JUNE 10th - JULY 10th
"ரிஷபா,"
ஹஸ்கி வாய்ஸில் ரிஷபன் பேரை உஷா சொன்னதும் ரிஷபன் கண்களைத் திறக்காமலேயே பேச ஆரம்பித்தான்..
ரிஷபன்,” ம்.. மறுபடியும் வந்துட்டியா.. லேசான எரிச்சலுடன் கண்களை கசக்கி அவளைப் பார்த்தான்..
அவன் முகத்துக்கு நேராக உஷா ஒரு தேன்சிட்டு மாதிரி சிறகடித்தபடி அவனை பார்த்தாள்..
ரிஷபன்," சொல்லுடி.."
உஷா, “எப்படி நான்தான்னு கரெக்ட்டா கண்டுபிடிச்ச..?”
ரிஷபன்,” எங்கம்மாவுக்கு அப்புறம் நான் அதிகமா பேசுனதும் கேட்டதும் உன்னோட குரலைத்தான்..
உஷா, “ஆரம்பிச்சுட்டியா.. உங்கம்மா புராணத்தை.. அவள் குரலில் லேசான கோபம்..
ரிஷபன், “இப்போ என்னதான்டி வேணும் உனக்கு..” கடுப்புடன் கேட்டான்.
உஷா," எப்போ என் கழுத்துல தாலி கட்டப்போற.."
ரிஷபன்," உனக்கு வேற வேலையே இல்லையா.."
உஷா, “ம்ம்.. இல்லை..”
ரிஷபன், “ஆனா எனக்கு நிறைய இருக்கு..”
உஷா, “நீ எனக்கு தாலி கட்டணும்.. நான் உன் உடம்பு முழுசையும் தாங்கணும் பேபி..”
சம்சாரம் ஆக வேண்டும் என்ற வெட்கம் அவள் மின்சாரம் கலந்த குரலில் அப்பட்டமாக தெரிந்தது ரிஷபனுக்கு..
ரிஷபன்," ஷட் அப்.. இப்படியெல்லாம் பேசாத.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. பாரு.. இப்போவே வியர்த்து போச்சு.."
உஷா," நான் இருக்கப்போ உனக்கு வியர்க்க விடுவேனா..? ம்ம்.. சொல்லுடா.. உன் வெய்ட் எவ்ளோ..? அவள் குரலில் இன்னும் கொஞ்சம் தென்றல் வீசியது..
ரிஷபன்,” தெரிஞ்சு என்ன பண்ணப்போற..”
உஷா, “ உன்னை சுமக்கணும்ல..” அவள் குரல் ரிஷபனுக்கு குளிரடித்தது..
ரிஷபன்,” கொஞ்ச நேரம் சும்மா இருடி..”
கனவு கலைந்தது.. ரிஷபன் இப்போது கண் விழித்து எழுந்து உட்கார்ந்தான்.
ரிஷபன்,” ச்சே.. இன்னிக்கும் அதே கனவு..”
கட்டிலிலிருந்து எழுந்து நடந்து போய் குளித்துவிட்டு வேலைக்கு கிளம்ப தயாரானான்.. கிச்சனுக்கு சென்றான்.. அங்கே அவன் தங்கை ப்ரீத்தி இருந்தாள்..
ப்ரீத்தி,” வாடா..” அவள் குரலில் உற்சாகம் கிர்ரென்று சுழன்றது..
ரிஷபன் சோகமாக “ம்ம்..” என்றான்.
ப்ரீத்தி, “என்னடா டல்லா இருக்கே என்ன ஆச்சு..”
ரிஷபன், ”காலையிலேயே அவ கனவுல வந்து ஒரே டார்ச்சர்..”
ப்ரீத்தி,” என்னடா சொல்ற.. மறுபடியும் வர ஆரம்பிச்சுட்டாளா.. அந்த ராட்சஸி..”
ரிஷபன்,” ஆமா.. வந்து.. வழக்கம் போல அதே கோரிக்கை..”
ப்ரீத்தி,” கோரிக்கையை என்ன செஞ்சீங்க மகாராஜா..?”
ரிஷபன், “ ஆங்.. குப்பையில போட்டேன்..” சிரித்தான்.
ப்ரீத்தி,” ஜூஸ் போட்டுத் தரவா..?”
ரிஷபன், “வேணாம்.. நானே போட்டுக்கறேன்..”
ப்ரீத்தி,” நான் ஒண்ணு சொல்றேன் கோச்சுக்க மாட்டியே..” அவள் குரலில் தயக்கம் தயங்கியது..
ரிஷபன் ,” ம்ம்.. சொல்லு..”
ப்ரீத்தி, (யோசித்துவிட்டு) “வேணாம்.. விடு.. அப்புறம் என்னை தான் திட்டுவ.. காலைலயே நானும் உன்னை மூட் அவுட் பண்ண விரும்பல..”
ரிஷபன் ,” பரவால்ல சொல்லு.. நீ எது சொன்னாலும் அதுல கேரண்ட்டியா ஒரு அர்த்தம் இருக்கும்..” ஜூஸ் எடுத்து டம்ப்ளரில் ஊற்றிகொண்டு கிச்சன் மேடை மீது ஏறி உட்கார்ந்தான்.
ப்ரீத்தி முகத்தில் பெருமை.. “ம்ம்.. அப்போ சரி.. சொல்றேன்..”
ரிஷபன் ஜூஸ் குடித்துக் கொண்டே அதை கேட்கத் தயாரானான்..
ப்ரீத்தி, “நீ ஏன் அந்த டாக்டரை மறுபடியும் போய் பார்க்க கூடாது..?”
ரிஷபன்,” எந்த டாக்டரை..?”
ப்ரீத்தி, “கொஞ்ச வருஷம் முன்னாடி இதே மாதிரி உனக்கு பிரச்சனை வந்தப்போ போய் பார்த்துட்டு வந்தியே அந்த டாக்டரைத் தான்..”
ரிஷபன்,” அப்போ என்னை பார்த்தா பைத்தியம் மாதிரி இருக்கா உனக்கும்..?
ப்ரீத்தி, “ அப்படி இல்லை.. மத்தவங்க உன்னை அப்படி நினைக்கக் கூடாதுன்னுதான் அவரை மறுபடியும் போய்ப்பாருன்னு சொல்றேன்..”
ரிஷபன், “அதெல்லாம் தேவை இல்லை.. ரிஷபன் முகம் இறுக்கமானது.
ப்ரீத்தி,” அவர்கிட்ட போயிட்டு வந்த அப்புறம் நீ கொஞ்சம் நல்லா இருந்த மாதிரி எனக்கு தோணுச்சு.. அதான் சொல்றேன்..” ப்ரீத்தி பாவமாக பேசினாள்..
ரிஷபன்,” அப்போ இப்போ நான் நல்லா இல்லைன்ற..” கோபத்துடன் கேட்டான்..
ப்ரீத்தி, “இப்படி எல்லாத்துக்கும் எடக்கு மடக்கா பேசினா என்ன அர்த்தம்..?”
ரிஷபன்,” எனக்கு இந்த டாபிக் பேசப் பிடிக்கல.. இனிமே பேசாதன்னு அர்த்தம்..”
மிகுந்த கோபத்துடன் டம்ப்ளரை டேபிள் மீது வைத்து விட்டு சென்ற அவனை சோகத்துடன் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி.
===========================================================
ரிஷபன் அவன் அபார்ட்மென்ட் விட்டு வெளியே பைக் பார்க்கிங் அருகே வந்தான்.. அங்கே அவன் பைக் அருகே ஆளுக்கொரு பக்கமாக நின்று கொண்டு ராகவ்வும் அவன் நண்பன் சோனுவும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.. இல்லை கையில் பொம்மையை வைத்துக் கொண்டு MARVEL vs DC சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள்..
ராகவ் (கையில் பொம்மையோடு), “ ஏய்... இந்த ஸ்பைடர் மேன் கிட்டே சொன்னேன் உன்னை அடிச்சு கீழே தள்ளிடுவான்..”
சோனு (அவன் கையில் இருக்கும் பொம்மையை காட்டி) , “ என்னோட சூப்பர்மேன் ஒரே அடில உன் ஸ்பைடர்மேனை அடிச்சு பறக்க விட்டுடுவான்..
ராகவ், “ ஏய்.. ஸ்பைடி.. அவனை அடிச்சு கீழே தள்ளு..”
சோனு, “ சூப்பர் மேன்.. விடாத.. அவனை உன் கண்ணுல இருந்து லேசர் வெச்சு சுடு..”
ரிஷபன், “ பேஸ்புக், டுவிட்டர்ல தான் அடிச்சுக்கறானுங்கன்னா.. இங்கையும் DC, Marvel ன்னு அடிச்சுக்கறீங்களாடா.. ஓரமா போய் அடிச்சுக்கங்கடா.. நான் வண்டி எடுக்கணும்..” என்று சொல்லிவிட்டு அவர்களை விரட்டி விட்டு வண்டியை எடுத்தான்.. அரைமணி நேரத்தில் வேளச்சேரியில் இருக்கும் அவனுடைய கம்பெனிக்குள் சென்று வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்..
வழியில் சந்தித்தவர்களுக்கு எல்லாம் குட்மார்னிங் சொல்லிக்கொண்டே அவனுடைய கேபினுக்குள் நுழைந்தான்..
பிலிப்ஸ்,” வா மச்சான்..”
ரிஷபன், “ஹாய்டா..” உணர்ச்சி இல்லாமல் சொல்லிவிட்டு அவன் நாற்காலியில் தொப்பென்று சலிப்போடு அமர்ந்தான்..
பிலிப்ஸ், “ என்னடா காலையிலயே வாய்ஸ் fuse போன பல்ப் மாறி இருக்கு..
ரிஷபன் , “உஷ்ஷ்ஷ்ஷப்ப்பா.. பெருமூச்சு விட்டுவிட்டு “ அதை ஏன் கேக்கற..”
பிலிப்ஸ்,” மறுபடியும் அதே டார்ச்சர் கனவா..?”
ரிஷபன், “ஆமாடா.. கடுப்பா இருக்கு.. சும்மா தாலி கட்டு கூந்தலைக் கட்டுன்னுக்கிட்டு..”
பிலிப்ஸ், “ விடு.. விடு.. ஜஸ்ட் கனவு தானே.. அதுக்கு ஏன் இவ்வளவு வெறி ஆகுற..”
ரிஷபன்,” உனக்கென்னப்பா.. உன் வாழ்க்கை பிரகாசமா இருக்கு.. எனக்கு அப்படியா.. ஒவ்வொரு ராத்திரியிலயும் நான் படுற பாடு எனக்கு தானே தெரியும்..”
பிலிப்ஸ் ,” ஆமா.. ஆமா என் வாழ்க்கையே எப்போ ப்யூஸ் போகும்னு தெரியாம பக் பக்னு இருக்கு.. இதுல பிரகாசமா இருந்துட்டாலும்..”
ரிஷபன்,” ஏன்டா .. என்ன ஆச்சு..?”
பிலிப்ஸ், “ மேனேஜர் நான் சரியில்லைன்னு என்னை தூக்கிட்டு விப்ரோல இருந்து ஒரு ஆளை போட ப்ளான் பண்றான்..”
ரிஷபன் “ அச்சச்சோ.. அப்படியெல்லாம் நடக்காது நான் பேசுறேன்.. நான் சொன்னா கேப்பான் அந்தாளு.. எங்க வந்துட்டாரா..?
பிலிப்ஸ், “வந்துட்டான்.. ரூம்ல தான் இருக்கான்..”
ரிஷபன் கொஞ்ச நேரம் வேலை பார்த்துவிட்டு ரொம்ப தலை வலித்ததால் மேனஜரிடம் லீவ் சொல்ல எழுந்து போனான்...
ரிஷபன், “ சார்..”
மேனேஜர்,” வா ரிஷி.. லேப்டாப்பை பார்த்துக்கொண்டே அவனை அழைத்தார்.
ரிஷபன், “ எனக்கு கொஞ்சம் தலைவலிக்குது சார்.. நான் கிளம்பட்டுமா..”
மேனேஜர்,” என்ன ஆச்சு..”
ரிஷபன்,” உடம்பு சரியில்லாத மாதிரி ஒரு ஃபீலிங்..”
மேனேஜர்,” சரி.. போ.. ஆனா நாளைக்கு லேட்டா தான் அனுப்புவேன்..”
ரிஷபன், “ம்ம்.. சரி.. சார்..”
மேனேஜர், “ok ரிஷபன்.. bye.. take care.. ரொம்ப முடியலன்னா ஹாஸ்பிட்டல் போ..”
ரிஷபன்,” ம்ம்.. பார்க்கறேன்... தேங்க்ஸ் சார்.. வரேன்”
ரிஷபன் ஆபிஸில் இருந்து வண்டியை எடுத்துக்கொண்டு அவன் ஏரியா அருகில் வந்ததும் ஒரு டீக்கடை அருகில் வண்டியை நிறுத்தினான்... டீ குடித்துவிட்டு பக்கத்தில் துணிக்கடை இருந்தது.. உள்ளே அவன் நண்பன் லீ இருந்தான்.. அவனைப் பார்க்க கடைக்குள் நுழைந்தான்..
லீ, “என்னா மச்சான்.. வேலைக்கு போலயா..?”
ரிஷபன்,” ஆமா லீ.. கொஞ்சம் தலைவலிடா.. அதான் பெர்மிஷன் சொல்லிட்டு வந்துட்டேன்..”
லீ,” டீ குடிச்சியா..?
ரிஷபன், “ குடிச்சுட்டேன்டா.... உனக்கு வேணுமா..?
லீ, “ என்ன நக்கலா.. எனக்கு இந்த டீ, காபில்லாம் செட்டே ஆவாது உனக்கு தெரியாதா..?”
ரிஷபன்,” உன் பிரச்சனை உனக்கு..” கண்ணடித்தான்.
லீ,” ஆமா.. இந்த தலைவலிக்கு காரணம் ஒரு பெண் விசிறி தானே..?”
ரிஷபன், “பெண் விசிறியா..? ஒரு மின் விசிறியைக் கூட மாத்த காசு இல்லாம இருக்கேன்.. நீ வேற..”
லீ, “ நம்ப முடியலையே.. யாரோ உஷான்னு ஒருத்திக்கு ரூட் விட்டுகிட்டு இருக்கியாம்...”
ரிஷபன் சற்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு லீயை பார்த்தான்... “உனக்கு யாரு சொன்னது..?”
லீ, “ப்ரீத்தி தான்..”
ரிஷபன், “வீட்டுக்கு போய் இருக்கு அந்த சனியனுக்கு..”
லீ, “பாவம்.. அது மேல ஏண்டா கோவப்படுற.. “
ரிஷபன்,” நானே அது டெய்லி கனவுல வந்து உயிரை வாங்குதுன்னு கடுப்புல இருக்கேன்..”
லீ, “புரியுதுடா.. இதே மாதிரி கொஞ்சம் வருஷம் முன்னாடி கனவு வந்தப்போ ஒரு டாக்டரை போய் பார்த்தியாமே.. ப்ரீத்தி சொல்லுச்சு..”
ரிஷபன்,” ஆமா.. அதுக்கு வேற வேலை இல்லை.. உங்களுக்கெல்லாம் என்னை பார்த்தா லூசு மாதிரி தெரியுதா..? “
லீ,”அப்படி இல்லை மச்சி.... ஒருவாட்டி தானே போய்ட்டு தான் வாயேன்”
ரிஷபன், “நீயுமாடா... ?”
லீ,” என்ன நீயுமாடா.. உனக்கு தனியா போக ஒரு மாதிரி இருக்குன்னா சொல்லு.. நானும் கூட வரேன்.. இரண்டு பேரும் ஒண்ணாவே போவோம்..”
ரிஷபன்,” உன்ன கூட்டிட்டு போறதுக்கு நான் ரிச்சர்ட் கூடவே போவேன்.. அவனோட போறப்போ கொஞ்சம் comfortable-ஆ இருக்கும்..”
லீ,” டேய் அவனையெல்லாம் உனக்கு வேலைக்கு போன அப்புறம்தான்டா தெரியும்.. என்னையெல்லாம் உனக்கு ஸ்கூல்ல இருந்தே தெரியும் உன்னை பல பொண்ணுங்களுக்கு பிடிக்க நானும் ஒரு காரணம் அதை ஞாபகம் வெச்சுக்கோங்க தம்பி....”
ரிஷபன்,” போடா டேய் போடா..”
லீ, “சரிடா.. போயிட்டு வந்து என்ன ஆச்சுன்னு சொல்லு.. கஸ்டமர் யாரோ வராங்க.. நீ கிளம்பு.. ஓனர் வேற உன்னையே ரொம்ப நேரமா பார்த்துக்கிட்டு இருக்கான்.. நாம அப்புறம் பேசலாம்..”
ரிஷபனும் அதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்ப, ஓனர் அவனை முறைத்தார்..
ஓனர்,” வெளியில வெயில் அடிக்குதுன்னு உள்ளே வர வேண்டியது.. அரை மணிநேரம் ACல நிக்க வேண்டியது.. ஒரு துணியும் வாங்காம கிளம்ப வேண்டியது.. சாவுகிராக்கி..” என்று அவனை திட்டியது ரிஷபனுக்கு கேட்டதோ இல்லையோ லீக்கு நன்றாக கேட்டது..
ரிஷபன் அடுத்த வாரம் அந்த கிளீனிக் முன்னாடி இருந்தான்..
டாக்டர். கைலாஷ், MBBS, M.D. (Psychiatry), DNB - Psychiatry
ரிஷபன்,” உண்மையை சொல்லுங்க டாக்டர்.. எனக்கு பைத்தியமா.."
கைலாஷ்,” ச்சே.. ச்சே.. நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க.. உஷா உங்களை ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறா என்ன காரணமா இருக்கும்னு யோசிச்சுட்டு இருக்கேன்..”
ரிஷபன்,”அதான் டாக்டர் எனக்கும் புரியல.. எவ்வளவோ பேர் இருக்காங்க என்னை ஏன் போட்டு இப்படி டார்ச்சர் பண்ணுறா...”
கைலாஷ்,” சரி, ரிஷபன்.. உஷா சொல்றது ஒரு பக்கம் இருக்கட்டும்.. உங்களுக்கே ஒரு கட்டத்துல சரி இப்போ என்ன தாலி தானே கட்ட சொல்றா.. கட்டுவோம்னு தோணி இருக்கா..?”
ரிஷபன், “ இப்போ இல்லை சார்.. ஆனா எங்கம்மா செத்து போனப்போ அவ தான் எனக்கு ஆறுதலா இருந்தா.. அப்போ இருந்தே அவளை எனக்கு பிடிக்கும்.. ரொம்ப அழகு.. சொல்லப்போனா நான் தான் முதல்ல தாலி கட்டவான்னு கேட்டேன்.. அவளுக்கு செம ஷாக்.. அதிர்ச்சியில அப்படியே தலை சுத்தி என் மேலே விழுந்துட்டா.. அப்புறம் அக்கம் பக்கம் இருந்தவங்க கொண்டு போய் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க.. செம காமெடி அது..”
கைலாஷ், “ அப்போ இப்போ ஏன் உஷாவே கேக்குறப்போ மட்டும் கல்யாணம் வேணாம்னு மறுக்கறீங்க..? வேற யாரையும் விரும்பறீங்களா..?”
ரிஷபன்,” ச்சே.. ச்சே.. அப்படி யாரையும் நான் விரும்பல சார்..
கைலாஷ்,” உங்க கூட யாரும் வரலையா.. தனியாவா வந்தீங்க..?”
ரிஷபன்,” இல்ல சார்.. என் சிஸ்டர் வந்துருக்காங்க..”
கைலாஷ்,” ம்ம்.. உள்ளே கூப்பிட முடியுமா...?”
ரிஷபன்,” ஸாரி சார்.. அவங்களால நடக்க முடியாது.. நான் வேணா அவங்களை உள்ளே தூக்கிட்டு வரட்டுமா..”
கைலாஷ்,” ஓ.. ஸாரி.. வேண்டாம்.. இட்ஸ் ஓகே.. நானே வெளிய போய் பார்த்துட்டு வரேன்.. நீங்க இங்கேயே இருங்க..”
கைலாஷ் வெளிய வந்து பார்த்தார்.. அங்கே ப்ரீத்தி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இருந்தாள்.
கைலாஷ் ப்ரீத்தியை பார்த்து ” ஹலோ” என்று சொல்ல.. உள்ளே இருக்கும் ரிஷபனுக்கு அவர் குரல் மட்டும் கேட்டது.. கைலாஷ் மீண்டும் உள்ளே வந்து அவன் முன்னால் உட்கார்ந்தார்.
கைலாஷ், “ அழகா இருக்காங்க ப்ரீத்தி..”
ரிஷபன், “ அம்மா கூட இதே தான் சொல்லுவாங்க சார்.. என்னை விட அம்மாவுக்கு அவளைத்தான் ரொம்ப பிடிக்கும்..”
கைலாஷ்,” அம்மாக்கள் எப்போவுமே அப்படித்தான்..”
ரிஷபன், “ஏன் இது மாதிரி கனவுகள் தொடர்ந்து வருது.. ? வராம இருக்க நான் என்ன செய்யணும்..?”
கைலாஷ், “ ஒண்ணும் செய்ய வேண்டாம்.. உங்களுக்கு தூக்கம் இல்லை வேலையிலயும் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் இருக்க மாதிரி தோணுது.. அதனால நான் குடுக்கற இந்த மாத்திரைகளை தவறாம சாப்பிடுங்க.. நல்லா தூக்கம் வரும்.. இரண்டு நாள் கழிச்சு வந்து எப்படி இருக்கீங்கன்னு சொல்லுங்க.. “
ரிஷபன், “ இந்த மாத்திரைகள்லாம் போட்டா கனவு வராதா டாக்டர்.. ?
கைலாஷ்,” தூக்கம் சரியில்லாதப்போ தான் இது மாதிரி கனவுகள் வரும்... இந்த மாத்திரை போடும் போது உங்களுக்கு ஆழமான தூக்கம் வரும்.. நல்லா தூங்குவீங்க.. அதையும் மீறி கனவு வந்தால் அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிப்போம்..”
ரிஷபன்: சரிங்க டாக்டர்.. நான் வரேன்..
ரிஷபன் ப்ரீத்தியோடு வீட்டுக்குள் நுழைந்தபோது மணி 9..
ப்ரீத்தி," இப்போவாச்சும் நான் சொன்னதை கேட்டியே.. நல்ல பையன்.."
ரிஷபன் அவளை பார்த்து சிரித்து விட்டு அவன் ரூமுக்கு சென்றான்....
உள்ளே போனதும் உடையெல்லாம் மாற்றிவிட்டு சாப்பிட்டுவிட்டு படுத்தான்.. மாத்திரை போட தோன்றவில்லை.. யோசித்துக்கொண்டே கண்களை மூடினான்..
மீண்டும் அதே ஹஸ்கி குரல்,"ரிஷி.. எப்போ எனக்கு தாலி கட்டப் போற.."
ரிஷபன் கண்ணை திறந்து பார்த்தான்.. எதிரில் உஷாவின் முகம்..
ரிஷபனுக்கு டாக்டர் கேட்டது ஞாபகம் வந்தது..
ரிஷபன்," சரி உனக்கு நான் தாலி கட்டுறேன்.. ஆனா ஒரு கண்டிஷன்.."
உஷா," சொல்லு..சொல்லு.." சொல்லும் போதே உஷாவின் குரல்ல ஒரு கிளுகிளுப்பு அடைந்த கிளியின் கீச் கீச் சத்தம்..
ரிஷபன்," உனக்கு தாலி கட்டினதும் டாக்டர் குடுத்த மாத்திரையை என்னோட சேர்ந்து நீயும் சாப்பிடணும்.."
உஷா," அதுக்கென்ன.. சாப்பிட்டுட்டா போச்சு.."
ரிஷபன் எழுந்தான்.. ரூம் கதவை தாழ் போட்டான்.. மொபைல் எடுத்து அதில் மாங்கல்யம் தந்துனானேனே மந்திரம் சொல்ற பாட்டை youtubeல் ஓட விட்டான்...
உஷா கழுத்தில் மூணு முடிச்சை போட்டான்..
இரண்டு நாள் கழித்து...
கதவை உடைத்துக்கொண்டு போலீஸ் உள்ள வந்ததும் ஒரே பிண நாத்தம்..
பேஃன்ல தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்த ரிஷபனின் உடம்பை ஆள் வைத்து கீழே இறக்கினார்கள்..
அங்கே இருந்த மாத்திரை சீட்டில் இருந்த பேரை பார்த்துவிட்டு இன்ஸ்பெக்டர் கணேஷ் டாக்டர் கைலாஷை பார்க்க கிளம்பினார்..
கைலாஷ்," மை காட்.. என்ன சொல்றீங்க.. ரிஷபன் செத்துட்டாரா.."
கணேஷ்," ஆமா டாக்டர்.. கடைசியா உங்களைத்தான் பார்க்க வந்திருக்கார்.. அதான் உங்ககிட்ட வந்தேன்.. அவருக்கு என்ன ப்ராப்ளம்..?"
கைலாஷ்," அவருக்கு ஆந்த்ரோபோமார்பிசம் (Anthropomorphism) ன்னு சொல்ல படுற ஒரு வித்தியாசமான டிசார்டர்.. இந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்க ஒரு பொருளையோ இல்லை விலங்கையோ அதை நிஜமான மனிதர்கள் மாதிரி நினைச்சுகிட்டு அது கூட பேச பழக ஆரம்பிச்சுடுவாங்க.."
கணேஷ்," ரொம்ப விசித்திரமா இருக்கே.."
கைலாஷ்," குழந்தைகளை பாருங்க... பொம்மைகளுக்கு பேரு வைக்கும்.. பாடம் எடுக்கும்.. அதோட extreme தான் இது.. அவரோட அம்மா இறந்து போனது அவரோட தனிமையை ரொம்ப பாதிச்சு இருக்கு.. அதனால தூக்கு போட போயிருக்கார்.. அக்கம் பக்கத்துல அவரை காப்பாத்திருக்காங்க.. அப்போ தலைல அடிபட்டுருக்கு கவனிக்காம விட்டுட்டாங்க.. அப்போ இருந்து இது தீவிரமாகி இருக்கு.."
கணேஷ்," நம்பவே முடியலையே டாக்டர்.."
கைலாஷ்," ஒரு நிமிஷம் இதை பாருங்க.."
கைலாஷ் இப்போது அந்த CCTV footage ஓபன் செய்து கணேஷுக்கு காண்பித்தார்..
கைலாஷ் வெளியே வருகிறார்.. வெளியே ஒரு ப்ரீத்தி மிக்ஸி இருந்தது.. கைலாஷ் அதைப் பார்த்து ஹலோ சொல்கிறார்.. ரிஷபன் இப்போ வெளிய வந்து அந்த மிக்ஸியை தூக்கிக் கொண்டு அது கூட பேசிக்கொண்டே நடந்து செல்கிறான்..
கணேஷ், “ என்ன டாக்டர் இவன்.. மிக்ஸி கூட பேசிக்கிட்டு போறான்.. நீங்க வேற அதைப் பார்த்து ஹலோ சொல்றீங்க.. ஒண்ணும் புரியல எனக்கு..” கணேஷ் அவரை விநோதமாக பார்த்தபடியே கேட்டார்.
கைலாஷ்,” நீங்க ஏன் அப்படி பார்க்கறீங்கன்னு புரியது.. நீங்க என்னையும் அவன் கூட சேர்த்து லூசுன்னு நினைக்கறீங்க தானே.. “ கணேஷ் இப்போது அசடு வழிந்தபடி தலையை அசைத்தார்..
கைலாஷ், “ நான் லூசுல்லாம் இல்லை... என்கிட்டே வர்ற ஒவ்வொரு பேஷண்ட்டும் ஒவ்வொரு மாதிரி.. ஒருத்தர் செத்துப்போன நாயோட குரல் கேக்குதுன்னு சொல்லுவாரு.. இன்னொருத்தர் நான்தான் கடவுள்னு சொல்லுவாரு.. அம்மாகிட்டே பேசுங்கன்னு சொல்றவங்ககிட்ட பேசுவேன்.. கடவுள்னு சொல்றவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்குவேன்... அவங்க மனநலத்துல ஏதோ பிரச்சனைன்னு தான் சில பேர் அவங்களே தானாகவோ.. இல்லை அவங்க குடும்பமோ இல்லை நண்பர்களோ எங்ககிட்டே கூட்டிக்கிட்டு வராங்க.. அவங்களோட கடைசி நம்பிக்கை நாங்க தான்.. நாங்களும் அவங்களை மத்தவங்க மாதிரியே நடத்துனா அவங்க எப்படி எங்ககிட்ட அவங்க பிரச்சனைகளை மனசுவிட்டு பேசுவாங்க.. அதுக்காக செய்ற சில விஷயங்கள் தான் இது... இப்போ நீங்க பார்த்தீங்களே மிக்ஸி.. அது அவரோட தங்கச்சி.. பேரு ப்ரீத்தி.. அவரோட ஆபீஸ்ல இருக்க பிலிப்ஸ் என்ற நபர் அவரு தலைக்கு மேல இருக்க பழைய டியூப் லைட்.. இவர் நண்பன் லீ , இவர் போட்டிருக்க சட்டை பிராண்ட்.. கடைசியா அந்த உஷா.. அது இவர் வீட்டுல இவர் தலைக்கு மேல சுத்துற பேஃன்.. அது தான் இவரை கல்யாணம் பண்ணிக்க வா வான்னு கூப்பிட்டுருக்கு..”
கணேஷ்: என்னது பேஃன் கூட கல்யாணமா.. ? அதிர்ச்சியாக கேட்டார்.
கைலாஷ்," தூக்கு மாட்டிக்கறதை தான் கல்யாணம்னு சொல்லிருக்கு.. அதை தடுக்கத்தான் நான் அவருக்கு மருந்து கொடுத்தேன்.. கடைசில அவரை காப்பாத்த முடியாம போய்டுச்சு..”
கைலாஷ் சோகமாக சொல்ல கணேஷ் அவருக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்..
3 மாதம் கழித்து...
பீட்டர், “ இதான் சார் கிச்சன்.. இது ஹால்.. பேஃன் போடவே வேணாம்.. கதவை திறந்து வெச்சா போதும்.. காத்து சும்மா ஜிலு ஜிலுன்னு வரும்.. ஓனர் இங்கிலாந்துல இருக்கார்.. வாடகை அவர் அக்கவுன்ட்ல நீங்களே போட்டு விட்டுடுங்க.... வீடு பிடிச்சுருக்கா சார்... முடிச்சுருவோமா..”
மிதுன் அந்த மின்விசிறியைப் பார்த்துக் கொண்டே பீட்டரை கேட்டான்..
மிதுன், “ இதுக்கு முன்னாடி இங்க யாரு இருந்தாங்கன்னு சொன்னீங்க..?
பீட்டர், “ மேஷான்னு ஒரு பொண்ணு.. அப்புறம் ரிஷபன்னு ஒரு பையன்..
மிதுன், “ஓ.. அவங்க ஏன் காலி பண்ணாங்க..”
பீட்டர், “அவங்களுக்கு மேல்நாட்டுல வேலை கிடைச்சுட்டுன்னு போய்ட்டாங்க சார்...”
மிதுன், “சரி.. எனக்கு இந்த வீடு பிடிச்சுருக்கு.. முடிச்சுருங்க..”
பீட்டர், “ முடிச்சுரலாம்..” மேலே பார்த்துக் கொண்டே சொன்னான்..
மிதுன் குடி வந்த மூன்றாவது நாள்..
தூங்கிக் கொண்டு இருந்த மிதுன் காதுகளில் அந்த ஹஸ்கி குரல் கேட்டது..
உஷா, “மிதுன், மிதுன்.. எழுந்திருடா.. என் செல்ல ராஸ்கல்.. எப்போ என் கழுத்துல தாலி கட்டப்போற..”
( முற்றும் )
#523
55,440
440
: 55,000
9
4.9 (9 )
Booshnam
Very interesting story. very innovative
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
shifa92fana
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50