JUNE 10th - JULY 10th
"ஆமா… மறுபடியும் மறுபடியும் பார்த்துட்டே இருந்தால், எல்லார்கிட்ட இருந்தும், மெசேஜஸ், ரிப்ளைஸ் வந்துடவா போகுது"
பெருமூச்செறிந்தவாறே தன்னுடைய செல்பேசியை மேஜை மீது வைத்தாள் சுபாஷினி.
இதை அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது தான்…
முதுகலை கணிதம் (Msc Maths) கல்லூரிப் படிப்பை முடித்து ஒரு சில மாதங்களே ஆகி இருந்த தருணத்தில் தான், சுபாஷினியின் மனதில் பலவித தவிப்புக்கள் தோன்றி மறைந்தது.
காதல் என்று இல்லையென்றாலும், நண்பர்கள் கூட எப்போதாவது பேசலாமே? இதுதான் அவளைத் தவிப்பில் ஆழ்த்திய விஷயம்.
இறுதித் தேர்வு எழுதி முடித்த அன்று, மறக்க முடியாத நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டு இருந்த சக தோழிகளைக் கண்டு பெருமிதம் அடைந்திருக்கிறாள்.
'பரவாயில்லையே! நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் நம்ம எல்லாரையும் மிஸ் பண்ணுவாங்க. அடிக்கடி மீட் பண்ணிப்போம்'
இப்படி நிறைய எண்ணங்களைச் சுமந்து கொண்டு, அவர்களுடன் பேக்கரி சென்றாள் சுபாஷினி.
சினாமிகா, "இனிமேல் இதுக்கு எல்லாம் சான்ஸ் கிடைக்குமா? ஒரே கஷ்டமா இருக்கு ஃப்ரண்ட்ஸ்" உணர்ச்சிப் பெருக்குடன் கூறினாள்.
"எங்க... அடுத்து என்ன வேலைத் தேடலாம்? கல்யாணம் செய்து வைத்தாக் கூட ஆச்சரியப்பட்றதுக்கு இல்லை!" என்றாள் ஆர்த்தி.
"அவ சொல்றது உண்மை தான்.ஸ்கூல், காலேஜ் வரைக்கும் தான் என்ஜாய்மெண்ட்ஸ் எல்லாம்! அதுக்கப்புறம் பொறுப்பு தானாகவே வந்துடும்னு நம்ம சீனியர்ஸே சொல்லி இருக்காங்களே!" என்றாள் தமயந்தி.
"ஆமா.. தமி இப்போவே என்னை எதாவது வேலைக்கு அப்ளை பண்ண சொல்லிட்டாங்க." என்றாள் ஐஸ்வர்யா.
"இதெல்லாம் அந்தந்த ஏஜ்ல நமக்கு இருக்கிற கடமைகள் ஃப்ரண்ட்ஸ். அதை முடிச்சுத் தான் ஆகனும். அதுக்காக எல்லாம் நம்ம ஃப்ரண்ட்ஷிப்பை மறந்துட்டு முழு நேரமும் அதையே செய்யனும்னு இல்லை. ஃப்ரீ டைம்ல கான்ஃப்ரண்ஸ் கால் செய்து பேசலாம்" என்று சுபாஷினி இதற்குத் தீர்வு கண்டாள்.
மற்ற பெண்களும் ஆமோதிக்க,
"இப்போ உங்களுக்குப் பிடிச்சதை ஆர்டர் குடுங்க" என்று அவர்களுடன் சேர்ந்து உண்ணும் தருணத்தை ரசித்துக் கொண்டாள் சுபாஷினி.
புகைப்படங்கள் வரிசையாக, கணக்கின்றி ஒவ்வொருத்தர் செல்பேசிகளில் இருந்தும் எடுக்கப்பட்டது.
உணவுப் பொருட்கள் அடங்கிய மேஜை தெரியும் படி, அனைவர் முகத்திலும் புன்னகையைத் தருவித்துக் கொண்டு அழகான புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டனர்.
பொறுமை இல்லாமல், அதை அப்பொழுதே அனுப்பி வைக்கும் படி, கேட்டு பெற்றுக் கொண்டனர்.
"ஆர்த்தி! ஃபலூடா உனக்குப் பிடிக்கும் தானே? என்னோடதையும் எடுத்துக்கோ"
அவள்புறம் ஃபலூடா நிறைந்தக் கண்ணாடிக் குவளையை நகர்த்தி வைத்தாள் சினாமிகா.
"சுபா! சிக்கன் நக்கெட்ஸ் எடுத்துக்கோ"
தட்டை அவளிடம் கொடுத்தாள் தமயந்தி.
வயிறார சுவைத்த உணவுகளை விட, மனதார பேசி, நேரம் செலவிட்டதே அனைவருக்கும் வெகு திருப்தியாக இருந்தது.
சுபாஷினி தன்னுடைய தோழிகளுடன் அந்தப் பேக்கரியின் ஓரத்தில் நின்று முத்தாய்ப்பாக ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டாள்.
அன்று சந்தித்தவர்கள் தான்! இன்று வரை யாரையும் நேரில் பார்க்க எவருக்கும் நேரம் என்பதே கிடைக்கவில்லை.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊர்களில் தங்கியிருந்ததால், எந்த இடத்தில் சந்திப்பது என்று அடுத்த சில நாட்களில் யோசித்தனர்.
அனைவராலும் யோசிக்க மட்டுமே முடிந்ததே தவிர, பார்த்துக் கொள்ள முடியவில்லை.
அருகிலிருந்து பார்த்தால் தான் உண்டா? வீடியே காலில் ஜூம் செய்து பார்த்தால் போகிறது! என்று ஐவரும் தினமும் மாலையில் வீடியோ காலில் சந்தித்துக் கொண்டனர்.
"ஹேய் தமி! உன்னோட ஃபேஸ் செம்மயா க்ளோ (glow) ஆயிடுச்சு"
ஆரவாரம் செய்தாள் சினாமிகா.
"அங்கே மட்டும் என்னவாம்? நீ பளபளன்னு இருக்க டி" என்று தோழியைப் புகழ்ந்தாள் தமயந்தி.
"ரெண்டு பேருமே அழகிங்க தான் டி. விடுங்க" என்று கிண்டல் செய்தாள் ஆர்த்தி.
"நல்லா பண்றீங்க டி எல்லாரும்" என்று நையாண்டி செய்தாள் ஐஸ்வர்யா.
இவர்களது உரையாடலைக் கேட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள் சுபாஷினி.
"அடியேய் சுபா! உன்னை எதுவும் சொல்லலன்னு சிரிக்கிறியா?" பொய்யாகத் திட்டினாள் சினாமிகா.
"அய்யய்யோ வேணாம்மா! என்னை எதுவும் செல்லாதீங்க" என்று கையெடுத்துக் கும்பிட்டாள் சுபாஷினி.
அவளை விடுவதாக இல்லை என்பது போல,
"நீ நல்லா வெய்ட் போட்டுட்ட சுபா. கிண்டலுக்காகச் சொல்லல. உண்மையிலேயே பாக்கத் தெளிவாகத் தெரியுற" என்று ஐஸ்வர்யா கூறினாள்.
"அப்படியா? நன்றி நன்றி" இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தாள்.
"சரி… எல்லாரும் எங்க இருக்கீங்க?" - தமயந்தி.
"நான் இங்கேயே தான் இருக்கேன்மா" சுபாஷினி கூறினாள்.
ஆர்த்தி, "நான் மதுரையில் இருக்கேன் தமி.ரிலேடிவ் வீட்ல என்னோட ஃபேமிலியோட ஸ்டே பண்ணி இருக்கேன்" என்றாள்.
"நான் ஜாப்க்கு ட்ரை பண்ணிட்டே ஸ்கூல் ஃப்ரண்ட் மேரேஜ்ஜை அட்டெண்ட் பண்ண வந்தேன்" என்று ஐஸ்வர்யா கூறினாள்.
சினாமிகா, "எனக்கு மேரேஜ் ப்ரபோசல்ஸ் வந்துட்டு இருக்கு தமி. அதி வேகமாக எனக்கு மாப்பிள்ளைப் பார்த்துட்டு இருக்காங்க" என்றாள்.
தமயந்தி, "அப்போ நம்ம செட்ல ஃபர்ஸ்ட் உனக்குத் தான் மேரேஜ் போல. ஃப்ரண்ட்ஸ் நாங்க குடும்பமாக சொந்த ஊருக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம். அப்பா ரிடையர்ட் ஆகிட்டதால் இனி அங்கே இருக்க முடியல" என்று கூறினாள்.
" அப்போ எல்லாருமே ஏதோவொரு பொறுப்புல தான் இருக்கீங்க போல? நான் தான் வெட்டியா இருக்கேனோ?" சலித்துக் கொண்டாள் சுபாஷினி.
"யாரு மேடம் நீங்களா? ட்ராயிங் காம்ப்படிஷன்ஸ்ல சேர்ந்து வின் பண்ணி அந்த ப்ரைஸ் எல்லாத்தையும் ஃபோட்டோ எடுத்து குரூப்ல போட்றதை நாங்க பார்க்கிறோம்னு தெரிஞ்சும் இப்படி பொய் சொல்றா பாரு" என்றாள் ஆர்த்தி.
"ஹிஹி…" அசடு வழிந்தாள் சுபாஷினி.
"ஓகே ஃப்ரண்ட்ஸ். இன்னைக்கு இது போதும். அதுதான் டெய்லியும் பேசுறோமே? நாளைக்கு மிச்சத்தைப் பேசலாம்" என்று ஐஸ்வர்யா அனைவருக்கும் இரவு வணக்கத்தைக் கூறி அனுப்பி வைத்தாள்.
அதற்கடுத்து வந்த நாட்களில், வீடியே கால்கள், கான்ஃப்ரண்ஸ் கால்கள் எல்லாவற்றிற்கும் நேரம் குறையத் தொடங்கியது. ஒரு சில சமயங்களில், இரண்டு பேர் வீடியோ கால் செய்யும் நேரங்களில் காணாமல் போவார்கள்.
"என்ன ஃப்ரண்ட்ஸ்! இன்னைக்கும் ரெண்டு பேர் வரலையா?" ஆற்றாமையுடன் கேட்பாள் சுபாஷினி.
அப்படியே படிப்படியாக, அந்த வீடியோ காலும் மறைந்து போய் விட,தோழிகள் யாருக்கும் பேச நேரமில்லை என்ற நிதர்சனம் அவளை வெகுவாகத் தாக்கியது.
அந்த நிலைக்குத் தான் நாம் அழகழகான பெயர்களை வைத்துள்ளோமே?
"டிப்ரஷன், ஸ்ட்ரெஸ்"
(மனச்சோர்வு, மன அழுத்தம்)
எனக்குள் நுழைந்து என்னுடைய உற்சாகத்தை எல்லாம் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி எடுத்து விட்டோம் என்ற கெக்கலிப்பில் அவையெல்லாம் என்னைப் பார்த்துப் பல்லிளித்துச் சிரித்தது.
"ப்ச்... நான் மட்டும் வெட்டியா இருக்கேனோ?"
சுபாஷினிக்குள் இந்தக் கேள்வி நொடிக்கொரு முறை தோன்றி தலையை வலிக்கச் செய்தது.
"வெட்டியாகவே இருந்துப்போம்" என்ற மனநிலைக்கும் மாறி விட்டாள்.
எப்போதாவது வரும் வரைபடப் போட்டிகளைத் தேர்ந்தெடுத்து அதில் கலந்து கொண்டாள்.
காண்பவற்றை எல்லாம் வரைய ஆரம்பித்து விட்டாள்.
தோழிகளுட பேக்கரியில் எடுத்தப் புகைப்படத்தைக் கூட விட்டு வைக்காது அதை வரைபடமாக மாற்றிச் சட்டத்தில் ஏற்றி, அலமாரியில் வைத்திருந்தாள்.
மன அழுத்தம், மனச்சோர்வை நீக்குவதற்கு கிடைத்த எல்லா நல்ல வழிகளையும் பின்பற்ற ஆரம்பித்த பின்னர், ஒருவாறு தேறி வந்தாள் சுபாஷினி.
ஆனாலும், அவளுக்குள் ஒரு வெறுமை!
அந்த நிலையில் இருக்கும் போது தான் ஒருநாள் செல்பேசியைப் பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறாள்.
மேஜையில் வைத்திருந்த செல்பேசி திடீரென்று ஒலிக்கவும் துரிதமாக எடுத்துப் பார்த்தாள்.
அவளுடைய அம்மா தான் அழைக்கிறார் என்றதும் உடனே அட்டெண்ட் செய்தாள்.
"சுபா!! உனக்குப் பிடிச்ச சாக்லேட் ஃப்ளேவர் ஐஸ்கிரீம் ஸ்டாக் இருக்குன்னு கடைக்காரவங்க சொன்னாங்க. இப்போ அங்க இருந்து தான் பேசறேன்.அஞ்சு வாங்கிட்டு வரவா? நீ ஐஸ்கிரீம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுல்ல?" என்றார் அவளது அம்மா கனிகா.
இவள் ஐஸ்கிரீம் சாப்பிட்டு தோராயமாக பத்து நாட்கள் ஆகியிருக்கும். அது கூட நினைவில் இல்லை. அம்மா கேட்டதும் உடனே நினைவிற்கு வந்துவிட்டது.
"வாங்கிட்டு வாங்கம்மா. வேற ஃப்ளேவர்ஸ் இருந்தாலும் வாங்குங்க" என்று சிறு புன்னகையுடன் கூறி அழைப்பை வைத்தாள் சுபாஷினி.
அடுத்து, அவளது அக்கா நதியா, "உனக்கு மேகி பிடிக்கும்ல. அதுவும் முட்டை ஊத்தி செய்றது ரொம்ப பிடிக்கும்ல? எனக்கும், உனக்கும் சேர்த்து செஞ்சிருக்கேன். வந்து சாப்பிடு சுபா" என்று அடுக்களையில் இருந்து அழைப்பு வந்தது அவளுக்கு.
"இதோ வந்துட்டேன் நதி" என்று குதூகலமாக ஓடினாள் சுபாஷினி.
தமக்கைச் செய்து கொடுத்த மேகியை உண்டு முடித்து வந்தவளுக்குப் பள்ளித் தோழியிடம் இருந்து அழைப்பு வந்தது.
"சொல்லு மிரு"
மிருதுளா, "உனக்கு வாட்ச் வாங்கி அனுப்பி விட்ருக்கேன் டி. ஒன் வீக்ல வந்துடும். பிடிக்குதானுப் பாரு. இல்லன்னா திருப்பி அனுப்பிடு. வேற வாங்கி அனுப்புறேன்" என்றாள்.
"இல்லை அதுவே எனக்குப் பிடிக்கும் மிரு"
"இன்னும் பார்க்கவே இல்லை. அதுக்குள்ள எதையும் முடிவு பண்ணாத. பாத்துட்டு சொல்லு" என்று உரிமையாகக் கூறி வைத்தாள் மிருதுளா.
சுபாஷினியோ, தன் மேல் அன்பு காட்டுபவர்களை எல்லாம் உதாசீனப்படுத்தி விட்டு, "வெட்டியா இருக்கோம் என்று ஒவ்வொரு நாளும் தேவையில்லாமல் மனம் நொந்து கொண்டு இருக்கிறோம் என்றும், இவர்களது அன்பைப் பெறுவதில் பிஸியாக இருக்கிறோம்" என்பதைப் புரிந்தும் கொண்டாள்.
அதற்காகத் தன்னிடம் பேசாமல் இருக்கும், தங்களது வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் கல்லூரித் தோழிகள் ஐவரை அவள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டாள். என்றாவது ஒருநாள் அவர்களும் தன்னுடன் பேசுவார்கள் என்று காத்திருந்தாள் சுபாஷினி.
நாட்கள் செல்லச் செல்ல தன் குடும்பத்தினரின் அன்பில் திளைத்துக் கொண்டிருந்தாள் சுபாஷினி.
ஒரு வருடம் போனதே அவளுக்குத் தெரியவில்லை.
பழைய உற்சாகம் மீண்டு விட்டிருக்க காண்பவை எல்லாம் ரசிக்கத் தூண்டியது.
ஓவியக் கலைக்கான முறையான வகுப்பில் சேர்ந்தாள்.
இதையெல்லாம் மறக்காமல் கல்லூரித் தோழிகள் இணைந்திருக்கும் புலனக் குழுவில் உடனுக்குடன் அறிவித்து விடுவாள்.
அவர்களும் தாமதமானாலும் இவளுக்கு வாழ்த்துத் தெரிவித்து விடுவர்.
இப்படியே நாட்கள் கழிந்து கொண்டிருந்த போது, செல்பேசியில் வீடியோ காலிற்கான அறிவிப்பு வந்தது கண்களுக்குத் தென்பட்டது.
செல்பேசியை எடுத்துப் பார்த்தாள், அதில் தமயந்தி தான் வீடியோ கால் செய்திருந்தாள்.
ஆச்சரியத்தை முகத்தில் வெளிப்படுத்திக் கொண்டே, அழைப்பை ஏற்றாள் சுபாஷினி.
"ஹேய் தமி! எதிர்பாரஅக்கவே இல்லைடி! என்ன திடீர்னு?" தன்னுடைய கண்களில் வெளிப்படையான ஆச்சரியத்தைக் காட்டிப் பேசினாள்.
தமயந்தி, "இரு இரு. இன்னும் இருக்கு" என்று மற்ற மூவரையும் வீடியோ காலில் இணைத்தாள்.
ஐஸ்வர்யா, ஆர்த்தி மற்றும் சினாமிகா மூவரும் "ஹாய்" என தங்கள் வெண் பற்கள் தெரிய புன்னகைத்தனர்.
"ஃப்ரண்ட்ஸ்!! எப்படி?" - சுபாஷினி.
எப்படி இது சாத்தியம்! ஒவ்வொருவரும் வேறெங்கோ இருந்து கொண்டு, இது நாள் வரை எதுவுமே பகிர்ந்து கொள்ளாமல், புலனக் குழுவில் மட்டும் அறிவிப்பை அனுப்பி விடுவார்கள்.
ஆனால் இப்போது வீடியோ கால்! இப்படிப் பார்த்துப், பேசி, எத்தனை நாட்கள் ஆகி விட்டது!
"உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கனும்னு நினைச்சோம். மேடம் எங்க மேல ரொம்ப கோபமா இருக்கீங்களோ?" ஐஸ்வர்யா தான் கேட்டாள்.
"சேச்ச… கோபம்லாம் இல்லை ஐஷூ"
அவர்களைப் பார்த்ததே ஆனந்தம் தான் இதில் எங்கே அவர்கள் மீது கோபப்படுவதற்கு, என்று சுபாஷினி நினைத்தாள்.
"ம்ஹ்ம்... நீ எங்களுக்கு நிறைய தடவை கால் செய்து, எங்களால் அட்டெண்ட் பண்ணவே முடியல. அதுக்கு ஃபர்ஸ்ட் சாரி சுபா" என்று கோரஸாக அவளிடம் மன்னிப்புக் கேட்டனர்.
சிறிதளவு துளிர்த்தக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்ட சுபாஷினி,
"ப்ச்... என்னங்க டி?" என்று உணர்ச்சி வசப்பட்டாள்.
"அதுக்கு ஒரு நியாயமான காரணம் இருக்கும்னு கூட தோனாதா எனக்கு? விடுங்க"
"இல்லை சுபா. போன மாதம் எனக்கு நீ கால் பண்ணி இருந்தப்போ எங்க அப்பாவுக்கு ஹெல்த் இஷ்யூ. ஐசியூவில் இருந்தார். அதான் அட்டெண்ட் பண்ண முடியல" என்று ஆர்த்திக் கூறினாள்.
அதைக் கேட்டு அதிர்ந்த சுபாஷினி என்ன மாதிரியான நிலைமையில் இருந்திருக்கிறாள் இவள்! இது தெரியாமல் கால் செய்து இருக்கிறோமே? என்று தன்னைக் கடிந்து கொண்டாள்.
இப்படியே ஒவ்வொருவரும் தங்கள் நிலைமையைக் கூற, தன் மேலும் இருந்த தவற்றை உணர்ந்து கொண்டாள் சுபாஷினி.
"என் மேல தான் தப்பு. சாரி ஃப்ரண்ட்ஸ்" என்று மன்னிப்பும் வேண்டினாள்.
"இவ வேற காமெடி பண்ணுவா. ஒழுங்கா வேற பேசு சுபா" என்று தமயந்தி கூறினாள்.
இரவு வரை நீண்டு போனது இந்த அவரது உரையாடல். அனைத்தையும் பேசினர், சிரித்தனர், திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
பேச்சும், கும்மாளமும், கலகலப்பும் என்று அன்றிரவு சுபாஷினிக்கு அளவில்லா ஆனந்தத்தைக் கொடுத்தது.
அதற்குப் பிறகு தான் அவள் ஒன்றை புரிந்து கொண்டாள். யாரும் தன்னை விட்டு, விலகவும் இல்லை, மறக்கவும் இல்லை. அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், சவால்களையும் சந்தித்து அதைச் சரி பண்ண முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் நேரமின்மை ஆகிறது.
யாரும் எங்கும் காணாமல் போய் விடவும் இல்லை, இவள் அவர்களைத் தேடவும் தேவை இருக்கவில்லை. அனைவரும் மனதால், நினைவால் அன்பைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
நாமும் அவர்களை என்றைக்கும் விட்டுக் கொடுக்கவும் கூடாது.குடும்பமும், தோழியரும் நம்மை விட்டுக் கொடுத்ததும் இல்லை.
தன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டே, மற்றவர்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழட்டும், அதே மகிழ்ச்சியுடன் அதை என்னிடம் பகிர்ந்து கொள்ளட்டும் என்று காத்திருந்து கொண்டே, தன் அடையாளத்தையும் தேட ஆரம்பித்து விட்டாள் சுபாஷினி.
சுபம்
#575
Current Rank
30,350
Points
Reader Points 350
Editor Points : 30,000
7 readers have supported this story
Ratings & Reviews 5 (7 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
dharanisai61
aashmisutherson256
Super da papa
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points