இந்நூலில் திருக்குறளும், அதில் வள்ளுவர் காட்டும் சான்றாண்மை
குணங்களும், அதற்கான விளக்கமும் தகுந்த உண்மை சம்பவங்கள் கொண்ட
கதைகள் மூலம் சுவாரஸ்யமாக கொடுக்கப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் முல்லைக்கு ஏன் தேர் கொடுத்தார் பாரி அதன் மெய்ப்பொருள்
என்ன என்பது போன்ற விளக்கங்களும், அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்கின்
மருத்துவ சாதனையில் உள்ள அறம் மற்றும் மாவீரன் அலெக்சாண்டர்,
மார்ட்டின் லூதர் கிங், திப்பு சுல்தான், பகத்சிங், பெர்னாட்ஷா, அறிஞர் அண்ணா
போன்றோர் பின்பற்றிய அறவழி அனைத்தும் திருக்குறள் வாயிலாக இனிய
கதைகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று ரஷ்யா, உக்ரைன் இரண்டு நாடுகளுக்கும் போர்
நடந்துகொண்டிருக்கிறது. போருக்கான வெளிப்படையான காரணங்கள்
எதுவாகிலும் அடிப்படை காரணம் இரண்டு தேசத் தலைவர்களின் மனம்
செம்மையுறாததே ஆகும். பச்சிளம் குழந்தைகளும், பால் மனம் மாறாத
பாலகர்களும், இளைஞர்களும், தாய்மார்களும் போரில் கொன்று குவிக்கப்
படுகிறார்கள். இந்நிலை மாறி மனிதர்களின் மனம் செம்மையுற
வேண்டுமெனில் உலகம் வள்ளுவர் காட்டும் அறவழியில் செல்ல வேண்டும்.
அதற்கான நல்வழியை அறிய இந்த நூல் ஒரு கையேடாக அமையும் என்பதில்
மகிழ்ச்சி.
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே.