என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்

deivanaialagarsamy5
பெண்மையக் கதைகள்
5 out of 5 (11 रेटिंग्स)
कहानी को शेयर करें

• என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?
- தெய்வானை
இன்று வீடு போக நேரம் ஆகும் .
இன்று சக ஊழியரின் பணி நிறைவு பாராட்டு விழா . அவர் சங்க வேலையிலிருந்து அலுவலக வேலை மட்டும் இல்லாமல் பொது வேலைகள் அனைத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளக் கூடிய தோழர். சக தோழர்களிடம் நட்பு ரீதியாக பழகக்கூடியவர். ஆக, இன்று கூட்டம் களை கட்டும் .எவ்வளவு நேரமாகப் போகிறதோ தெரியவில்லை .
இத்தனை ஆண்டுகள் கூட பணிபுரிந்து நாளை முதல் இந்த அலுவலகத்திற்கு அந்நியமாய் ஆகப்போகும் ஒரு தோழருக்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம் தான். ஆனால் இந்தப் பிள்ளைகள்? எத்தனை வயதானாலும் சின்ன குழந்தை போல் 'சீக்கிரமா வந்துரும்மா’ என்று அதே பல்லவி. இங்கேயும் விட்டுவிட்டு போக மனம் வராது. வீட்டையும் நினைக்காமல் இருக்க முடியாது. இந்த நிலைமை என்றுதான் மாறுமோ? .எண்ண ஓட்டங்களுக்கு இடையில் கடிகாரத்தைப் பார்த்தாள் அமுதா. மணி ஐந்து முப்பது. மேஜையில் இருந்த செல்போன் மூக்குக்கண்ணாடி பேனா போன்ற பொருட்களை கைப்பைக்குள் போட்டு கணினியை அணைத்துவிட்டு வேகமாய் கீழே இறங்கினாள் . கூட்டத்திற்கான ஆயத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஒவ்வொருவராய் வந்து அமர ஆரம்பித்தனர். பணிநிறைவு பெறுபவரின் குடும்ப உறவுகளிடம் குசலம் விசாரித்து, டீ பிஸ்கட் சாப்பிட்டு, எல்லாரும் வந்தாச்சா என சுற்றுமுற்றும் பார்த்து, கூட்டம் துவங்கும் அறிகுறியே இல்லாததை கண்டு, எப்பொழுது ஆரம்பித்து எப்பொழுது முடிய என்ற மன ஆர்ப்பரிப்புடன் அமர்ந்திருந்தாள் அமுதா. அங்கிருந்த பெண்கள் அத்தனை பேரின் முகத்திலும் அத்தகைய உணர்வையே வாசிக்க முடிந்தது அவளால்.
தலைமை விருந்தினர் வந்து வெகு நேரம் ஆயிற்று . ஆனால் சங்க செயலர் அங்குமிங்கும் நிதானமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் யாரையோ எதிர் பார்த்துக் காத்திருப்பது போல தோன்றியது. மற்ற கிளைகளிலிருந்து கூட தோழர்கள் வருவார்கள் தான். ஒருவேளை அவர்களுக்காக காத்திருக்கலாம் என்ற சமாதானத்துடன், அந்தக் காத்திருப்பில் அடுத்த பத்து நிமிடம் ஓடி விட்டது. அமுதா பொறுமை இழந்து நிமிர்ந்த அதே கணம் செயலர் கூட்டத்தை ஆரம்பித்து விடலாம் என்றார்.
அந்தா இந்தா என்று கூட்டத்தை ஆரம்பிக்கும்போதே மணி ஆறு. தலைமையுரை வரவேற்புரை மற்றும் மாலை பொன்னாடை என கூட்ட நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாய் முன்னேற ஆரம்பிக்க ‘அப்பாடா’ என்று பெருமூச்சுடன் நிகழ்ச்சியில் ஒன்றினாள் அமுதா. ஒருவர் ஒருவராய் பணி நிறைவு பெறுபவரை வாழ்த்திப் பேச ஆரம்பித்தனர். சிலர் விரைவாய்! சிலர் சற்று விரிவாய்! மற்றும் சிலரோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ இழுத்து, எனக் கூட்டம் நகர ஆரம்பித்தது.
அடுத்து பேசுவதில் விருப்பம் அதிகம் உள்ள தோழர் ஒருவர் எழுந்தார்.அவர் நிறைய பேசுவார் என்று அனுமானித்து தான் இருந்தாள் அமுதா. ஆனால் இவ்வளவு நிறையவா? பணி நிறைவு பெறுபவரை விட்டுவிட்டு மற்ற சங்க தோழர்களைப் பற்றியும் பொறுப்பாளர்களை பற்றியும் அவர் அவசர தேவையில் இருந்தபோது அவர்கள் எப்படி எல்லாம் உதவினார்கள் என்றும் பக்கம் பக்கமாய் எழுதி வைத்து படித்துக் கொண்டிருந்தார் தோழர். உண்மையாகவும் இருந்தது. உருக்கமாகவும் இருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆவது இருக்கும். தழுதழுத்த குரலில் அழுகையை அடக்கிக் கொண்டு தண்ணீர் குடித்துக்குடித்து தொண்டையை சரி செய்து கொண்டு என அவரது பேச்சு தொடர்ந்தது.
தோழர் தற்காலிக பணியில் சேர்ந்து சங்கத்தி6ன் போராட்டம் காரணமாக நிரந்தர பணியாளராக மாறியவர். அமுதா பணியில் சேர்ந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர் தான் பியூன் வேலையில் தற்காலிகமாக சேர்ந்து ஒரு பதவிஉயர்வு பெற்று பதிவு எழுத்தர் பணியில் இருப்பவர். அவர் மனைவிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாத போது, வீடுகட்ட அவசரமாக பணம் தேவைப்பட்ட போது, இன்னும் எவ்வளவோ அவசர தேவைகளின் போது சங்கத் தோழர்களும் அலுவலகத்தில் பணிபுரியும் பிற தோழர்களும் எப்படியெல்லாம் உதவினார்கள் என்று உருகிஉருகி இறந்து போன அம்மாவுக்கு கவிதையாய் எழுதி, அதையும் ஒருமுறைக்கு இருமுறை வாசித்தார். வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தையும் மீறி அந்தக் கவிதை எழுப்பிய உணர்வலைகளில் ஆழ்ந்து போனாள் அமுதா .
இருபத்தி ஒன்பது ஆண்டுகள் ஆயிற்று பணியில் சேர்ந்து. இப்படி பகிர்ந்துகொள்ள அலுவலகம் சார்ந்த எந்த நினைவுகள் ஆவது உண்டா என்றுஎண்ணினாள் அமுதா. அலுவலகம் முடிந்து ஒரு மணி நேரம் அரை மணி நேரம் என்று சக தோழர்களிடம் பேச நேரம் இருந்தால் தானே இதெல்லாம் சாத்தியம். நான்தான் அடித்து பிடித்துக் கொண்டு ஓட வேண்டியுள்ளதே வீட்டிற்கு. பின் இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்? பிள்ளைகள் கணவன் குடும்பம் சமையல் என அவற்றின் பின்னே ஓடிக் கொண்டே இருந்தால் பொது வெளி பெண்ணுக்கு எப்படி சாத்தியமாகும்? குடும்பம் ஆணுக்கு காலடியில் ஆறுதலாய், பகிர்தலாய் ,அரவணைப்பாய் ,உதவியாய் உறுதுணையாய் இருக்கும் போது பெண்ணுக்கு மட்டும் தலைக்கு மேல் பெரும் சுமையாய் ,பொறுப்பாய் முழுநேர பணி மனையாய் , ஊதியமற்ற, ஓய்வற்ற, அங்கீகாரமற்ற பணிமனையாய் இருக்கிறது. அது பெண்ணின் சுய வெளியையும் பறித்துக் கொள்கிறது. பொது வெளியையும் பறித்துக் கொள்கிறது.
வாழ்க்கை என்பது என்ன ? நேரம் தானே! அதை எல்லோருக்கும் பகிர்ந்து அளித்துக் கொண்டே இருந்தால் அவரவர் வாழ்க்கை என்ன ஆவது? சூனியமாய், பெரும் சுழியாய் ,எதுவும் இல்லாமல், வெறுமையாக போய்விடுகிறது. இயற்கை அளித்த தாய்மை என்ற வரமே சாபமாய் தொடரும்போது சமூகம் வேறு இரட்டிப்பான சுமையை ஏற்றுகிறது பெண்மீது. படித்து சிந்திக்கின்ற பெற்றோர்களும் கூட வீட்டு வேலைகளையும் சமையல் வேலையையும் பெண்ணிற்கான முதல் தகுதியாக நினைப்பதை மாற்றிக் கொள்வதில்லை. அதுவும் திருமணத்திற்குப் பிறகு வரும் உறவுகளுக்கு அப்பெண் உயிரும் உணர்வும் உள்ள சக மனுஷி ஆகவே தெரிவதில்லை. வேற்றுலக ஜீவராசி போன்ற அன்னிய மனோபாவம். நிறைய நேரங்களில் கணவனும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் பெண் மட்டும் திருமணமான அன்றிலிருந்தே ஊரிலிருந்து பேர் வரை அனைத்திலும் கணவனை முன்னிறுத்த வேண்டும். இருபது வருடங்களுக்கு மேல் பாராட்டி சீராட்டி வளர்த்த தகப்பனின் பெயர் இருந்த இடத்தில் கணவனின் பெயரை இட வேண்டும். இதுவே எப்பேர்ப்பட்ட வன்முறை என்பதை அனுபவித்து பார்த்தால் தான் உணர முடியும் எந்த ஆணாலும். அதற்குத்தான் வாய்ப்பே இல்லையே.
எண்ண ஓட்டம் எங்கோ ஆரம்பித்து எங்கெங்கோ ஓட மனக் குதிரையின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினாள் அமுதா. ‘பெண்கள் யாரும் பேசுகிறீர்களா? ‘ என்ற தலைவரின் கேள்வியை தவிர்த்து கண்களை வேறு புறம் திருப்பினாள். பெண்கள் பொதுவாக மௌன சாட்சிகள் ஆகத்தான் பெரும்பொழுது இருக்கிறார்கள். தப்பித்தவறி யாரோ ஓரிருவர் பேசினாலும் அவர்களையும் பேச விடாமல் மௌனிகளாக மாற்றுவதில் ஆண்கள் பெரும் சாதனையாளர்கள். அவர்கள் சாமர்த்தியத்தை எல்லாம் ஒன்று திரட்டி அந்த கைங்கரியத்தை செய்து விடுவார்கள். இவர்கள் சாதனையைப் பார்த்து பெரும்பாலான பெண்கள் நத்தைகளாக கூட்டிற்குள் முடங்கிவிடுவார்கள். வீட்டிற்குள் அடிமைகளாய் அங்கீகாரமற்று, சமூகத்தில் பதுமைகளாய் அதிகாரமற்று, வாழப் பழகிக் கொண்டால் தான் இங்கு உயிரோடு இருக்க முடியும் பெண்ணால். இன்று பல பெண்களின் இருப்பே சாதனையாய் ஆகிவிடுகிறது. பிறகு எப்படி சாதனைகளைப் பற்றி நினைக்க முடியும்? எல்லாவற்றையும் மீறி சாதிக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை?. அவர்களைப் பற்றித் தானே நாம் பேச வேண்டும்.
இறுதி நிகழ்வாய் பணி நிறைவு பெறுபவரின் ஏற்புரையுடன் கூட்டம் முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. ஆண்களில் அனைவரும் தோழரை வழியனுப்ப அவரது வீடுவரை போக, பெண்களில் அனைவரும் வேகவேகமாய் தங்களது வீடு நோக்கிக் கிளம்ப, அமுதாவின் காதுகளில் எங்கோ எப்போதோ கேட்ட பாரதியின் வரிகள் ரீங்காரமிட்டன.
.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் ?
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்?
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும் ?

कहानियां जिन्हें आप पसंद करेंगे

X
Please Wait ...