முனியப்பத்தா

laxprabu70
பெண்மையக் கதைகள்
4.8 out of 5 (106 Ratings)
Share this story

முனியப்பத்தா....


அந்த பொழுதுசாயும் நேரத்தில் ஊரே அமைதியா இருந்தது. ரேடியோக்குழாயில் பழைய சோகப்பாட்டுகள் குறைந்த சத்தத்துடன் பாடிக்கொண்டிருக்கிருந்து.

அன்புச்செல்வன் கதறி அழுகவில்லை, ஆனால் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துக்கொண்டு இருந்தது. முகமெல்லாம் சோகம் அப்பியிருந்தது.

அதுக்கு காரணம் அவனை சிறுவயதில் பாசமாக வளர்த்த முனியப்பத்தா இறந்துவிட்டாள். அதுக்காத்தான் இந்ந அழுகை. முனியம்மாள் அப்பத்தா அவ்வளவு பாசமாக பார்த்துக்கொள்வாள் இவனை, அந்த ஞாபகங்கள் எல்லாம் மனசுக்குள் படம்போல ஓட ஆரம்பித்திருந்தது....

அவனுக்கு நினைவு தெரிந்த வயசுல இருந்தே அன்புச்செல்வன் அப்பா அம்மாவிடம் வளர்ந்ததை விட முனியம்மாவின் வளர்ப்பில் வளர்ந்தது தான் அதிகம். இத்தனைக்கும் முனியம்மாள் இவன் சொந்த அப்பத்தா இல்லை, ஒன்னுவிட்ட சொந்தம் வரும். முனியம்மாள் அவளுக்கென்று கலியாணம் கூட செய்துகொள்ளவில்லை. அதற்கு காரணமும் இதுவரை அவன் அவளிடம் கேக்கவில்லை.

கொஞ்சம் வளர்ந்த பின் மாதாதம் ஓயப்பு காசு (முதியோர் உதவித்தொகை) நூறு ரூபாயில் ஐந்து ரூபாய் இவனுக்கு ஒதுக்கிவிடுவாள் முனியம்மாள். ஓயப்பு காசு கொடுக்கவரும் போஸ்ட்மேனை பார்ததாலே குஷியாகிடுவான். ஆரம்ப பள்ளிக்கூடத்தில் உக்கார்நது அவர் பத்து இருபது பேருக்கு ஓயப்பு பணம் கொடுத்துக்கொண்டு கைநாட்டு வாங்கி கொண்டு இருப்பார். அந்த கெழடுகெட்டைகள் எல்லாம் அப்படியே அரைக்கிளாஸில் (பால்வாடியில்) மத்தியானம் முதியோர்களுக்கு கிடைக்கும் மஞ்சள் சோறை வாங்கிக்கிட்டு வீட்டுக்கு போறதுக்கு வசதியாக இருக்கமென்பதால் அங்கே வந்து கொடுப்பது வழக்கம்.

அப்படி முனியம்மாளுக்கும் கிடைத்த பின் அவள் நேராக அன்புச்செல்வன் இருக்கும் வகுப்பைத்தான் பார்ப்பாள். அவனும் வாத்தியாரிடம் ஒன்னுக்கு வருதுனு சொல்லிட்டு ஓடிவருவான். பக்கத்துல இருக்கும் கடையில் மிட்டாய் வாங்கி சில்லறை மாத்திவிட்டு முட்டாயியுடன் அஞ்சுரூவா இவனுக்கு கொடுப்பாள். மிச்சக்காசை சுருங்கிப்போன சேலையின் முந்தானை ஓரத்தில் முடிஞ்சு வச்சுக்குவாள். மத்த கிழவிகளை போல சுருக்குப்பையும் வச்சுக்கிட்டது இல்லை. முனியம்மாளிடம் எப்போதும் ரெண்டு சேலைக்கு மேல இருக்காது. ரெண்டுமே கவர்மண்டு பொங்கலுக்கு கொடுக்கும் முதியோர் சேலைதான்.

அதை மாத்தி மாத்தி கட்டிக்குவாள். சிலநேரங்களில் ஒன்னு நஞ்சு கிழிஞ்சு போயிருக்கும். அதனால ஒத்த சேலையை துவைச்சு மரத்துல ஒரு முனைய கட்டி மறுமுனைய உடம்பில் கட்டி காயவைத்து உடுத்திக்குவாள். நல்லசேலை கட்டி யாரும் பாத்திருக்க மாட்டாங்க. கட்டியிருக்கும் சேலை சுருக்கத்தை எத்தனை கனத்த தேய்ப்பு பெட்டிய வச்சு தேச்சாலும் சுருக்கம் போகாது. அதுக்கு அவள் வாங்கும் ஒத்த ரூவா உப்புச்சோப்பு அழுக்கும் போகாது கரையவும் கரையாது. ஆனால் துவைச்ச திருப்தி கொடுக்கும் முனியம்மாளுக்கு.

பறட்டைத்தலையாகவும் கொஞ்சம் சுருட்டையாகவும் இருக்கும் முடியை ரெண்டு கையிலும் எண்ணை சீசாவில் இருக்கும் தேங்காய் எண்ணெயை ஊத்தி தேய்ச்சு அள்ளி முடிஞ்சு பின்னந்தலையில் சொருக்குவாள். திடீரென வரும் கோவத்தில் பொசுக்கென்று யாரையும் திட்டிப்புடுவாள். இதனால் கிறுக்கு முனியம்மாள் என்ற பட்டப்பெயரும் உண்டு ஊருக்குள்ள.

இப்படிப்பட்ட முனியம்மாவிடம் அஞ்சு ரூவா காசை வாங்கி அதை இஷ்டப்பட்ட தின்பண்டங்களை வாங்கி தின்னுவான் அன்புச்செல்வன். அதுக்கு பின்ன எப்போவாவது "ஒத்த ரூவா, அரை ரூவா (ஐம்பது காசு) கொடு அப்பத்தானு" கேட்டுப்போயி நிப்பான் முனியம்மாவிடம்ஒப்புக்கு வசவு வஞ்சிக்கிட்டே கையில் திணிச்சு விடுவாள். வாங்கி கொண்டு ஓடிப்போவான் சந்தைக்கடைக்கு வாங்கித்திங்க.

ஒரு தடவ அம்மாவின் மணிப்பர்சுல இருந்து 30 ரூபாய களவாண்டுபுட்டானு அன்புச்செல்வன அவங்க அம்மா அடி அடினு அடிச்சு அம்மியில அரைச்ச மிளகாயை கண்ணுல பூசிவிட்டாள் அப்ப அவளுக்கு இருந்த கோவத்துல. பய துடிதுடிச்சு போயிட்டான். இதைக் கேள்விப்பட்ட முனியம்மாள் கிழவி ஓடிவந்து "அடியாத்தி சின்னப்பய தெரியாம செஞ்ச தப்புக்கு இப்படியா கண்ணுல மொளகாய பூசுவாக, நீ எல்லாம் மனுசி தானா" என்று வைதுவிட்டு அவன் கண்ணில் தண்ணிய ஊத்தி கழுவிவிட்டு "நீ விடா ராசா நம்ம வீட்டுக்கு போவோம்ன்னு கூட்டிட்டு போனாள்.

'இனிமே துட்டு வேணுமுன்னா எங்கிட்ட கேளு ராசா, களவாங்குற சோலி மட்டும் வேணாஞ் சாமி" என்ற அன்பாக கண்டித்தாள். "சரி அப்பத்தா இனிமே களவாங்கல" என்று அழுக்கான சேலையில் கண்ணீரை துடைத்து அழுதுகொண்டே இருந்தவன, மடியில படுத்கவைத்து காலையில தெருவில வித்துவந்த சக்கரைவள்ளி கிழங்கை வேகவைத்ததில் இருந்து ஒரு கிழங்கை தோல் உறிச்சு கொடுத்தாள்.

இனிப்பும் கிழங்கிலுள்ள நாறும் கலந்து திங்க இதமாகவும், சுவையாகவும் இருந்தது. அதில் கண் எரிச்சல் மறந்தே போச்சு. இப்படி பலநேரங்களில் அவனுக்கு ஆறுதலாகவும், அவனை தேற்றிவிடவும் முனியம்மாளின் பங்கு எப்போதும் இருக்கும். அன்புச்செல்வனுக்கு எப்போதும் ஒரு பழக்கம் இருக்கும், வருசத்துக்கு தீபாவளி, பொங்கல், ஊர் திருவிழா சமயத்தில் மட்டுமே கிடைக்கும் இட்டிலி தோசை. ஆனால் இவனுக்கோ அதை அடிக்கடி சாப்பிடும் ஆசை வரும்.

ஆனால் வீட்டில் செய்து கொடுக்க மாட்டார்கள். அதனால இவன் காய்ச்சல் வந்த மாதிரி நடிப்பான். உடனே போய் இட்டிலி வாங்கிவாரு அவங்க அப்பா, சிலநேரங்களில் இவனே " இன்னிக்கு தோசை வாங்கிவாப்பா இட்டிலிய முழுங்க கஸ்டமா இருக்கும்" என்பான். ஒருநாள் இவன் இட்டிலி தோசைக்காக்காவும், பள்ளிக்கூடத்துக்கும் மட்டம் போடுறதுக்காவும் தான் இப்படி செய்யுறானு தெரிஞ்சு போச்சு அவங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அதிலிருந்து நெசமாலுமே காய்ச்சல் வந்தாக்கூட கூட அடிச்சு பத்திவிட்டுருவாங்க பள்ளிக்கூடத்துக்கு.

ஆனால் முனியம்மாள் மட்டும் இவன் எப்போ காச்சல்னு சொன்னாலும் ஓடிப்போயி இட்டிவியும், சொம்புல சாம்பாரும் வாங்கி வந்து கொடுத்துருவா. ஒரு இட்டிலி ஐம்பது பைசா தான். அதேமாதிரி டீ குடிக்க கூட முனியம்மாள் வீட்டுக்கு தான் தூங்கி எந்திருச்சதும் வாய்ல கொடுவா ஒழுகின மூஞ்சிய கழுவிப்புட்டு ஓடி வந்துடுவான். "முனியப்பத்தா சந்தைக்கடையில போயி டீ வாங்கியாந்தியா" என்று கேட்டுக்கிட்ட வீட்டுக்குள் நுழைவான். அவள் எப்போதும் அவனுக்கும் சேத்து தான் வாங்கி வச்சிருப்பா. அங்கங்க நெளிஞ்சு போன மாதிரி இருக்கும் கிளாசில் டீய ஊத்தி ஆத்திக்கொடுப்பாள்.

வாங்கி உறுஞ்சி உறிஞ்சி குடிப்பான். அந்த ஊருல வீட்டுக்கு ஒரு பசுமாடு இருந்தாலும் வீட்டுல டீ போடுற பழக்கமும் இல்லாமத்தான் இருந்தது. ஏன்னா அதுக்குன்னு சீனி வாங்கனும், டீ தூள் வாங்கனும், அதுமட்டுமில்லாம இதுக்காக விறகு அடுப்ப பத்தி வச்சு ஊதாங்குழல ஊதி டீ போடுற நேரத்தில விசுக்கென்று போய் சந்தைக்கடையில போய் ரெண்டு ரூபாயும் செம்பையும் கொடுத்தா ஒரு நிமிசத்துல போட்டு கையில ஒரு பேப்பரும் மூடி கொடுத்துடுவான் டீ கடைக்காரன்.

ஆனா என்ன டீ கம்மாய் தண்ணி மாதிரி தான் இருக்கும், இனிப்புக்கு மட்டும் பஞ்சமிருக்காது சீனிய அள்ளிப்போட்டிருப்பான் அதனால டீ நல்லியிருக்க மாதிரி இருக்கும். அதுமட்டுமா வீட்டுக்கு வந்த உடனே குடிக்கலனா சூடும் ஆறி போயிடும். இப்படிப்பட்ட டீயைத்தான் அன்புச்செல்வன் உறிஞ்சி குடிச்சிட்டு இருந்தான். அப்புறம் கிளாஸ அப்பத்தாவிடம் கொடுத்துவிட்டு ஓட்டம் பிடிப்பான் ஆத்துக்கு போய் காலைக்கடன் கழித்து, போற வழியில கிடந்த சாம்பலை அள்ளி பல்லை தேய்ச்சு கிணத்துக்கு குளியல போடுவான், குளிச்சு முடிச்சு வீட்டுக்கு வந்து சோற சாப்பிட்டு பள்ளிக்கூடத்துக்கு போய்டுவான்.

இப்போ வளர்ந்து பெரியாளானதும் வெளியூரில் வேலைக்கு போக ஆரம்பித்தான். முனியப்பத்தா ஒருமுறை உடம்பு சரியில்லனு கேள்விப்பட்டு வந்து பாத்துட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு போனான். அவளால் அப்போது பேச முடியாத நிலமை கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. கையெடுத்து கும்பிட்டு நீ நல்லாயிரு என்று சொல்லி தவையில் கை வைத்தாள். கயித்து கட்டிலை விட்டு எழுந்திருக்க முடியவில்லை.

மீண்டும் வெளியூருக்கு வேலைக்கு வந்து ஒருமாதம் கூட ஆகவில்லை. முனியம்மாள் இறப்பு செய்தி வந்தது. அறக்க பறக்க பஸ் புடிச்சு ஊருக்கு வந்தான். நாற்காலியில் உக்காரவைத்து நெற்றியில் ஒரு ரூபாய் ஒட்டப்பட்டு, நாடி இழுத்து கட்டி உதட்டில் செந்துருக்கம் பூசின முனியப்பத்தாவை பார்த்ததும் கண்ணீர் பெருகியது.

வாங்கிவந்த மாலையை சாத்திவிட்டு ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் உக்கார்ந்து கண்ணீருடன் அவளின் ஞாபங்களை நினைவு கூர்ந்தான். முனியப்பத்தா இறுதிச்சடங்குகளை முடித்து மீண்டும் பயணமானான்.

அன்புச்செல்வன் இப்போது ஆயிரக்கணக்கில் மாத சம்பளம் வாங்குகிறான். கை நிறைய சம்பாதித்தாலும் முனியம்மா அப்பத்தாளிடம் அவன் வாங்கிய மாத காசு ஐந்து ரூபாய்க்கு ஈடான சந்தோசத்தை இதில் அனுபவித்ததில்லை....

முற்றும்

அன்புடன்,

இலட்சபிரபு (என்ற) லபி_சேடபட்டியான்.

Stories you will love

X
Please Wait ...