கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா ?

mururaja73
உண்மைக் கதைகள்
5 out of 5 (15 Ratings)
Share this story

சுப்ரமணியம் என் பெயர். சுப்பு என எல்லோரும் சுருக்கமாகக் கூப்பிடுவர். எனக்கு தஞ்சையில் உள்ள கரந்தைதான் சொந்த ஊர். என்னைப் பற்றி சொல்வதானால் இளங்கலை புவியியல் பட்டப் படிப்பு. ஐந்து அடி உயரம். வலது பக்க நெற்றியில் ஒரு தழும்பு. அது எங்கள் வீட்டில் கதவு மூடப்படாமல் இருக்க வைத்திருந்த ஒரு கருங்கல்லால் ஏற்பட்டது. டோர் லாக்கர் எல்லாம் அப்போது கிடையாது. அக்கல், திருப்பதி லட்டு சைசுக்கு இருக்கும். அது என்னுடைய சகோதரிகளுக்கு வாதாம் பருப்பை உடைக்கவும், தந்தைக்கு சாம்பிராணியை தூள் செய்யவும், அம்மாவிற்கு அர்ச்சனை செய்து வந்த தேங்காயை உடைத்து பங்கு பிரிக்கவும் பயன்பட்டது. நான், ஒரு நாள் ஓடி வந்ததில் கால் தடுக்கி, சரியாக அக்கல்லின் மேல் விழுந்தேன். மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக மருத்துவரிடம் காட்டி, வைத்தியம் பார்த்தும் அதனால் ஏற்பட்ட தழும்பு மட்டும் மாறவேயில்லை.

பட்டப் படிப்பு, முடித்து அரசாங்க வேலைக்காக போட்டித் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நேரம். அதோடு ஒவ்வொரு ஊரிலுள்ள கோயில்களுக்கு செல்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். அப்படி செல்கையில் கோயிலின் தல புராணம் மற்றும் அந்த ஊரின் பெயர்க்காரணத்தை அறியும் பழக்கத்தையும் வைத்திருந்தேன். சில சமயங்களில் உண்மையான பெயர் ஒன்றாகவும், பேச்சு வழக்கில் மாறி வேறு ஒன்றாக இருப்பதையும் கவனித்துள்ளேன். எதையும் ஏன், எதற்கு என ஆராயும் பழக்கம் எனக்குள் ஏற்பட்டது.

************

எழுத்துத் தேர்வு எழுதிய ஒரு வருடத்திற்குப் பிறகுதான் தேர்ச்சி பெற்ற செய்தி கிடைத்தது. அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து நடைபெற்ற தட்டச்சு (டைப்பிங்) தேர்விலும் சிறப்பாக செய்திருந்தேன். வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஒரு வருடம் வரையிலும் பணி நியமன ஆணை கிடைக்கப் பெறவில்லை. குல தெய்வத்திற்கு பூஜை செய்யாததால் வேலை தடைப்படுவதாகக் கருதி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அது இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு வெள்ளிக்கிழமை மதியம், குடும்பத்தில் இறந்த சுமங்கலிகளுக்கு பூஜை செய்து, கஞ்சி காய்த்து ஏழைகளுக்கு கொடுப்பார்கள். அன்று மாலையில் மஞ்சளில் அம்மன் உருவம் செய்து பூஜிப்பார்கள். அதற்கு அடுத்த ஞாயிறன்று காட்டேரிக்கு பூஜை செய்வார்கள். அதில் ஒரு செங்கல்லை சுத்தம் செய்து, அதன் நடுப்பக்கத்தில் திருநீரால் மூன்று கோடுகள் இட்டு, சந்தனம் குங்குமம் பூசி அதன் இருபுறமும் மிகப் பெரிய அரிவாள் வைத்து மது, மாமிசம் போன்றவற்றை படைத்து கோழி மற்றும் சேவலை பலி கொடுப்பார்கள். அன்று பலி கொடுத்த போது நான் மயங்கி விழுந்து விட்டேன். தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள். எழுந்த பிறகு என்ன நடந்தது எனக் கேட்டனர். நான் பேச முயல்கிறேன் ஆனால், என்னால் பேச இயலவில்லை. நடந்த அனைத்தையும் அருகிலிருந்து கவனித்த ஒரு வயதான பெண்மணி இனி சாமிக்கு கோழி, சேவல் காவு கொடுக்கமாட்டோம் எலுமிச்சம் பழம் மட்டுமே காவு கொடுப்போம் என உறுதி மொழி கொடுக்கச் சொன்னார். என்னுடைய தந்தை அவ்வாறு உறுதி மொழி கொடுத்த பின்தான் நான் இயல்பு நிலைக்கு திரும்பியதாக பின்னர் தெரிவித்தனர். உண்மையில் காவு கொடுக்கப்படும் போது, என்னுடைய கவனத்தை நான் வேறு பக்கம் திருப்பியிருந்தேன். மீண்டும் நான் இப்பக்கம் திரும்பிய போது, இறந்து போன ஒருவரின் உருவம் அச்செங்கல்லில் தெரியவே மயங்கி விழுந்து விட்டேன். எனது மயக்கம் இனி வருங்காலத்தில் நிகழ இருந்த உயிர்ப்பலியை நிறுத்தி விட்டதனால் அது குறித்து நான் யாரிடமும் வாயைத் திறக்கவில்லை.

**********

மேற்படி பூஜை முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு எனக்கு, மும்பையில் வேலை கிடைத்தது. ஊரில் இருக்கும் போதே ஹிந்தி படித்திருந்ததால் மொழிச் சிக்கல் எதுவும் ஏற்படவில்லை. குறைந்த வாடகையில் மும்பையில் தங்குமிடம் கிடைக்காததால், மும்பையிலிருந்து 67 கிலோ மீட்டர் தள்ளி இருந்த பத்லாபூர் எனுமிடத்தில் தான் தங்க வேண்டி வந்தது. ஊருக்கான பெயர்க் காரணம் கேட்ட போது, பத்லா – மாற்றுதல், பூர் – ஊர். சத்ரபதி சிவாஜி காலத்தில், குஜராத்திலிருந்து கொங்கன் பகுதிக்கு செல்லும் வழியில் இந்த ஊரில்தான் குதிரைகளை மாற்றிக் கொள்ளும் பணி நடந்ததால் அப்பெயர் ஏற்பட்டது எனத் தெரிவித்தனர்.

அலுவலகம் மரைன் ட்ரைவ் பகுதியில் அமைந்திருந்தது. பத்லாபூரில் இருந்து, தினமும் காலை 7:00 மணி டிரெயின் பிடித்தால் தான் 9:௦௦௦௦00 மணிக்கு சி.எஸ்.டி. க்கும் அங்கிருந்து ½ மணி நேரம் நடந்து அலுவலகம் செல்லவும் சரியாக இருக்கும். மாலை ஆறு மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி 6:30 மணி டிரெயின் பிடித்தால் தான் 8:௦௦௦௦00 மணிக்கு வீடு போய்ச் சேர சரியாக இருக்கும். ஆரம்பத்தில் மிகவும் சிரமமாக இருந்தது.

சிறிது காலத்திற்குப் பிறகு டிரெயினில் இலக்கிய நண்பர்கள் குழு ஒன்று கிடைத்தது. எங்கள் குழுவிற்கு “சாகித்ய சாத் பஜே குரூப்” என மற்றவர்கள் பெயர் சூட்டியிருந்தனர். இதில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் தாய் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருந்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி என பல மொழிகளும் இதில் அடங்கும். ஒவ்வொருவரும் தங்கள் தாய் மொழியிலிருக்கும் இலக்கியங்களை பற்றி எல்லோருக்கும் பொதுவாக விளங்கிய ஹிந்தி மொழியில் மொழி பெயர்த்து சொல்வர். கேட்பதற்கு மிகச் சுவாரசியாமாக இருக்கும். இக்குழுவில் சேர்ந்த பின்தான் நானும் இலக்கியங்களை ஆழமாகக் கற்க ஆரம்பித்தேன்.

************

நான் அலுவலகத்தில் சேர்ந்த ஒரு வாரத்தில், சக ஊழியர் ஒருவருக்கு மகாராஷ்டிராவில் உள்ள வேறு ஒரு ஊருக்கு இட மாறுதல் கிடைத்தது. அதனால் அவருடைய வேலையான எழுதுபொருள் வாங்கி, அதை அங்கு பணி புரியும் அனைவருக்கும் கொடுக்கும் வேலையை என்னிடம் ஒப்படைத்து விட்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தார். அவர் என்னை எழுது பொருள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு, ஐந்து பெரிய பேரேடுகளுடன் அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஒவ்வொரு பொருட்களின் எண்ணிக்கையையும் பேரேடுகளில் உள்ளவற்றோடு ஒத்துப் போவதை சுட்டிக் காண்பித்தார். பின்னர் ஊழியர்களிடம் எழுதி வாங்க வேண்டிய படிவம் நிரம்பிய ஒரு பைலை கொடுத்தார். எந்த ஊழியராக இருந்தாலும் படிவம் எழுதி அதிகாரியின் கையொப்பத்துடன் கொடுத்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் என்றார். எந்த, எந்த அலமாரியில் என்னென்ன பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது, அதை எப்படி பராமரிப்பது என்பது பற்றிய விவரங்களையும் கூறினார். அப்பொழுது அங்கே இருந்த ஒரு கல், என் கவனத்தை ஈர்த்தது. அதுவும் திருப்பதி லட்டு சைசுக்கு இருந்தது. அது பற்றி நான் கேட்க ஆரம்பித்தபோது, பியூன் வந்து மேலதிகாரி அவரை அவசரமாக அழைப்பதாகக் கூறினான். அவர் என்னையும் அழைத்துக் கொண்டு அதிகாரியின் அறைக்குச் சென்றார். எல்லாவற்றையும் சொல்லியாகி விட்டதா எனக் கேட்டார். ஆம் என்றவுடன் அங்கே உள்ள பொருட்களை என்னிடம் ஒப்படைத்ததாக எழுதி கையொப்பம் இடச் சொன்னார். நான் ஒரு மாதிரி பார்க்கவே அதிகாரி இது ஒரு பார்மாலிட்டி தான் கையெழுத்து போடு ஏதாவது கூட கொறச்ச இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்றவுடன் கையொப்பம் இட்டேன்.

மீண்டும், நான் அந்தக் கல்லைப் பற்றி கேட்க வாய் திறந்த போது உடனே தான் புறப்படுவதாகவும் எதுவும் தேவைப்பட்டால் அலுவலக தொலைபேசியில் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி விட்டு அதற்கான தொலைபேசி எண்ணையும் கொடுத்து விட்டு அவரசமாக கிளம்பிச் சென்றார்.

அடுத்த வாரத்தில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் இன்னமும் பணியில் சேரவில்லை என்பதும், ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும் போது தூரத்தைப் பொறுத்து பணியில் சேர்வதற்கு சில தினங்களை விடுமுறையாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும், அதைப் பயன்படுத்தி அவர் விடுமுறையில் இருப்பதாகவும் தெரிய வந்தது.

********************

காலை 7:30 மணி. சாகித்ய சாத் பஜே குரூப்பில், டிரெயினில் இடம் பிடிக்கும் குழு, தானேவில் டிரெயின் நிற்கும் போது வடா பாவ், பஜ்ஜி பாவ் மற்றும் ஸ்நாக்ஸ் வாங்கும் குழு என துணைக் குழுக்களும் செவ்வனே செயல்பட்டு வந்தது. குழுவில் பெரும்பான்மையோர் பத்லாபூரிலும், ஒருவர் மட்டும் அம்பர்நாத் எனும் அடுத்த ரயில் நிலையத்திலும் ஏறுவர். இறங்கும் போது தாதர், பைகுல்லாவில் தலா ஒருவரும் மற்ற அனைவரும் சி.எஸ்.டியிலும் இறங்குவர். அதனால், குழுவின் பேச்சு உல்லாஸ் நகர் ரயில் நிலையத்தை கடந்த பின்தான் உற்சாகமாகத் தொடங்கும். அது தாதரில் நிறைவு பெறும். ஆரம்பத்தில் கேட்பதோடு நின்று விட்ட நான், ஒரு கட்டத்தில் அவைகளை எழுதியும் வைக்க ஆரம்பித்தேன். ஒரு நாள், ஒருவர் ஹிந்தியில் கூறிய கீழ்க் கண்ட கபீரின் வாசகம் என் நெஞ்சில் பதிந்தது.

ஹைசி வாணி போலியே கோயி ந கஹே சுப்

ஹைசி ஜகாஹ பைட்டியே கோயி ந போலே உட்

அதை நான் என் மொழியில் இவ்வாறு மொழி பெயர்த்தேன்.

அப்படிப்பட்ட வார்த்தைகளை போடு

யாரும் சொல்லக் கூடாது உன்னை வாயை மூடு

அப்படிப்பட்ட இடத்தில் அமர்

யாரும் உனக்கெதிராய் புரியக் கூடாது சமர்.

இதை இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தினால் கவிதையாய் மாறும் என்றார் நண்பர். நான் கவிதா லோகம் பிழைத்துப் போகட்டும் என்று விட்டு விட்டேன்.

********************

எனக்கு நேரம் கிடைக்கும் போது ஸ்டேசனரி அறையில் இருந்த ஒவ்வொன்றையும் சரி பார்க்க ஆரம்பித்தேன். அப்பொழுது சில பொருட்களின் உண்மை இருப்பும், பதிவேட்டில் இருப்பதும் பொருந்தாமால் இருப்பதை மேலதிகாரியிடம் சுட்டிக் காண்பித்தேன். அவரோ வேறு யாருக்காவது பொருட்கள் வழங்கும் போது சேர்த்து எழுதி வாங்கி சரி கட்டி விடு என்றார். அந்தக் கல் பற்றிய பதிவு அப்பதிவேட்டில் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. அது பற்றி முன்பு இருந்தவரிடம் தொலைபேசியில் கேட்ட போது, அது சொத்து பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன் பயன்பாட்டைப் பற்றி கேட்ட போது தனக்கு அது குறித்து எதுவும் தெரியாது என்றும் ஒவ்வொரு வருடமும் அதை அடுத்த ரிஜிஸ்டருக்கு முன்னெடுத்து சென்றதாகவும் தெரிவித்தார். நான் என் மேலதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் கேட்ட போது அவர்களின் பதிலும் அதுவாகவே இருந்தது.

********************

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை. நண்பர்கள் கேட்டுக் கொண்டபடி பிரின்ஸ் வேல்ஸ் மியூசியம் செல்ல ஏற்பாடானது. அங்கிருந்த ஒவ்வொரு பொருட்களைப் பற்றியும் இரு மொழிகளில் எழுதப்பட்டு இருந்தது. தரைத் தளத்தில் நுழைந்து வலது புறம் திரும்பியதும் வரிசையாக சிறியதும், பெரியதுமான பல கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அது எத்தனை வருடத்திக்கு முந்தியது என்பது பற்றிய குறிப்பும் எழுதப்பட்டு இருந்தது. நண்பர் கைடை நியமித்திருந்தார். கைட் ஒவ்வொரு கல்லும் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளை விளக்கி, தன் திறமையை நிரூபித்துக் கொண்டார். அதிலும் ஒரு குறிப்பிட்ட கல், என் அலுவலகத்திலிருந்த அக்கல்லை ஏனோ அப்போது நினைவுபடுத்தியது.

********************

நாட்கள் செல்லச் செல்ல அக்கல் என் மனதை குடைய ஆரம்பித்தது. ஒரு நாள் ரெகார்ட் ரூமிற்கு சென்றேன். அதன் காப்பாளரிடம் இங்கு எத்தனை ஆண்டுகளுக்கு முந்திய ஆவணங்கள் பாதுகாக்கப்படுகிறது எனக் கேட்டேன். அது, தேவையைப் பொறுத்தது. சில ஆவணங்கள் அதன் ஆயுட்காலம் முழுமைக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஏனையவை பத்து அல்லது இருபது வருடங்கள் பாதுகாக்கப்படும் என்றார். ஆனால் எந்த ரெகார்டை பார்க்க வேண்டுமோ, அதற்கான தேவையை எழுதி அதிகாரியிடம் கையொப்பம் வாங்கி வந்தால் தன்னால் குறைந்தது முப்பது வருடங்களுக்கு முந்திய ரெகார்டுகள் வரை தேடித் தர முடியும் என்றார். எனக்கு எத்தனை வருடத்திற்கு உரிய ரெகார்டு தேவைப்படும் என்றும் தெரியாது. காரணம் என்ன எழுதுவது என்றும் தெரியாது. அப்படிப்பட்ட நேரத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பை உபயோகப்படுத்தி அக்கல் பற்றிய உண்மையை கண்டறிவது என முடிவு செய்தேன்.

அதாவது அப்போது, என் மேலதிகாரிக்கு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அது அவரின் பி.எல்.ஐ. பிரிமியம் நிலுவை தொகை குறித்த கடிதம். உண்மையில், அது அவர் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு அலுவலகம் மூலம் செலுத்தப்பட்டிருந்தது. அதை அவர் எழுத்து மூலம் தெரிவித்த போது அலுவலகம் அதை உறுதி செய்து கடிதம் வழங்க கேட்டுக் கொண்டது. அதனால் அவர் என்னிடம் அது குறித்த பழைய ஆவணங்களை தேடி சமர்ப்பிக்கவும், ஆவண காப்பாளரை எனக்கு உதவி செய்யவும் பணித்திருந்தார். நான் அதை விரைவில் செய்து முடித்ததால், அவருக்கு என் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. நான் ஒரு நாள் அக்கல் குறித்த பழைய ஆவணங்களை பார்க்க விரும்புவதாக தெரிவித்த போது உடனே எனக்கு தேவையான உதவிகளை செய்ய ஆவண காப்பாளருக்கு உத்தரவிட்டார்.

நான் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் மாத ரெகார்டை எடுத்து கல் (stone) என எழுதப்பட்டதை வைத்து பின்னோக்கி செல்ல ஆரம்பித்தேன். பதினைந்து வருடத்திற்கு பிந்திய ஆவணத்தில் அது (stone) பற்றிய குறிப்பு இல்லை அதனால் பதினாறாவது வருடத்தில் தான் அது வாங்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வந்தது. அவ்வருடத்தின் ஒவ்வொரு மாத ரெகார்டையும் பார்த்த போது அது stone அல்ல என்பதுவும் உண்மையில் அது stove என்பதும் தெரிய வந்தது. ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு எழுதும் போது எழுத்துப் பிழை ஏற்பட்டுள்ளது. எழுத்தர் வேறு வழியின்றி ஏதோ ஒரு கல்லை கொண்டு வந்து வைத்துள்ளார். அது ஸ்டவ் தான் என்பதற்கு இன்னொரு ஆதாரமும் கிடைத்தது. தொடர்ந்து சில வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத பொருட்களை நிபுணர் குழு ஆய்வு செய்து ஏலத்தில் விற்று விடுவர். அப்படி அங்கிருந்து ஐந்து ஆண்டுகள் கழித்து விற்கப்பட்ட பொருட்களில் அந்த ஸ்டவ்வும் இருந்தது. ஒரு பொருளின் தேவையோ அல்லது பயன்பாட்டைப் பற்றிய அக்கறையோ எதுவும் இல்லாமல் அதை பதினைந்து வருடங்களாக தொடர்ந்து எழுதி வந்துள்ளனர். இதில் மாதம் ஒரு முறை அலுவலத்தில் உள்ள சக அதிகாரியின் ஆய்வும், வருடத்திற்கு ஒரு முறை தணிக்கையும் செய்யப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டு வந்தது விந்தையே.

அது குறித்து என் உயர் அதிகாரிக்கு ஒரு விரிவான அறிக்கையினை, உரிய ஆதரங்களுடன் சமர்ப்பித்தேன். அக்கல்லை இனி பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், அதை அங்கிருந்து அப்புறப்படுத்த (dispose) ஆணையிடவும் கோரி இருந்தேன். அதை பியூனிடம் கொடுத்து அனுப்பி விட்டு அக்கல்லை பார்த்து சிரிக்கவும் செய்தேன்.

ஒருமணி நேரம் கழித்து பியூன் அந்த பைலை திரும்ப கொண்டு வந்து கொடுத்தான். அதில் என் உயர் அதிகாரி, ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு தேய்மான விகிதாச்சாரம் உள்ளதாகவும் அதன்படி ஐந்து சதவிகிதம் அதன் தேய்மானம் என்றும், அது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொத்து பதிவேட்டில் பதியப்பட்டதால் இன்னும் ஐந்து வருடங்கள் அதை பாதுகாக்க வேண்டும் எனவும் அதற்குப் பிறகு அதனை டிஸ்போஸ் செய்யவும் ஆணையிட்டிருந்தார்.

அதனை உரிய பைலில் வைத்து விட்டு திரும்பினேன். இப்பொழுது அந்தக்கல் என்னைப் பார்த்து சிரித்தது. என் மனதில் “ஆங்கொரு கல்லை வாயிலிற் படி என்றமைத்தனன் சிற்பி” எனும் பாரதியின் பாடல் வரி மனதிற்குள் ஓடியது.

Stories you will love

X
Please Wait ...