JUNE 10th - JULY 10th
"மாமியார் இல்லாத வீடு"
அவசர அவசரமாக வெளியே வந்தவள், கொஞ்சம் உறைந்து தான் போனாள். இது என்ன கனவா! ஆமாம்.. அதே போலவே.. அது அத்தையாகத்தான் இருக்கும்.. வேகமாக பின்னாலேயே சென்றவள் ஏமாற்றமாகி வீடு வந்தாள்... இது என்ன புது விதமான உணர்வு? அவர்கள் போயி வருடங்கள் ஓடி விட்டது ..இன்னும் நினைவுக்குள் அப்படியே இருக்கிறது
...பெண் பார்க்க வந்த அன்று என்னை அழைத்து பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு ஆளைபோல் மிகவும் அழகாகப் பேசினார். 'உனக்கு என்ன கலர் பிடிக்கும்?' 'என்னென்ன ட்ரெஸ் பிடிக்கும்'ன்னு கேட்டு, பெண் பார்க்க வந்தது போலவே இல்லாமல் அத்தனை அன்போடு பேசினவர் அத்தை..
நான் இதை அக்கம் பக்கத்தில் சொன்னபோது 'அதெல்லாம் நாடகமா இருக்கும். நம்பிடாத, அந்த பையன் ஒரு வார்த்தை பேசினானா உன்கிட்ட என்றனர்' ..ஆனால் அவர் என்னை அவ்வப்போது நிமிர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.
இதை எப்படி நான் அந்த சமயம் இவர்களிடத்தில் சொல்வது!? அப்புறம் திருமணத்துக்கு முன்பே கண்ணு காது வச்சி பேசிடுவாங்களே... அப்போது நான் அணிந்திருந்த செயின் மூணாவது தெரு பரிமளா அக்காவுடையது ...இப்போது மாதிரி அப்போல்லாம் எந்த ஒரு விதவிதமான விக்கிற நகையெல்லாம் வாங்கியது இல்லை. திருவிழா நாட்களில் கலர்கலர் வளையல், பொட்டு, ரிப்பன், அப்புறம் பஞ்சுமிட்டாய், மிட்டாய் தாத்தா கட்டிவிடும் மிட்டாய் வாட்ச் என அவ்வளவு சந்தோசம் கொடுக்கும் நாட்கள் அவை.
..நகையெல்லாம் அவ்வளவாக இருக்காது ..ஏதாவது விசேஷங்களுக்கு இப்படிதான் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடத்தில் வாங்கி அணிவதே வழக்கம் ..அப்படித்தான் நான் அணிந்திருந்த அந்த செயின் பரிமளா அக்காவுடையது என்பதை சொல்ல வேண்டும் என்பது மனதுக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது.
"பூ நீ தொடுத்ததாம்மா?", என்று அவர்கள் கேட்கும்போது, "ஆமாம்மா", என்றதை பார்த்துவிட்டு "..அழகா கட்டியிருக்க, புடவை கூட கொசுவம் அழகா வச்சிருக்க ..எங்க வீட்டுக்கு வந்ததும் எனக்கும் இப்படி ஒருநாள் கட்டிவிடுறியா?", என்று கேட்டதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
"...ம்..ம்..ம்...",என்று நான் இழுக்க
"...என்னம்மா.. நீ எங்கவீட்டு இளவரசி.. எங்களுக்கு பெண் பிள்ளை இல்லை. நீ வந்து அந்தக்குறைய தீர்ப்பேன்னு தெரியும்", என்று அவர் சொல்லும்போது அவர் கண்களில் நீர் கோர்த்திருப்பதை, எவருக்கும் தெரியாமல் அதை அவர் துடைத்ததை நான் அறிந்தேன், நிச்சயமாக அவர்கள் நடிப்பது போன்று இல்லை...
'மறுநாள் சென்று லட்டர் போடுகிறேன்' என்றெல்லாம் சொல்லவில்லை. நேரடியாக என்னிடமே கேட்டுவிட்டார்.
"ஒனக்கு என்னுடைய பையனப் புடுச்சிருக்காம்மா? ஒரே பையன்தான். கை நிறைய நல்ல சம்பளத்துல இருக்கான். எங்க வீட்டு மருமக நீதான்னு ஒன்னப் பாத்ததுமே மனசு நெறஞ்சுடுச்சும்மா", என்று சொல்லி தலையில் பூவை வைத்துவிட்டார்கள் ....
"கவிம்மா இது உன் வீடு, நீ இந்த வீட்டுக்கு வந்து இருக்கிற மருமகள் இல்ல, எங்களுடைய மகளாத்தான் ஒன்ன பாக்குறோம், என்னுடைய மகன, இல்ல இல்ல ஒன்னோட புருஷன பத்திரமா பாத்துக்கோ. அவனுக்கு என்னென்ன புடிக்கும்னு அவன கேட்டு தெரிஞ்சிக்கோ... ஒடனேயே குழந்தை குட்டி வேணாம். நல்லா வாழ்க்கையை அனுபவிச்சி வாழ்ந்துட்டு, எப்ப உங்களுக்கு தோணுதோ அப்ப பெத்துக்கோங்க..", என்று அத்தை சொல்லும் போது, அதில் எந்த வித விகல்பமோ இல்லை..
'மாமியார்னா ரொம்ப ஆணவமா இருப்பாங்க' 'அவங்க பையன்கிட்ட ஒன்ன பத்தியும் நம்ம குடும்பத்த பத்தியும் தப்பு தப்பா சொல்லி வைப்பாங்க' 'கல்யாணம் ஆனதும் புருஷன் ஒன்னோட பேச்சு மட்டும்தான் கேக்கணும்' 'அப்படி மாத்தி வைக்கணும்.. சரியா", என்று தான் அம்மா சொல்லியிருந்தாள்..
ஆனால் இங்க மாமியார் ஒரு மாமியாராகவே இல்ல, ஒரு நல்ல தோழியாகவே பழகினார்..
"கவிதா இந்த புடவையில அழகா இருக்க, பாரேன் ஒன்னோட புருஷன் மயங்கிடப் போறான். அப்படிதான் சொல்வாங்க, நானும் அத்தையும் எங்க அம்மாவே பொறாமை படும் அளவுக்கு இருந்தோம். என்னடி நீ எப்பபாத்தாலும் 'எங்க அத்த' 'எங்க அத்த'ன்னு சொல்லிக்கிட்டு, என்னையே சராசரி மாமியாரா இல்லாத மாத்திடுவ போல என்பாள்
...அத்த ஆசை பட்டது போலவே அவர்கள் திருமணநாள் அன்று அழகாக மடிப்பு வைத்து புடவை கட்டிவிட்டேன். அவர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் ..
"எனக்கு இதெல்லாம் தெரியாது கவிம்மா. அப்படியே அள்ளி சொருவிக்கிட்டு வேலை செய்வேன். வெளியில போறப்ப கொஞ்சம் சொருகுனத சரி பண்ணி, அப்படி இப்படின்னு காலமும் போயிடுச்சு. ஒன்ன மாதிரி பொம்பளப் புள்ளைங்க அழகா புடவைய எடுத்துக் கட்டிட்டுப் போகும் போது பாத்து பாத்து ரசிப்பேன். உனக்கு ஒன்னு தெரியுமா? நான் கோவிலுக்கு போறதே வயசு பொண்ணுங்கள பாத்து பாத்து ரசிக்கத்தான்", ..என அவர்கள் சொன்ன போது..
"எப்படி அத்த நீங்க இப்படி இருக்கீங்க? உங்களுக்கு கோபமே வராதா?",
"நான் என்னுடைய மாமியார் எங்கிட்ட இப்படியெல்லாம் இருக்க மாட்டாங்களான்னு ஏங்கி இருக்கேன் ...சராசரி மாமியாரா இல்லாம, குத்தங்குறை பார்க்காம, நம்ம வீட்ல எப்படி இருக்கோமோ அப்படித்தான் போகுற வீட்லயும் இருக்கணும்னு எல்லா பொண்ணுங்களும் நினைப்பாங்க. அது என்னமோ எல்லாம் மாறி, அந்தக் காலத்துல இருந்தே ஒரு சில மாமியார்ங்க, நம்ம பையன்.. எங்க கல்யாணம் ஆனதும் மாறிடுவானோன்னு பயந்துகிட்டு.. பிரச்சனை பண்றது.. வர்ற பொண்ணுங்க இரண்டு குடும்பத்தையும் ஒன்னுன்னு நினைச்சாலே போதும்"
"அப்போ மாமனாருக்கு அவ்வளவா வருமானமெல்லாம் இல்ல ..ஆனா வீட்ல வசதிக்கு குறைவிருக்காது ..அவரோட தம்பிக்கு கல்யாணம் பண்ணினோம். வீடே மாறிடுச்சு.. அத்த என்ன எங்கேயும் வெளியே அனுப்ப மாட்டாங்க. எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்வேன் ..இது நம்ம வீடுங்கர அந்த காரணத்துக்காக, கல்யாணம் ஆகி ஒன்னோட புருஷன் வயித்துல வர ஆறு வருஷமாச்சு"
"ஆனா ..வீட்டுக்கு வந்த இரண்டாவது மருமகளுக்கோ ஆறே மாசத்துல இரட்டை குழந்தை.. அவ்வளவு சந்தோஷப்பட்டேன். எந்த வித பாசாங்கு இல்லாத பாசத்தோட அள்ளி அணைக்கப்போகும் போதெல்லாம் அத்தையோட குத்தலான பேச்சுல மனசே மறத்துடும் ..கடவுளே நா என்ன தப்பு பண்ணுனேன்? எனக்கு ஏன் இந்த தண்டனைன்னு, படுக்கும் போதும் எந்திரிக்கும் போதும் அழாத நாளே இல்ல
...ஒரு நாள் குழந்தை கையிலேருந்து துள்ளிடுச்சு.. அப்படியே என் ஈரக்குலையே நடுங்கிடுச்சு.. ஓடி வந்து அங்கு மாமனார் புடுச்சுட்டார்.. இது துள்ளி விளையாடுற காலம்.. நீ கையில் பாத்து வச்சுக்கோன்னு சொன்னாரு.. ஆனா அத்த அன்னையிலேருந்து 'சின்னவனோட குழந்தைய இனிமே நீ தூக்க கூடாதுன்னு' கட்டளை போட்டுட்டாங்க. ஒரு சில நேரத்துல சின்னவ தூங்கிடுவா.. அப்ப குழந்தை கத்தும்போது வயிரெல்லாம் பெசையும் பாரு.. அப்பப்பா.. அந்த வேதனை சொல்லி மாளாது ..ஆனா திடீர்னு அத்தைக்கு முடியாம போயி சேர்ந்துட்டாங்க..
ஒன் புருஷன் அதுக்கப்புறந்தான் பொறந்தான் ...மாமாவும் கொஞ்ச நாளில் போயிட்டாரு.. ஆனா அவர ஒரு மனுசனாவே சின்னவ மதிக்கல.. அந்த வேதனையிலேயே அவரும் போயாச்சு... ஒன்னோட புருஷன் வளர்ந்தான்.. அந்த ஊரவிட்டு வேற ஊருக்கு வந்தோம்.. பாதி வயிறும் பாதிப் பட்டினியுமா பிள்ளையை மட்டும் நல்லா வளர்க்கணும்ன்னு வளர்த்தோம் ..ஆனா வரப்போற மருமகள் நல்ல படியா என்னோட மகனோட சந்தோஷமா வாழனும்.. அத நாங்க பாத்து சந்தோஷப்படணும்னு அவ்வளவு ஆசை"..ன்னு சொல்லிட்டு, அவங்க கணவரோட தம்பி பசங்கள பாக்கப் போனாங்க. இவரை விட அவங்கல்லாம் பெரிய ஆள். இவங்கள பாத்ததும் துள்ளி குதிச்சு ஓடி வருவாங்கன்னு நெனச்சாங்க. ஆனா அவங்களோ இவங்களப் பாத்து "நீங்க யாரு"ன்னு கேட்கவும், அப்படியே ஒடஞ்சி போயி அழுதாங்க ..பிள்ளைங்களுக்கு அத்தை, பெரியம்மா, சித்தப்பா, சித்தின்னு உறவுகளச் சொல்லி வளர்க்கணும்மா ..பணம் இன்னைக்கி வரும் நாளைக்கு போயிடும் ...உறவோட ஒரே ஒரு சொல்லு இருக்கே, அதுக்கு ஈடு இணையே இல்லன்னுட்டு படுத்தவங்கதான் எழுந்திரிக்கவே இல்ல...
ஆனா அத்த போலவே முகத்தப் பார்த்ததும் ஓடிட்டேன். அத்தை இல்லாத அந்த வீடு ‘எப்படி உறவுகள மதிக்கும்’ என்று ஏங்கினாள்...
(முற்றும்)
வே. புனிதா வேளாங்கண்ணி
#832
मौजूदा रैंक
61,747
पॉइंट्स
रीडर्स पॉइंट्स 80
एडिटर्स पॉइंट्स : 61,667
2 पाठकों ने इस कहानी को सराहा
रेटिंग्स & रिव्युज़ 4 (2 रेटिंग्स)
padma.rajamani
A Velanganni
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10पॉइंट्स
20पॉइंट्स
30पॉइंट्स
40पॉइंट्स
50पॉइंट्स