JUNE 10th - JULY 10th
சிக்கனும் பலாப்பழமும்
அருண் மொழி வர்மன்
சூரியன் எழுந்தருளி அரை மணி நேரம் இருக்கும், கண்ணுக்கு தெரியாத குயில்களின் கீச்சல்கள் நிரம்பியிருந்த அழகான காலைப் பொழுதை ரசிக்காமல் பால்கனியில் அமர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்தான் வேணு. காலையில் நியூஸ் பேப்பர் படிப்பது போல் பேஸ் புக்கை பார்த்துக்கொண்டே டீயை குடித்து முடித்தான். படிப்பறையில் இருந்து அம்மா
“டேய்.. சீக்கிரம் பாத்ரூம் போய்ட்டு வா.. கறிக் கடைக்கு போகணும், பாய் கடைய சாத்திடுவாரு” என்றார். நிஜ உலகிற்கு வேணு இழுக்கப்பட்டான்
“ஓ.. இன்று ஞாயிற்றுக்கிழமையா!” என்று எண்ணிக்கொண்டே பாத்ரூமுக்கு சென்றான்.மணி 7.30 ஆயிடிச்சு. இன்னும் தனது மனைவி எழுந்திருக்கவில்லை, இரவு நெட்ப்ளிக்ஸ் செய்த வேலை. தூங்கிக் கொண்டிருந்த தேவதையை பார்த்த வாறே கால் சட்டையை இழுத்துக்கொண்டிருந்தான், சட்டென்று அவனுக்குள் அது உதித்தது “ஆஹா.. இன்று பலாப்பழம் வாங்காவிட்டால் நிச்சயம் நான் காலி..”
ஒரு வாரமாக பலாப்பழம் வாங்கி தருமாறு சுமி கேட்டுக்கொண்டிருக்கிறாள். வேணுவும் ஒரு வாரத்தை எப்படியோ ப்ரோகிராஸ்ட்டினெட் செய்துவிட்டான், ஆனால் இன்று நிச்சயம் கிடுக்கிப் பிடி போட்டு விடுவாள்.
கதவை மெல்ல சாத்திவிட்டு வெளியே வந்து அம்மாவிடம் என்னென்ன வாங்க வேண்டும் என்ற லிஸ்ட்டை வாங்கி கொண்டான். அலட்சியமான ஒரு பார்வையில் என்ன வாங்க வேண்டும் என்று லிஸ்டைப் பார்த்தவாறே கட்டை பையை எடுத்துக் கொண்டபின்.
“மா.. இந்த பலாப்பழம் எங்க கிடைக்கும்?” என்று அம்மாவிடம் கேஷுவலாக வேணு கேட்டான்.
“பலாப்பழமா..? ஆச்சர்யமா இருக்கு.. நீ அதெல்லாம் சாப்பிட மாட்டியே டா..”
“மா.. சொல்லுமா நீ.. எங்க கிடைக்கும்?”
“நம்ம பிள்ளையார் கோவில் கிட்ட இருக்கும் இல்லனா நாலு முனை ரோட்ல அந்த பழக்கடைல கேளு”
“அங்கேயும் இல்லனா?”
“அங்கேயும் இல்லனா நீ உழவர் சந்தைக்கு தான் போகணும்”
“அவ்ளோ தூரமா?” என்று எண்ணியபடியே “சரி வரேன்” என்று சொல்லிவிட்டு வேணு கிளம்பினான்.
இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிவிட்டது, இதுநாள் வரை சுமி அவனிடம் விருப்பப்பட்டு எதுவும் வாங்கித் தருமாறு கேட்டதில்லை. ஒரு நாள் வேணுவே கேட்டுவிட்டான் - “உனக்கு என்ன என்கிட்ட தயக்கமா? ஏன் எதுவுமே கேட்க மாட்ற?” என்றான். அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை “சரி எனக்கு சாப்பிட டேஸ்ட்டா பலாப்பழம் வாங்கி தா..” என்றாள். அவள் பெரிதாக ஏதாவது கேட்பாள் என்று எதிர்பார்த்தான், ஆனால் அவள் அவனை ஏமாற்றிவிட்டாள்.
பெண்களின் மனதையும், ஆசைகளையும் புரிந்துகொள்வதில் ஆண்கள் எப்போதும் கெட்டிக்காரத்தனம் இல்லாதவர்கள் தான். ‘பலாப்பழம் என்ன பெரிய விஷயமா?’ என்பதாலோ என்னவோ அவள் அதை கேட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தட்டி கழித்து விட்டான் வேணு, ஆனால் இன்று நிச்சயம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தான். வீட்டை விட்டு கிளம்பியவன் முதலில் கறிக்கடைக்கு அருகில் வண்டியை நிறுத்திவிட்டு பாயிடம் ஒரு கிலோ கோழிக்கறி வாங்கினான், புதிதாக உரித்த கோழியை பாய் எடைபோட்டு துண்டாக்கினார். வேணு தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினான். என்னதான் சிக்கன் சாப்பிட பிடித்திருந்தாலும் கண்முன்னே கோழியை கொல்வதை பார்த்தால் ஒரு தயக்கம் மனதில் எழத்தான் செய்கிறது. அதுவும் ஒரு உயிர் தானே. மனிதர்கள் வாழும் இந்த பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவில் ஒரு சிறு கோழியின் உயிரை பற்றி யார் கவலை பட போகிறார்கள். கூண்டில் அடைபட்டு கிடக்கும் கோழிகளின் கூச்சல்களுக்கிடையே இன்று என்ன சமைக்கலாம் என்ற எண்ணம் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
“பெப்பர் சிக்கன் ப்ரை ஆ ....? சில்லி கார்லிக் சிக்கன் ஆ…?”
கறிக்கடையை முடித்துவிட்டு அருகில் உள்ள காய்கறி கடைக்கு நடந்தே சென்று வெங்காயமும், பச்சை மிளகாயும் வாங்கினான். புதிதாக வந்த காய்கறிகளை ஆட்கள் லாரியில் இருந்து மூட்டைகளாக இறக்கி கொண்டிருந்தனர். “சரி எல்லாம் வாங்கியாச்சு அடுத்து பலாப்பழம் தான்..”
வேணு வண்டியை எடுத்துக்கொண்டு முதலில் பிள்ளையார் கோவில் பக்கம் போய் பார்த்தான், அங்கு பழக்கடையே தென்படவில்லை. பின் நாலு முனையில் உள்ள பழக் கடைக்கு சென்றான்.
“நாளைக்கு தான்பா கிடைக்கும், நீ நாளைக்கு வா..” என்றார் கடைக்காரர். பலமுறை இந்த வழியாக செல்லும் போதெல்லாம் முழு பலாவையே அவன் கடைகளில் பார்த்திருக்கிறான், ஆனால் அது என்னவோ தான் வாங்க வேண்டும் என்று வருகையில் அது இல்லாமல் போய்விட்டது. வேணு அங்கே சிறிது நேரம் நின்று யோசித்தான்.“வீட்டுக்கு போய்ட்டா தலைக்கு குளிக்கணும் அப்புறம் சமைக்கணும் அப்படியே டைம் அதுலே ஓடிடும், திரும்ப கடைக்குலாம் வர முடியாது.. சரி.. சந்தைக்கும் ஒரு எட்டு போய் பார்த்துடுவோம்” என்று முடிவு எடுத்து வண்டியை உழவர் சந்தையை நோக்கி கிளப்பினான்.
மணி எட்டைத் தாண்டியது. சித்திரை வெய்யில் மண்டைக்குள் இறங்கியது, வண்டியில் சென்றாலும் வேணுவிற்கு வியர்த்துக் கொட்டியது. இந்த வெயிலில் இவ்ளோ தூரம் போக நினைப்பது தவறான முடிவோ என்று தோன்றியது.
ஊர் அதற்குள் நன்றாக இயங்க தொடங்கிவிட்டது. ஆண்கள் கறிக்கடைகளை நோக்கி கட்டைப்பைகளுடன் சென்றுகொண்டிருந்தனர், தெருவோரங்களில் பெண்கள் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர், கெடிலம் பாலத்தின் மேல் பதநீ வியாபாரிகள் பானைகளில் குளிர்ந்த பதநீயுடன் நின்றுகொண்டிருந்தனர், இதில் யாருமே நிழலில் நிற்கவில்லை மொட்டை வெயில் அவர்கள் மீது அடித்துக் கொண்டிருந்தது ஆனால் அவர்கள் யாரும் அதை கண்டு கொள்வதாக தெரியவில்லை, இந்த சூரிய பகவான் எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும் உழைக்கும் மக்களிடம் தோற்றுவிடுவான் தான் போல.
கெடிலத்தை தாண்டிய பின்பு உழவர் சந்தைக்கு வந்து விட்டாச்சு, “என்ன கூட்டம்,,, மொத்த ஊரே இங்கு தான் இருக்கிறது போல..”வேணு வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே நடக்க தொடங்கினான், உள்ளே நுழையுமுன் வாசலிலே கிராமத்தில் இருந்து வந்த பலர் கடைகளை போட்டிருந்தனர், இங்கேயே எல்லாம் கிடைத்துவிடும் போல. பச்சை பசேலென்று கொத்து கொத்தாக வாழை இலைகள், நல்ல பளீச் மஞ்சள் நிறத்தில் அடுக்கி வைக்கப்பட்ட எலுமிச்சை பழங்கள், மனம் கவரும் நறுமணத்தோடு கறிவேப்பிலையும் புதினா மல்லியும் கட்டு கட்டாக கிடந்தன, ஒரு புறம் நூற்றுக்கணக்கில் தர்பூசணி பழங்கள் குவிந்து கிடந்தன. இவையன்றி பல வகை பழங்கள், காய்கறிகள் என ஒரே பசுமையாக காட்சியளித்தது சந்தை. வேணு அதை கடந்து உள்ளே செல்லும்போது ஒரு பாட்டி
“தம்பி தேங்காய் வேணுமாப்பா?” என்று கேட்டார். வேண்டாம் என்று கூறிவிட்டு உள்ளே சென்றான். சந்தைக்குள் ஒரே மக்கள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் சுடச்சுட நடந்துகொண்டிருந்தது, சில பெண்கள் சத்தமாக பேரம் பேசிக் கொண்டிருந்தனர், போகிற வழியெல்லாம் வியாபாரத்தின் சலசலப்பை பார்த்த வண்ணம் சென்றான் வேணு.எல்லா கடைகளையும் பார்க்காத மாதிரியே நோட்டம் விட்டு கொண்டு போனான், ஒரு சில கடைகளில் மக்கள் கூட்டம் இருந்தது, ஒரு சிலதில் யாருமே இல்லை, வியாபாரிகள் மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தனர். சுற்றும் முற்றும் பார்த்தும் அவன் தேடி வந்த பலாப்பழம் மட்டும் எங்கேயும் காணவில்லை.
சந்தையின் முடிவில் ஒருவர் நல்ல புதினா மல்லி கட்டுகளை கட்டிக் கொண்டிருந்தார், வேணுவிற்கு புதினா மல்லி வாசம் மிகவும் பிடிக்கும், “பிரியாணி செய்வதாக இருந்தால் தேவைப்படும்” அங்கே சென்று பத்து ரூபாய்க்கு ஒரு பெரிய கட்டை வாங்கி பைக்குள் போட்டுக் கொண்டான்.
“அண்ணே.. இங்க பலாப்பழம் எங்க கிடைக்கும்?” என்று அவரிடம் வேணு கேட்டான். அவர் வலது புறம் ஒரு சின்ன கொட்டாய் பக்கம் கைகாட்டி
“அங்க ஒரு அம்மா விக்கும் சார்..” என்றார். நன்றி சொல்லிவிட்டு வேணு அங்கே சென்றான்.
அந்த கொட்டாயில் ஒரே ஒரு பெண் நிழலில் படுத்து கொண்டிருந்தார், அவர் முன் வாழை இலையில் சில பலாச்சுளைகள் இருந்தன.நிம்மதி பெருமூச்சுடன் அவர் அருகே வேணு சென்றான் அந்த பெண் அவனை பார்த்ததும் எழுந்து
“சொள வேணுமாப்பா?” என்று கேட்டார். அப்பெண்ணிற்கு வயது ஒரு நாற்பது இருக்கும், சோர்வு தொய்ந்த முகம், சந்தையில் இப்பகுதியில் சுத்தமாக மக்கள் கூட்டமே இல்லாமல் இருந்தது.
“எவ்வளவு மா?” என்றான் வேணு
“அரை கிலோ நாப்பது ரூபா பா..”
“நல்ல சொளையா போடுங்கக்கா..” என்று வேணு சொல்லும் போதே அப்பெண் ஒரு சுளையை அவனிடம் நீட்டினார். அவன் அதை வாங்கி சுவைத்தான், நல்ல சுவையாக இருந்தது பழம்.
வெயிட் மெஷினில் சுளைகளை போட்டுவிட்டு வேணுவை பார்த்து
“எவ்ளோ பா காட்டுது?” என்று அப்பெண் கேட்டார்.
“600 கிராம்” என்றான்
“இந்தாப்பா, எனக்கு எடை பாக்க தெரியாது பா..” என்று ஒரு வெகுளியான புன்னகையுடன் சொல்லிக்கொண்டே சுளைகளை பையில் போட்டு கொடுத்தார். வேணு அதை வாங்கி கொண்டு ஐம்பது ரூபாயை நீட்டினான். அப்பெண் அதை வாங்கிக்கொண்டு மீதம் பத்து ரூபாயை எடுத்தார். வேணு யோசிக்காமல்
“அக்கா.. இன்னொரு அரைக்கிலோ போடுங்க..” என்றான். அரை கிலோவே அவன் குடும்பத்திற்கு போதுமானது, இந்த அரை கிலோ அந்த அக்காவுக்காக. அப்பெண் இன்னும் சில சுளைகளை எடைப்போட்டார். இந்த முறை சரியாக அரை கிலோ காட்டியது
“சரியாப்பா?”
“குடுங்கக்கா..” என்று அதை வாங்கிக்கொண்டு நூறு ரூபாய் கொடுத்தான்.
“நா எவ்ளோ பா மீதி தரணும்.?” என்று அப்பெண் கேட்டார்.
“சரியா போச்சு கா..” என்று சொல்லிவிட்டு ஒரு புன்னகையுடன் சுளைகளை வேணு வாங்கிக்கொண்டு வெளியே வந்தான். இதுவே அவனுடன் மனைவியோ, அம்மாவோ இருந்திருந்தால், இதே பழத்தை எழுவது ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கியிருப்பார்கள். ஆனால் வேணுவிற்கு பேரம் பேச மனம் வராது. ‘என்ன உனக்கு பேசி வாங்க தெரியல, இப்டி இருந்தா உன்ன ஏமாத்திடுவாங்க’ என்று சுமி ஒருமுறை கூறினாள். ‘என்ன பெருசா ஏமாத்திட போறாங்க, லட்சக்கணக்குலயா ஏமாத்திட போறாங்க..?’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டான்.
உடல் முழுக்க வியர்த்துக் கொட்டியது, சூரியனின் தாக்கம் அதிகரித்ததை உணர முடிந்தது, வேணு வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பினான். அவன் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சிறு மகிழ்ச்சி கிளர்ந்தெழுந்ததை உணர்ந்தான்.
வீட்டிற்குள் நுழைந்தவுடன், சுமி சோபாவில் அமர்ந்திருந்தாள்.
வேணுவைப் பார்த்ததும் சுமியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது, வேணுவும் அவளை பார்த்து புன்னகைத்தான்.
“இவளோ நேரமாடா ஆச்சு..? எல்லாம் வாங்கியாச்சா..?” என்ற அம்மாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சமையலறைக்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு பலாசுளைகளை தட்டில் வைத்து கொண்டு வந்தான்.
சுளைகளை பார்த்ததும் சுமியின் முகத்தில் பெரிய புன்னகை மலர்ந்தது
“எப்போ கேட்டேன்.. எப்போ வாங்கித் தரான் பாரு..” என்று எண்ணிருப்பாள் போலும்.
அம்மா ஒரு சுளை, சுமி ஒரு சுளை எடுத்து சாப்பிட்டார்கள். வேணுவை திரும்பி பார்த்து
“எங்கப்பா வாங்குன டேஸ்ட்டே இல்ல..” என சுமியும்.
“ஏழு கழுதை வயசாச்சு, இன்னும் பலாப்பழம் கூட வாங்க தெரியல..” என்று அம்மாவும் அதிருப்தி அடைந்தனர். மாமியாரும், மருமகளும் பெரும்பாலும் எலியும் பூனையுமாக இருந்தாலும் வேணுவை குறை கூறுவதில் இணைந்து விடுவார்கள். அவனுக்கு குழப்பமாயிற்று, உடனே வேணு ஒரு சுளையை எடுத்து சாப்பிட்டான், சுளையின் இனிப்பு அவன் வாய் முழுவதும் பரவியது.
வேணுவிற்கு அந்த பழம் மிகவும் சுவையாக இருந்தது.
#391
தற்போதைய தரவரிசை
30,800
புள்ளிகள்
Reader Points 800
Editor Points : 30,000
16 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 5 (16 ரேட்டிங்க்ஸ்)
rgmani413
கதை சொன்ன விதம் மிகவும் நன்றாக இருக்கிறது
kavayp191
gopi.jbl
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்