தந்தையுமானவள்

பெண்மையக் கதைகள்
4.9 out of 5 (95 )

முன் வராண்டாவின் வாசல் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தேன். எனது வலது பக்கத்தின் எதிர் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த அந்த பெரிய புகைப்படத்தில் லதா அம்மா சிரித்துக் கொண்டிருந்தார்.

சற்று முன்னர் கயல்விழி நிரப்பிப் போயிருந்த அந்த எண்ணெய் விளக்கு நின்று நேராகச் சுடர்விட்டுக் கொண்டிருந்தது.

புகைப்படத்திற்கு அடர்சிவப்பு நிறத்தில் அழகானதொரு ரோஜாப் பூமாலை போடப்பட்டு இருந்ததுடன், அந்த போட்டோ வைக்கப்பட்டிருந்த மேசை முழுவதும் ரோஜாப் பூக்களின் இதழ்கள் விரவி விடப்பட்டிருந்தன.

எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து லதா அம்மா பூச்சூடிப் பார்த்ததில்லை. ஒருமுறை கயல்விழி , லதா அம்மாவிடம் அது குறித்து கேட்கும்போது நானும் உடனிருந்தேன். ஒரு சிறு புன்னகை மட்டுமே அதற்கு பதிலாய்க் கிடைத்தது.

லதா அம்மா எப்போதும் அப்படித்தான்….

இருபதாண்டுகளுக்கு முன்னால் லதா அம்மாவை முதன் முதலாய் பார்த்த போது இருந்த அந்தப் புன்னகைதான், அவள் இறந்தபின்னும் அவள் முகத்தில் இருந்தது போல எனக்குத் தோன்றியது.

உடல்தானம் தருவதாய் உயில் எழுதி வைத்துவிட்டுதான் இறந்து போயிருந்தாள்… சடங்குகள் முடித்து உடலினை அனுப்பி வைத்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிப்போயிற்று…..ஒவ்வொரு நாளும்… நிறைய மனிதர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்…. ஒவ்வொருவராய் வந்து துக்கம் விசாரித்து…. லதா அம்மாவால் அவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு நல்லது நிகழ்ந்தது என்று சொல்லி…. அனைத்தையும் பொறுமையாய்க் கேட்டபடி உட்கார்ந்திருக்கிறேன்.

உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாள் இரவு கூட நான் அந்த வீட்டில் தங்கியது கிடையாது. இப்போதுதான் அந்த வீட்டில் மூன்று நாட்கள் சேர்ந்தார்போல் இருக்கிறேன்.

சிறு வயதில், அம்மா, தங்கை கயல்விழி, நான் மூன்று பேரும் சேர்ந்துதான் லதா அம்மாவின் வீட்டுக்கு வருவோம்… கயல்விழியை மட்டும் விட்டு விட்டு அன்றிரவே திரும்பி விடுவோம்…. அவள் மட்டும்தான் அங்கே தங்குவாள்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து லதா அம்மாதான் கயல்விழியினை அழைத்து வந்து விட்டுப் போவாள்.

நிறைய நாட்கள் லதா அம்மா வற்புறுத்தி இருக்கிறாள்…. சில நாட்கள் அம்மாவும் கூட தங்கிப் போக விரும்புவாள்…. ஆனால் எனக்கு அங்கு ஒருபோதும் தங்க வேண்டும் எனத் தோன்றியதில்லை.

கயல்விழிக்கு அம்மாவை விட, லதா அம்மாவைத்தான் நிறையப் பிடிக்கும். பலமுறை அதனை அம்மாவின் முன்னாலேயே சொல்லியிருக்கிறாள். ஒரு போதும் அம்மா அதற்காய் வருத்தப்பட்டதில்லை. சில சமயம் சிரிக்கக் கூட செய்திருக்கிறாள்.

சிலசமயம் நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன்..

எனக்கு அம்மாவைப் பிடிக்குமா… லதா அம்மாவைப் பிடிக்குமா….

இன்றைக்கு வரையில் எனக்கு நான் பதில் சொன்னதேயில்லை. அதற்கான பதில் என்னிடம் இல்லை.

ஒருவேளை இவர்கள் இருவரை விட அப்பாவினைப் பிடிக்குமா என்று கேட்டால், உடனடியாக பதில் சொல்லமுடியும்.

எனக்கு அவரைத்தான் மிகவும் பிடிக்கும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை என்னை தன் இரு சக்கரவாகனத்தில் அமர்த்திக்கொண்டு நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியின் அருகிலிருந்த தேநீர்க் கடைக்கு அழைத்துப் போய் அவர் வாங்கிக்கொடுத்த அந்த மசால் போண்டாவின் சுவை இன்னும் என் நினைவில் நின்று கொண்டிருக்கிறது.

அப்போது நான் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன், கயல்விழி பள்ளியில் சேர்ந்திருக்கவில்லை.

அந்த மசால் போண்டா எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவருக்குத் தெரியும்…. மசால் போண்டா மட்டுமல்ல, அவரின் இருசக்கரவாகனத்தில் அமர்ந்து ஊர் சுற்றுவதும் எனக்குப் பிடிக்கும்……

அன்றைக்கு நாங்கள் ஊரெல்லாம் சுற்றி ஓய்ந்து இரவு கொஞ்சம் தாமதமாக வீட்டுக்கு வந்து, உறங்கிப்போயிருந்த கயல்விழியினை எழுப்பி நாங்கள் வாங்கி வந்திருந்த புரோட்டாவினை ஊட்டி விட்டதுகூட இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.

அன்றைக்கு இரவு… வீட்டில் இருந்த எங்கள் மூன்று பேரையும் ஒரு தொந்தரவும் செய்யாது நாங்கள் படுத்திருந்த அறைக்குப் பக்கத்து அறையில் அப்பா தூக்கில் தொங்கிவிட்டார்.

“அண்ணா… சங்கரன் மாமா உன்னைப் பார்க்கணுமாம்… சாயந்திரம் வரவான்னு கேட்குறார்….”

கையில் அலைபேசியோடு எட்டிப்பார்த்த கயல்விழிக்கு தலையினை ஆட்டிவிட்டு நாற்காலியிலிருந்து எழுந்தேன்.

வெளியே இருந்த அம்மா அருகில் வந்தார்.

“எதுவும் வேணுமா சேகர்…?”

“இல்லம்மா… சும்மா வெளிய நிக்காலாம்ணு…..”

சரியென்று தலையாட்டிவிட்டு மெதுவாய் நகர்ந்தவள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.

“சுகன்யாகிட்ட ஒருமுறை பேசிப்பார்க்கலாம்ல…..”

என் முகத்தில் கோபத்தினைக் காண்பிக்க மேற்கொண்டு எதுவும் பேசாது நகர்ந்து போனாள்.

அவள் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பி ஒரு வாரம் ஆகிவிட்டதென்றும், இனி மேற்கொண்டு பேசுவதற்கு எதுவும் இல்லை என்றும் எப்படிச் சொல்வது அம்மாவிடம்…..

லதா அம்மாவின் இறுதிச் சடங்குக்கு வந்திருந்த சுகன்யா, அம்மாவிடமும், கயல்விழியிடமும் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த போதே தோன்றியது, அவள் அவர்களிடம் விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியதைக் கூறவில்லை என்று….

எத்தனை நாட்களாகி விட்டது அவளிடம் பேசி…. எப்போதேனும் எதிர்பாராது சந்திக்கும்போது கூட எதுவும் பேசாது கடந்து போய்விடுகிறாள்…

திடீரென்று தோன்றும்….. அவளிடம் சென்று பேசினால் என்ன…. அவளைக் கட்டிக்கொண்டு அழுதாள் என்ன…. கடந்ததை மறந்து விடுவோம் எனக் கெஞ்சினால் என்ன….. ஆனால் அவள் அதனை எப்படி எதிர்கொள்வாள் அதற்கு எந்தவிதமான எதிர்வினை நிகழ்த்துவாள் என்ற நினைவு மேலெழும்போது உணர்ச்சிகள் மொத்தமாய் வடிந்து விடும்.

லதா அம்மா இறப்பிற்கு மூன்று நாட்கள் முன்னேதான் அவள் விவாகரத்து பத்திரத்தினை அனுப்பி இருந்தாள்

யாரிடமும் அந்த விசயத்தினைச் சொல்லப்பிடிக்கவில்லை… ஆனால் சுகன்யா லதா அம்மாவிடம் சொல்லிவிட்டாள்.

லதா அம்மா அந்த விசயத்தினை அம்மாவிடமும், கயல்விழியிடமும் சொல்லாமலே இருந்துவிட்டாள்.

ஒருவேளை அவளே சொல்லியிருந்தால், இந்தச் சங்கடமான விசயத்தினை நானே அவர்களிடம் சொல்லும் நிலையை நான் எதிர்கொண்டிருக்க வேண்டியதில்லை.

இரண்டு நாட்களாய் பேச நேரில் வரச்சொல்லி தொடர்ச்சியாய் லதா அம்மாவிடமிருந்து அழைப்பு வந்து கொண்டேயிருந்தது.

அவளிடமிருந்து அழைப்பு வரும்போதெல்லாம் எப்படியாவது இரண்டொரு வார்த்தைகளில் அவளிடம் பேசி அழைப்பினைத் துண்டித்து விடுவதில் கவனமாகவே இருந்தேன்.

லதா அம்மாவினை எதிர்கொள்வது குறித்த பெரும் தயக்கம் எனக்கு இருந்தது. தவறு என்னுடையதல்ல என்று அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்ற பயமும் எனக்கு இருக்கத்தான் செய்தது.

பின் எதிர்பார்க்காத ஒரு வேளையில், கயல்விழியிடமிருந்து அழைப்பு வந்தது - லதா அம்மா இறந்து விட்டார்கள் என்று.

ஒரு பக்கம் துக்கம் மனதினை அடைத்தாலும் – மறுபக்கம் இந்த விவாகரத்து குறித்து பேச லதா அம்மாவினை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்றொரு நிம்மதி அந்த கணம் வந்தது.

அதன்பின் என்னை நானே திட்டிக் கொண்டேன்… எவ்வளவு கேவலமாய் யோசித்திருக்கிறோம்….

லதா அம்மாவினை எதிர்கொள்வதில் என்ன பயம்.. நம் தரப்பு நியாயங்களைச் சொல்லி அவளுக்குப் புரிய வைத்திருக்கலாம்… அல்லது இது குறித்து பேச விருப்பம் இல்லை என்று சொல்லியிருக்கலாம்….

என்ன சொன்னாலும் மனதுக்குள் இருந்த சாத்தான் ஏதோ ஒன்றிலிருந்து நான் விடுபட்டதாய்த்தான் சொன்னது.

வீடு என்னும் பெரும் சொத்திலிருந்து அம்மாவின் கழுத்திலிருந்த கழற்றப்பட்ட தாலிச்செயின் வரை விற்றுத்தான் அப்பா வாங்கியிருந்த கடனை அடைக்க முடிந்தது.

இராட்டினத்தின் மேல் தட்டிலிருந்து எதிர்பார்க்காது கீழே விழுந்தது போல் ஆனது வாழ்க்கை.

வாடகை வீட்டில் வசிக்கவும், நடந்தே பள்ளிக்குச் செல்லவும், கிடைத்ததைக் கொண்டு பசியாற்றவும் கற்றுக்கொள்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.

அவ்வப்போது, அப்பாவின் நண்பர் சங்கரன் மாமா வீட்டிற்குப் போய் செலவிற்கு காசு வாங்கி வரும்போதெல்லாம் உடல் கூசிப்போகும்.

பள்ளிக்கு வெளியில் வரும்போது வரும் அந்த மசால்போண்டா வாசனை… அப்பாவினை ஞாபகம் செய்துகொண்டேயிருக்கும்.

ஒரு நாள் மதியவேளையில், இரண்டு மாத வாடகை பாக்கிக்காய் வீட்டுக்காரர் சப்தமிட்டு கொண்டிருக்கையில் சங்கரன் மாமா புதிதாய் ஒரு பெண்மணியுடன் வீட்டுக்கு வந்தார்.

அவரை அப்போதுதான் நானும், கயலும் புதிதாகப் பார்த்தோம் என்றாலும் அம்மாவுக்கு அவரை ஏற்கனவே தெரிந்திருந்தது.

கைப்பையில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்து வீட்டுக்காரரைச் சப்தமிட்டு கொண்டிருந்த அந்தப் பெண்மணி நமக்கு என்ன உறவுமுறை என்று அம்மாவிடம் கேட்டேன்.

அவரும் உனக்கு அம்மா மாதிரிதான் என்றார்.

வீட்டுக்காரரை அனுப்பி விட்டு உள்ளே வந்து அமர்ந்த அந்தப் பெண்மணி என்னையும் கயலினையும் அருகில் அழைத்து, தான் வாங்கி வந்திருந்த இனிப்புப் பொட்டலத்தினைக் கையில் கொடுத்தாள்.

கயல்தான் கேட்டாள்.

“…நீங்க யாரு..?”

அவர் புன்னகைத்தபடியே சொன்னார்.

“நான் லதா…”

நான் கயலிடம் சொன்னேன்

“இது லதா அம்மா….”

லதா அம்மா எங்கள் வாழ்விற்குள் வந்தது அப்படித்தான்.

அவர் ஒரு ஆசிரியர் என்பதும், பக்கத்து நகரில் அவர் ஒரு பள்ளியில் பணியாற்றுவதும் எனக்கு அப்போது தெரிந்தது.

அவரது தொடர்ச்சியான உதவியின் மூலம் எங்கள் வாழ்க்கை சீரான பாதையில் நகரத் தொடங்கிய பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது, அவர் எனது அப்பாவின் முன்னாள் காதலி என்று…..

சுகன்யாவை நான் காதலிக்கும் விசயம் முதன் முதலாய் லதா அம்மாவிற்குத்தான் தெரியும்.

எங்கள் காதல் விசயத்தினை எப்படி எல்லோரிடமும் சொல்வது என்றொரு பெரும் தயக்கத்துடன் நான் தடுமாறிக் கொண்டிருந்த நேரம், சுகன்யா லதா அம்மாவிற்கு தொலைபேசியில் அழைத்து விபரத்தினைச் சொல்லிவிட்டாள்.

சுகன்யாவிற்கு லதா அம்மாவின் மேல் மிகுந்த மரியாதையும் அபிமானமும் உண்டு என்று அடிக்கடிச் சொல்வாள். எனக்குத் தெரிந்து சில முறைகள் மட்டுமே நான் அவளிடம் லதா அம்மா குறித்துப் பேசியிருப்பேன். ஆனால் லதா அம்மாவிடம் அவளுக்கு எப்படியோ ஒரு பிரியம் ஏற்பட்டிருந்தது.

என்ன நம்பிக்கையில் அவள் தொலைபேசினாள் என்பது எனக்குத் தெரியாது. எனக்கே தெரியாது என் அலைபேசியில் இருந்த லதா அம்மாவின் எண்ணை எடுத்து, எனக்குத் தெரியாமலே அவரிடம் எங்கள் காதலைக் கூறிவிட்டாள்.

ஒருநாள், லதா அம்மாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தபோது, ஏதோ முக்கியமான விசயம் பேசத்தான் அழைக்கிறார்கள் எனக் கிளம்பி வந்தேன். ஆனால் சுகன்யா விசயத்தினை பேச ஆரம்பித்தவுடன் என் கால்கள் வியர்த்து ஊற்ற ஆரம்பித்தன.

இத்தனைக்கும் லதா அம்மா எப்போதும் என்னைக் கடிந்து ஒரு வார்த்தை சொன்னதில்லை என்றாலும் பயம் மனது முழுவதும் பரவியது. லதா அம்மாவின் இடத்தில் அம்மா இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தபோது கண்கள் இருண்டு போயின.

மனதிற்குள் சுகன்யாவினைத் திட்டிக்கொண்டிருந்தேன். இப்படி ஒரு இக்கட்டில் உட்கார வைத்து விட்டாளே….

இப்போது நினைத்தால் சிரிப்பாகத்தான் வருகிறது எதற்காக அப்படி பயந்தேன் என்று….

அம்மாவிடம் பேசி, சுகன்யாவின் வீட்டில் பேசி எங்கள் திருமணம் இனிதே முடிந்த அந்த கணத்தில்தான் முதன் முதலில் லதா அம்மா கண்கள் கலங்கி நான் பார்த்தேன்.

அப்படி நான் பார்த்தபோது அப்பாவின் முகம் நினைவில் வந்தது. அப்பா கண்கள் கலங்கி ஒருபோதும் நான் பார்த்ததில்லை. ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் இப்படி கண்கள் கலங்கி நின்றிருப்பாரோ…?

லதா அம்மாவுடன் பேசும் போதெல்லாம் அப்பாவுடன் பேசுவது போலத்தான் இருக்கும். பார்க்கப்போனால் கிட்டத்தட்ட தந்தையின் ஸ்தானத்திலிருந்து எங்களை வழிநடத்திக் கூட்டிப்போனது அவர்தானே…..

இன்றளவும் அம்மாவிற்கு பெரிதாய் எந்த விபரமும், நடைமுறையும் தெரியாது… எது கேட்டாலும் லதா அம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கப்பாதான்….

ஒரு வேளை லதா அம்மாவும், அப்பாவும் திருமணம் செய்து கொண்டிருந்தால் அப்பா இறந்திருக்க மாட்டாரோ என்று தோன்றும்…. ஆனால் லதா அம்மாவினை ஒருபோதும் அம்மாவின் இடத்தில் வைத்துப் பார்க்க முடியாது என்றே தோன்றும்…

அம்மாவிடம் நான் காட்டும் சினேகம், கோபம், விளையாட்டு இதுவெல்லாம் என்னால் லதா அம்மாவிடம் காட்ட இயலாது… சில வேளைகளில் கயல்விழி லதா அம்மாவின் கண்களைப் பொத்தி, காதுகளைத் திருகியெல்லாம் விளையாடுவாள்….ஆனால் என்னால் ஒருபோதும் அப்படிச் செய்ய இயன்றதேயில்லை.

லதா அம்மாவிடம் பேசும்போது என்னையறியாமலே ஒரு மரியாதை பயமாய் ஒட்டிக்கொள்ளும்.

சில நாட்களில் நான் அதுகுறித்து யோசிக்கும் போது, அப்பாவிடம் மதிப்பெண் பட்டியல் காட்டும் வேளையில் எனக்கு வரும் பயம் போலவே இந்த பயமும் இருக்கிறதென்று தோன்றும்.

நான்கு மாதங்களுக்கு முன்னால் சுகன்யாவினை மருத்துவமனையில் பார்க்க லதா அம்மா வந்திருந்த போது கூட அப்படி ஒரு பயம்தான் என்னை முழுவதுமாய் வியாபித்திருந்தது. எப்படியாவது அவரின் பார்வையில் நான் பட்டுவிடாமல் இருக்க என்னவெல்லாம் செய்தேன்.

ஒருவேளை அன்றைக்கு லதா அம்மாவின் முன்னால் நானும் சுகன்யாவும் இணைந்து பேசியிருந்தால் இன்றைக்கு இந்த விவாகரத்து நோட்டிஸ் வந்திருக்க வாய்ப்பில்லை.

யோசித்துப் பார்த்தால் இந்த விவாகரத்து விவகாரத்திற்கு அடித்தளமிட்டத்து சுகன்யாவின் வார்த்தைகள்தானே….

எல்லாம் அந்த சபிக்கப்பட்ட ஒரு நாளில் நிகழ்ந்தது.

திடீரென ஒரு நாள் மூன்று மாத சம்பளத்தினைக் கொடுத்து வெளியில் போகச் சொல்லி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஒருவன் எந்தமாதிரியான மன நிலையுடன் வீட்டுக்கு வர இயலும்.

அடுத்த வேலை எப்போது கிடைக்கும்… அல்லது கிடைக்குமா என்றே தெரியாத மனநிலையில் வீட்டிற்குள் நுழையும் ஒருவனிடம் – நாம் ஒரு வருடம் காத்திருந்த நாள் இன்றுதான் - நமக்கு குழந்தை பிறக்கப் போகின்றது - நான் கருத்தரித்து விட்டேன் என்ற தகவலை காதல் மனைவி சொன்னால் அவன் என்ன விதமான உணர்வுகளை வெளிப்படுத்துவான்.

எனக்கு அது தெரியவில்லை…. பாதி மகிழ்ச்சியும் பாதி பயமுமாகத்தான் நான் எதிர்கொண்டேன்….

இரவெல்லாம் உறக்கம் இல்லை.

தூக்கில் தொங்கிய அப்பாவின் முகம் நெடும் காலம் பின்னே நினைவுக்கு வந்தது. ஒருவேளை என் தகப்பன் போல என் குழந்தையினையும் தவிக்கவிட்டு விடக்கூடாதென்ற பயமும் வந்தது.

சுகன்யாவிடம் நான் அதைச் சொல்லியிருக்கக் கூடாது ஆனாலும் சொன்னேன்.

“இப்போதைக்கு குழந்தை வேண்டாம்…. கலைத்து விடலாம்…. நல்ல வேலையும், பொருளாதாரப் பிரச்சினையும் இல்லாத ஒரு நிலைக்கு வந்தவுடன் பெற்றுக்கொள்ளலாம்…”

சுகன்யாவிடமிருந்து அப்படியொரு மூர்க்கமான எதிர்வினையினை நான் எதிர்பார்த்திருக்கவில்லை…..

முடியவே முடியாதென்றாள்…. குழந்தையை வளர்க்க முடியாது என்றால் ஏன் திருமணம் செய்தாய் என்றாள்…

இறுதிவரை என்னைப் புரிந்துகொள்ளவே முற்படாது, இறுதியாய் ஒரு வார்த்தை சொன்னாள்.

“உங்க அப்பாவை மாதிரி நீங்களும் ஒரு கோழை…”

அந்த வார்த்தைகள் என்னைச் சினம் கொள்ள வைத்தன. முதன் முறையாக அவளை அறைந்தேன்.

அவளை அறைந்த பின்னர்தான் உணர்ச்சி வசப்பட்டு எவ்வளவு பெரிய தவறினைச் செய்தேன் என உணர்ந்தேன்…

ஒரு மனைவியைக் கைநீட்டி அறையும் நான் கோழையல்லாமல் வேறென்ன….?

அன்றைக்கு மாலை, காரணம் தெரியாமலே எங்கள் குழந்தை கலைந்துபோனது.

சுகன்யா என்னுடன் பேசுவது நின்றுபோய்… முற்றிலுமாய் பிரிய முடிவு செய்யுமளவிற்கு அந்த நாள் எங்களைத் துரத்தியது.

“ உன் அப்பா செத்துப்போனது சரியென்று நினைக்கிறாயா சேகர்….”

திடுதிப்பென்று சங்கரன் மாமா அந்தக் கேள்வியைக் கேட்டபோது நான் அதிர்ந்து போனேன்.

சங்கரன் மாமாவிடம் ஒருபோதும் அப்பா குறித்தோ அல்லது எங்கள் வாழ்க்கை குறித்தோ நான் பேசியதில்லை.

எப்போதேனும் பண்டிகைக் காலங்களில் இனிப்புப் பொட்டலங்களோடு வீட்டிற்கு வந்து பார்த்துப் போகும் அப்பாவின் நண்பர் அவர் அவ்வளவுதான்.

ஏதோ பேசவேண்டும் என்று சொன்னபோது லதா அம்மாவின் இறுதிக் காரியங்கள் குறித்துப் பேசப் போகிறார் என்று நினைத்து அமர்ந்தேன்…

அவரின் அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை…

“என்ன மாமா… சம்பந்தம் இல்லாம…”

“இருக்குடா… உங்க அப்பா ஏன் செத்தான்…?

“கடன் தொல்லைனால…”

“அவன் செத்தப்புறம் நீங்க கடனைக் கட்டலையா….?”

“கட்டுனோம் மாமா… எல்லாத்தையும் வித்து…”

“அதை ஏன் அவன் செய்யல……”

“எல்லாத்தையும் வித்தா எங்களுக்கு என்ன செய்யறதுண்ணு…”

என் பதில் எனக்கே திருப்தி அளிக்கவில்லை. வார்த்தைகளை முடிக்காமல் அவரின் முகம் பார்த்தேன்…

“தயக்கம்… உங்க அம்மாகிட்ட பேசி புரிய வைக்கமுடியாத தயக்கம்…. சொத்தை வித்து கடனக் கட்டிட்டா அப்புறம் என்ன செய்றதுங்கற குழப்பம்…. எங்க அசிங்கப் பட்டுடுவோம்ங்கற பயம்…. கரெக்டா…?”

நான் மௌனமாயிருந்தேன்.

“உலகமே தெரியாத மனைவியையும்… விவரம் தெரியாத குழந்தைகளையும் விட்டுட்டு தற்கொலை பண்றது சுயநலம்தானே சேகர்…..?”

நான் மீண்டும் மௌனமாயிருந்தேன்.

“….. லதாவுக்கும் உங்க அப்பாவுக்கும் ஏன் திருமணம் ஆகாமப் போச்சு தெரியுமா…?”

“தெரியாது மாமா….”

“லதா ஏன் கடைசி வரையில் திருமணம் செய்யாமலே இருந்தாங்க தெரியுமா…?”

நான் இடவலமாய்த் தலையசைத்தேன்.

“ஏன் நீ அவங்களக் கேட்கல….?”

“நான் எப்படி மாமா அவங்ககிட்ட…?”

“உனக்கும் தயக்கம்… நீ கேட்டிருக்கணும் இல்லையா?…. “

நான் பதில் பேசவில்லை

“ திருமணம் செய்யலாம்ணு வீட்ட விட்டு ஓடிப்போக முடிவு செஞ்சு லதாவை வீட்டை விட்டு வர சொல்லிட்டு… அதுக்கப்புறம் வீட்ட எதுத்து எப்படிக் கல்யாணம் பண்றது…. எப்படி வாழ்றதுன்னு யோசிச்சான் உங்கப்பா… கடைசியில அவன் போகவே இல்லை…. அவனோட குழப்பமும், பயமும் ஒரு பெண்ணோட வாழ்வினை வீணாக்கிச்சு…. அதுக்குப் பிறகு இரண்டு முறை லதாவுக்கு திருமண ஏற்பாடுகள் ஆகி…. இந்த விசயத்தால நின்னுபோச்சு… அவளோட அப்பாவும் தன் ஒரே பொண்ணு வாழ்க்கை போன சோகத்துல போய்ட்டாரு… உங்கப்பாவோட பயமும், குழப்பமும் ஒரு உசிரையும் குடிச்சுச்சு….இதெல்லாம் நான் ஏன் உனக்கு சொல்றேன் தெரியுமா…”

எனக்குத் தெரியும் என்று தலையாட்டினேன்.

“தயக்கம், குழப்பம், சுயநலம் ஏன் கோழைத்தனம் கூட பரம்பரை வியாதியெல்லாம் இல்லடா சேகர் பார்த்துக்க…..” என்று என் தோள்களைத் தட்டி விட்டு எழுந்து போனார்.

நெடுநேரம் எதுவும் தோன்றாது அமர்ந்திருந்தேன். பின் எழுந்து உள்ளே சென்றேன்.

அம்மா கதவுக்கருகில் நின்றிருந்தாள்.

“லதா அம்மா சாகறதுக்கு முதல் நாள் சுகன்யாகிட்ட பேசிட்டாங்கப்பா…. போயி தயவு செஞ்சு நீயும் அவகிட்ட பேசு…..”

அம்மாவிற்கு பின்னால் மாட்டப்பட்டிருந்த அப்பாவின் புகைப்படம் தெரிந்தது…. அப்பாவின் முகத்தில் இப்போது லதா அம்மாவின் முகம் தெரிந்தது.

●●●

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...