JUNE 10th - JULY 10th
"பரிகாரம்"
========
"என்னங்க!!"
"ம்"
"நான் சொன்ன அந்த கோவிலுக்குப் போகணுங்க.. பரிகாரம் பண்ணனும்.."
"போலான்டி.. நான் சொல்றப்ப போலாம்"
"இப்பத்தான் போகணும்.. இப்பத்தான் ஒரு பெயர்ச்சி நடந்திருக்கு.. இப்ப போனாத்தாங்க பிரயோஜனம்.. அப்பறமா போறதும் ஒன்னும்.. போகாம இருக்கறதும் ஒன்னு.."
"எல்லாம் தெரிஞ்சுதான் பேசறியா?"
"ஆமாங்க.. எல்லாம் தெரிஞ்சு தான் பேசறேன்.. வாங்கற சம்பளம் மூனு வேள சாப்பாட்டுக்கே சரியாப் போகுது. இதுல கோவில், பரிகாரம் இதெல்லாம் என்னாத்துக்குனு கேக்கறீங்க..! அதானே! அப்பறம் இது மாதிரி தூரத்துல இருக்கற கோவிலுக்கெல்லாம் போக வேணா.. போகவர பணம் செலவு.. சாப்பாடு.. அங்கேயே தங்க நேர்ந்தா அதுக்கும் பணம். அப்பறம் பரிகாரம் செய்யவே ஒரு குறிப்பிட்ட அமௌன்ட்.. இதுக்கெல்லாம் எங்க போவேனு கேக்கறீங்க..? சரி தானே?"
"அப்படியே நான் கேக்க நினைச்சதெல்லாம் புட்டு புட்டு வைக்கரியேடி.. கிரேட்டு.. இப்ப இந்தக் கேள்விக்கெல்லாம் பதிலும் நீயே சொல்லிடு"
"உங்ககூட சண்ட போட்டுட்டு.. நீங்க எது கொடுத்தாலும் வேணானு சொல்ற.. ஊருல இருக்கற உங்க அம்மாவுக்கு அனுப்ப வேண்டிய தொகைனு ரெண்டு வருஷமா.. ஒரு உண்டியல்ல பணம் போட்டுட்டு வர்றோம்ல.. அத எடுத்து இந்த விஷயத்துக்குப் பயன்படுத்திக்கலாங்க.. ப்ளீஸ்ங்க..."
"ம்.. தெரியுன்டி.. நீ இந்த விஷயத்த ஆரம்பிக்கும் போதே எங்க போயி கைய வைப்பேனு எனக்கு தெரிஞ்சு போச்சு.. இருக்கட்டுன்டி அந்தப்பணம்.. அம்மாவுக்கு கொடுக்கப்போறோமோ இல்லையோ, நமக்குனு ஒரு சேமிப்பா இருக்கட்டுமே.. வேற எங்கேயும் நாம சேமிப்புனு ஒன்னு பண்ணவே இல்ல தானே..! பையனுக்கும் ஸ்கூலுக்குப் போற வயசாச்சு.. ஸ்கூல் பீஸ், அட்மிஷன் பீஸ்.. டிரான்ஸ்போர்ட்.. டியூசன்.. அது இதுனு ஏகப்பட்ட பணம் தேவைப்படறப்ப.. எங்கப் போவ.. கடன் கிடன் வாங்கப் போறியா என்ன?"
"அட என்னங்க இப்படி சொல்றீங்க? இந்த பரிகாரம் மட்டும் பண்ணிட்டோம்னா எந்தப் பிரச்சனையும் வராதுங்க.. நமக்கு நடக்க வேண்டிய எல்லா வேலையும் சுலபமா முடியுங்க.. எந்த அலைச்சலும் வைக்காதுங்க.. எந்தக் கடனையும் வாங்க விடாதுங்க.. ஆனா பரிகாரம் மட்டும் பண்ணலேனா..!!"
"பண்ணலேனா..!!??"
"வேணாங்க.. அத நான் என் வாயால எப்படிங்க சொல்லுவேன்", என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டாள் ஹரிணி..
"சரி.. சரி.. யோசிச்சு சொல்றேன்.. இப்பக் கண்ணக் கசக்காத.. வேலைக்கு கெளம்பறேன்..", என்ற படி வேக வேகமாக ஆபிஸ் கிளம்பிச் சென்றான் சத்யா..
== == == == ==
மாலையில் மல்லிகைப் பூவுடன் வீடு வந்தவன், சிரித்தபடியே ஹரிணியைப் பார்த்தான்.
"சரி.. நாம பரிகாரம் பண்ண நீ சொன்ன கோவிலுக்குப் போறோம்...ஓகே"
"ஆகா.. ஆகா.. ரொம்ப சந்தோசங்க.."
"அந்த உண்டியலைக் கொண்டுவா.. எவ்ளோ சேர்ந்திருக்குனு பார்க்கலாம்.."
"அது அம்மாவுக்காக போட்டு வச்சிருக்கிற காசு.. பையனோட படிப்புச் செலவுக்கு வேணும்.. அது இதுனீங்க...."
"ஆமா.. சொன்னேன் தான்.. இப்ப பரிகாரம் தான் முக்கியம்னு நீ சொல்லிட்ட இல்ல.. இப்ப இத மட்டும் பார்க்கலாம்.. அத இப்படி திரும்ப திரும்ப கேட்டு குத்திக்காட்டாம.. போய் உண்டியலைக் கொண்டா.."
"இந்தாங்க..."
தூங்கிக் கொண்டிருந்த சுட்டி விமலும் முழித்துக்கொண்டான்.
"என்னப்பா பண்ணப் போறீங்க? பாட்டியோட உண்டியல....!!"
"ஒண்ணும் பண்ணல விமல்.. பாட்டி இந்த உண்டியல்ல இருக்கற காச எடுத்துட்டு கோவிலுக்குப் போகச் சொன்னாங்க.. அதான் எவ்ளோ இருக்குனு எண்ணிப்பார்க்கப் போறோம்..."
"ஹையா... கொடுங்க கொடுங்க.. நானும் எண்ணறேன்"
எல்லாப் பணத்தையும் எடுத்து எண்ணிப் பார்த்தனர்.. ஐந்தாயிரத்து நானூறு ரூபாய் வந்தது.
"மொத்தமா 5400ங்க....."
"ம்.. பயணச் செலவு ஒரு 600, சாப்பாடு ரெண்டு நாளைக்கு ஒரு 600, அங்க தங்க நேர்ந்தா ஒரு ஆயிரம், பரிகாரம் பண்ண ஒரு 1000, மொத்தம் 3200 போதும்.. எக்ஸ்ட்ரா 300 போட்டா.. 3500 போதும்.. அதுக்கு மேல 1900 ரூபாய் இருக்கு... அத செலவு பண்ண வேண்டாம்.. ஆனா அதையும் எடுத்துக்கலாம்.. நாளைக்கு கெளம்பலாம்.. ஓகேவா..."
"சரிங்க..."
== == == == ==
அடுத்த நாள் காலை 10 மணியளவில் கோவில் இருந்த ஊரை வந்தடைந்தனர் சத்யாவின் குடும்பத்தினர்.
இப்போதை பெயர்ச்சியில் பரிகாரம் செய்ய ஏற்ற கோவிலானதால் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இவர்கள் பஸ்ஸை விட்டு இறங்கும் முன்னே... ஆரேழு பேர் இவர்களைச் சூழ்ந்து கொண்டனர். இவர்களை மட்டுமல்ல.. பஸ்ஸிலிருந்து இறங்கிய அனைவரையுமே இப்படி ஆரேழு பேர் சூழ்ந்து கொண்டதை சத்யா கவனித்தான்.
"வாங்க சார்.. வாங்கம்மா.. பரிகாரம் பண்ண வந்தீங்களா.. தீராத நோயா.. தீராத்தலைவலியா.. வயித்துவலியா.. கடன் பிரச்சனையா.. தீராத குடும்பச் சண்டையா.. என்னனு சொல்லுங்க..? எல்லாத்துக்கும் பரிகாரம் பண்ணிடலாம்.. தேவையான எல்லாப் பொருளையும் நாங்களே உங்களுக்கு வாங்கிக் கொடுத்திருவோம்... நேரடியா தரிசனத்துக்கு உங்கள உள்ளே சீக்கிரமா கூட்டிட்டுப் போயிடுவோம்.. வந்தமோ.. சட்டுனு பரிகாரம் முடிச்சமா.... கெளம்பினோமானு இருக்கும் உங்க பயணம்.."
சத்யா... "வா.. நாம போலாம்.. இவங்கிட்ட எதுவும் பேச வேண்டாம்...", என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்களுடன் பேச ஆரம்பித்திருந்தாள் ஹரிணி..
"இந்தப் பெயர்ச்சியில இவரோட ராசிக்கு வரப்போற கஷ்டமெல்லாம் எதுவும் வரக்கூடாது.. இவரோட வேலையில இவரு உடனடியா புரமோசன் வாங்கனும்.. எங்க வாழ்க்கையும் சந்தோசமா இருக்கனும்.. அதுக்கு நாங்க என்ன பண்ணனும்?"
"அதுக்கு ஒரு பேக்கேஜ் இருக்கு.. ஜஸ்ட் 1500 ரூபாய் தான்.. உங்க பேர எழுதிக்கவா?"
"என்னங்க?"
"வாம்மா.. நாம பார்த்துக்கலாம்.."
"இல்லங்க.. நம்ம பட்ஜெட்ட விட 500 தானே அதிகம்.. ஓகேனு சொல்லுங்க.. வேற யோசன எதுவும் பண்ணாதிங்க.. பரிகாரம் பண்ணினவுடனே நம்ம கஷ்டமெல்லாம் தீரப்போகுது பாருங்க.."
"சரி.. சரி.. பேர எழுதிக்கச் சொல்லு..", என அலுத்துக் கொண்டு கூறினான் சத்யா..
எல்லாப் பொருட்களுடனும் வந்தவர்கள் சர் சர்ரென தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர்.
பக்தியுடனே கூட ஹரிணிக்கு நாம வந்த வேலை இவ்வளவு இலகுவா முடிஞ்சிடுச்சே.. என சந்தோஷமாகவும் இருந்தது. இன்னும் ஒரு நாள் தங்கி அருகிலுள்ள கோவில்களையெல்லாம் பார்த்துவிட்டு செல்லலாமென சத்யாவிடம் சொல்லவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தாள்.
பரிகாரம் முடிந்ததும், இவர்களை பரிகாரம் செய்ய அழைத்துச் சென்ற அந்த ஏழ்வர் குழு திரும்ப வந்தனர்.
"அம்மா.. நீங்க பண்ண பரிகாரம் மட்டும் பத்தாது.. நாளைக்கும் இதே மாதிரி இன்னொன்று பண்ணனும்.. அப்பத்தான் உங்களோட இன்றைய வேண்டுதல் பலிக்கும்", என்ற ரஷ்ய உக்ரைன் குண்டைப் போட்டனர்.
"என்னது.. இன்னொரு பரிகாரமா..!!??", என அதிர்ந்தான் சத்யா.. ஏற்கனவே 500 அதிகமாக செலவான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டிருக்க வில்லை..
"ஆமாங்க.. இதுக்கு ரெண்டாயிரம் மட்டும் தான் ஆகும்.. ஆனா நீங்க ரொம்ப நல்லா நம்மகூட பேசி பழகினதால 500 ரூபாய் டிஸ்கவுன்ட் பண்ணிட்டு.. உங்களுக்காக 1500 ரூபாய்க்கு இந்தப்பரிகாரம் பண்ணிடலாம்.."
1500 வாட் கரண்ட ஷாக் அடித்த அதிர்ச்சியில் இருந்தனர் இருவரும்..
"என்ன இன்னொரு 1500ஆ.. கூட்டிக் கழிச்சுப் பார்த்தா.. நமக்கே இன்னும் 100 ரூபாய் தேவைப்படும் போல இருக்கே.. இதுல எங்க இவங்களுக்கு 1500 தர்றது..."
"சரி அப்போ 1400 கொடுங்க.."
சோகமாய் ஹரிணியைப் பார்த்தான் சத்யா..
'கொடுங்க' என்பதாய் தலையசைத்தாள் ஹரிணி...
அந்த நாளே வித்தியாசமாக முடிந்தது.
அடுத்த நாள் பரிகார பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்தது.
இனி தங்கினால் சாப்பிடக்கூட பணமில்லாமல் போகலாம் என்பது இருவருக்கும் புரிய கிளம்ப ஆயத்தமாயினர்.
திரும்பவும் வந்தது அந்தக்கூட்டம்..
"சார் கெளம்பிட்டீங்களா?"
"ஆமாங்க.."
"இதுவரை உங்க பரிகாரம்.. 70 சதவீதம் மட்டும் தான் முடிஞ்சிருக்கு...."
"அப்ப மீதி 30 சதவீதம்.."
"அதுக்கு ஒரு தேதிய அடுத்த மாசத்துல பிக்ஸ் பண்ணுங்க.. அன்னைக்கு வந்து மீதிய பண்ணிடலாம்.."
"என்னங்க.. புதுசு புதுசா சொல்றீங்க?"
"நம்பிக்கை இருந்தா பண்ணுங்க.. இல்லேனா விட்டுடுங்க..."
"சரிங்க.. பண்ணிக்கறோம்..", என்றபடி கிளம்ப ஆயத்தமானார்.
"சார்.. அதுக்கு அட்வான்ஸா ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டுப் போங்க.."
சோகமாக ஹரிணி முகத்தைப் பார்த்தான் சத்யா..
"நம்மகிட்ட இல்லாத பணத்த எப்படிடி கொடுக்கறது?"
'ம்.. பரிகார ஸ்லத்துக்கு வந்தா.. பரிகாரம் பண்ணி பிரச்சனை தீரும்னு பார்த்தா புதுப்புது பிரச்சனையால்ல தோணுதே!'
"என்ன சார் ரொம்ப யோசிக்கறீங்க..?"
'சார்.. எங்ககிட்ட இப்ப எங்க ஊருக்குப் போக எவ்வளவு காசு வேணுமோ அது மட்டும் தான் இருக்கு.. வேற பணம் எதுவும் இல்லையே.."
"அப்படியா.. சரி சரி.. அடுத்து வரும் போது கொடுங்க...", என்று சொல்லிவிட்டு.. அங்கு அப்போது வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கிய பக்தக்கோடிகளிடம் விரைந்து சென்றனர்.
இருந்த சேமிப்பையெல்லாம் இழந்த சோகத்தில் 'அடுத்த மாதம் வேறு மீண்டும் வரவேண்டுமே' என யோசித்தவாறு நடக்க ஆரம்பித்தது சத்யாவின் குடும்பம்.
இவ்ளோ கஷ்டப்பட்டு போராடி கோவிலுக்கு வந்தா.. பரிகாரம் கூட முழுசா பண்ணாமப் போறோமே என யோசித்தவாறு நடந்தாள் ஹிரிணி...
(முற்றும்)
அ.வேளாங்கண்ணி
#603
Current Rank
30,300
Points
Reader Points 300
Editor Points : 30,000
6 readers have supported this story
Ratings & Reviews 5 (6 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
rajasekarank1959
மக்களின் அறியாமையை பயன்படுத்தி பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலைப் பற்றிய விழிப்புணர்வு சிறுகதையை திறம்பட எழுதியுள்ளார் திரு.வேளாங்கண்ணி அவர்கள். பாராட்டுகள் சார். கதை நல்ல விறுவிறுப்பாக செல்கிறது.போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துகள்!
harigopi
அருமை
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points