துணிவு

பெண்மையக் கதைகள்
5 out of 5 (9 Ratings)
Share this story

காட்சி 1

சரியாக காலை 8.30 மணிக்கு பள்ளிக்கூடத்தின் இரண்டாவது மணி அடிக்கும். முதல் மணி 8.25 மணிக்கு ஒலிக்கும். அதற்குள் சென்றாக வேண்டும். இல்லையென்றால் வாத்தியாரிடம் அடி கிடைக்கும். ஆனால் அவளுக்கு உள்ளூர் என்பதால் பொறுமையாக தான் கிளம்புவாள். எப்பொழுதும் முதல் மணி அடித்ததும் தான் பள்ளியின் வாயிலுக்குள் நுழைவாள். மீசையை முறுக்கியப்படி முறைக்கும் விளையாட்டு வாத்தியாரிடம், பாவம் போல் முகத்தை காட்டி தப்பிப்பது அவளது தனி கலை.

கிராமம் என்பதால் உணவு கட்டிக்கொடுத்து அனுப்பும் பழக்கமெல்லாம் கிடையாது. மதிய உணவிற்கு வீட்டிற்கு தான் வர வேண்டும். சில சமயங்களில் சத்துணவு உண்பது உண்டு. ஆனால் அன்றைக்கு அவள் வீட்டிற்கு தான் வந்தாள். 8 வயது தான் நடக்கிறது என்பதால், ஒழுங்காக சாப்பிட தெரியாது. தட்டை சுற்றி உணவுப் பருக்கை சிந்தி கிடக்கும். யாராவது அள்ளிக்கொடுத்தால் மட்டுமே தொண்டைக்குள் வேகமாக சோறு இறங்கும். பள்ளிக்கூடத்தில் உணவு இடைவேளை முடிந்து மணி அடித்தது. அவ்வளவு தான் இங்கிருந்தே ஒட்டம் பிடித்தாள். தெருமுனையில் வளைந்து சுண்டெலி போல் ஓடிய போது அந்த மொட்டை அண்ணாவை கண்டுக்கொண்டாள்.

அண்ணாந்து பார்த்ததும் பல்லிளிக்கும் அந்த அண்ணாவின் முகம் கண்முன் வந்து நின்றது. ஆனால் பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் வழக்கம் போல் மிட்டாய் கொடுக்காமல், அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். ஒன்றும் புரியவில்லை என்றாலும் பின்தொடர்ந்தாள். வீட்டின் முன்பக்க அறையில் இருந்த சின்ன கட்டிலில் அமர்ந்தவர், அவளை மடியில் வைத்துக்கொண்டார். பிரியமான மிட்டாய் அண்ணன் என்பதால் ஆசையோடு கொஞ்சம் வசதியாகவே அமர்ந்துக் கொண்டாள். இதுவரை இல்லாத வகையில் மொட்டை அண்ணன் , அவளது காதை மெல்லமாக தடவினான். கன்னத்தை கிள்ளினான். இறுதியாக குட்டை பாவடை என்பதால் அவரது கை அங்கும் சென்றுவிட்டது. வெடுக்கென்று தொடையில் இருந்து இறங்கியவள், ஒரே ஒட்டமாக ஓடினாள்.

பள்ளியில் கணக்கு வகுப்பு தொடங்கியது. ஆனால் அவளிடம் பதற்றம் குறையவில்லை. 8 வயதான குழந்தையிடம் 25 வயது மொட்டை அண்ணன் நடந்துக் கொண்ட விதம் அவளை என்னமோ செய்தது. யாருக்கும் தெரியாமல் புளியமரத்தின் பின் நின்று கதறி அழுதாள். பள்ளி முடிந்து மணி அடித்தது. பையுடன் வீட்டிற்கு வேகமாக சென்றால், மொட்டை அண்ணன் வீடு வராத வேறொரு வழியாக !!

காட்சி - 2

பெரும் போராட்டத்திற்கு பிறகு சென்னையில் சென்று படிக்க அனுமதி கிடைத்தது. தனது கல்லூரி படிப்பை மேற்கொள்ள கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தாள். அப்போது தான் புதிதாக ஒரு அண்ணாவும் அவரது குடும்பமும் அறிமுகம் ஆனது. திருமணமாகி 10 வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் அந்த அண்ணாவும் அவரது மனைவியும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தனர். இதனால் அவளை செல்லமகள் என்று அவர் அழைத்துக்கொள்வார். மேலும் அவளது கல்லூரி படிப்பு செலவுகளை எல்லாம் அந்த அண்ணா தான் பார்த்துக்கொண்டதால், அவளுக்கு அவரிடம் கடன்பட்டது போல் ஆகிவிட்டது.

ஒரு நாள் நல்ல மழையில் காரில் அவருடன் சென்றுக்கொண்டிருந்தாள். ரொம்பவே வாயாடி தான் ஆனால் சென்னை நாகரிகம் அவளை மெளனமாக்கிருந்தது. அவராகவே தான் ஏதோ கேட்டு பேசிக்கொண்டே வந்தார். சொந்த ஊரை விட்டு வந்த சோகம் அவளை வாட்டி வதைத்துக் கொண்டு இருந்தது. திடீரென்று கார் ஓரமாக நின்றது. உன் முகம் கலையானது என்றவாறு அருகில் வந்து பேச்சு கொடுத்தார். சட்டென்று அவளது கன்னத்தில் முத்தமும் கொடுத்தார். அதனை சற்றும் எதிர்ப்பார்க்காதவள் திடுக்கிட்டுப் போனாள். ஆனால் இது சென்னை நாகரிகமாக இருக்கலாம் இல்லையா..? அப்பா மகளுக்கு கொடுக்கும் முத்தமாக கூட இருக்கலாம் இல்லையா..? என்று பல சிந்தனையில் மூழ்கிப் போனாள்.

அடுத்த நாள் கல்லூரிக்குச் சென்றும் கூட அவளால் அந்த முத்தத்திலிருந்து விடுப்பட முடியவில்லை. உள்ளுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கும் அந்த கேள்விக்கு, அவளால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவரை சிறந்தவர் என்று குடும்பமே கொண்டாடும் போது, எவ்வாறு நாம் மட்டும் தவறாக நினைப்பது..? யாரிடமாவது சொன்னால் நம்மை பற்றி என்னை நினைப்பர்..? என்று பலவாறு யோசனையில் ஆழ்ந்துப் போனாள்.

நாட்கள் புரண்டது. மீண்டும் அதேபோல் ஒரு நாள் சந்திப்பு நடந்தது. அவரும் அவளும் தனியாக இருக்கும் சூழல் ஏற்பட்டது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அந்த சூழலை அவர் தான் ஏற்படுத்திக்கொண்டார். தன்னை விட 15 வயது பெரியவரான அவரை, வாய் நிறைய அண்ணாவென்று அழைத்து மகிழ்ந்திருந்தாள். ஆனால் அவரது இந்த நடவடிக்கைகள் அவளை மனதளவில் மிகுந்த வலியைக் கொடுத்தது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தனக்குள்ளே புழுங்கிக் கொண்டு இருந்தாள். இந்த முறையும் அவளது கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டு, மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டார்.

சட்டென்று அவரது நெருக்கத்தில் இருந்து விலகிக்கொண்டாள். கைகள் நடுங்கியது. கண்ணீர் வடிந்து கழுத்து வரை சென்றிருந்தது. காருக்கு காத்திருக்காமல் விறுவிறுவென்று நடந்து வந்து பேருந்து ஏறி விடுதி வந்து சேர்ந்தாள். மூன்று வருட கல்லூரி படிப்பை முடித்தால் மீண்டும் அந்த அண்ணாவை சந்திக்காமலே!!

காட்சி 3

மாதம் எட்டாயிரம் சம்பளத்தில் கிடைத்த முதல் வேலை. மொத்தமே 10 பேர் தான். அதில் இவளும் ஒருத்தி. ஒரு நாளைக்கும் 10 யிலிருந்து 12 மணி நேரம் வரை வேலை இருக்கும். பல தவறுகளை செய்து தன் முதலாளியிடம் வசை வாங்கிக்கொண்டு தான் இருந்தாள். அதனால் அவரை பார்த்தாலே இவளுக்கு ஒரு வித பயம் வந்துவிடும். அவரிடம் சென்றாலே பேச்சு கூட வராமல் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். ஆனால் ஒரு நாள் அனைத்தும் மாறி, வேறாக நடந்தது.

அன்று அலுவலகத்தில் அவரும் அவளும் மட்டும் தான் இருந்தனர். மாலை 6 மணி இருக்கும், அவளை அழைத்து தேநீர் குடிக்க போலாமா என்று கேட்டார். அவளுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருந்தது. இருவரும் இருள் மங்கிய அந்த சாலையில், நடந்து சென்றனர். முதலில் அவர் தான் உரையாடலை தொடங்கினார். அவள் தன்னை பற்றி கூறியதை வைத்து அவளது பின்புலத்தை ஒரளவு தெரிந்துக்கொண்டார். ”நீ ரொம்ப கடினமான கட்டங்களை எல்லாம் தாண்டி வந்திருக்கே மா.. நீ எனக்கு முத்த மகள் மாதிரி” என்று கூறி தலையை கோதிவிட்டார்.

இப்பொழுதெல்லாம் தினமும் மிக உற்சாகமாக அலுவலகம் வருகிறாள். மிக பிடித்த இடமாக மாறிப்போனது. இப்படியே நாட்கள் செல்ல தீபாவளி பண்டிகை வந்தது. நடிகர் விஜய்யின் மெர்சல் படம் அன்று தான் திரையரங்குகளில் வெளியானது. அவள் மீடியா தொடர்பான யூடியூப் சேனலில் வேலை செய்ததால், அன்று நிறைய வேலை இருந்தது. அதனால் எல்லோரும் அதிகாலையிலே அலுவலகம் வந்துவிட்டனர். அவளும் வந்தாள். ஆனால் உண்மையில் அவளுக்கு பணிக்கு வர பிடிக்கவில்லை. ஏனென்றால் அதற்கு முந்தைய நாளில் நடந்த சம்பவம் தான் அதற்கு காரணம்.

ரொம்ப நெருக்கமாக பழகும் அவளது முதலாளியின் நடவடிக்கை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது என்று உள்மனது சொல்லிக் கொண்டே இருந்தது. அவளிடம் பயம் வந்து தொற்றிக்கொண்டது. மீண்டும் கைகள் நடுங்கத் தொடங்கியது. வாழ்க்கையில் யாரையும் நம்பக்கூடாது என்ற எண்ணம் தோற்றிக்கொண்டே இருந்தது. அதிகாலை பணியில் இருந்த அவளிடம் அவன் தவறாக நடந்துக்கொண்டான். அவளது மார்பை அழுத்தினான். அவளிடம் நெருங்கி வந்து கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தான். அவளால் தடுக்க முடியவில்லை. அதனை தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை.

”எனக்கு விருப்பமில்லை” என்று அழுத்தமாக கூறி அங்கிருந்து உடனே கிளம்பி, பேருந்து நிலையம் வந்து அமர்ந்துக்கொண்டாள். கண்களிலிருந்து முட்டிக்கொண்டு வரும் நீரை அவளால் அடக்க முடியவில்லை. கதறினாள். தேம்பினாள். பேருந்து வருவதற்கு இன்னும் 45 நிமிடங்கள் இருந்தது. கண்களை துடைத்தாள். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். நன்கு வசதியாக உட்கார்ந்துக்கொண்டு, இப்பொழுது கண்களை மூடினாள்.

முதலில் மிட்டாய் அண்ணா வந்தார். பின்னர் கார் ஓட்டும் அண்ணா வந்தார். அதனை தொடர்ந்து அப்பா என்று சொன்னவர் வந்தார். அவர்கள் எல்லோரும் ஒரு கட்டத்தில் கொடூரமாக மாறியது நினைவுக்கு வந்தது. மிரண்டாள். ஆனால் கண்களை திறக்கவில்லை. உள்ளத்தின் நடுக்கம் சற்று தணிந்தது. நாம் ஏன் பயப்பட வேண்டும்..? கண்ணீர் எதற்கு சிந்த வேண்டும்..? நடந்தவற்றில் என் பொறுப்பு என்ன இருக்கிறது..? என்னும் கேள்விகள் அவளை தைரியப்படுத்தியது.

அண்ணனும் அப்பாவும் நலுறவை மறந்து ஏமாற்றியது ஏன்..? இந்த உடலை திண்ண எறும்புகளாக என்னை மொய்த்தது எதனால்..? தவறிழைத்தவர்கள் அங்கேயே நின்றபோதும், நாம் ஏன் ஓடினோம்..? ஒளிந்தோம்..? நெடுநேரம் கழித்து பேருந்து சத்தம் கேட்டு விழித்தாள். ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து அவளோடு பேசத் தொடங்கினாள். என்னிடம் நடந்த பாலியல் அத்துமீறல்களுக்கு நான் காரணமில்லை. என் குடும்ப வறுமையை பயன்படுத்தி என்னிடம் குரூரமாக நடந்துக்கொண்டார்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதையுடன் வாழும் அவர்களின் அசிங்கத்தை நான் தெரிந்துக்கொண்டேன். இதில் நான் குனிக்குறுகி போய் தலைக்குனிந்து நிற்க ஒன்றுமில்லை என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

அவளுக்குள் இப்போது ஒரு தெளிவு கிடைத்தது. கைகள் நடுக்கவில்லை. யாருக்கும் பயமில்லை. புது ஞானம் பிறந்தது. மனிதர்களிடம் கவனமாக இருக்கவேண்டும் எனும் பாடத்தை கற்றுக்கொண்டாள். பேருந்து நின்றவுடன் இறங்கி, எந்த குழப்பமின்றி வீடு திரும்பினாள். அடுத்த நாள் காவல்நிலையம் சென்று ஒரு புகாரும் கொடுத்தாள்.

Stories you will love

X
Please Wait ...