சேலஞ்ச் எப்.எம்

அறிவியல் புனைவு
5 out of 5 (13 )

"தனி ஒருவன் நினைத்துவிட்டால்

இந்த உலகத்தில் தடைகள் இல்லை

தனி ஒருவன் நினைத்துவிட்டால்

இந்த உலகமே தடையுமில்லை"

காலையில இந்த மாதிரி தன்னம்பிக்கை தர பாடல்களை எஃப்.எம்'ல் கேட்டுட்டே அந்த நாளை ஆரம்பிக்கிறது எவ்வளவு சூப்பரா இருக்கு? ஜாக்கிங் முடித்து, முதல் மாடியில் இருந்த வீட்டின் படிகளில் ஏறினேன்.

காதில் மாட்டிய இயர் போன்'சை தாண்டி, வீட்டிற்கு வெளியே வரை இரைச்சலாக ஒலித்த அந்த பக்தி பாடல் ஏனோ எரிச்சலைக் கிளப்பியது. ஆனால் பாலாவோ, அதை ரசித்துக்கொண்டே, ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த சாமி படங்களை நோக்கி கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.

பாட்டை நிறுத்திவிட்டு, அதே நொடியில் துண்டுடன் நின்றிருந்த அவனை, பின்னாலிருந்து தள்ளி விட்டுவிட்டு, பாத்ரூமிற்குள் ஓடினேன்.

எரிச்சலான பாலாவின் குரல் வெளியில் கேட்டது.

"உனக்கு நம்பிக்கை இல்லன்றதுக்காக மத்தவங்களோட நம்பிக்கையை இன்சல்ட் பண்றது ரொம்ப ஓவர்’டா."

"அவ்வளவு இரைச்சலா இருக்குற பாட்டை, இன்னும் எவ்வளவு சத்தமா வெப்ப நீ?"

"நம்பிக்கை இல்லை என்றதனால, பாட்டை எல்லாம் கூட கேவலமாகப் பேசுறது ரொம்ப தப்பு டா. உனக்கு எரிச்சலா தோன்றதனால மட்டும், அது நல்ல இசை இல்லைன்னு ஆகிடாது!"

"இதையெல்லாம் இசை வகையறால முதல்ல சேர்க்கவே கூடாது. தெய்வ குத்தம் ஆயிடும். ஹா ஹா ஹா ஹா" சத்தமாக சிரித்தேன்.

அந்த பக்கம் பதிலே இல்லை. குளித்துவிட்டு வெளியே வந்த போது, ஒருவழியாக பூஜையை முடித்துவிட்டு, கிளம்பி டையை கட்டிக் கொண்டிருந்தான். அமைதியாக முறைத்து மட்டும் பார்த்தான். எதுவும் சொல்லவில்லை.

"கோச்சிக்காத டா டேய். நீயும் எல்லாரும் நல்லா இருக்கனும்னு தான் தினமும் வேண்டிக்கிற. அட்லீஸ்ட் உன்னையாவது காப்பத்துறாரா உங்க கடவுள்? இன்னமும் உன்னை ஒரு நல்ல வேலைக்காக ஓட விட்டுட்டே தானே இருக்கார்?"


பதில் சொல்ல விருப்பமில்லை என்பது மாதிரியான முக ரியாக்ஷனை குடுத்துவிட்டு, ஷூவை மாட்ட ஆரம்பித்தான். அவனைப் பார்த்து நான் நக்கலாக சிரிக்க ஆரம்பிக்கவே,


"கடவுள் நம்ம பிரச்சினைகளை சரி பண்ணிட்டே இருந்தா தான் கடவுள் மேல நாம நம்பிக்கை வெக்கணுமா? ஏன் – நம்ம மேல கடவுளுக்கு நம்பிக்கை இருக்கிறதுனால தான் அந்த பிரச்சினைகள நமக்கு குடுக்குறாருன்னு எடுத்துக்க கூடாதா?"


பிரெட்டை டோஸ்ட் பண்ணிக்கொண்டே பதில் குரல் கொடுத்தேன்.


"அப்பிடி ஒத்துகோ. உன்னோட வெற்றிக்கும் தோல்விக்கும் நீ மட்டும் தான் என்னிக்கும் காரணம். வானத்தில இருந்து யாரும் வந்து உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்கன்னு."


"முயற்சி என்னிக்கும் நம்மளோடது தான். அதை நான் என்னைக்கும் மறுக்கல. ஆனா எல்லாத்தையும் வழி நடத்துறதுக்கு, சரியான நேரத்துல உதவி பண்றதுக்கு, காப்பாத்துறதுக்கு நமக்கெல்லாம் மேலே ஒரு சக்தி கண்டிப்பா இருக்கு. அந்த சக்தியை குறைச்சு மதிப்பிடாத. அவ்வளவுதான் நான் சொல்ல வரது."

"அப்பிடி இருந்தா ஏன் உலகத்தில இவ்வளவு அநியாயம் நடக்குது? மழையில தெரியாம எதாவது பெரிய பள்ளத்தில நாம வண்டியை விட்டுட்டா, நமக்கு முதலுதவி பண்ணிட்டு உடனே என்ன பண்றோம்? ஒரு ஃபாரிகேட் போட்டு வேற யாரும் தற்செயலா கூட அதுல விழாம பாத்துக்குறதில்ல? அப்ப எந்த விஷயம் எப்ப நடக்கனும்னு தீர்மானிக்கிற, நீ சொல்ற அந்த சக்தி நம்ம அளவுக்கு கூட ஏன் யோசிக்கிறது இல்ல? எல்லா தப்பு’களையும் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு, அலோ பண்ணிட்டு இருக்குது?"


"ரூட் காஸ் அனாலிஸிஸ், பிரேவெண்டிவ் ஆக்சன், இதெல்லாம் பண்றதுக்கு இது ஒண்ணும் கார்ப்ரேட் வேலை கிடையாது. அத்தனை கோடி மக்களோட வாழ்க்கையை, அவங்க அவங்களோட பாவ புண்ணியத்தை கனெக்ட் பண்ணி, முடிவுகள் எடுக்க வேண்டிய மிகப்பெரிய வேலை. ஒவ்வொருத்தரோட வாழ்க்கையில நடக்கிற விஷயங்களுக்கும் காரணத்தை எக்ஸ்பிளைன் பண்ணனும்னா, வேற எந்த வேலையுமே பண்ண முடியாது."


"ஸோ, உன்னோட கடவுள் வெச்சுட்டு இருக்கிற சிஸ்டம் எல்லாமே அவுட் டேட்டட். இவ்வளவு பெரிய விஷயத்தை செய்றதுக்கு ஒரு பிக் டேட்டா டீம் இல்ல, கஸ்டமர் சர்வீஸ்ல ஆளு பத்தல அப்படித்தானே? எல்லாரு மாதிரியும், முடியலன்றதற்கு விதவிதமா காரணம் சொல்றீங்க. உங்களுக்கும் நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கும் அப்புறம் என்ன பெரிய வித்தியாசம்?"

எரிச்சலாகி, ஷோல்டர் பேக்'கை எடுத்துக்கொண்டு வெளியே போன பாலா, கதவை மட்டும் மீண்டும் திறந்து,


"உங்கிட்ட விவாதம் பண்ற அளவுக்கு எனக்கு இப்ப நேரம் இல்ல. ஆனா காரணமில்லாம் இங்க எதுவும் நடக்கறதில்லை. மனுஷன சூப்பர் பவர்’ஆ படைச்சதுல இருந்து, இங்க எல்லாத்துக்கும் காரணம் இருக்கு. அது புரிய வேண்டிய நேரத்துல புரிய வேண்டியவங்களுக்கு தானா புரியும்."


கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறினான். சிரித்துக்கொண்டே. கட்டிலின் ஓரம் கொஞ்சமாக மிச்சம் இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு சாக்ஸை போட ஆரம்பித்தேன். கட்டிலில் முழுதும் ஆக்கிரமித்து தூங்கிக் கொண்டிருந்த தடியன் விஜய், புரண்டு படுத்து என்னை கீழே தள்ளி விட்டான்.


"எழுந்துருடா தடியா. ஒண்ணு துன்றது, இல்ல தூங்கறது?"


லைட்டாக தூக்கம் கலைந்தவன், "எதிகல் ஹேக்கர்னா சும்மாவா மச்சி?"


ஷூவை மாட்டுவதற்கு முன் அவன் முதுகில் பலமாக எட்டி உதைத்தேன், கட்டிலின் அந்த நுனிவரை போனவன், கீழே விழாமல் கட்டிலின் தலையை பிடித்து சமாளித்துக் கொண்டான்.


"இப்படியே பேசிட்டு இருந்தா, உன்னைக் கிழிச்சு ஹேங்கரில் தான் தொங்க விட போறேன் பாரு"


ஷுவை மாட்டிக்கொண்டு அவசரம் அவசரமாக வெளியேறினேன்.

*************************************************************************************************************

எப்பவும் போல அன்னிக்கு நைட்டும், லேட்டா, டயர்டாதான் வீட்டுக்கு வந்தேன். ஒவ்வொரு நாளும், நம்ம திறமைக்கு ஏத்த வேலைய செய்ய முடியலையேன்னு ஏக்கம் அதிகமாயிட்டே தான் இருக்கு.

இந்த போன் வேற ஈவினிங்ல இருந்து சதி பண்ணிக்கிட்டே இருக்கு. எஃப்.எம். கேக்குறது எனக்கு ரத்த ஓட்டம் நாடித்துடிப்பு மாதிரி. பாட்ட தேடி தேடி பிளே லிஸ்ட் உருவாக்கி கேக்குறத விட. நம்ம கன்ட்ரோல்ல இல்லாம, ரேண்டமா ஒரு ஆர்ஜே செலக்ட் பண்ணி போடுற பாட்டு கேக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இவ்ளோ டெக்னாலஜி வளர்ந்ததுக்கு அப்புறமும், அன்னைக்கு ஹெட்லைன்ஸ எப்படியோ ரேடியோல யாரோ பேசிடுவாங்க. நம்ம வேலைக்கு, அதையும் கவர் பண்ணா மாதிரி ஆயிடுச்சு. ரேடியோக்கும் எனக்குமான பந்தம், வாழ்க்கையோட கடைசி நிமிஷம் வரைக்கும் தொடரும்னு யோசிச்சுகக்கிட்டே உள்ளே வந்தேன்.

தடியன் வழக்கம்போல லேப்டாப்பிற்குள் மூழ்கிப் போயிருந்தான்.


"டேய் தடியா. இந்த போன்ல சார்ஜ் ஏறவே மாட்டுது, எஃப் எம்’மும் வொர்க் ஆக மாட்டுது. என்னன்னு கொஞ்சம் சீக்கிரம் பாரு டா."


தூங்கி விட்டான் என்று நான் நெனச்சிட்டு இருந்த பாலா உள்ளே இருந்து குரல் கொடுத்தான்.


"காலையில கடவுளை அவ்வளவு பழிச்ச இல்ல. அதுதான் உன் போன் பனால் ஆயிடுச்சு."


"ஆமா. காலையில தான் கோடி பேரை பார்க்கிறது கஷ்டம்னு ஆர்க்யூ பண்ணே. ஏதோ ஒரு மூளையில, நான் பேசின கொஞ்சம் வார்த்தைகளுக்காக தண்டனை கொடுக்க மட்டும் சரியான நேரத்துல, தேடி வந்துட்டாரா உங்க ஆளு?"


என்றதும் அமைதியானான் அவன்.


"நீ போன கொஞ்சம் சீக்கிரம் பாருடா. நான் குளிச்சிட்டு வந்திடறேன்."


குளித்துவிட்டு வெளியே வந்து கிச்சனில் என்ன இருக்கிறது என்று பார்த்தேன். நல்ல வேலை, சப்பாத்தியும் பருப்பும் செய்து வைத்திருந்தான் பாலா. சரி நன்றி சொல்லலாம் என்று எட்டி பார்த்தாள், இப்போது நிஜமாகவே தூங்கிப் போயிருந்தான். தட்டுடன் சென்று விஜயின் பக்கத்தில் அமர்ந்தேன்.


"டேய். மதர் போர்டு ப்ராப்ளம்னு நினைக்கிறேன். நாளைக்கு போனை வீட்டுல விட்டுட்டு போ. நான் கடையில குடுத்து செக் பண்ணி வெக்கரேன்."


"நீ மதியம் தானே எழுந்துக்குறே. அப்ப உன் போன நாளைக்கு ஒரு நாள் எடுத்துட்டு போகவா?"


"நீ போன யூஸ் பண்றது பாட்டு கேக்குறதுக்கு தானே? அதுக்கு இந்த எம்.பி.3 பிளேயரே போதும். இதை வெச்சு ஓட்டு நாளைக்கு ஒரு நாளை."


சாப்பிட்டு முடித்து, தட்டை அப்படியே தரையில் வைத்துவிட்டு அவனைப் பார்த்து கேட்டேன்.


"சரி. எதிகல் ஹேக்கிங்னா என்னன்னு எனக்கு புரியிற மாதிரி கொஞ்சம் சொல்லு. உனக்கு இதுக்கு யாரு பே பண்றாங்க?"

"இப்ப இன்டர்நெட் தான் உலகம்னே ஆகிடுச்சு. இதுல கைதேர்ந்தவங்க தங்களோட டேட்டாவை யாரும் ஹாக் பண்ணாம இருக்க, அவங்களோட செக்யூரிட்டி சிஸ்டம எங்கள மாதிரி ஆளுங்கள வெச்சு அடிக்கடி செக் பண்ணி பத்திரமா பாத்துப்பாங்க."

"அப்படின்னா?"

"ஒரு எடுத்துக்காட்டுக்கு நகைக்கடையில திருடு போகாம இருக்க ஒரு செக்யூரிட்டி போடறாங்க இல்ல, அதே மாதிரி, ஆன்லைன்ல இருக்கிறவங்க அவங்களோட கடையை பத்திரமா பார்க்கிறதுக்கு எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்க. என்ன. இதுல ஒரே வித்தியாசம். திருடறவங்களும் சரி, திருட விடாம காப்பாத்துற எங்கள மாதிரி ஆளுங்களுக்கும் சரி, ரெண்டு பேருக்குமே ஒரே வேலைதான். "

என்று குதூகலமாக சொல்லி அவன் சிரிக்கும்போதே, தூக்கம் சொக்கி நான் கண்களை மூடினேன். அவன் இன்னமும் உற்சாகமாக ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது எங்கேயோ தூரமாக கேட்டு, கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனது.

*************************************************************************************************************

அடுத்தநாள் காலை ஐந்தரை மணி. விஜயின் போனை எடுத்துக் கொண்டு ஜாக்கிங் கிளம்பினேன். முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்ப வரும் வழியில், அதிசயமாக அவ்வளவு காலையில் அந்த செல்போன் கடை திறந்து இருந்தது. சந்தோஷமாகி, என்னுடைய போனை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

கடையில் இருந்தவர் ஒரு ஐம்பது, அறுபது வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். புன்னகையுடன் "சொல்லுங்க sir." என்றார்.


"மொபைல்ல சார்ஜ் ஏற மாட்டுது, எப்.எம்’ம் வொர்க் ஆக மாட்டுது.'


"எவ்ளோ நாளா இந்த பிரச்சனை இருக்கு?" என்று கேட்டுக்கொண்டே, போனை வாங்கி அதன் பின்பக்கத்தை கழட்டி, ஓபன் பண்ண ஆரம்பித்தார் அவர்,

"நேத்துல இருந்து தான் சார்." பதில் சொல்லிவிட்டு, சுற்றியும் பார்த்தேன். வினோதமாக, கடையில் இருந்த எல்லா செல்புகளும் காலியாக இருந்தன. ஒருவேளை இப்போது தான் கடை திறந்து இருப்பார்கள் போல, இனிமேல்தான் அடுக்குவார்களோ என்னவோ?

"எதுக்கும் ஒரு பிளட் டெஸ்ட் எடுத்து பார்த்துரலாம் சார்,"

என்று அவரின் வினோத பதிலால், அதிர்ச்சியாகி அவரைத் திரும்பிப் பார்த்தேன். ஆனால் முகம் முழுக்க அதே பூரிப்புடன், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே போனார்.

"இப்ப இந்த மாதிரி ரெகுலரா எல்லாருக்கும் வருது. ஒரு ஊசிய போட்டா சரியாயிடும். கவலைப்படாதீங்க."

என்று அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு, போனை பார்ட் பார்ட்டாக பிரித்து, மதர் போர்டை தனியாக பிரித்து எடுத்து ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சு டோனும், முக பாவனைகளும் எனக்கு ஏதோ வயிற்றில் புளியை கரைத்தன. இப்போது அந்த போன் இடம் ஏதோ பேச ஆரம்பித்தார் அவர்.

"இதுக்குத்தான் சொல்றது. ஜாக்கிரதையா விளையாடுன்னு, இப்ப பாரு. ஊசி எல்லாம் போட வேண்டி இருக்கு. வலிக்காம போடுறேன் உனக்கு. ஓகேவா"

என்று சால்டரிங் மெஷின் எடுத்து அவர் சூடு பண்ண ஆரம்பிக்க, நான் பதட்டம் ஆனேன்.

"நான் கொஞ்சம் அர்ஜெண்டா கிளம்பணும். போனை கொஞ்சம் கொடுக்கறீங்களா? நான் சாயந்தரம் வந்து பார்த்துக்கறேன்."

"சாயந்திரம் எனக்கு வேற வேலை இருக்கே. அதுவும் இல்லாம, காலைல இருந்தே உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்ருக்கேன். (என்று வினோதமாக, இழுவையாக பேசிவிட்டு) ரெண்டே நிமிஷம். இதோ முடிச்சுட்டேன். இருந்து வாங்கிட்டு போய்டுங்க."


அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக போனை எப்படி பிடுங்குவது என்று தெரியவில்லை. ஆனால் அவரோ, சால்டரிங் மெஷினை வைத்து மதர்போர்டில் நொடிகளில் ஏதோ செய்து விட்டு, டக்கென்று போனை பழையபடி எல்லாத்தையும் போட்டு மூடி அவனிடம் கொடுத்து விட்டார்.

"அவ்வளவுதான் சார். வேலை செய்யுதான்னு……"

என்று அவர் அடுத்து பேசுவதற்குள், போனுடன் கடையை விட்டு வெளியே ஓடி வந்தேன்.


ஓடிக்கொண்டே போனை ஆன் பண்ண பார்த்தேன். ம்….உம் இந்த விஜய் பையனிடம் கொடுத்து விட்டு பொறுமையாக வெயிட் பண்ணி இருந்தால், அவனே ஏதாவது பண்ணி இருப்பான். இப்போது தேவை இல்லாமல், புது போனுக்கு வீண் செலவு பண்ண வேண்டிய சூழ்நிலைதான் போல.


மூச்சிரைக்க வீட்டிற்குள் நுழைந்தவுடன், சார்ஜர் வயரை எடுத்து அதில் கனெக்ட் பண்ணி பார்த்தேன், சார்ஜ் ஏறுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.


குளித்துமுடித்து, ஆபிசுக்கு கெளம்ப ஆரம்பித்தேன், திடீரென்று போனில் மெசேஜ் டோன் கேட்கவே, ஆச்சரியமாகி பக்கத்தில் சென்று பார்த்தேன், போன் 100% சார்ஜ் ஆகி இருக்கிறது என்று காட்டியது. சந்தோஷம் தாங்கவில்லை, இயர் போன் மாட்டி கொண்டு எப் எம் ஐ முயற்சி செய்தேன். ம்... உம் அது மட்டும் வேலை செய்யவே இல்லை.


சரி சாயந்திரம் வந்து விஜயை பார்க்க சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டே, வண்டியை ஆபீசை நோக்கி விரட்டினேன். போகிற வழியில் எதேச்சையாக, காலையில் போன அதே மொபைல் கடை கண்ணில் பட்டது. சரி, போனை சரி செஞ்சதுக்கு காசு கொடுத்துவிட்டு, எஃப் எம் ஐ பத்தி கேட்கலாம் என்று வண்டியை நிறுத்தினேன்.


இப்போது செல்ஃபுகளில் எல்லா பொருட்களும் நீட்டாக அடுக்கி வைக்கப்பட்டு, வேறு ஒருவர் டேபிளை மட்டும் துணியை வைத்து துடைத்துக் கொண்டிருந்தார். நான் போய் எதிரில் நின்னதும், "சொல்லுங்க சார்."

"அவரு இல்லையா?"

ஒரு மாதிரியாக முழித்துவிட்டு "எவரு?" என்று மீண்டும் என்னையே கேட்டார்.

"இன்னைக்கு காலைல என் போனை ரெடி பண்ணி குடுத்தாரே அவரு."

அவர் மீண்டும் கேள்விக்குறியுடன் என்னை பார்த்து, "இப்ப தான் கடைய திறக்கிறேன். நீங்க யாரை பத்தி சொல்றீங்கன்னு புரியலையே. ஒருவேளை கடை மாறி வந்துட்டீங்களா?"

"இல்ல சார். நல்லா ஞாபகம் இருக்கு. இங்க தான் வந்தேன். உங்க கடையில வேலை செயறவங்க யாராவது, காலையில திறந்திருப்பாங்களோ?"

இப்போது அந்த கடைக்காரர் கொஞ்சமாக எரிச்சலாகி,

"சார். காலங்காத்தால வந்து கட்டையை போடாதீங்க. ஏதாவது வேணும்னா கேளுங்க. இல்லன்னா கடையை காலி பண்ணுங்க."

"அது தான் சார். காலையில போன ரெடி பண்ணி கொடுத்தாரு. அவருக்கு காசு கொடுக்கணும்."

இப்போது கடை ஓனர் பயங்கர கடுப்பானார். சைகையிலேயே 'கிளம்புங்க ப்ளீஸ்' என்று ஜாடை காட்டினார். யோசனையுடன் வெளியே வந்தேன். அதே குழப்ப மனநிலையுடன் ஆபிசுக்கு போய், எஃப்.எம் இல்லாமல் எந்த வேலையும் ஓடவில்லை. மேல யோசிச்சுகிட்டே, வேலை செய்யாத அந்த எஃப்.எம். பட்டனை திரும்பத் திரும்ப அழுத்திப் பார்க்கச் சொல்லி, மனது சொல்லிக் கொண்டே இருந்தது. வேலையில் மனசு ஓட்டாததால், லீவு சொல்லிவிட்டு வீட்டிற்கு திரும்ப வந்தேன்.

காபியை போட்டுக்கொண்டு வந்து, காத்தாற பால்கனியில் உட்கார்ந்தேன். எதையும் யோசிக்காமல், ஒண்ணுமே செய்யாமல் அப்படியே ஒரு மணி நேரம் கடந்து போனது.

கட்டிலிலிருந்து எழுந்த விஜய், என்னையும் நான் இருக்கும் நிலைமையையும் வினோதமாக பார்த்தான். பக்கத்தில் வந்து அமரச்சொல்லி சைகை செய்து, காலையில் செல்போன் கடைக்கு போனதில் இருந்து நடந்த எல்லாவற்றையும் சொன்னேன்.

"சரி இரு. ரெண்டு நிமிஷத்துல பிஸ் அடிச்சுட்டு வந்துடறேன். வந்து ரேடியோவை என்னன்னு பாக்குறேன்"

டூத் பிரஷ் உடன் திரும்பி வந்தவன்,

"சரி. இந்த மாதிரி என்னிக்காவது ஒரு நாள்தான் ஒண்ணா சேர்ந்து லன்சு சாப்பிடுறோம். எங்க போலாம்னு சொல்லு? இல்ல ஆர்டர் பண்ணவா?"

என்றவுடன் சேரில் இருந்து எழுந்து கொண்டேன்.

"நீ பிரஷ் பண்ணிட்டு வா, உனக்கும் சேர்த்து போட்ட காப்பியை சூடு பண்ணிக் கொடுக்கறேன். அதுக்கப்புறம் முட்டை ப்ரைடு ரைஸா நான் பண்ண ஆரம்பிக்கிறேன்."

வாயில் பேஸ்ட் உடன், அவன் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்டான்

"ரேடியோ சேனல் எல்லாத்தையும் ரீசெட் பண்ணிட்டு, திரும்ப ஆட்டோ ட்யூன் பண்ணி பார்த்தியா?"

கேட்டு விட்டு அவன் போய்விட, காலையிலிருந்து அந்த ரேடியோ பட்டனை மட்டும் திரும்பத் திரும்ப அமுக்கிக்கொண்டு இருந்தேனே தவிர, ஆட்டோ டியூன் பண்ணி பார்க்கவில்லை என்பது புரிந்தது. அதை முயற்சி செய்தவுடன், புதிதாக 10 சேனல்கள் சேவ் ஆய் வந்து நின்றன. எதுவுமே அறிமுகம் இல்லாத சேனல்கள், அவனே பார்க்கட்டும் என்று போனை வைத்துவிட்டு, கிச்சனுக்குள் நுழைந்தேன்.

சூடு பண்ண காபியை எடுத்து வந்து விஜயிடம் கொடுத்தேன். நான் நீட்டியதை கூட கவனிக்காமல், இயர் போன் போட்டுக் கொண்டு அந்த ரேடியோ சேனல்களில் எதையோ ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று நீட்டிய என் காபி கப்பை தாண்டி, உள்ளே போய் பேப்பரையும் பேனாவையும் எடுத்துவந்து ஏதோ எழுத ஆரம்பித்தான்.

முதலில் 'சப்மாரின், மிசைல்" என்று எழுதிவிட்டு, பின்பு அதை அடித்து விட்டு, வேறு ஏதோ தொடர்ச்சியாக நம்பர்களை எழுத ஆரம்பித்தான். பின்பு அடுத்தடுத்த சேனல்களை மாற்றி அதை புரிந்து கொள்ள முயற்சி செய்தான். ஒன்றும் புரியாமல் போகவே, தலையில் கையை வைத்து உட்கார்ந்து கொண்டான். அவனுக்கு ஒன்றும் புரியாமல் இருக்கும்போது, நமக்கு என்ன தெரியப்போகுது என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்து காய்களை வெட்ட ஆரம்பித்தேன்,

எட்டி பார்த்தபோது, போனை கீழே வைத்துவிட்டு, லேப்டாப்பில் அவனது வேலையை செய்ய ஆரம்பித்து விட்டான். நான் புன்னகையுடன் திரும்பி வேலையை ஆரம்பித்தேன். திடீரென்று அவன் உற்சாகத்தில் குதித்து, கைகளை தட்டும் சத்தம் கேட்டது.

"டேய் மனோஜ் இங்கே வா. சீக்கிரம் வா. கண்டுபிடிச்சிட்டேன், உன் போன்ல வர எஃப் எம் சேனல்ல எல்லாத்துலேயும் சாட்டிலைட் போன் மூலமா ரகசியமா பேசிக்கிற விஷயங்கள் கேக்குது. நிறைய நமக்கு புரியாத பாஷையா இருந்தாலும், சிலது நம்ம ராணுவம் மற்றும் அண்டர் கவர் போலீஸ் சம்பந்தப்பட்ட விஷயம்னு அவங்க பேசுற இங்கிலீஷ் வார்த்தைகள்ல புரியுது. சில சேனல் அரேபிக் மற்றும் உருது பாஷையில பேசுறதால, ஒருவேளை தீவிரவாத இயக்கங்களுக்கு நடுவுல பேசுறதும் உன் போன்ல இப்ப கேட்குதுன்னு நினைக்கிறேன்."

அவன் மேலும் உற்சாகமாகப் பேச, ஏனோ எனக்கு அவனின் ரியாக்சன் எல்லாமே காலையில் செல்போன் கடையில் பார்த்த நபரை திரும்ப ஞாபகப்படுத்தியது, என்னுடைய ரியாக்ஷனை பார்த்துவிட்டு, அவனது உற்சாகத்தை கொஞ்சமாக குறைத்துக் கொண்டான். பின்பு சொன்னான்.

"ஏன் உன் போன்ல இதெல்லாம் கேட்குதுன்னு என்கிட்ட கேக்காத. அதுக்கான பதில் என்கிட்ட இல்ல. ஆனா கண்டிப்பா உன்கிட்ட இருக்கணும்"

என்று சொன்னதும் பளிச்சென்று ஏதோ மண்டையில் மின்னல் அடித்தது போல் இருந்தது.

செல்போன் கடைக்காரர் “காலைல இருந்தே உங்களுக்காக தான் wait பண்ணிட்ருக்கேன்.”

மீண்டும் பால்கனிக்கு வந்து வெளியே வானத்தை அண்ணாந்து பார்க்க ஆரம்பித்தேன்.

கோர்வையாகவும், கோர்வை இல்லாமலும் கடந்த இரண்டு நாட்களாக பேசிய வார்த்தைகள் எல்லாம் இப்போது எனக்கு ஞாபகத்துக்கு வந்தன.

பாலா "உங்கிட்ட விவாதம் பண்ற அளவுக்கு எனக்கு இப்ப நேரம் இல்ல. ஆனா காரணமில்லாம் இங்க எதுவும் நடக்கறதில்லை. மனுஷன சூப்பர் பவர்’ஆ படைச்சதுல இருந்து, இங்க எல்லாத்துக்கும் காரணம் இருக்கு. அது புரிய வேண்டிய நேரத்துல புரிய வேண்டியவங்களுக்கு தானா புரியும்."

"ஸோ, உன்னோட கடவுள் வெச்சுட்டு இருக்கிற சிஸ்டம் எல்லாமே அவுட் டேட்டட். இவ்வளவு பெரிய விஷயத்தை செய்றதுக்கு ஒரு பிக் டேட்டா டீம் இல்ல, கஸ்டமர் சர்வீஸ்ல ஆளு பத்தல அப்படித்தானே?"

விஜய் "ஏன் உன் போன்ல இதெல்லாம் கேட்குதுன்னு என்கிட்ட கேக்காத. அதுக்கான பதில் என்கிட்ட இல்ல. ஆனா கண்டிப்பா உன்கிட்ட இருக்கணும்"

"சரி. எதிகல் ஹேக்கிங்னா என்னன்னு எனக்கு புரியிற மாதிரி கொஞ்சம் சொல்லு?”

யாரோ வழிநடத்திய மாதிரி போய் கப்போர்ட்டின் கதவை திறந்தேன் உள்ளே இருந்த விசிட்டிங் கார்ட் ஆர்கனைஸறை எடுத்தேன். கடைசி பக்கத்துக்கு போய் “ஸ்பெஷல் டைரக்டர் - சென்ட்ரல் பியுரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்” என்று பளிச்சென்று மின்னிய ராமச்சந்திரன் மாமாவின் விசிட்டிங் கார்டை எடுத்தேன்.

“இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் எல்லாம் அவுட் டேட் ஆயிட்டு இருக்கு மனோஜ். உனக்கு ஏத்த சவால் அங்க இல்ல. அண்டர்கவர் ஜர்னலிசம் பன்றியா? சொல்லு. நானே உனக்கு ப்ராஜக்ட் தர்றேன்”

பாலா "கடவுள் நம்ம மேல கடவுளுக்கு நம்பிக்கை இருக்கிறதுனால தான் அந்த பிரச்சினைகள நமக்கு குடுக்குறாருன்னு எடுத்துக்க கூடாதா?"

"சரி. எதிகல் ஹேக்கிங்னா என்னன்னு எனக்கு புரியிற மாதிரி கொஞ்சம் சொல்லு?”

மண்டைக்குள் ஏதோ திரும்ப கொடைய ஆரம்பிக்க, திரும்பி விஜய்யை பார்த்து விட்டு, மீண்டும் சாமி படங்களின் பக்கம் திரும்பி ஒரு தீர்க்கமான பார்வை பார்த்துவிட்டு, பெருமூச்சுடன் ராமச்சந்திரன் மாமாவின் நம்பரை டயல் செய்தேன்..

********************************* இனி (தான்) ஆரம்பம்…*********************************


যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...