என்னை விட்டுப் போகாதே ..

பெண்மையக் கதைகள்
5 out of 5 (29 )

என்னை விட்டுப் போகாதே ...

நடுநிசி இரவு கனத்த இருளைப் போத்தியிருந்தது.என் எதிரே அந்த உருவம் தலை முதல் கால் வரை வெள்ளை நிற ஆடையை போத்திக்கொண்டு... தொட்டுவிடும் தூரத்தில் .. நான் அதை நோக்கி செல்லச் செல்ல என்னை விட்டு விலகி நடக்கிறது. நான் ஓட ...எனக்கு முன்னே , என்னை விட வேகமாக ஓடுகிறது. இதோ தொட்டு விடலாம் என்று நினைக்கும் போது ரயில்வே கேட் குறுக்கிடுகிறது. ரயில்வே கேட் அந்தப்புறம் அந்த உருவமும் இந்தப்புறம் நானும்.... நடுவே ஓடும் ரயில்... ரயில் போன பிறகு பார்த்தால் அந்த வெள்ளை உருவத்தை காணவில்லை ..திரும்பலாம் என்று நினைக்கும்போது குபீரென்று பற்றிக் கொண்ட தீ என் கண்முன்னே சற்று தொலைவில் ...அதிர்ச்சியில் வேர்த்துக் கொட்ட படக்கென எழுந்து உட்கார்ந்தேன். அவ்வளவும் கனவு. எதற்காக இந்த கனவு என்னைத் துரத்துகிறது. என்ன சொல்கிறது? குழம்பியது மனம் .. நிம்மதி தொலைந்து போயிற்று.
###################

அம்மா... அவள் இந்த 25 ஆண்டுகளாக யார் வீட்டிற்கும் போகவேண்டும் என்று எண்ணியவளில்லை. எந்த சொந்தத்தையும் பெரிதாக நினைத்தவளுமில்லை.அவள் உலகமே நான்தான்.எனக்காக வாழ்ந்தவள்.. வாழ்கின்றவள். அப்பா இறந்த அந்த நாள் என் நினைவுக்கு வருகிறது.

அப்பாவைப் பற்றி சொல்லிக் கொள்ளும்படியாக இனிய நினைவுகள் எதுவும் மனதிலில்லை. அம்மாவும் எப்போதும் அப்பாவைப் சிலாகித்துப் பேசியதில்லை. எங்கள் உலகத்தில் எங்கள் இருவரைத் தவிர வேறு யாருக்கும் இடமுமில்லை.

எனக்கு அப்போது பத்து வயது.காலையில் வழக்கம்போல் பள்ளிக்கூடம் போனேன். ஒரு பதினோரு மணி இருக்கும் கும்பகோணம் மாமா..என் அம்மாவின் அண்ணன்.. டீச்சரிடம் வந்து ஏதோ சொல்ல, டீச்சர் என்னை ஒரு பரிதாப பார்வை பார்த்து "சுப்பிரமணி இங்க வா! நீ உங்க மாமா கூட வீட்டுக்கு போ" என்று அனுப்பி வைத்தது ஆச்சரியமாக இருந்தது.

மாமா ஒன்றுமே பேசாமல் என்னை வீட்டுக்கு அழைத்து வந்தார். அவர் கண்கள் கலங்கி இருந்தது போல தோன்றியது. வெளியே பந்தல் போடப்பட்டிருந்தது, நிறைய கூட்டம். கூடத்தின் நடுவே அப்பா நிறைய ரோஜா மாலைகளை சுமந்துகொண்டு பட்டு வேட்டியில் கிடத்தப்பட்டிருந்தார்.அம்மா பக்கத்தில் தரையில் படுத்திருக்க அவளை சுற்றி பெண்கள் எல்லோரும் பெருங்குரலில் அழுது கொண்டிருந்தனர்.

கும்பகோணம் மாமா..கிட்டா சித்தப்பா... இன்னும் ராஜாத்தி அத்தை..பாரு சித்தி ..எல்லோரும் ஆளாளுக்கு பேச அம்மா மட்டும் ஒன்றும் பேசாமல் அழுது கொண்டிருந்தாள். ஏதேதோ சடங்குகள் என்னை செய்யச் சொல்ல, கடைசியில் அப்பாவை இடுகாட்டுக்கு கொண்டு போய் எரித்து விட்டு. மறுநாள் சாம்பல் கரைத்தும் ஆகிவிட்டது..

அப்பா இறந்த பதினொன்றாம் நாள் அம்மா ஒரு மாலையில் அழகாக பட்டுப் புடவையில் அலங்கரிக்கப்பட்டு,தலை நிறைய பூக்களும் ,கை நிறைய வளையல்களுமாக அமர்த்தி வைக்கப்பட்ட போது என் மனது சந்தோசத்தில் துள்ளியது. அம்மாவை பார்க்க அழகாக இருந்தாள் அப்படியே ரவிவர்மா ஓவியம் போல.

என் சந்தோஷம் பத்து நிமிடம் கூட நீடிக்கவில்லை. கை வளையல்கள் உடைக்கப்பட்டு ,நெற்றிப்பொட்டு கலைக்கப்பட்டு, மல்லிகைப்பூ உதிர்க்கப்பட்டு ...வெள்ளைச் சேலை போத்தப்பட எங்கிருந்தோ ஒரு வேகம் வந்தது எனக்கு.. "போங்க எல்லாரும் என் அம்மாவை விட்டு .அவ இப்படி தான் இருப்பா. பொட்டு வைக்கற அம்மா தான் எனக்கு வேணும் .எங்கம்மா கலர் புடவை தான் கட்டனும்" என்று கத்தி ஓவென நான் அழ, அம்மா என்னை அணைத்துக் கொண்டாள்.

உள்ளே ஓடி போய் கதவை அடைத்துக்கொண்டவள்.. சற்று நேரம் கழித்து வெளியே வரும்போது, மெல்லிதாக ஒரு சிறிய பொட்டும் ,எனக்கு பிடித்த ரோஜா வண்ண சேலையும் அணிந்து வெளியே வந்தாள்.

" என் பிள்ளை என்ன சொல்றானோ என்ன ஆசைப்படுறானோ.. அதுதான் எனக்கு வேதம். என் புருஷனுக்காக வாழ்ந்தாச்சு.. இனி என் வாழ்க்கை என் பிள்ளைக்காக தான்" என்றாள் வேகத்தோடு.

"நல்லா இருக்குதுடா நியாயம். குடும்பம் விளங்க வேணாமா? சுமங்கலி கோலம்??? புருஷன் போன பிறகு நல்லாதான் இருக்கும்" என்று அத்தை நொடித்தாள். "ஏதோ அறியா புள்ள சொல்லுதுன்னா அதை பிடிச்சுகிட்டு.. சீவி சிங்காரிச்சுகிட்டு எந்த ஆம்பளைய மயக்க போற இனிமே .."

"அண்ணி போதும் நிறுத்துங்க.. எனக்கு உங்க யார் சகவாசமும் வேண்டாம்.. தயவுசெய்து கிளம்புங்க! என் பிள்ளையை எப்படி வளர்த்து ஆளாக்கனும்ங்கறது எனக்கு தெரியும். தயவுசெய்து நீங்க இதில் தலையிடாதீங்க"

"விருந்தாளியா வாங்க.. எத்தனை நாள் வேணாலும் தங்குங்க ஆனால் எனக்கும், என் பிள்ளைக்கும் ,உங்க ஆலோசனைகள் எதுவும் வேண்டாம் "என்றாள் கறாராக ..

"தாலியறுத்து காரியம் முடியல.. அதுக்குள்ள என்ன பேச்சு பேசுறா... இவளுக்கெல்லாம் இரக்கப்பட்டது தப்பு. அவ எப்படியோ அவள் வாழ்க்கையை பார்த்துட்டு போகட்டும் வாங்க போகலாம்" என்றாள் அத்தை கோபத்தோடு.

"இரு ராஜாத்தி ! அவதான் ஏதோ கோபத்திலேயும் சோகத்திலேயும் பேசுறா..அதெல்லாம் பெருசா எடுக்கக்கூடாது.. அவ என் கூட பிறந்தவ ...கொஞ்சம் பொறுமையா இரு" என்று அத்தையை அடக்கியவர் தங்கையிடம் ..

"என்ன செய்வதாக உத்தேசம் தனம். தனியா பெத்த புள்ளைய வச்சிகிட்டு இந்த ஊரில காலம் கழிக்க முடியாது. நீ பேசாம அங்க எங்க வீட்ல வந்து இரு "மாமா கூற.. அத்தை முறைத்தாள் .

அதற்குள் சித்தப்பா" அவக ஜீவனத்துக்கு என்ன செய்வாக? படிக்க வைக்கிறேன்னு சொல்ற ஆளு எப்படி படிக்க வைப்பாக... வர்ற வரும்படி அம்மாவும், மகனும் சாப்பிடத் தான் காணும் ..வீடு மட்டும் தான் சொந்த வீடு ..?"

"ஏதோ பத்தாங்கிளாஸ் வரைக்கும் படிச்சிட்டான்னா அப்புறம் ஏதாவது ஒரு ஒர்க்க்ஷாப்பில வேலைக்கு சேத்துவிட்டுடலாம்.
ஆம்பள புள்ள தானே வேலை பாத்து அம்மாவை காப்பாத்த வேண்டியதுதான். யார் தான் எத்தனை நாள் தாங்க முடியும்?" என்றாள் சித்தி மனசாட்சியே இல்லாமல்.

அதைக் கேட்டதும் பொங்கி எழுந்த அம்மா" தயவுசெய்து எல்லோரும் விசேஷத்தை நல்ல படியா முடிச்சிட்டு கிளம்புங்க. உதவி வேணும்னு நான் உங்க யார் வீட்டு வாசலிலேயும் வந்து நிக்க மாட்டேன். என் பையனை எப்படி வளர்த்து ஆளாக்கனும்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். எங்க வாழ்க்கைய நாங்க பாத்துக்கிறோம். நான் உங்க யார்கிட்டயும் உதவி கேட்கல " என்றாள் கறாராக.

,அத்தையும், சித்தியும், மற்ற உறவுக்காரப் பெண்களும் கூடி அம்மாவை கிழி கிழி என்று கிழித்தார்கள். வாயில் வராத வார்த்தை எல்லாம் பேசினார்கள் ..அம்மா எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பாள் .ஆனால் அவள் முற்றிலும் வைராக்கிய பெண்மணியாக மாறி விட்டாள். கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை.

உறவுகள் எல்லாம் போய்விட, எங்கள் வாழ்க்கை ஒரு நிம்மதியான உலகத்திற்கு வந்தது. அளவான தேவை.. தேவைக்கேற்ற பணம்.. நிம்மதியான வாழ்க்கை.

என் சந்தோஷத்திற்காக சின்ன பொட்டு வைத்து, பூப்போட்ட புடவை கட்டும் போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பேசத்தான் செய்தார்கள். ஆனால் அவளுக்கு என் சந்தோஷமே பிரதானமாக இருந்ததால், எதையும் பொருட்படுத்தவில்லை .

அப்பாவுடைய பென்ஷன் பணம்.. தாத்தா கொடுத்த சிறிதளவு சொத்து.. எங்கள் இருவர் தேவைக்கு போதுமானதாக இருந்தது.அதுபோக அம்மா தன்னால் இயன்ற வேலைகள் செய்வாள். வத்தல், வடகம், தயாரிப்பது.. பொடிகள் தயாரிப்பது என்று வீட்டிலிருந்தே செய்யக்கூடிய வேலைகளைச் செய்து அக்கம் பக்கத்தில் விற்பனை செய்து சிறிது பொருளீட்டி வந்தாள்.

எவ்வளவு சிரமப் பட்ட காலத்திலும் மாமா வீட்டிற்கு... சித்தப்பா வீட்டிற்கு அவள் போகவேண்டும் என்று நினைக்கவே இல்லை .எப்போதாவது மாமா, அத்தை, சித்தப்பா ,சித்தி யாராவது வந்தால் தக்கபடி உபசரித்து அனுப்பி விடுவாள். எதையும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டாள்.

நான் கேட்பதை கொடுப்பவள் ...என் மேல் அன்பை பொழிபவள்.. படிப்பு விஷயத்தில் மட்டும் கறாராக இருந்தாள்.நான் பத்தாவது எட்டும்போது "அம்மா சித்தி சொன்னது இன்னும் என் மனசுல நிக்குது நான் வேணா வேலைக்கு போகட்டா... நீயேம்மா கஷ்டப்படுற "

அவ்வளவுதான் என் அம்மா கொதித்துப் போனாள்." நான் இதுக்காகவா எவ்வளவு பாடுபட்டு உறவுகளையெல்லாம் எதிர்த்து கொண்டு உன்ன படிக்க வைக்கிறேன். நீ படிச்சு காலேஜ் போகனும் அதுவும் மெடிக்கல் காலேஜ்" என்றாள்.

எனக்கு தூக்கிவாரிபோட்டது" அம்மா மெடிக்கல் காலேஜ்ல படிக்கிறதுக்கு அஞ்சு வருஷம் பீஸ் கட்டணும். நம்மால முடியுமா .."

"எத்தனை வருஷம் ஆனாலும் சரி! நீ படி.. நான் உன்னை படிக்க வைக்கிறேன்" என்றாள் வைராக்கியத்தோடு.
"அம்மா நான் வேலைக்குப் போய்க் கொண்டே மாலை நேர வகுப்பில் சேர்ந்து படிக்கிறேன்" என்று சொன்னதற்கு முடியவே முடியாது என்று சாதித்து விட்டாள்.

அம்மாவின் கனவை புரிந்து கொண்டு, நானும் நன்றாக படித்து நிறைய மார்க் வாங்கி, மெடிக்கல் காலேஜில் சேர்ந்தேன் ..என்னுடைய ஒரு வருஷ பரிட்சைக்கு அப்பா சாப்பிட்ட வெள்ளித் தட்டை சத்தமில்லாமல் விற்று பீசை கட்டினாள் .ஒரு வருஷம் அவள் கழுத்தில் போட்டிருந்த சங்கிலி அடகுக் கடைக்குப் போனது. நான் இதை தெரிந்ததாகக் காட்டிக் கொண்டால் அவள் வருத்தப்படுவாள் என்று நானும் தெரியாதது போல் இருந்து விடுவேன்.

படித்து முடித்தேன். நான் இன்று ஒரு மருத்துவர்.
கல்லூரியில் எனக்கு புரபசராக இருந்த சீப் டாக்டர் என் குடும்ப நிலை பற்றி தெரியும் என்பதால் எனக்கு ஒரு நல்ல வேலை பெரிய மருத்துவமனையில் வாங்கிக் கொடுத்தார். அவர் தொடங்கி வைத்த ஆரம்பத்தை நான் பிடித்துக் கொண்டு மேலே வந்து இன்று இந்த நகரின் ஒரு பிரபலமான மருத்துவர். நல்ல பேரும் புகழும் வர அத்துடன் பணமும் வசதியும் வந்தது.

என்னுடைய எண்ணமே அம்மாவை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். அம்மாவை நல்ல வீட்டில் வசதியாக வாழ வைக்க வேண்டும் என்று நினைத்ததால் இந்தப் பெரிய வீட்டை வாங்கினேன் . அவளுடைய தேவையை கவனித்துக்கொள்ள தனியான ஒரு ஆளை நியமித்தேன். வயதின் காரணமாக அம்மாவால் முன்னைப் போல் முடியவில்லை.

"சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க ராஜா" என்று வழக்கமான அம்மாக்களின் அரிப்பை இவளும் அரிக்க ஆரம்பித்தாள்.

"வேணாம்மா நமக்கு நடுவே எந்த பெண்ணுமே வேண்டாம். நம்முடைய வாழ்க்கைல நாம ரெண்டு பேர் மட்டுமே" என்று மறுத்து விடுவேன் ..

வருகிற எந்தப் பெண்ணும் என் அம்மாவை கவனிப்பாளா என்பது சந்தேகமே. எனக்காக வாழும் என் அம்மா... அவளுக்காக நான் வாழ்வேன்... என்று முடிவாகச் சொல்லி விட்டேன்.

"அப்ப நான் இருக்கிற வரைக்கும் நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டே அப்படித்தானே?" என்றாள் அம்மா விளையாட்டாக.

ஒரு மெடிக்கல் கான்பிரன்ஸிற்காக டெல்லி போக வேண்டியதிருந்தது. ஏனோ மனம் சஞ்சலமாக இருந்தது அம்மாவிடம் சொல்ல ..

"தம்பி நீ போயிட்டு வா! நான் அந்த நாலு நாள்ல மாமா வீட்டுக்கும்...சித்தப்பா வீட்டுக்கும் ஒரு தடவை போய் பாத்துட்டு வந்திடறேன் .எனக்கு முன்ன மாதிரி இல்ல .உடம்பு தளருது" என்று சொன்னாள். அதுவே எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. இத்தனை நாட்களாக யார் வீட்டுக்கும் போக கூடாது என்று வைராக்கியமாக இருந்தவள் எல்லோரையும் பார்க்க விரும்புகிறாள்.

"யாரையும் போய்ப் பார்க்கத் தேவையில்லை" என்று கடுமையாக கூற நினைத்தவன்... மனதை மாற்றிக்கொண்டு "சரிமா போய்ட்டு வாங்க.. நான் வர ஒரு வாரம் ஆகும். அதற்குள் நீங்கள் எல்லா வீட்டுக்கும் போயிட்டு வந்துடுங்க. நம்ம கார்லேயே போங்க"

"சரி" என்று தலையாட்டினாள் அம்மா. அருகில் வந்து என் தலை கோதி விட்டு உச்சி வகிட்டில் முத்தமிட்டாள். கண்கள் கலங்கினால் போல இருந்தது.. ஏன் உணர்ச்சி வசப்படுகிறாள் ..வயதாகும்போது வைராக்கியம் தளர்ந்து விடுகிறது என்று நினைத்துக்கொண்டேன்.

நான் போய் மூன்று நாட்கள் இருக்கும் நாலாவது நாள் மாமாவிடமிருந்து போன் ..

"தம்பி நீ உடனே கிளம்பி வா! தனம் நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னா.. நான் பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கேன்" என்றார் .

"என்ன மாமா... என்ன ஆச்சு?" என்று பதறினேன்.

"ஹார்ட் அட்டாக் ன்னு சொல்றாங்கப்பா"

நான் உடனே பிளைட்டை பிடித்து ஓடி வந்தவன் நேராக மாமா ஊருக்கு விரைந்தேன். மாமா என்னைப் பார்த்ததும் அழுதுவிட்டார்.

" நான் தப்பு பண்ணிட்டேன்ப்பா உங்க அம்மாவை கவனிக்காமல் விட்டது தப்பு .அவ மனசு மாறி என்னை பாக்கணும்னு ஆசையோட ஓடி வரும்போதா அவளுக்கு இப்படி ஒரு நிலையா வரணும்?" வயதின் முதுமையில் மனதிலுள்ள எண்ணங்கள் மடைதிறந்த வெள்ளமாக வெளிவந்தது.

தங்கையும் அண்ணனைக் தன் இறுதிக்குள் காண வேண்டும் என்ற நினைப்பில் தான் பார்க்க வந்திருப்பாளோ என்று தோன்றியது.இவ்வளவு பாசத்தையும் மனதில் தேக்கி கொண்டு அவள் வைராக்கியமாக இருந்ததெல்லாம் எனக்காகத் தான் என்பது புரிய மனம் கனத்தது.

இருவரும் மருத்துவமனைக்கு விரைந்தோம். என்னைப் பார்க்கவே ஜீவனை கண்ணில் தேக்கி வைத்துக் கொண்டிருந்தவள், என் கையைப் பிடித்ததும் ..கண்ணில் இருந்த ஜீவன் விண்ணை நோக்கிப் பறந்தது.
கதறிதுடித்தேன். நான் மருத்துவராக இருந்தும், எத்தனையோ பேரை காப்பாற்றும் நான், என் அம்மாவை அன்று என்னால் காப்பாற்ற முடியவில்லையே...என் உலகமே அஸ்தமித்துப் போனது.

அம்மாவை அவள் சொந்த வீட்டிலிருந்து சகல மரியாதையுடன் அனுப்ப..முன்னால் போன ஆம்புலன்ஸ்க்கு பின்னாலே என் கார் செல்ல ..இதோ என் முன்னே ஜீவனற்ற அவள் உடல் வெள்ளைத்துணியில் போர்த்தப்பட்டு .பின்னால் செல்லும் என்னால் அவளைப் பிடிக்க முடியவில்லை இதோ நான் கனவில் பார்த்த அதே இடம் ... ரயில்வே கேட் ... என் மனது திக்கென்றது .. ரயில் அந்த கேட்டை கடக்கிறது ... இந்தப்பக்கம் என் கார் நிற்க ...அந்தப்புறம் ஆம்புலன்சில் என் தாயை காத்திருக்க .. .ரயில்வே கேட்டை தாண்டி ,கார் எதிரே சுடுகாடு, எரியும் பிணம் ..

என் தாயின் இறுதி காலம் தான் எனக்கு கனவாய் வந்திருக்கிறது என்று அப்போது தான் புரிந்தது. இது முதலிலேயே தெரிந்திருந்தால் ஒரு நிமிடம் கூட என் தாயை விட்டு நான் பிரிந்திருக்க மாட்டேனே... இந்த ஏக்கம் இன்று வரை என் மனதை வாட்டுகிறது..

என்னுயிர் தந்தவள் ..எனக்காக வாழ்ந்தவள் ..இன்னுயிர் நீத்து ..இறுதியில் சாம்பலாய் என் கைகளில் தஞ்சமடைந்து விட்டாள்.அவளுடல் சாம்பலுடன் சேர்த்து என் கண்ணீரும் கடலில் கலக்கிறது.

தி.வள்ளி
திருநெல்வேலி.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...