JUNE 10th - JULY 10th
நேசத்தின் பரிமாற்றம்
சுட்டெரிக்கும் பகலவனின் ஒளியில், வைரம் என ஜொலிக்கும் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த வரதராஜன் முகத்தில் எரிச்சலும், கோபமும் அப்பட்டமாக வழிந்தோடியது.
வியாபார ரீதியாக பல வெற்றி தோல்விகளை எதிர்கொண்டப் போதிலும், பங்குச் சந்தையின் நெளிவு சுளிவுகளைக் கரைத்துக் குடித்திருந்தப் போதிலும், திட்டமிட்டது திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றால் நொடியில் மனமுடைந்துவிடுவார் வரதராஜன்.
அன்றும் அப்படித்தான்.
காலையிலேயே பங்கு சந்தை சரிந்ததில், அவர் முதலீடு செய்திருந்த பங்குகள், ஒரே நாளில் பெரும் வீழ்ச்சி அடைந்தது. தொழில் ஒப்பந்தம் கலந்துரையாட போன இடத்திலும், பேச்சு வார்த்தை சுமூகமாக முடியவில்லை.
ஆயிரம் சிந்தைனைகளில் சஞ்சரித்தவராகத் தனது வெள்ளை நிற ஆடியை(Audi) நோக்கி, வாகனத் தரிப்பிடத்திற்கு வந்தார்.
இமைக்கும் நொடியில், காரின் கதவைத் திறந்துப் பணிவாகக் காத்திருந்த ஓட்டுனர் கேசவனுக்கு அவரிடமிருந்து கிடைத்த சன்மானம் எல்லாம் இடுங்கிய பார்வை மட்டும்தான்.
“எத்தனைமுறை சொல்றது கேசவா! வீட்டு சாப்பாடு எடுத்துட்டு வராதன்னு!” ஏ.சி. காரில் குப்பென்று வீசியப் புளித்த தயிர் சாதத்தின் நெடியில் முகம் சுருக்கியபடி ஏறி அமர்ந்தவர்,
“சாப்பாட்டுக்குன்னு கொடுக்கற தினசரி பேட்டாவை சிக்கனம் செய்து கோட்டையா கட்டப்போற!”என சிடுசிடுத்தார்.
கோபம் தலைக்கேறிய முதலாளியிடம் எப்படித் தன்மையாகப் பேசுவது என யோசித்தபடி, கேசவன் வண்டியை பிரதான சாலையில் திருப்ப, அச்சமயம் வரதராஜனின் கைபேசி சிணுங்கியது.
“ஹான் சொல்லுங்க சார்!” என அழைப்பை ஏற்றவர் பேச்சும் திசைதிரும்பியது.
நிம்மதி பெருமூச்சுவிட்டு சாலையில் கவனத்தைச் செலுத்தினான் கேசவன்.
வீட்டிற்கு வந்தவரை விடாமல் துரத்தி வந்தது சவால்களும் சச்சரவுகளும்.
“அப்பா! இயற்பியல் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்து அனுப்பியிருக்காங்க! மதிப்பெண்ணில் எந்த மாற்றமும் இல்லை!” சொன்னவளின் குரல் கம்மியது.
இடுங்கிய கண்களுடன் விடைத்தாள் நகலை அலசியவரின் கண்கள் இன்னும் அதிகமாக இடுங்கியது.
“லென்சின் விதி, ஆற்றல் அழிவின்மை விதிக்கு உட்பட்டதூன்னு கூடவா உனக்குத் தெரியாது?” மகள் செய்திருந்தப் பிழையைச் சுட்டிக்காட்டி கடிந்துகொண்டார்.
“அது…அப்பா…எடுத்து எழுதும்போது…” மாதங்கி தடுமாற,
“பரிட்சை எழுதிட்டு வந்ததுமே அதைப்பற்றிச் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க!”, அகல்யா மகளுக்கு ஒத்தூதினாள்.
“முதல் கேள்வியே தவறாக எழுதும் அளவிற்குக் கவனக்குறைவு! எல்லாம் நீ கொடுக்கும் செல்லம்தான்!” மனைவியை இடித்துக்காட்டியவர்,
மகளின் அலட்சியத்தால் செல்வாக்குள்ள கல்லூரிகளில் இனி அனுமதி கிடைக்க வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
“பணம் கட்டினால் மேலாண்மை ஒதுக்கீட்டில் அனுமதி தரேன்னு அந்தக் கல்லூரி அதிகாரி சொன்னாரே!” நினைவூட்டினாள் அகல்யா.
“ம்ஹூம்!” என இடவலமாக தலையசைத்தவர், சற்றுமுன் அவர் தன்னை அழைத்ததாகவும், கொடுத்திருந்த காலவகாசத்தில் பணம் செலுத்தாததனால், வாய்ப்பை இழந்ததாகவும் விவரித்தார்.
“கவுன்ஸிலிங்கில் நல்லபடியாக அவள் விரும்பிய பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கட்டும்; நம்ம குலதெய்வத்திற்குப் பிரார்த்தனை செய்து முடிஞ்சு வெக்கறேங்க!” தன்மையாகப் பேசினாள் அகல்யா.
“ஏதோ ஒரு கல்லூரியில் சேர்ந்துப் படிக்கவா, நான் இவ்வளவு தூரம் மெனக்கெட்டேன்!” என்றவர்,
அது அவர் கௌரவம் சார்ந்த விஷயமென்று புலம்பினார்.
“அப்பா…எந்தக் கல்லூரியாக இருந்தால் என்ன…” மாதங்கி தொடங்க,
கோபத்தின் உச்சியில் இருக்கும் தந்தையிடம் வாக்குவாதம் வேண்டாமென்று, மகளின் உள்ளங்கையில் அழுத்தம் தந்து அமைதிகாக்க சொன்னாள் அகல்யா.
மிகவும் எதிர்பார்த்திருந்த கவுன்ஸிலிங் நாளும் வந்தது.
பல்கலை கழகத்தின் நுழைவாயிலில் இறங்கிய வரதராஜன், மகள் மாதங்கியை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல,
“சார்!” தலைசொறிந்து நின்றான் கேசவன்.
ஆளுமையான பார்வையிலேயே என்னவென்று கேட்டார் வரதராஜன்.
“இன்னைக்குத் தான் என் மகன் பாலகுமரனுக்கும் கவுன்ஸிலிங்க சார்! பிள்ளையை மனைவி அழைச்சிட்டு வந்திருக்காங்க…நீங்க…நீங்க சரி சொன்னா…நானும்…நானும் அவங்ககூடப் போயிட்டு வர வா!”கேசவன் தயங்க,
“ம்ம்…சரி! எங்களுக்குப் பத்து மணிக்கு வேலை முடிஞ்சிடும்! அதுக்குள்ள திரும்பி வந்துடு…நீ எங்க இருக்கன்னு உன்னைத் தேடி அலையமுடியாது!” தீவிரக்குரலில் உரைத்தார்.
அதுபோதும் என பல் இளித்தவன் நன்றிகூற,
“மகன் கொண்டு வந்தான்…மனைவி சமைச்சான்னு ஏதாவது சாக்கு சொல்லி, புளியோதரையும் தயிர்சாதத்தையும் காருக்குள்ள வைக்காதே!” எச்சரித்தார் வரதராஜன்.
“சரி சார்!” பணிவாக தலையசைத்து நகர்ந்தான் கேசவன்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டிருந்த பிரம்மாண்டமான அரங்கத்தில், தங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்தப் பகுதிக்குச் சென்று உரிய அதிகாரிகளிடம் ஆவணங்களை சமர்பித்தாள் மாதங்கி.
மகளுக்குத் தான் எதிர்பார்த்த பிரபலமான பொறியியல் கல்லூரியில் அனுமதி கிடைக்காது என்று தெரிந்ததும், இரண்டாம் பட்சமாக வேறு சில கல்லூரிகளின் பெயரை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார் வரதராஜன். அதிலும் மிக சாதாரணமான, எந்தவித நவீன வசதிகளும் இல்லாத கல்லூரி ஒன்றில் தான் அவளுக்கு இடம் கிடைத்தது.
மாதங்கிக்கு அதில் வருத்தம் ஏதுமில்லை; தான் படிக்க விரும்பிய இரசாயன பொறியியல் பிரிவில் அனுமதி கிட்டியத்தில் பேரானந்தம்.
வரதராஜனுக்குத் தான் தன்மானம் இடித்ததது.
தொழில் நண்பர்களிடம் பெருமிததத்துடன் சொல்லும் அளவிற்கு அந்தக் கல்லூரி பேரும் புகழும் வாய்ந்தது இல்லை என்று எண்ணினார். பணம், பதவி அந்தஸ்த்து என்ற கர்வத்தில் ஊறியவருக்கு, தன் மகள் நடுத்தர வர்கத்தினர் படிக்கும் கல்லூரியில் சேர்ந்திருப்பதை பெரும் அவமானமாகக் கருதினார்.
எரிச்சல் தலைகேறியவர், இரண்டு மதிப்பெண்களின் மகத்துவம் என்னவென்று ஓயாமல் புலம்பி, மகளின் இந்த அலட்சியப்போக்கால், தன் நட்பு வட்டாரத்தில், தான் கேலியின் பாத்திரமாகத் தலைகுனிய வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாதாக உறுமினார்.
திருப்தி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத தகப்பனின் பேச்சை சகித்துக்கொண்டு, அவரைப் பின்தொடர்ந்தாள் மாதங்கி
அவர்களுக்காக வாகனத் தரிப்பிடத்தில் காத்திருந்த கேசவன், முதலாளியைக் கண்டதும், இனிப்பு டப்பா ஒன்றினை தந்து, தன் மகன் பாலகுமரன் சேர்ந்திருக்கும் கல்லூரியின் விவரங்களைப் பூரிப்புடன் பகிர்ந்துகொண்டான்.
அதே கல்லூரி; அதே இரசாயன பொறியியல் பிரிவு;
‘மகளுக்கு அனுமதிக் கிடைத்த அதே கல்லூரியில் தன்னிடம் பணிபுரியும் ஓட்டுனரின் மகனுக்கும் அனுமதிக் கிட்டியதா!’ மனதளவில் ஒப்பிட்டவருக்குத் தன்மானம் சுர்ரென்று ஏறியது.
வீட்டிற்கு வந்ததும் வராததுமாக தன் ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தார். இடைவிடாமல் குறைக்கூறும் தந்தையின் போக்கில் கடுப்பானவள்,
“இரண்டு மதிப்பெண் குறைந்ததால், நான் ஒண்ணும் முட்டாள் இல்லை பா!” பொருமினாள் மாதங்கி.
“மாதங்கி!!!” கண்டித்தாள் அகல்யா.
“என்னை எதுக்குமா அதட்டுற! மீதமுள்ள மூன்று பாடங்களிலும் நூறு சதவீதம் எடுத்திருக்கேனே! அதைப்பற்றி அப்பா என்னைக்காவது பாராட்டி பேசியிருக்காரா?” மனமுடைந்து விசும்பினாள்.
“ஆயிரம் நல்ல விஷயங்கள் நீ செய்தாலும், உன் பிழைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் உலகம் இது. அதான் அப்பா, நீ இழந்த மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லறாரு!” தந்தையின் கோபத்திற்குப் பின் மறைந்திருக்கும் அக்கறையைக் கவனிக்கச் சொன்னாள்.
இருவரும் தனக்கு எதிராக திரும்பியது போல தோன்றியது மாதங்கிக்கு.
வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டவள், “மதிப்பெண்கள் தான் வாழ்க்கைன்னு நீங்க நெனச்சா, முதல் செமிஸ்டரில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் வாங்குறேன்!” தீவிரக்குலில் சவால் விட்டாள்.
“என்னத் திமிர் உனக்கு?” வரதராஜன் கோபாவேசம் கொள்ள,
“வாயால் சொல்லாதே! செயலில் காட்டு!” அழுத்திக்கூறி இடைபுகுந்தாள் அகல்யா.
கணவரின் வறட்டு கௌரவம் சரியா தவறா என்று சிந்திப்பதைத் தாண்டி, நாணலென வளைந்துகொடுத்துப் பழகிய மனையாள், மகளையும் அவ்வழியே வழிநடத்த முயன்றாள்.
தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழிக்கு இணங்க, மாதங்கி முதல் செமிஸ்டர் பாடங்களை வெறித்தனமாகப் பயின்று, சவாலிலும் வென்றாள்.
மகளின் திறமையை மனதளவில் மெச்சியப் போதும் அதை வெளிப்படையாகப் பாராட்ட வரதராஜனின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
“இந்தப் பொறுப்புணர்ச்சியை பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் காட்டியிருந்தால், இந்நேரத்திற்கு, நம்ம அந்தஸ்த்திற்கு ஏற்ற கல்லூரியில் படிச்சிருக்கலாம்!”குத்திக்காட்டினார்.
“சரி விடுங்க! அதான் சொன்னதைச் சாதிச்சுக் காட்டிட்டாளே!” வழக்கம்போல தந்தை மகளுக்கு இடையே குறுக்கிட்ட சமாதன புறா,
“அடுத்த வாரம், கல்லூரியில் சுற்றுலா பயணம் போகணுமாம்! உங்க அனுமதிக்காகக் காத்துக்கிட்டு இருக்கா!” என்று,
“வாய் திறந்து சொல்லேன் டி!” மகளைச் செல்லமாகக் கண்டித்தாள்.
“ஒரு வாரம் டூர்! போயிட்டு வரட்டுமா பா!” பணிவாகக் கேட்டாள் மாதங்கி.
மகளுடன் மூன்று மாதங்கள் நிலவிய பனிபோருக்கு முற்றுப்புள்ளி இட நினைத்தவர், சம்மதம் என்று சிரித்த முகத்துடன் சொன்னார்.
அன்று நண்பர்களுடன் இரவு உணவு அருந்திய வரதராஜன், உணவகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கார் எஃப்.எம் யில் ஒலித்த மிதமான மெல்லிசை மெட்டுகளைக் கண்மூடி ரசித்தபடி, பின்னிருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவருக்கு தொண்டைக் குழியில் ஏதோ உறுத்துவது போல உணர்வு.
அவர் பாட்டிலில் இருந்து தண்ணீர் பருகிய அதே சமயம், வண்டி ஒன்று குறுக்கே வர, கேசவனின் கால்கள் தன்னிச்சையாக பிரேகில் அழுந்தப் பதிந்தது.
அதில் மறுகணமே வரதராஜனுக்கு புரையேறியதில், தண்ணீர், சற்றுமுன் அருந்திய உணவு என மொத்தமாக வெளியே வந்தது.
சிவந்த கண்களுடன், இடைவிடாமல் இரும்பும் முதலாளியைக் கண்ட கேசவனுக்கு வெளிறிப்போனது.
நிலைகுலைந்த வண்டியை முதலில் கட்டுக்குக் கொண்டுவந்து சாலை ஓரம் நிறுத்தியவன், வரதராஜனுக்கு உதவ விரைந்தோடினான்.
இரண்டு நிமிடமே என்றாலும், மரண வேதனை அனுபவித்த வரதராஜன் சோர்வடைந்து மயங்கினார். உதவுவதற்கு யாரும் இல்லாத நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் கேசவன்.
அரை மணி நேரத்தில் கண் விழித்தார் வரதராஜன்.
எதிர்பாராத நேரத்தில் புரை ஏறியதால் மயங்கிவிட்டார் என்று பொறுமையாக விளக்கம் தந்து, சாய்ந்து அமர உதவிய செவிலியரை இமைக்காமல் பார்த்தார் வரதராஜன்.
“நீ…நீ…நீங்க கேசவன் மனைவி தானே!” மென்மையாக வினவினார்.
இளநகையுடன் தலையசைத்தவள், குவளையில் பழச்சாறு கொடுத்து, மெதுவாகப் பருகும் படி கேட்டுக்கொண்டாள்.
“நீங்க படிச்சவங்க…அது…அது…நீங்க செவிலியர்...கேசவனை எப்படி கல்யாணம்…அது..அது…!” பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஓட்டுனர் கேசவனின் மனைவி, பட்டதாரியா என்ற ஐயம் அவர் முகத்தில் அப்பட்டமாக வழிந்தோடியது.
அவர் எண்ணோட்டத்தை நொடியில் புரிந்துகொண்டாள் பேதை.
“தார்மீகக் காதல் சார்!” புதிர்போட்டாள் பெண்.
“அப்படின்னா?”
“மாமன் மகன் படித்தவரா, அழகானவரா என்று எல்லாம் பார்த்து காதல் வராது சார்!” உறவுமுறையை மறைமுகமாக சொல்லிச் சிரித்தாள்.
அதற்குள் கேசவனும், பாலகுமரனும் அறைக்குள் வர, அவர்கள் பேச்சை கவனித்தக் கேசவன் முகத்திலும் புன்னைகை ரேகைகள்.
“எவ்வளவோ சொன்னேன் சார்! உனக்குத் தகுந்த ஒருவரை கல்யாணம் செய்துக்கோன்னு!” மனைவியை வெட்டும் பார்வையில் நோக்கினான் கேசவன்.
“உங்களுக்கு என்ன குறைச்சல்!” சண்டைக்கு வந்தவள், வரதராஜன் பக்கம் திரும்பி,
“எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து, மேற்கொண்டு படிக்க வைத்து, வேலைக்கும் அனுப்புறாரு சார்! ஆனா என் சம்பாதியத்தில் ஒரு பைஸா கூட குடும்பச் செலவுக்கு உபயோகிக்க மாட்டாரு!” குறைப்பட்டாள்.
மனைவியை மெச்சுதலாகப் பார்த்தக் கேசவன், “அதான் சொல்லிருக்கேனே! நம்ம பிள்ளை விரும்பறது எல்லாம் வாங்கிக்கொடுக்க செலவு செய்யுன்னு!” நினைவூட்டினான்.
“பாலகுமரன் அவங்க அப்பாவுக்கு மேல சார்!” உதட்டைச் சுழித்தவள்,
“எனக்கு இது வேணும் அது வேணும்னு வாய்திறந்து கேட்கமாட்டான். செலவுக்குன்னு கொடுக்கற பணத்துலையும் புத்தகங்கள் மட்டும்தான் வாங்கிப்பான்!” என்றாள்.
“சும்மா சொல்றாங்க சார் அம்மா!” இடைபுகுந்த பாலகுமரன், தன் விருப்பங்களை அறிந்து, போட்டிப்போட்டு முன்வந்து நிறைவேற்றும் பெற்றோரின் பெருமையை பறைசாற்றினான்.
தன் கல்வி மேல் அக்கறை கொண்ட பெற்றவர்கள், பிறந்த மண்ணைவிட்டு நகர்புறத்தில் வந்து வசிக்கிறார்கள் என்று அவர்கள் தன்னலமற்ற குணத்தை எடுத்துரைத்தான்.
“நான் படிச்சு முடிச்சதும், அம்மா விரும்புறா மாதிரி, எங்க சொந்த ஊரிலேயே மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்கணும். எங்க ஊர் கிழவன் கிழவிக்கு எல்லாம் அம்மா ஊசியா குத்தணும்!” பொய்கோபத்துடன் அன்னையை அரவணைத்தான்.
“எல்லாம் சரி! முதல்ல நல்லபடியா படிச்சு முடி!” மகனின் கன்னத்தில் தட்டிக்கொடுத்தாள் நிர்மலா.
ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் பேசி அன்பை பொழியும் குடும்பத்தினரை தன்னையும் அறியாமல் ரசிக்கவே செய்தார் வரதராஜன்.
இரவு பதினோரு மணிக்கு மேலானதால், அன்றிரவு தங்கிவிட்டு வீட்டிற்க்குச் செல்வது உத்தமம் என்று பரிந்துரை செய்தாள் நிர்மலா.
“அகல்யா அம்மா வந்ததும், நீ வீட்டுக்குப் புறப்பட்டு வா குமரா!” மகனுக்குக் கட்டளை இட்டான் கேசவன்.
அவர்களுக்கு ஏன் சிரமம் என்று வருந்திய வரதராஜனின் பேச்சுக்குச் செவிசாய்க்காமல் கணவனும் மனைவியும் புறப்பட்டனர்.
வரதராஜனிடம் ஓய்வெடுக்கும் படி கூறிவிட்டு, அறையின் ஒரு ஓரத்தில், பாடப்புத்தகங்களுடன் ஐக்கியமானான் பாலகுமாரன்.
தன் மகள் படிக்கும் அதே கல்லூரியில் பாலகுமரனும் படிக்கிறான் என்று நினைவுகூர்ந்தவர்,
“கல்லூரி படிப்பு எல்லாம் எப்படிப் போகுது குமரா?” பொத்தாம் பொதுவாகக் கேட்டார்.
“அருமையான கல்லூரி சார்! தரமான கல்வி புகட்டும் பேராசிரியர்கள்! போதாக்குறைக்கு அம்மாவும் எளிமையான முறையில் வீட்டில் சொல்லிக் கொடுக்கறதுனால கஷ்டமே தெரியல சார்!” உற்சாகமாகப் பதிலளித்தான்.
சுமாரான கல்லூரி என ஏளனமாக நினைத்தவரின் மனசாட்சி சுறுக்கென்று குத்தியது.
“மாதங்கி…” என்று அவர் உதடுகள் தன்னிச்சையாக உச்சரிக்க,
“ஹான்! தெரியும் சார்! உங்க பொண்ணுன்னு அப்பா சொல்லிருக்காரு; நேருக்கு நேர் பேசினது இல்ல…ஆனா அவங்க தான் எல்லா பாடத்திலும் எப்போதும் முதல் மதிப்பெண் வாங்குவாங்க!” என்றவன், துருதுருவென்று அவர் மெத்தையின் அருகே வந்து,
“என் அப்பா தான் எனக்கு முன்மாதிரின்னு மாதங்கி அடிக்கடி வகுப்புல சொல்லுவாங்க சார்! என்னையும் உங்க மகனா நெனச்சு வழிநடத்துறீங்களா சார்!” கெஞ்சலாகக் கேட்டவன், தன்னையும் மறந்து அவர் கைகளை இறுகப் பற்றினான்.
வரதராஜன் விழியோரம் மழைச்சாரல்.
கௌரவம், அந்தஸ்த்து என்ற இறுமாப்புடன் வாழ்ந்தவரின்,
அகங்கராம் கரைந்தது; அந்த ஸ்பரிசத்தில்!
அன்பு மலர்ந்தது; அந்த நொடியில்!
பாலகுமரனின் தலையில் அன்பாக வருடிக்கொடுத்து, சம்மதம் என்று தலையசைத்தார். அவனுடன் சகஜமாகவும் பேசிப் பழகினார்.
சிறிது நேரத்தில் தகவல் அறிந்து பரிதவிப்புடன் வந்தடைந்தாள் அகல்யா.
மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்கும் மனையாளுக்குப் பதற வேண்டாம் என்று கூறி ஆறுதலாகப் பேசினார் வரதராஜன். தக்க சமயத்தில் உதவிய பாலகுமரனுக்கு நன்றிகூறி நிம்மதி பெருமூச்சுவிட்டாள் அகல்யா.
நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டியும் அகல்யாவின் கண்களில் தூக்கமில்லை. கணவரின் உடல்நிலை பரிசோதிக்க அருகே வந்தவள் அவரை விழித்திருக்கும் நிலையில் கண்டதும்,
“தூக்கம் வரலையா! உடம்புக்கே ஏதாவது பண்ணுதா? மருத்துவரை அழைக்கட்டுமா?” படபடவென்று கேள்விகளை அடுக்கினாள்.
கணினி அறிவியலில் முதுகலை பட்டம் வாங்கிய மனையாளுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவிடாமல், தன் சுயநலத்திற்காக வீட்டில் முடக்கி வைத்திருப்பதை எண்ணி குமுறினார். மாதங்கியிடம் தந்தை என பாசத்தோடு உறவாடாமல் கண்டிப்புடன் இருந்ததை எண்ணி மனமுடைந்தவரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.
மனையாளின் கரத்தை அழுந்தப் பிடித்தவரின் கண்கள் குளமாகின.
“நான் நல்ல கணவரும் இல்லை; தகப்பனும் இல்லை!” விட்டத்தைப் பார்த்தபடி முணங்கினார் வரதராஜன்.
“உங்களுக்கு என்ன ஆச்சு; ஏதேதோ பேசுறீங்களே!” கசந்த குரலில் அவள் கேட்க,
கேசவன் குடும்பத்தினர் நேசத்தின் பரிமாற்றம் கண்டு தன் தவறுகளை உணர்ந்து புத்தி தெளிந்ததாகக் கூறி, மன்னிப்பும் கேட்டார்.
மலை என நிமிர்வாக இருப்பவர் மனமுடைந்துப் பேசியதில் பதறினாள் பேதை.
“மன்னிப்பு கேட்டு வருந்தும் அளவிற்கு நீங்க எந்தத் தப்பும் செய்யலீங்க!” ஆதரவாகப் பேசி அவரை நிம்மதியாக உறங்கும்படி வலியுறுத்தினாள்.
மனம்திறந்துப் பேசினால் தான் தனக்கு நிம்மதி என்றவர்,
“இல்ல அகல்யா! கல்யாணத்துக்கு அப்புறம், வேலைக்குப் போகக் கூடாதுன்னு, உன் ஆசை, கனவு, லட்சியம் எல்லாத்துக்கும் முட்டுக்கட்டை போட்ட நான் எவ்வளவு சுயநலவாதி!” தலைகுனிந்தார்.
குடும்ப விவகாரங்களில், இருகொள்ளி எறும்பென கணவன் தனக்கும், பெற்றவர்களுக்கும் இடையில் அல்லல்பட்டது, கூட்டுக்குடும்பத்தில் வாக்கப்பட்ட அவளுக்குச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.
“அலுவலகம், வீடுன்னு அத்தனை வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்தால், உடலளவிலும், மனதளவிலும் எனக்கு வீண் உளைச்சல்னு நல்லெண்ணத்துல தானே வேலைக்குப் போக வேண்டாம்னு சொன்னீங்க!” விருப்பத்துடனே ஏற்றதாகக் கூறினாள்.
அப்போதும் அவர் சமாதானமாகவில்லை. அவள் படித்தப் படிப்பு வீண்போனதாகக் குறைப்பட்டார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல!” கணவரின் விரல் கோர்த்து அருகில் அமர்ந்தவள்,
“வீட்டுல இருந்ததுனால தானே, முழுநேரமும் மாதங்கிக்குத் தேவையானதை எல்லாம் செய்ய முடிந்தது!” என்று தாய்மைக்கே உள்ள பூரிப்பில் பேருவகையுடன் கூறினாள்.
தாயாக அவள் ஆற்றிய கடமைகளை குறைதான் சொல்லமுடியுமோ என்று உணர்ந்தவர்,
“நான்தான் அவளுக்கு ஒரு நல்ல தந்தையாக இருந்ததே இல்லை!” என்று நொந்துக்கொண்டவர், மறுபடியும் தன்னை கேசவனின் குணத்துடன் ஒப்பிட்டுப் பேசினார்.
“கேசவனுடைய நேசத்தின் பரிமாற்றம் எந்தளவுக்கு ஆத்மார்த்தமானதோ, அதே அளவிற்கு, நீங்க எங்களுக்காகப் பார்த்து பார்த்து செய்த அத்தனையும் சரிதான்!” திட்டவட்டமாகக் கூறியவள்,
தங்களுக்கு வாழ்க்கையில் கஷ்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாத வண்ணம், ஆண்மகனுக்கு உள்ள அத்தனைப் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொண்டார் என்று அழுத்திக் கூறியவள்,
“எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஓய்வெடுங்க!” என்று அங்கிருந்து நகர்ந்தாள்.
இருபது ஆண்டுகாலம் தாம்பத்தியத்தில், எதற்கும் முகம் சுளிக்காத மனையாள் இன்று மட்டும் தன்னை விட்டுக்கொடுத்துப் பேசிவிடுவாளா என புன்னகைத்தார்.
விருந்தாளிகள் மெத்தையில் அமைதியாக உறங்கும் மனைவியை இமைக்காமல் பார்த்தவர் சிந்தனைக்கு ஒன்று உறைத்தது.
“வாயால் சொல்லாதே! செயலில் காட்டு!” அன்று அகல்யா சொன்ன அறிவுரை, மகளுக்கு மட்டுமில்லை; தனக்கும் பொருந்தும் என்று புரிந்துகொண்டார்.
மனம் தெளிவடைய, உறக்கம் கண்ணில் ஒட்டிக்கொண்டது.
மறுநாள் காலை, சுற்றுலா பயணம் முடித்து வீடு திரும்பிய மகள், தந்தையைக் காண மருத்துவமனைக்கே வந்துவிட்டாள்.
பயப்படும் அளவிற்குத் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னபோதிலும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேம்பி தேம்பி அழும் மகளின் நேசத்தில் நெக்குருகிப் போனார் வரதராஜன்.
மார்பில் புதைந்து அழும் மகளின் தலையை மென்மையாக வருடியவர்,
“உனக்கு உள்ளூர் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்ததும் நல்லதா போச்சு; அப்பாவுக்கு ஒண்ணுன்னா உடனே ஓடி வருவதற்கு எவ்வளவு வசதியா இருக்குப் பாரு!” என்றார்.
மலையளவு பாசம் கொண்டவர் என்றபோதிலும், அதை என்றுமே வெளிப்படையாகக் காட்டியது இல்லை அவர். கனிவாகப் பேசும் தந்தையை கண்கள் அகல ஏறிட்டாள் பெண்.
“நீ திறமைசாலி தான் மாதங்கி! இரண்டு மதிப்பெண் கோட்டை விட்டதுனால நீ புத்திசாலி இல்லன்னு ஆகாது மா!” என்று மனம்திறந்து மன்னிப்பும் கேட்டார்.
தான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று தர்க்கம் செய்யும் மனிதரா, இன்று இந்தளவிற்குத் தழைந்துப் பேசுகிறார் என்ற சிந்தித்தவளுக்கு, தான் மூடி மறைத்த விஷயத்தை ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
“அப்பா! லென்சின் விதி, ஆற்றல் அழிவின்மை விதிக்கு உட்பட்டுதூன்னு எனக்குத் தெரியும்! வேணும்னு தான் தவறான விடையை தேர்ந்தெடுத்து எழுதினேன்!” என்றவளை புருவங்கள் உயர்த்திப் பார்த்தனர் அன்னையும் தந்தையும்.
“அனைத்துப் பாடங்களிலும் நூறுக்கு நூறு வாங்கிட்டா, நல்லக் கல்லூரின்னு சொல்லி, என்னை படிக்கவைக்க, தொலைதூரம் அனுப்பி வெச்சிடுவீங்க…எனக்கு ஹாஸ்டல்ல தங்கிப் படிக்க ரொம்பப் பயம்…உங்களோட இருக்கத்தான் பிடிச்சிருக்கு பா!” மென்று விழுங்கியவள்,
“முடிவு எடுக்கற அளவுக்கு எனக்கு வயசும், அனுபவமும் இல்லை பா; எதைப் படித்தால் என் எதிர்காலத்திற்கு ஏற்றதுன்னு உங்களுக்குத் தான் நல்லா தெரியும்; ஆனால் எந்தக் கல்லூரியில் படிச்சாலும், கருத்தூன்றி படிச்சு உங்களுக்குப் பெயரும் புகழும் சேர்ப்பேன்னு நம்புங்க பா!” என்றதும்,
வரதராஜனின் கண்கள் பனித்தன. பாசத்திற்காக ஏங்கும் மகளை அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
“நானும் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லாம மறைச்சிட்டேங்க!” தன் பங்குக்கு அசடுவழிந்தாள் அகல்யா.
இம்முறை கேள்வியாகப் பார்த்துக் காத்திருந்தனர் தந்தையும், மகளும்.
“மாதங்கிக்கு உள்ளூர் கல்லூரியில் அனுமதி கிடைக்கணும்னு தான் குலதெய்வத்திற்கு முடிஞ்சு வெச்சேன்; என்னதான் இருந்தாலும், நாளைக்கு கல்யாணமாகி புகுந்த வீட்டுக்குப் போகப்போற பொண்ணு; இந்த நாலு வருஷமாவது நம்மக்கூடவே இருந்தால் நல்லாயிருக்கும்னு நெனச்சேன்!” காரணமும் சேர்த்துக் கூற,
துக்கமும், மகிழ்ச்சியும் முட்டிமோதியது அவருக்கு;
சமுதாயத்தின் பார்வையில் தனது அந்தஸ்த்தை நிலைநாட்டுவதில் காட்டிய அக்கறை, தன்னையே உலகமென்று கருதும் மனைவி, மகளின் உள்ளுணர்வுகளை புரிந்துகொள்வதில் எள்ளளவும் காட்டவில்லை என்று உணர்ந்தார்.
இருவரையும் ஆரத்தழுவி அவர்கள் அன்பில் நெகிழ்ந்தார்.
உடலாலும் உள்ளத்தாலும் தேறி வந்தவருக்கு, அதே தன்னடக்கத்துடன் காரின் கதவை திறந்துவிட்டான் கேசவன்.
வெள்ளை ஆடி(Audi) அதன் பளிங்கு சிறிதும் குறையாமல் ஜொலித்தது. இதமான சந்தனத்தின் வாசம் நாசியைத் தீண்டியது.
முன்தினம் வரதராஜன் செய்த அமர்களத்தின் சுவடு தெரியாத அளவிற்குப் பளபளப்பாக சுத்தம் செய்து வைத்திருந்தான் கேசவன்.
பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தவரின் மனம்தான் குற்றவுணர்ச்சியில் கனத்தது.
தன்னுடைய தலைக்கனத்திற்கும், அதிகார திமிருக்கும் முகம் சுளிக்காத மற்றொரு ஜீவன் அல்லவா அவன்;
“நாளையிலிருந்து வீட்டில் சமைத்த சாப்பாடே எடுத்துட்டு வா கேசவா!” சிறிதும் கர்வமின்றி உரைத்தார்.
“சரிங்க சார்!” எப்போதும் போல அதே மென்சிரிப்புடன் தலையசைத்தான் கேசவன்.
‘கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்’ ஐந்தாண்டு காலமாக முதலாளியின் சுபாவத்தைக் கண்கூடாகப் பார்த்தவனுக்குத் தெரியாதா, அவர் நேசத்தின் பரிமாற்றம்.
-வித்யா வெங்கடேஷ்.
#383
தற்போதைய தரவரிசை
50,800
புள்ளிகள்
Reader Points 800
Editor Points : 50,000
16 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 5 (16 ரேட்டிங்க்ஸ்)
Kanavu Kadhali Ruthitha
அறிவியலையும் சிலரின் அர்த்தமற்ற அறியாயமையையும் இனிதே கதைக்குள் புகுத்தி உங்கள் அழகுதமிழில் அழகுறக் கோர்த்து கதையாக சமர்ப்பித்து விட்டீர்கள் சகோதரி!! நிதர்சனத்தை உள்ளதை உள்ளவாறே எடுத்துரைத்துள்ளீர்!! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்!!
gmlochini
வித்யா வெங்கடேஷ் ஒரு நல்ல கதையை நமக்கு பரிமாற்றம் செய்திருக்கிறார் நேசத்தின் வழியாக. நிறைவான கதையை தந்த எழுத்தாளருக்கு நெஞ்சம் கனிந்த பாராட்டுக்கள்
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்