பதிலை எதிர்பாரா கேள்வி

radha
பெண்மையக் கதைகள்
5 out of 5 (20 रेटिंग्स)
कहानी को शेयर करें

"பதிலை எதிர்பாரா கேள்வி"

சுடச்சுட தோசை வார்த்து உருளைக்கிழங்கு மசாலா கறி நடுவில் வைத்து அழகாக மடித்து தட்டில் போட்டு ஓரத்தில் துளி சட்னியை வைத்து,சாப்பிட வாங்க என கலா கூப்பிட கேரம் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது காவ்யா,எட்டு வயது கௌசிக் "அம்மா பசிக்கலேம்மா"! எடுத்து வைத்து விட்டு ஆபீஸ் போங்க, நாங்க பிறகு சாப்பிடுகிறோம் இன்னிக்கு சனிக்கிழமை ஸ்கூல் லீவ்...

லீவ்' னு விளையாடிண்டே இருக்க கூடாது,படிக்கனும் எனக்கு இன்று OT நான் வர நேரமாகும்...
"இருட்டின பிறகு தான் வருவியா? பயமா இருக்கும்மா..ஓ.டீ வேணாம்மா! வேகமா வந்துடு"!! காவ்யா விற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது,
பயமா? எதுக்கு பயம்,உங்க கூடவே இருக்க முடியுமா?
அடம் பிடிக்காதீங்க எனக்கு உங்களிடம் பேச நேரமில்லை ஆபீஸ் பஸ் வந்துடும் டைம் ஆகிறது நான் புறப்படனும்...கலாவிற்கு தினமும் காலை இதே பர பரப்புதான் காலில் வெந்நீர் கொட்டியதைப் போல மளமளவென கிச்சனுக்கும் ஹாலுக்கும் ஓடிண்டே இருப்பாள்...சமையல் செய்து, தன் கேரியரில் அடைத்து, கணவன் பாஸ்கருக்கும் பாக்ஸில் போட்டு வைத்து ஆபீஸ் கிளம்பனும்

குழந்தைகள் இருவரையும் குளிக்க வைத்து, யூனிபார்ம் போட்டு, சாப்பிட கொடுத்து கேரியர் பேக்,தண்ணிர் பாட்டில் எடுத்து வைத்து அவர்களை ஸ்கூல் அனுப்பி விட்டு பாஸ்கர் ஆபீஸ் கிளம்பனும் ...தினமும் பாஸ்கர் வேலை இது
வீட்டு வேலைகளை,குழந்தைகளை கவனித்துக் கொண்டு,அழகான புடவையில் தன்னையும் பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொண்டு 9 மணிக்கு ஆபீஸ் போகும் பேங்க் வேலை இல்லை கலாவின் வேலை... ஒரு பிரைவேட் ஜூஸ் கம்பெனியில் ஊழியர், காலை ஏழு மணிக்கு அங்கிருக்கனும்,சொற்ப சம்பளம் தான் ஆனால் கஷ்டமோ நஷ்டமோ அந்த வேலையை விட்டு விட மனசில்லை.. விட்டால்?அவள் படித்த எஸ்எஸ்எல்சி படிப்புக்கு எங்கும் வேலை கிடைக்காது கணவன் பாஸ்கர் சேல்ஸ் ரெப்.. ஸ்கூட்டரில் காலை வீட்டை விட்டால் வீடு வர என்னேரமாகுமோ அவனுக்கே தெரியாது, அதிகாரிகளின் குடைச்சல், வேலை அழுத்தம் பாஸ்கருக்கு.
கலாவின் சொற்ப சம்பளம் கண்டிப்பாக தேவை, குடும்பம் நடத்த குழந்தைகளைப் படிக்க வைக்க... பணம் பணம் என இருவரும் பணத்தின் பின்னால் ஓடினார்கள்

ஓடி,ஓடி உழைத்தாலும் சேர்த்து வைத்தது குன்று போல சொற்பமாக இருந்தாலும் குழந்தைகள் இருவரும் நன்கு படித்து வளர்ந்து நிற்பதை பார்க்கையில் மனசுக்கு திருப்தியாக இருந்தது கலாவிற்கு குழந்தைகள் வளர்ந்து வரும் தருவாயில்,
திடீரென கணவன் பாஸ்கரன் நோய் வாய்ப்பட்டு இறக்க,ஒரு ஷணம் ஆடிப் போய் விட்டாள் கலா பிறகு சுதாரித்துக் கொண்டாள்.. தனியாளாய் உழைப்பு தொடர்ந்தது பிள்ளைகள் மேற்படிப்பு படிக்கனும், வேலைக்கு போகணும், வெளிநாடு போகனும்,நகை நட்டு சேர்க்கணும்,வீடு கட்டணும், பெண்ணிற்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்கனும்,பிள்ளைக்கு வரன் பார்த்து திருமணம் முடிக்கனும், நிறைய 'க்கனும்'...அப்பாடான்னு பல வருட உழைப்பு,சௌகரியங்கள்,ஆசைகள் தியாகம் செய்ய... இதெல்லாம் ஓரளவு நினைத்தப்படி நடந்தது.

முடிவில்? முடிவே இல்லாத வாழ்க்கை ஒரு தொடர்கதை தான் ஏதேதோ ஞாபகங்கள்...அயராது உழைப்பு பிள்ளைகளை உயர்த்தியது, வருடங்கள் ஓட ஓட கூட வயதும் அல்லவா ஒரே ஓட்டமாக ஓடி விட்டது

அப்பாடா என வேலை முடித்து நிமிர்ந்து பார்க்க எங்க நிமிர்ந்து பார்ப்பது? நிமிரவும் முடியாது கூன் போட்டது உடம்பும் முதுகும்,கால்வலி,பீபி சுகர் கேட்காமலே விருந்தாளியாக வந்து தங்கிவிட்டது.

குடும்பத்துக்காக குழந்தைகளுக்காக ஓடி ஓடி உழைத்து அப்பாடா நாம் நமக்காக வாழலாம் என திரும்பி பார்த்தால் உழைத்த கை கால்கள் ஓய்ந்து போய் விட்டன பிள்ளைகள் உழைக்க ஆரம்பித்து விட்டனர் அவர்களின் பிள்ளைகளுக்காக உலகமும் வாழ்க்கையும் வேலையும் வட்டமாக தான் சுழல்கிறது.

"கலா மாமி என்ன நினைப்பு காலையிலிருந்து ஒரே சோகமாகவே இருக்கேள்? ஆறு மாதத்திற்கு பிறகு வெளி நாட்டிலிருந்து உங்களை பார்க்க வரும் உங்க பிள்ளையின் நினைப்போ?... முதியோர் இல்லத்தில் தன் தோழி கற்பகம் தோளை தொட்டு எழுப்ப நிஜ உலகு நிதர்சனமாகத் தெரிந்தது.

பிள்ளையை நன்கு படி படின்னு சொன்னதும் வெளிநாடு போக சொன்னதும் நான் தான்... சொல் பேச்சு கேட்டு செய்கிறான்....வெளி நாடு போனதும் தன்னுடன் வேலைப்பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு அப்பா ஆகிவிட்டான் மருமகள் வெகு சாமர்த்தியமாக தன் பெற்றோர்களுக்கு க்ரீன் கார்டு வாங்கி கொடுத்து அம்மா அப்பாவை தன்னுடன் வைத்துக் கொண்டாள்
என் பெண் காவ்யாவிடம் "மாமியார் மாமனாருக்கு அடங்கி நட, தனியே போகாதே அவர்களை கேட்காமல் எதுவும் செய்யாதே என சொல்லி வளர்த்தேன் திருமணமானதும் அவளும் என் சொல் பேச்சு கேட்டு தான் செய்கிறாள்,அவள் வீடு,கணவன்,குழந்தைகள் என...அவள் மாமியாரிடம்,கணவனிடம் கேட்காமல் எங்கும் போவதில்லை என்னை பார்க்க கூட வருவதில்லை...கடைசி காலத்தில் தனிமை பயம் வந்துடுத்து, இந்த தரம் பாஸ்கரிடம் இங்கிருந்து என்னை அழைத்து போக சொல்லிடனும்

இப்படியான என் வாழ்க்கையை,மனதிலுள்ளதை பேச மட்டுமே முடிந்தது முதியோர் இல்லத்திலுள்ள இந்த கற்பகத்திடம் பாவம் அவளும் முதியோர் இல்லவாசி.."உன் பையன் மருமகள் பேரப் பசங்க வெளி நாட்டில் இருப்பதால் உன்னை இங்கு விட்டுட்டு போயிருப்பது ஞாயம் தான் கலா ஆனா என் பிள்ளைகள் இருவரும் இதே ஊரில் தன் பெண்டாட்டி குடும்பம் குழந்தைகள்னு சொந்த வீட்டில் சௌகரியமா இருக்காங்க, எனக்கு உடம்பில் தெம்பிருக்கு ஒரு வியாதியில்லை,ஆனாலும் அவங்களுக்கு நான் சுமையாயிட்டேன்... என்னை இங்கு விட்டுட்டாங்க"!,பாவம் தன் கதையை கூறி அலுத்துக் கொள்வாள் கற்பகம்.

மறுநாள் காலை ஒரு வேலை விஷயமாக இந்தியா வந்த பிள்ளை பாஸ்கர் முதியோர் இல்லத்தில் அம்மாவை பார்க்க பத்து நிமிடம் நேரம் ஒதுக்கி வந்தான்... பிள்ளையை பார்த்ததும் அழுகை தான் வந்தது மனதிலிருப்பதை உரிமையுடன் உரியவனிடம் பேசி ஆறுதல் தேட முனைந்தது கலாவின் மனம்


"எதுவுமே அனுபவிக்காமல் உங்களுக்காகவே வேலை வேலை என உழைத்தேன் பாஸ்கர்"!!மேற்க் கொண்டு பேச விடவில்லை பாஸ்கர்,அவன் பேச ஆரம்பித்துவிட்டான்

"ஆமாம்மா நாங்களும் சிறுவயதில் எதையும் அனுபவிக்கவில்லை வெளி ஊர்களுக்கு போவதோ, விளையாடுவதோ, ஒரு சினிமா படமோ, உறவு வீடுகளுக்கு செல்வதோ, நல்ல துணிமணி,ஓட்டல்,பார்க், பீச் என எதுவுமே அனுபவிக்கவில்லை.
முக்கியமான தாய் பாசம்....உன் கடடமையை செய்தே,ஆனால் தாய்ப்பாசம் எங்களுக்கு கிடைக்கவே இல்லை நீ வேலை வேலைனு பறந்தே! எங்க மனசை கவனிக்கலை, உன்னையும்,உன் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளலை பணத்தை மட்டுமே கவனிச்சே,பணம் தேவைதான் அதனுடன் எங்களுக்கும் தாய்ப் பாசம் மிக மிகத் தேவைப்பட்டது, உனக்கு பிள்ளைகள் அருகாமை இப்போ தேவைப்படுவது போல் அன்று உன் அருகாமை எங்களுக்கு தேவைப்பட்டது அன்று நீ எங்களுக்காக செய்ததை இன்று என் பிள்ளைகளுக்காக நாங்கள் ஓடி ஓடி உழைக்கிறோம்
நீ முதியோர் இல்லத்தில் என் பிள்ளைகள் ஹாஸ்டலில் ...நாங்க பணத்தின் பின்னால்..

ஆமாம் கார்த்திக்!! உழைச்சு உழைச்சு ஓஞ்சப்போ "எதுக்காக உழைச்சோம்னு எனக்குள் ஒரு கேள்வி!! ஆனால் அதற்கு பதில் இல்லை என தெரிந்தும் அடிக்கடி மனதில் பதில் எதிர்பாராத ஒரு கேள்வி தொங்கி நிற்கிறது

"அம்மா எதற்கும் பயப்படாதே! நாங்க இருக்கோம் தைரியமாய் இரு! இப்போது வயசானவர்கள் எல்லாம் தனியா இருக்க கூடாதும்மா! முதியோர் இல்லம் இருப்பதே நீங்க எல்லாம் நல்லா இருக்கணும்னு தான், எதுக்கு பயம்? உன் கூடவே இருக்க முடியுமா? அடம் பிடிக்காதேம்மா,உன்னுடன் பேச நேரமில்லை நான் நாளை வேலைக்கு போகணும்மா டைம் ஆகிறது.."அம்மா உன்னை அடிக்கடி வந்து பார்க்க முடியாது நேரம் கிடைக்கும்போது வீடியோ காலில் வரேன்" ஓகே வா? பாஸ்கர் சொல்ல சொல்ல இது தான் நிதர்சனமோ?...சிறுவயதில் நான் இவர்களிடம் சொன்ன வார்த்தைகளை எனக்கே திரும்பி கேட்கிறதே.....கண்களில் நீர் தளும்ப பிள்ளை பாஸ்கர் போவதை பார்த்துக் கொண்டிருந்தாள் கலா.

சிலருடைய இளமையும் முதுமையும் ஒரு கொடுமையே!! கலா போன்று நிறைய பெண்கள் வேலை பணம் குடும்பம் என இருந்து தங்களின் ஆசை இளமையை தொலைத்து முதுமையில் "எதற்காக எனும் கேள்வியுடன் வாழ்கின்றனர் அல்லது பதிலை எதிர்பாராது கேள்வியுடன் மரிக்கின்றனர்

ராதா நரசிம்மன்

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...