JUNE 10th - JULY 10th
அழுத கண்ணீரோடு
முனைவர். ப. தேவபட்டாபிராமன்
வயல்வெளியில் உழைத்த களைப்பால் சோர்ந்துவிடாமல் இரவு உணவிற்கு மீண்டும் தன் கடமையைத் தொடர்ந்தாள் நாகம்மாள். அடுப்பெரிக்க விரகு இல்லை, அதனால் வேலியோரம் இருந்த காய்ந்த முள்விரகு குச்சிகளை கையால் ஒடித்தாள். கையில் குத்திய இரண்டு முட்களின் வலியையும் கசிந்த இரத்தத்தையும் பொருட்படுத்தாமல், சிரிது எடுத்து வந்து கூரையில் கொஞ்சம் கருப்பம் செத்தையை உருவி எடுத்து அடுப்பினைப் பற்றவைத்தாள். கொண்டு வந்த முள் குச்சிகளை வைத்து சோறாக்கிடும் வேலையை ஆரம்பித்தாள். பானையில் அரிசி தீர்ந்து போனதை அப்போது தான் உணர்ந்தாள். பக்கத்து வீட்டு அஞ்சலையிடம் சென்று அரிசியைக் கடன் வாங்குவது என்று முடிவு செய்தவளின் மனதில் இருட்டிய பிறகு அரிசி குடுப்பாங்களா? என்ற எண்ணத்தோடும் வேறுவழியே இல்லை என்ற நிர்பந்தத்தோடும் நடந்தாள். வீட்டு வாசலில் நின்றவள் 'யக்கா எக்கா', என்றழைத்தாள்.
இன்னா நாகம்மா? என்றார் அஞ்சலை.
ஊட்ல அரிசி இல்ல ஒரு பிடி அரிசி குடு கூப்புன்ல போட்டா வாங்கி குடுத்துடுறன் என்றாள் (தயக்கத்தோடு) நாகம்மாள்.
சகுனமெல்லாம் பார்க்காமல் செத்த இரு வரேன் என்று அஞ்சலை இரண்டுபடி அரிசியை கொடுத்தாள். நாளைக்கு இன்னா செய்வ? ரெண்டுபிடியா வச்சிக்க. கூப்பன்கார அரிசி என்னிக்கு போடுவான்னு தெரியில என்று அரிசியை மடியில் கொட்டினாள்.
சீலை முந்தானையில் ஒரு பக்கம் இருந்த ஓட்டை வழியாக கொட்டிய அரிசியை கை வைத்து வாங்கிக் கொண்ட நாகம்மாள். வெளக்கு வச்சதக்கப்புறம் அரிசி குடுத்த உங்க ஊட்லகிற லச்சிமி போயிருமுன்னு குடுக்காம போயிடுவியோனு பயந்துகினு வந்தன். எக்கா நீ குடுக்கிலன்னா இன்னிக்கு எம் புள்ளைகளும் நானும் பட்டினிதான். ரொம்ப புண்ணியமா போவு யக்கா! என்றாள்.
என்னா? ஏ ஊட்ல தங்கமும் வெள்ளியும் கொட்டி கெடக்குது. இதல என்ன இருக்குது. நீங்க பசியோட ராத்திரி படுத்திருந்தா தான் பாவம். அடி போடி லச்சிமியாவது வாழ்வாவது? என்றாள் அஞ்சலை.
அரிசி வாங்கி வந்தவள் அடுப்பு அணைந்துகிடப்பதைப் பார்த்ததும் எரிச்சலானாள். இந்த புள்ளிவு இத கூடி பாக்காத எங்க போயி வெள்ளாடிகிட்டு இருக்குதுவு பையா, தே! குட்டி என்று கூவி சத்தம்போட.... கூட விளையாடிய குழந்தைகள், தே! உங்கம்மா கூப்படராங்க அடிக்கபோறாங்க, ஒடு என்று சொல்ல செல்லம்மாளும் செல்வமும் வீட்டிற்கு வந்தனர். திட்டித் தீர்த்தாள் நாகம்மாள் புலம்பிக்கொண்டே இரவு உணவிற்கு அரிசி கழுவி ஒதுக்கிக் கொண்டே அடுப்பையும் எரிய போட்டுக்கொண்டே வேலையைப் பார்த்தாள். சிரிய முள்விரகாக இருப்பதால் விரைவாய் எரிந்து விடுகிறது. கவனிக்காமல் வேலை செய்தால் அனைந்து விடுகிறது. ஊதி எரியவைப்பதற்கு பெரும்பாடாகிறது. போராடியபடி சோறாக்கி வைத்தாள் ஒருவழியாக. வீட்டில் இருந்த உப்பு, புலி மிளகாய் கறைத்து கொதிக்க வைத்து இரவு உணவிற்கு தயார் செய்தவள், புள்ளிவு சோறாக்கும் போதே பசி பசி இன்னிச்சிவு என்று சொல்லிக்கொண்டே சுடச்சுட சோறை ஆருவதற்குள் குழந்தைகளுக்கு ஊதி ஊதி ஊட்டினாள், செல்வன் நான்குவாய் சாப்பிட்டவன் அம்மாவின் மடியிலேயே தூங்கினான். எழுப்பிப்பார்த்தவள் செல்லம்மாவிற்கும் ஊட்டிவிட்டு இருவரையும் சானம் மொழுகிய தரையில் புடவையைப் போட்டு படுக்க வைத்தாள்.
பசிவேறு உயிர் போகுது காலையில குடிச்ச கஞ்சோட கெடக்குரே என்று பொலம்பிக்கொண்டே குளிக்காம சாப்பிட முடியாது. புழுதியும், சேரும், வேர்வ நாத்தம் வேற என்று முனகியபடி ஓலை மரப்பு கூட இல்லா தண்ணிச் சாகடையோரமாக மண் குடத்தில் இருந்த தண்ணீரில் குளித்தாள். உம்... சோப்புயெல்லாம் எப்பயாவது ஊருக்கு போகும் போது வாங்கி குளிக்கரதோட சரி, மண்ண, மணல தேச்சி ஒரசி குளிச்சிடரோம் என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டு குளித்துவிட்டு வேறு சீலையை இருட்டில் கிழிச்சல் எங்கு இருக்குதென்று தெரியாம சுற்றி கொண்டு வந்தாள். உள்ள நுழையும் போதே செங்கேணியின் உளரல் குரல் அதட்டியது. ஏ நாகம்மா எங்கடி இருக்க? புள்ளிவு எல்லாம் தூங்கிடிச்சா? ஏ எங்கடிகிற என்று தள்ளாடியபடி வாசலில் நின்றான். இதுல ஒன்னும் கொரச்சல் கிடையாது அதிகாரமும் அதட்டலும்தான். கஞ்சிக்கி இல்ல சோத்துக்கு இல்லன்னு எந்த எண்ணமும் இல்ல. குடிச்சி வவுத்த ரொப்பிக்கணும். வேலைக்கி போனா அஞ்சி பைசா ஊட்டுக்கு குடுக்கறது இல்ல. நீ எல்லாம் ஊட்ல ஒரு ஆம்புளன்னு எதுக்கு கிடக்குற? என்று கோபமாய் பேசிக்கொண்டே கிழிசலை மறைத்துக் கட்டிக்கொண்டிருந்தாள்.
கோபத்தோடு ஓடிவந்து சலார் சலார் என்று கன்னத்தில் இரண்டு மூன்று முறை அறைந்தான் செங்கேணி. புடவையைப் பிடித்து இழுத்ததில் புடவை மேலும் கிழிந்தது. என்னடி உட்டா வாய் நீளுது அதிகமா அனாவசியமா பேசுற என்ன? எல்லாம் உங்க அப்பன் வீட்டிலிருந்து எடுத்துகுனு வந்தியா அடிச்சு சாகடிச்சுபுடுவேன் என்று வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளில் திட்டினான் செங்கேணி.
இம்மா ரோசமா பேசுறியே சோத்துக்கு அரிசி இல்லை அதை பத்தி வெசனசம் இருந்துச்சா உனக்கு? என்றாள் நாகம்மா கோபத்தோடு.
ஏய் எனக்கு இந்த சோறும் வேணாம் ஒன்னும் வேணாடி என்று ஆக்கி வைத்திருந்த சோற்றுப் பானையும் குழம்பு சட்டியையும் தூக்கி வாசலில் போட்டு உடைத்தான் செங்கேணி.
அதைப் பார்த்து வயிறெரிந்து பதறிப்போய் கத்தினாள் நாகம்மாள். பசியின் வேதனையில் விரக்தியின் உச்சிக்கே சென்றாள் நாகம்மாள். இந்த வாழ்க்கை தேவையா உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பு அவளுக்கு மேல் எழும்பிய நிலையில், தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளும் அலறி அடித்துக் கொண்டு அம்மாவை கட்டிப்பிடித்துக் கொண்டது. சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். பிள்ளைகளை மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். அவள். ஆதங்கம் பாட்டாக நெஞ்சில் ஓடிக்கொண்டிருந்தது.
கஞ்சி குடிக்க வழியில்ல
சுடுகாடு போக மனசில்ல
பிஞ்சு குழந்தை அழுகுது
பீச்சிவிட பாலில்லை
நெஞ்சுக்குள்ளே எரிமலை
கண்ணீர்விட்டும் அடங்கல
கட்டினவன் சரியில்லை
என்ன செய்வேன் புரியல
பூனையும் தான் அடுப்புல
குடித்தனமே நடத்துது
புழுத்தரிசி ரேஷன் கடையும் பூட்டி தான கெடக்குது - அந்த
புழுத்த அரிசி ரேஷன் கடையும் பூட்டி தான கெடக்குது,
கஞ்சி குடிக்க வழி இல்லை
சுடுகாடு போக மனசில்ல
பிஞ்சு குழந்தை அழுகுது
பீச்சிவிட பாலில்ல
ஆண்டவன் படைப்புல
ஆளுக்கொரு நியாயமா
ஐயய்யோ மாறுமா எங்கு வறும தீருமா?
ஐயய்யோ மாறுமா எங்க வறும தீருமா?
கஞ்சி குடிக்க வழி இல்லை
சுடுகாடு போக மனசில்ல
பிஞ்சு குழந்தை அழுகுது பீச்சிவிட பாலில்ல.'
அவள் நெஞ்சில் ஓடிய பாடல்.
குழந்தையைக் கட்டிப்பிடித்தவள் தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். உடைத்துப் போட்டவன் உளறிக்கொண்டே குடிபோதையில் தூங்கிப் போனான். வாசலருகே அழுது கொண்டிருந்தவள் மங்கி எரிந்த மண்ணெண்ணை விளக்கும் காற்றில் அணைந்து போனதையும் கவனிக்கவில்லை. அம்மாவைக் கட்டிப்பிடித்த பிள்ளைகள் அப்படியே அவள் மடியிலேயே உறங்கிவிட்டனர். இவளும் சுவற்றில் சாய்ந்து படுத்துக்கொண்டு பசியின் கொடுமையும் காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்து களைப்பும் அறியாமலே கண்ணயர்ந்தாள்.
சிறிது நேரத்தில் கூரை மேலிருந்து ஏதோ 'தெப்' என்று அவள் கண்ணத்தில் விழுந்து நறுக்கென்று கொட்டியது. அய்யோ! என்று அலறியபடி கொட்டியதை விடாமல் அழுத்திப் பிடித்தாள். கடவுளே என் பிள்ளைகள் எதுவும் கொட்டிட கூடாது என்று புலம்பிக்கொண்டே எழுந்தாள். மேலும் இருமுறை கொட்டியது. கையால் அழுத்திப்பிடித்தப்படி ஓடி வந்தாள். மேலும் கொட்டியது. நசிக்கினாள் வலி பொருக்காமல் கத்தி அலறிக்கொண்டே வெளியே வந்து வீசினாள். அக்கம் பக்கம் வீடுகளில் இருந்தவர்களும் கூச்சல் கேட்டு ஒடி வந்தனர்.
விளக்கைக் கொளுத்திப்பார்த்ததில் கூரை மேலிருந்து விழுந்து கடித்தது கருந்தேள், நசிங்கிய நிலையில் இருந்தது. அஞ்சலை நாளு அஞ்சி எடத்துல கொட்டி இருக்குதே. மூஞ்சே போருபோருனு வீங்கிபோச்சே. தூக்கி விசிர வேண்டியது தானே என்றாள்.
என்னாலயே இந்த வலிய பொறுக்க முடியலயே. ஐய்யோ புள்ளிவுல கடிச்சிருந்தா புள்ளிவு தாங்குமா? புள்ளிவுல கடிச்சிடபோவுதுன்னு வாசலில் தூக்கிப் போடலன்னா அந்த மனுச படுத்துட்டு இருக்காரு. அதான் என்ன கொட்டினாலும் கொட்டட்டும்னு வலியோட வலி அழுத்தி கண்ணத்திலே புடிச்சிகின என்று கதறிக்கொண்டே சொன்னாள் நாகம்மாள்.
ஐயோ! வலி உயிரே போவுதே! தலை எல்லாம் ஏறுதே! என்று கதறினாள் நாகம்மாள்.
சரி சீக்கிரம் வா. வைத்தியர் வீட்டுக்கு செல்வோம் என்று நாகம்மாளை அழைத்துக் கொண்டு தேள் கடிக்கு மருந்து கொடுப்பவரின் வீட்டிற்கு சென்றனர் அக்கம்பக்கத்தினர்.
ஐய்யோ உசுரே போவுதே! ஐயோ! என்று அழுதபடி வந்தாள் நாகம்மாள். அதற்குள் முகம் வீங்கி ஒரு பக்க கண்ணும் முடிக் கொண்டது. அந்த இரவில் உடன் வந்தவர்கள் கதவை தட்டினார்கள். சாமி சாமி என்று இரண்டு மூன்று குரல்கள் கூப்பிட்ட பிறகு.
யாரது? தெ வரன் என்று ஒருவர் வந்து கதவை திறந்தார். இன்னா? இன்னா? என்றார் வைத்தியர்.
தேள் கொட்டிடிச்சுங்க என்றனர்.
தேள்தானா நல்லாபத்தீங்களா? என்றார் வைத்தியர்.
கையாலே நசுக்கிப் போட்டாச்சி. தேள் தான் நாங்க பார்த்தோம் என்றால் அஞ்சலை.
மூஞ்சில கொட்டி இருக்கு. என்ன நாலஞ்சு எடத்துல கொட்டிருக்கும் போலருக்குதே? என்றார் வைத்தியர். உற்றுப்பார்த்தார் ஆமா தேள் கொட்டின எடத்துல வேர்குதே! என்றார். இருங்க வரன் என்று தோட்டத்தில் ஏதே இலையை பறித்து வீட்டில் இருந்த கொஞ்சம் மிளகை வெற்றிலையில் மடித்து கையில் கொடுத்து, மென்று முழுங்கிடு, இந்தா இந்த தண்ணிய குடி என்று ஒரு செம்பு தண்ணீரைக் கொடுத்தார்.
வலியில் துடித்துக்கொண்டிருந்த நாகம்மாள் மெல்ல முடியாமல் மென்று தண்ணீரைக் குடித்தாள். வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்தாள்.
நாளைக்கு இந்த நேரம் தான் வலிவிடும் போங்க சரியாயிடும் என்றார் வைத்தியர்.
வலியோடு அழுதுகொண்டே வீடு வந்தாள் இரவு முழுவதும் உறக்கம் இல்லை. முன் காலையில் சற்று கண்ணயர்ந்தாள்.
ஏன் நடுவுக்கு வாங்கடி நடுவுக்கோ என்று வயலில் நாத்து நடும் பெண்களின் பெரிய முதிர்ந்த குரல் ஒன்று கேட்டது.
கண் விழித்துக் கொண்டாள் வலி சற்றுக் குறைந்திருந்தது. ஆனால் ஒரு கண் மூடி, முகம் வீங்கியிருந்தது. வலியைப் பொருட்படுத்தாமல் பரபரவென்று எழுந்து ஓடினாள். அக்கா நானும் வரேன் நடவுக்கு என்றாள்.
ஏ மூஞ்சியெல்லாம் வீங்கியிருக்கு எங்கடி வரப்போற என்றாள் அந்த அதிகார குரலுக்குச் சொந்தக்காரி.
பரவால்ல எனக்கு நல்லா ஆயிடுச்சு. நானும் வரேன் என சொல்லிக்கொண்டு ஓடி மீதமிருந்த அரிசியை கஞ்சி பொங்கி, கஞ்சித் தண்ணீரில் மட்டும் உப்பு போட்டு குடித்துவிட்டு, நடவு நட சற்று முன்னரே சென்றிருந்த பெண்களுக்கு குரல் கொடுத்துக்கொண்டே ஓடினாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது வறுமையை நினைத்தா? வலியினாலா? துடைக்காமலே ஓடுகிறாள் நாகம்மாள் அழுத கண்ணீரோடு.
1980-களில் வாழ்ந்த இந்த நாகம்மாளின் தினசரி வாழ்க்கையின் அரைநாள் கதை. இப்படி எத்தனை லட்சம் நாகம்மாள் நம் கிராமங்களில்...... இது உண்மைச் சம்பவத்தை மையமிட்டு எழுதிய புனைவுக்கதை.
#434
Current Rank
45,650
Points
Reader Points 650
Editor Points : 45,000
13 readers have supported this story
Ratings & Reviews 5 (13 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
ragulbala.kumarjee
Nice story
vishnu05112
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points