி தியானித்த ராஜகுரு," வீரசிம்மா! நீ எதிர்ப்பது மந்திரதந்திரம் அறிந்த பலசாலியான ஒருவனை. நீயோ இளம் பாலகன் .உன் உடல் வலிமையால் அவனை வெற்றி கொள்ள முடியாது. உன் புத்தி பலத்தால் மட்டுமே அவனை வீழ்த்த முடியும். அதை நன்றாக நினைவில் கொள். வேண்டிய உபகரணங்களை சேகரித்துக் கொள்.காட்டில் சாதித்திய முனிவரைப் போய் பார் .அவர் உனக்கு உதவுவார்."
"நானும் சில பொருட்களைத் தருகிறேன். இதோ இந்த மூலிகை காயத்தை ஆற்றவல்லது ...இந்த தாயத்தும்..கயிறும் உன்னுடைய குல தெய்வம் காளியின் பாதத்தில் வைத்து மந்திரிக்கப்பட்டவை. இவை உனக்குத் தக்க பாதுகாப்பாக அமையும்.பின் ராஜகுரு சில ஏடுகளைப் புரட்டியவர் பின்வருமாறு வாசித்தார் ....
மாயன் ஏகிய திசை..
மறைந்திடும் ரவியவன் திசைதனிலே!!
மந்திர தந்திரமுமறிந்தவன் ,
மனம் விரும்பும் வடிவேற்பான்,
மங்கையவள் கைதனிலே..
மாயனவன் உயிர் நிலையாம்!!
புரிந்து கொண்டாயா வீரசிம்மா! வெற்றி வாகை சூடி உன் தாயை மீட்டு வா "என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்.
***************************************
காட்டில் சாதித்திய முனிவரின் யாகபூமி மிகவும் அசுத்தம் நிரம்பியதாக ..முட்புதர்கள் மண்டியதாக இருந்தது. முனிவர் தவ நிலையில் இருந்தார்.
நண்பர்கள் இருவரும் சேர்ந்து அந்த இடத்தை சுத்தமாக்கியதுடன் ..நல்ல நறுமணம் வீசும் மலர்ச் செடிகளையும் கொண்டு வந்து நட்டு வைத்தனர் .தவம் கலைந்த முனிவர், தன் யாகசாலை புதுப்பொலிவுடன் விளங்குவதைப் பார்த்து அவர்களை ஆசிர்வதித்தார். "குழந்தைகளே..யாம் மிக்க மனம் மகிழ்ந்தோம். அந்த காலாந்தகன் எங்களை படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமில்லை."
"என் ஞானதிருஷ்டியில் நீங்கள் அவனை அழிக்க கிளம்பி இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது உங்களுக்கு ஒரு மந்திரத்தை போதிக்கிறேன் .அதன்பின் எல்லா விலங்கினங்களுடனும் பேசும் சக்தியைப் பெறுவீர்கள்."
"வீரசிம்மா! நீ செல்லும் வழியில் நிறைய அதிசயங்களும் தென்படலாம் ..ஆபத்தும் நிறைந்திருக்கலாம்...உன் ஐம்புலன்களையும் கூர்மையாக வைத்தகொள். உனக்கு என் ஆசிகள்" என்றார். முனிவரை வணங்கி மந்திரத்தை கேட்டுக் கொண்டு கிளம்பினர்.
***************************************
ராஜகுரு கூறியபடி மேற்கு நோக்கி நடந்தனர். வழியில் ஒரு தடாகம் தென்பட, நீரருந்த விரும்பினர்.நீரெடுக்க முனையும் போது மேலே பறவைகள் சத்தமிட்டபடி அங்கும் இங்கும் பறந்தன ...
"கண்ணா சற்று பொறு! இந்த பறவைகள் ஏதோ நமக்கு உணர்த்துகின்றன. இதில் ஏதோ அபாயம் இருக்கிறது "என்ற வீரசிம்மன் தன் வாளால் தண்ணீரில் இருந்த தாமரை மலரைத் தொட ..அது கழுகாய் மாறி கொத்த வந்தது.
வீரசிம்மன் தன்னுடைய வாளை அதன் கழுத்தில் பாய்ச்சினான்.அது தரையில் விழுந்ததும் ஒரு யட்சனாக மாறியது. " ஐயா! தங்களால் எனக்கு சாப விமோசனம் ஏற்பட்டது ..தங்களுக்கு வேண்டும் உதவியை செய்வேன்" என்றான்.
"ஐயா..எங்களுக்கு விரைவாக செல்ல இரு குதிரைகள் வேண்டும்"
யட்சன் குதிரைகளைக் கொடுத்து "இளவரசே! இக்குதிரைகள் சம்பா...வெம்பா..பறக்கும் சக்தி கொண்டவை. விரைந்து செல்ல இவை உதவும்" என்றான்.நன்றி கூறி இருவரும் பயணத்தை தொடர்ந்தனர்...
சற்று தூரம் கடந்த பிறகு ,இங்கே ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டனர். கண்ணன் குதிரையிலிருந்து குதித்து அந்த புல் தரையில் கால் வைத்தான். அந்தப் புல் தரை அப்படியே அவனை உள்ளிழுக்க தொடங்கியது. பதறிய வீரசிம்மன் தன் இடுப்பில் கட்டியிருந்த கயிரை அவிழ்த்து, ஒரு முனையைக் கண்ணனிடம் கொடுத்து விட்டு மறுமுனையை சிரமத்துடன் இழுக்க கண்ணபிரான் புதைகுழியிலிருந்து வெளியே வந்தான்.அழகான புல்வெளியில் எத்தனை அபாயம்!
" ஆங்காங்கே சில கற்சிலைகள் கண்டனர்! இவையெல்லாம் அரசியை மீட்க வந்து, காலாந்தகனால் சிலையாக்கப்பட்டவர்களாக இருக்குமோ.. கண்ணா!
இவர்களை நம்மிடம் இருக்கும் மூலிகையால் உயிர்ப்பித்து விடுவோம் "
"இளவரசே..காலாந்தகன் இங்குதான் எங்கோ அருகில் இருக்கிறான். நாம் இப்போது இவர்களை உயிர்ப்பித்தால் அது அவனுடைய கவனத்தைக் கவரும். எனவே செல்லும் வழியில் இவர்களை உயிர்ப்பித்துக் கொள்ளலாம்" வீரசிம்மன் ஆமோதிக்க மேற்கொண்டு தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
************************************
சற்று தொலைவில் ஒரு நதி நீரில் ஒரு பெரிய சுறா மீன் மரத்தின் வேர்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டு ரத்த காயங்களுடன் போராடிக் கொண்டிருந்தது.
அதை பார்த்த வீரசிம்மன்" கண்ணா ..வா..நாம் அந்த மீனை காப்பாற்றுவோம்"
"ஒருவேளை இதுவும் தந்திரமாக இருக்குமோ"
"அப்படி இருந்தாலும், அதை நாம் எதிர் கொள்ளலாம் வா" என்றபடி மரத்தின் வேரை உடைத்து, அந்த மீனை காப்பாற்றினர்.தங்களிடமுள்ள மூலிகையால் அதன் காயத்தையும் ஆற்றினர்.
" நன்றி நண்பர்களே...என் பெயர் சாரா" என்றது அம்மீன்.சாதித்திய முனிவருடைய மந்திரத்தால் அது பேசுவது தங்களுக்கு புரிகிறது என்று உணர்ந்தனர்.
"நாங்கள் காலாந்தகனைத் தேடி வந்தோம். எங்கு தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களுக்கு உதவ முடியுமா" என்று கேட்டான் கண்ணன்.
"கண்டிப்பாக நண்பர்களே! அவனை வெளியே தேடிப் பயனில்லை. இந்த நதியின் நடுவில் ஒரு பெரிய குகை கட்டியுள்ளான்.தண்ணீருக்குள் இருப்பதால்தான் உங்கள் பார்வையில் அது படவில்லை."
" ஆற்றுக்குள் இருக்கும் அந்த குகைக்குள் எப்படி போவது?
அதிக நேரம் மூச்சடக்கி செல்வது சாத்தியமில்லையே. மகாராணி அதற்குள் இருக்கிறார்களா என்று எப்படி தெரிந்து கொள்வது?" என்றான் கண்ணன்.
சாரா.".நான் மிகப்பெரிய வயிறு கொண்டவன் .உங்கள் இருவரையும் அப்படியே விழுங்கி விடுகிறேன். குகைக்குள் போனதும் வெளியே விடுகிறேன்."என்றது.
'சாராவை நம்பலாமா... வேறு வழியும் இல்லை.' குருவை கண் மூடி தியானிக்க சில சுப சகுனங்கள் தென்பட்டன. சாரா சொன்னபடி அதன் வயிற்றுக்குள் புகுந்தனர். சாரா அவர்களை குகைக்கு கொண்டு போய்விட்டது. குகைக்குள் ஓடியவன் மகாராணியை அங்குமிங்கும் தேடினான்.
குகையின் நடுவே ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த நந்தினி தேவி கண்டு.."அம்மா" என்று அலறியபடி ஓடினான் வீர சிம்மன். சின்னஞ்சிறு சிசுவாய் பிரிந்த தன் மகன் இன்று வளர்ந்து வாலிபனாக நிற்கக் கண்டு மெய்சிலிர்த்தாள் நந்தினி தேவி ..
"மகனே ஏன் இங்கு வந்தாய்? காலாந்தகன் மிக மோசமானவன் .நீ இங்கிருந்தால் உனக்கும் ஆபத்து உடனே போய் விடு" என்று பதைபதைத்தாள் .
" தங்களை மீட்காமல் இங்கிருந்து போக மாட்டேன் அம்மா"
"மகனே! உன் தந்தை மீது கொண்ட கோபத்தால் தான் என்னை சிறையெடுத்து வந்துள்ளான். ஆனால் அவன் தாயின் சாபம் அவனால் என்னை நெருங்க முடியவில்லை .. காளிதேவிக்கு இந்த அமாவாசை இரவில் என்னை பலி கொடுப்பதற்காகத் தான் பாதுகாத்து வருகிறான்"
"ராஜ ரத்தம் அவன் வேண்டுதல். அதனால்தான் உன்னையும் விடமாட்டான். தயவுசெய்து இங்கிருந்து தப்பித்துப் போய் விடு! இந்த குகையிலிருந்து என்னை ஒருபோதும் உன்னால் காப்பாற்ற முடியாது."
குகையில் இருந்த தண்ணீரில் அதிர்வலைகள் தோன்ற, "காலாந்தகன் வந்து கொண்டிருக்கிறான் .. போய் விடு மகனே"
"அம்மா கவலைப்படாதீர்கள் . இந்த குகையிலிருந்து உங்களை மீட்க முடியாவிட்டால், வெளியே காளி கோவிலில் வைத்து உங்களை மீட்பது உறுதி! இது உங்கள் மேல் ஆணை!" என்று கூறினான்.
அப்பொழுது காலாந்தகன் பூமி அதிர உள்ளே நுழைய...வீரசிம்மனும், கண்ணனும், தங்கள் கழுத்தில் உள்ள தாயத்தில் இருந்த மூலிகையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டனர்.
அரூபமாக மாறிய அவர்கள் காலாந்தகன் கண்ணில் படாமல் குகையிலிருந்து வெளியே வந்தனர்
" குகையின் வாயிலருகில் வா சாரா" என்று அழைக்க.. குகையருகில் சென்றது சாரா. முன்போல எங்களை கரையில் கொண்டு விடு" என்று கூறினர். சாரா பத்திரமாக அவர்களை கரையில் கொண்டுவிட்டது .இருவரும் சாராவிற்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினர்.
*********************************
"அமாவாசை இரவில் காலாந்தகன் தேவியை வெளியே கொண்டு வருவான். அன்று எப்படியும் அம்மாவை மீட்க வேண்டும் கண்ணா! அமாவாசை என்று என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் கண்ணா "
அந்த மரத்தின் மேல் இருந்த கிளி "நண்பர்களே!என் பெயர் சுகர் ..ஏதோ வானைப் பாருங்கள் பிறை சின்னதாகி விட்டது. . நாளை அமாவாசை ..."
"நன்றி சுகரே. காலாந்தகன் பூஜை பண்ணும் காளி கோயில் எங்கே இருக்கிறது?"
"நண்பர்களே! அந்த அடர்ந்த காட்டில் நள்ளிரவில் காளி கோவிலில் அமாவாசையன்று வேள்வித் தீ எரியும். அதை வைத்துதான் காளி கோயிலை அடையாளம் காணமுடியும். " சுகர் கூறியதும் இருவருக்கும் ஒரு சின்ன நம்பிக்கை பிறந்தது.
*******************************
அமாவாசை தினம்... காலையிலிருந்தே வீரசிம்மனும், கண்ணபிரானும், பலவித சிந்தனையில் இருந்தனர். வீரசிம்மன் குருவைத் தியானித்து "குருவே உங்கள் ஆசி தான் என் அன்னையை காப்பாற்ற எனக்கு முழு சக்தியை அளிக்க வேண்டும்" என்று மானசீகமாக வேண்டிக் கொண்டான்.
இரவு இருள் கவிந்தது... சுகர் உடன்வர, இருவரும் தங்கள் குதிரையில் காட்டை நோக்கி வானில் பறந்தனர்.காட்டின் நடுவே எரியும் தீயை பார்த்து," காளிகோயில் அதுதான்... அங்குதான் காலாந்தகன் பலி பூஜைக்கு வருவான். " எனறது சுகர்.
மிகப்பெரிய காளி சிலை....ரத்த சிவப்பில் குங்குமத்தை பூசிக்கொண்டு உக்கிரமாக காட்சியளித்தது. காலாந்தகன் மண்டையோட்டு மாலையணிந்து , நெற்றி நிறைய குங்குமத்தை பூசிக் கொண்டு மகா கொடூரமாக காட்சியளித்தான்.அவனைச்சுற்றி கோரமுக ஆட்கள் மண்டை ஓட்டு மாலையுடன் ஆடிப்பாடிக் கொண்டு இருந்தார்கள். நடுவே வேள்வித் தீ எரிந்து கொண்டிருந்தது.
சற்று தொலைவிலிருந்து இவற்றைப் பார்த்த வீரசிம்மன் "கண்ணா அம்மாவை காணவில்லையே?தன்னை இன்று பலி கொடுக்க போவதாக அல்லவா அம்மா சொன்னார்கள்.பலி கொடுக்க தயாராக எத்தனை மிருகங்கள்.அப்படியானால் அம்மாவை அவன் கொண்டு வரவில்லையா.?"
"கண்ணா நாம் நதி கரைக்கு சென்று, அம்மா எங்கே இருக்கிறார்கள்?" என்று பார்த்து விட்டு வருவோம். உடனே அவர்களை ஏற்றிக்கொண்டு சம்பா...வெம்பா... காற்றினும் கடிதாய் பறந்தன.
நதிகரைக்கு வந்ததும்.." சாரா..சாரா :"என்று நண்பர்கள் அழைக்க சாரா கரைக்கு வந்தது .."சாரா காலாந்தகன் ராணியை கொண்டு சென்றதை நீ பார்த்தாயா? "என்று அவசரமாக கேட்டார்கள் ..
"இல்லை நண்பர்களே! நான் குகையை சுற்றி சுற்றி தான் வந்து கொண்டே இருந்தேன். அவன் தனியாகத்தான் போனான்.ராணியை கூட்டிச் செல்லவில்லை .ஆனால் கையில் ஒரு பேழை வைத்திருந்தான்"
நிதானமாக யோசிக்க நேமில்லை. அவன் அங்கே காளி பூஜை செய்து கொண்டிருக்கிறான். 'ராணியை கூட்டிச் செல்லவில்லை' என்று கூறுகிறது சாரா. அப்படியென்றால் ராணியை எப்படி காளிக்கு பலி கொடுப்பான் ...அவன் கையில் உள்ள பேழை..பேழை..ஆம்..அந்தப் பேழையில் தான் அம்மாவை உருமாற்றி வைத்திருப்பான்.'
"கண்ணா வா! நமக்கு நேரமில்லை . தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அம்மாவின் உயிருக்கு ஆபத்து .."
**************************************
காளி குகை நோக்கி பறந்தார்கள் .அப்போது வெம்பா ஒரு மூலிகையை கொடுத்தது. " இதன் சாறை மேலே பூசிக்கொள்ளுங்கள். காலாந்தகன் மனித வாடை அடித்தால் உங்களை எளிதில் பிடித்து விடுவான் "என்றது.
காளி கோவிலில் உக்கிரமான பூஜை நடந்து கொண்டிருந்தது.
பலி கொடுத்த மிருகங்களின் ரத்தத்தால் மண் சிவந்திருந்தது.
"பைரவா அந்த பேழையை எடுத்து வா" என்று கத்தினான். அவன் போட்ட கூச்சலில் காடே நடுநடுங்கியது.
சம்பா- வெம்பா அந்த இடத்தை அடைந்து ஒரு புதர் மறைவில் இறங்கியதும், நண்பர்கள் இருவரும், சப்தமில்லாமல் காளி பூஜை நடக்கும் இடத்தை நெருங்கினார்.
பைரவன் பேழையை எடுத்து வந்தான். காலாந்தகன் அந்தப் பேழையைத் திறந்தான். அதன் உள்ளே இருந்த சிறிய வெள்ளை முயலை தன் மந்திரக் கோலால் தட்ட..அந்த முயல் நந்தினி தேவியாக மாறியது.
"டேய் பைரவா! அவளை இழுத்துக் கொண்டு போய் அந்த பலிபீடத்தில் நிறுத்து... காளி ராஜவம்ச ரத்தம் கேட்கிறாள்... பல ஆண்டுகளாக பண்ணிய பூஜை நிறைவு பெறப் போகிறது. இனி மரகதபுரி மட்டுமல்ல பூவுலகே என் சொந்தம்" என்று காடே அதிரும்படி சிரித்தான்.
நந்தினி தேவி "சிரிக்காதே காலாந்தகா! உன் இறுதி காலம் நெருங்கிவிட்டது.. உன்னை அழிக்க என் மகன் வருவான்"
"வரட்டும்.. வரட்டும்.. அவன் வந்தால் காளிக்கு இளவரசன் ரத்தமும் சேர்ந்து கிடைக்கும்" இதைக் கேட்டதும் கண்ணபிரான் உடல் நடுங்கியது. இவன் கையில் சிக்கினால் தங்கள் கதி என்னவென்பதும் புரிந்தது.
'எப்படி அன்னையும் மீட்பது' என்ற யோசனையில் இருந்தான் வீரசிம்மன்.குருவை தியானித்து மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டான்.
"கண்ணா நீ இங்கேயே இரு! நான் கூப்பிடும் போது மட்டும் வா ...சம்பா! நீ என்னை ஏற்றிக்கொண்டு மந்திரவாதியின் பின்புறமாக செல். .குரு கொடுத்த மூலிகையை நீயும் நானும் உட்கொள்வோம். நாம் யார் கண்ணுக்கும் பட மாட்டோம்."
சம்பாவும் அப்படியே செய்ய ..குரு கொடுத்த மந்திர நீரை மந்திரவாதியின் மேல் இறைத்தான்."உடல் ஏன் எரிகிறது?" என்று கத்தினான் மந்திரவாதி. அதற்குமேல் அவனை அந்த நீர் ஒன்றும் செய்யவில்லை . குருவின் சக்தியே அவனைக் கொல்ல முடியவில்லை.. இவனை எப்படி கொல்வது..." யோசனையில் ஆழ்ந்தான் வீரசிம்மன்' .அவசிய நேரத்தில் உடல் பலத்தை நம்பாமல் புத்தியை கூர்மையாக வைத்துக் கொள்' என்று குரு சொன்னது மனதில் தோன்றியது.
பெரிய வீச்சரிவாளை எடுத்துக்கொண்டு நந்தினியை நெருங்கினான் காலாந்தகன் .பைரவன் அவளுடைய தலையை வெட்டு பாறையில் வைக்க அடுத்த நிமிடமே அவன் வீச்சரிவாளை வீசி விடுவானோ என்ற நினைக்கும் நேரத்தில் சுகர் அவனுடைய காலை மாறிமாறி பலமாக கொத்தியது. அதனால் சற்றே கவனம் சிதறிய காலாந்தகன் குனிந்து தன்னை அரிப்பது எதுவென்று தேடினான்.
கையிலிருந்த மந்திரக்கோல் கீழே விழுந்ததைக் கூட அவன் கவனிக்கவில்லை ..."கண்ணா இந்த மந்திரக் கோலை எடுத்து இந்த பைரவர்களை எல்லாம் சிலையாக மாற்று" என்று ஆணையிட்டான் .
கண்ணனும் அதுபோல பைரவர்களை கல்லாய் மாற்றினான். மந்திரவாதியின் கோபம் உச்சத்தை அடைந்தது . சுகர் பக்கத்தில் இருந்த புதரில் மறைந்து கொண்டது. " இங்கே யாரோ இருக்கிறார்கள்" என்றதும்..நந்தினியை பிடித்திருந்த பைரவர்களும் அவளை விட்டுவிட்டு தேட ஆரம்பித்தனர். அதற்குள் கண்ணன் இருக்கும் இடத்தை அவர்கள் நெருங்க கண்ணன் அவர்களையும் சிலையாக்கினான்.
"மாயவனின் உயிரதுவோ மங்கையவள் கைதனிலே" குருவின் வார்த்தை வீரசிம்மன் நினைவுக்கு வர "அம்மா சீக்கிரம் வாருங்கள்" .
நந்தினி தேவி ஓடிவந்தாள்... அதற்குள் காலாந்தகன் அவளைத் தன் கைகளால் பிடித்தான்.அரூபமாக இருந்த வீரசிம்மன் தன் கையிலிருந்த காளியின் தாயத்தை தன் அம்மாவின் கையில் கட்டினான்.
." எங்கே ஓட பார்க்கிறாய் இன்று என் காளி பட்டினியாக கிடக்க விரும்பமாட்டாள்."அவளை இழுத்து சென்ற காலாந்தகன். அவளை அப்படியே தூக்கி நெருப்பில் வீசினான். கனன்று கொண்டிருந்த நெருப்புக்குள் நந்தினி விழுந்ததும், தாயத்தின் மகிமையால் அக்னி... மலராய் மாறியது.
காலாந்தகன் எதிரில் தன் சுய உருவில் நின்ற வீரசிம்மன்" நீ வணங்கும் காளி எங்கள் குலதெய்வம். அவள் ஒருபோதும் தீமைக்கு உடனிருக்க மாட்டாள். உன் அக்கிரமத்திற்கு முடிவு கட்டுகிறேன்."என்றான்.
" உன்னையும், உன் அம்மாவையும் காளிக்கு பலி கொடுத்து அவள் தாகத்தை தீர்ப்பேன்" என்றவன் வீரசிம்மனை நோக்கி நகர்ந்தான் ..
"கண்ணா! அம்மாவை இங்கிருந்து அழைத்துச் சென்று விடு! இவனை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான்.
நந்தினி தேவி காளியின் பாதங்களை பற்றிக்கொண்டு "தாயே என் மகனை காப்பாற்று" என்று கதறினாள்.
கண்ணபிரான் "அம்மா சீக்கிரம். இந்த குதிரையில் ஏறி சென்று விடுங்கள் " என்றான்.
"தப்பித்தால் எல்லோரும் தப்பிப்போம்... இல்லாவிட்டால் எல்லோரும் அழிவோம் நான் மட்டுமே இங்கிருந்து போக மாட்டேன் "என்றாள் ராணி தீர்மானமாக.
காலாந்தகனால் மந்திரக்கோல் இல்லாமல் மறைந்துறைய முடியவில்லை. வீரசிம்மன் தன் வாளை கையில் எடுத்தான்.மந்திரவாதியும் வாளை வீசினான். வீரசிம்மன் அவன் வாளுக்கு தப்பி இப்படியும் அப்படியுமாக வளைந்து நகர்ந்தான்.ஒருகட்டத்தில் பலம் மிகுந்த காலாந்தகனிடமிருந்து அவனால் அதிக நேரம் தப்பிக்க முடியுமென்று தோன்றவில்லை . ஏதாவது யோசித்து செய்ய வேண்டும் என்று தோன்றியது .
எட்டிப்பிடிக்க எத்தனிக்கும் போது..அவன் மனதில் குருவின் வார்த்தை நினைவுக்கு வந்தது
"மங்கையின் கைதனிலே மாயவன் உயிர் நிலையாம்"
"மங்கையென நினைத்தது அரசியை ..ஆனால் அது ஏன் காளியாக இருக்கக்கூடாது ..கண்ணா நீங்கள் எல்லோரும் சேர்ந்து காளி சிலையை மந்திரவாதியின் மேல் தள்ளுங்கள்" என்று கூவினான்.
சம்பா, வெம்பா, சுகர், கண்ணன் நந்தினி அனைவரும் காளியின் சிலையை பின்பக்கமிருந்து தள்ள, பெருத்த சத்தத்துடன் சிலை அப்படியே மந்திரவாதியின் மேல் விழுந்து அவனை அமுக்கியது. காளியின் கையில் கட்டப்பட்டிருந்த கயிறு ..மந்திரவாதியின் உயிர் நிலை ..தெறித்து விழுந்தது. உடனே வீரசிம்மன் தன்னிடமிருந்த தர்ப்பையை அந்த காப்பின் மேல் போட, அது அப்படியே பொசுங்கியது. மந்திரவாதியின் உடலும் அதேபோல் கருகி பொசுங்கியது.
காடே அதிர பெருத்த சத்தத்துடன் மந்திரவாதி மாண்டு போனான்.
வீரசிம்மனும், கண்ணனும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சாராவுக்கும்,சுகருக்கு , நன்றி தெரிவித்துவிட்டு வழியில் கல்லாய் இருந்த மனிதர்களை எல்லாம் உயிர்ப்பித்தனர்.
சம்பா ,வெம்பா உதவியுடன் ராணியை அழைத்துக் கொண்டு விரைந்தனர் .செல்லும் வழியில் சாகித்திய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரை வணங்கி ஆசி பெற்று நாடு திரும்பினார் ..
மன்னன் ராஜசிம்மன் விபரம் அறிந்து தன் ராணியை வரவேற்க மகிழ்ச்சியுடன் காத்திருந்தான். தாயையும் மகனையும் ஒருசேரப் பார்க்க ஊரே கூடியிருந்தது. மந்திரபுரியே மகிழ்ச்சியில் திழைத்தது.
தி.வள்ளி
திருநெல்வேலி
#375
தற்போதைய தரவரிசை
66,673
புள்ளிகள்
Reader Points 840
Editor Points : 65,833
17 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 4.9 (17 ரேட்டிங்க்ஸ்)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
nellaibagavathy
jameela4ansari
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்