நிலைப்பவை

பெண்மையக் கதைகள்
4.8 out of 5 (12 )

நிலைப்பவை

ஒப்பாரிச் சத்தம் செவியில் நுழைந்து சுந்தரத்தை எழுப்பியது. கருக்கலிலேயே யார் வந்திருப்பார்கள் என்ற எண்ணத்துடனேயே எழுந்து அமர்ந்தார். பக்கத்து வீட்டு செம்பக ஆச்சி இரண்டு வருடமாக கிடையாய் கிடந்து நேற்று மதியம் எதிர்பாராமல் இறந்துவிட்டார்.

ஊரில் எல்லோருமே இப்படித்தான் சொல்கிறார்கள். அது பாட்டுக்க செவனேன்னு கெடந்துச்சே... ஏன் இப்படி பொசுக்குனு போயிடுச்சு. இப்படிக் கேட்டபோது முதலில் சுந்தரத்திற்கு சற்று கோபம்தான் வந்தது. சீரழிஞ்சு கெடந்து சாகறப்பவே இப்படி சொல்கிறார்களேயென்று. பிறகு வேறெப்படி சொல்வதென்று யோசித்துவிட்டு அதையே இவரும் ஏற்றுக் கொண்டு, அப்படியே கிடக்கும்னு நெனச்சனே... இப்படி சட்டுனு விட்டுட்டு போயிடுச்சே என்று கூறத் தொடங்கிவிட்டார்.

வாசலிலிருந்த தொட்டியில் இருந்து குளிர்ந்த நீரையள்ளி முகத்தைக் கழுவி வாய் கொப்பளித்துவிட்டு துண்டால் முகத்தை துடைத்தபடி திண்ணையில் அமர்ந்தார். நீரின் குளிர் மெல்லிய வெடவெடப்பை உண்டாக்கியது. ஆச்சி வீட்டில் இப்போது வேலையேதுமில்லை. ஏழு மணிக்குப் போனால் எடுப்பதற்கான வேலைகளை கவனிக்க சரியாயிருக்கும் என எண்ணிக்கொண்டிருந்தார்.

வெளியிலிருந்து வந்த சாரதா அமர்ந்திருந்த இவரைப் பார்த்துவிட்டு வீட்டினுள் சென்றாள். உள்ளிருந்து எடுத்துவந்த காப்பியை நீட்டிய சாரதாவிடம் இவ்வளவு சீக்கிரம் யாரு வந்திருக்கா என்று கேட்டபடி வாங்கினார்.

"அந்த பாதகத்திதான் வந்திருக்கா"

சுந்தரம் அந்தக் கடுமையின் காரணம் புரியாமல் சாரதாவின் முகத்தை நோக்கினார். அதில் தெரிந்த அசூசையால் ஒரு கணம் இவர் மனதில் சிறு திடுக்கிடல் தோன்றியது. இதுவரை இவளைப் இப்படிப் பார்த்ததில்லையே. இவள் இந்த அளவுக்கு வெறுப்பதற்கு ஆள் உண்டா என்ற திகைப்பு தோன்றியது. இவரின் புரியாத முகத்தை நோக்கி "எல்லாம் ஒங்களுக்கு முழுசா தெரிஞ்சவங்கதான். ஒங்க களவுக்கன்னி..." என்று அழுத்திக் கூறி முகத்தை ஒடித்து தோளில் இடித்தபடி வீட்டிற்குள் சென்றாள்.

சுந்தரத்திற்கு கோபம் எழவில்லை. சாரதாவைப் இப்படிப் பார்ப்பது சற்று வேடிக்கையாகத் தோன்றியது. இவள் அப்படி கோபப்படுமளவிற்கு என்னோடு தொடர்புடையவர் யார் என கையிலிருந்த காப்பியை இயல்பாக உறிஞ்சியபடி யோசித்தார். சட்டென நினைவுக்கு வந்த ஒரே முகம் அம்மிணியுடையதுதான். அம்முகம் நினைவுக்கு வந்தவுடனேயே மனம் கிளர்ந்தெழுவதை உணர்ந்தார். அதே கணம் எச்சரிக்கையாக வீட்டிற்குள் திரும்பிப் பார்த்தார். தன்னை சாரதா கவனித்தால் இன்னும் கோபமடைவாள் என்பதை உணர்ந்து மனதின் உற்சாகத்தை முகத்தில் காட்டாமலிருக்க முயற்சி செய்தார்.

தம்ளரை தொட்டி நீரில் அலம்பி திண்ணையில் வைத்தபோது சாரதா வெளியே வந்தாள். "அங்க போகப் போறிங்களா..."

"என்ன நடக்குதுன்னு போய் பாக்கலாம்னு பாத்தேன்"

"அதானே, வந்தவங்கள பாக்கனும்னு துடிக்கிற துடிப்புதான் வீட்டுக்குள்ளயே கேக்குதே..."

"நீ யாரச் சொல்றேன்னே தெரியலயே"

"கண்டுபிடிச்சதுதான் மொகத்திலேயே தெரியுதே. போயி பாத்துட்டு வாங்க. ஆனா நாலு பேரு பாத்துக்கிட்டிருக்காங்கன்னு நெனப்பிருக்கட்டும்" அவள் முகத்தில் கேலி தொக்கி நின்றதைக் கண்டவுடன் முகத்தை இலகுவாக்கிக் கொண்டார். இவளுக்கெப்படி அம்மிணி பத்தி தெரிஞ்சிருக்கும். நாம சொல்லாட்டா ஊர்ல யாரும் சொல்ல மாட்டாங்களா. இதுவரைக்கும் தெரியாம இருந்தாத்தான் அதிசயம். ஆனா எப்படி விளையாட்டா எடுத்துக்கிட்டா. வயசாயிடுச்சு இனிமே என்ன பண்ணிரப் போறாங்கன்னு நெனச்சிருப்பா. எப்படியோ நெனச்சுகட்டும். மூஞ்சிய தூக்கி வச்சுக்காம திரிஞ்சான்னா போதும் என்று எண்ணியபடியே எழுந்தவருக்கு அம்மிணியின் திரட்சியான முகம் மனதில் துலங்கியது. திரட்சியான மாம்பழம் போன்ற நீள்வட்ட முகத்தோடேயே முருங்கையின் மென்வாசமும் கிளர்ந்தது. இத்தனை துல்லியமாகவா மனதில் படிந்திருக்கும் என்ற ஆச்சர்யத்துடனேயே நடந்தார். கடைசியாக பார்த்தபோது ஒரு துளி விழிக்கடையில் நின்றதே... அது இப்போதும் நினைவில் நீடிக்கிறது. சிந்தியிருந்தால் சாதாரணமாக மறைந்திருக்கக் கூடும். அந்த சிந்தாத ஒரு துளி இப்பொழுதும் உள்ளே நலுங்கிக் கொண்டிருக்கிறது. இது சில சமயங்களில் கனவில் தோன்றி திடுக்கிட்டு எழுந்திருக்கிறார். இனி எப்போதும் சந்திக்கவே போவதில்லை, எனவே எப்படியாயினும் மறந்தேயாக வேண்டுமென்ற உறுதியுடன் இதை உள்ளே அழுத்தியிருந்தார். ஆச்சி இறந்து இதை மேலே வரவழைத்துவிட்டார்.

வெளிவாசலின் அருகில் நின்ற வேம்பின் பூக்கள் தரையில் வெள்ளைத் துணியை வட்டமாக விரித்ததுபோல பரந்திருந்தன. அதன் மணம் மெல்லியதாக பரவிக் கொண்டிருந்தது. அதன் அருகில் சென்று அதன்மேல் வைக்க கால் தூக்கியவர் வைக்காமல் பின்வாங்கி, சுற்றி வேலியின் அருகே சென்று படலைத் திறந்து வெளியே வந்தார்.

இரவில் வேறெதுவும் ஆச்சியிடம் வந்துவிடாமல் தடுக்க, பற்றவைத்த கட்டைகளுக்குள் கனன்ற அனலை காற்று உலப்பிக் கொண்டிருந்தது. ஓட்டு வீட்டின் தாழ்வாரத்தை குனிந்தபடி கடந்து முற்றத்தை அடைந்தார். வடக்கு பார்க்க ஆச்சியை கிடத்தியிருந்தார்கள். ஐந்து பெண்கள் ஆச்சியின் கால்மாட்டில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்தார்கள். ஆச்சியின் மருமகளும் பேத்தியும் முன்தினம் மதியத்திலிருந்தே அழுது கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு உறவினரும் வரும்போதும் குரலுயர்த்தி அழுதபின் ஆசுவாசமடைந்தபடி இருக்கிறார்கள். இப்போது விடியற்காலையிலேயே தொடங்க வேண்டியதாகிவிட்டது.

சுந்தரம் அந்தப் பெண்களை நோக்கினார். அவர்கள் துயரத்திற்குள் தங்களை மேலும் நுழைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஆச்சியின் மருமகள், பேத்தி, சின்ன ஆச்சி தவிர மற்ற இரு பெண்கள் இவன் அறியாதவர்களாக இருந்தார்கள். அப்ப சாரதா சும்மா விளையாட்டுக்காக சொல்லியிருப்பாளா. இந்த மாதிரி விசயத்திலெல்லாம் விளையாட மாட்டாளே. அதுவும் இந்த விடிகாலையில் என்று எண்ணியபடி அடையாளம் தெரியாத அந்த இருவரையும் சற்று கூர்ந்து பார்த்தார். அவர்களில் ஒருவர் முகத்தில் மட்டும் மெல்லிய சிலிர்ப்பு ஏற்பட்டதையும், திரும்பிப் பார்க்கத் தோன்றும் தன் எண்ணத்தை அவர் கட்டுப்படுத்துவதையும் உணர்ந்தார். அவரா அம்மிணி. அதிர்வில் உடல் ஒரு கணம் சொடுக்கி மீண்டது. வேகமாக வெளியேறி திண்ணையில் அமர்ந்தார்.

பத்தாண்டுகளில் ஒருவர் இந்தளவிற்கு உருக்குலைய முடியுமா. அத்தனை நேசித்த என்னாலேயே அறியமுடியாதபடி... மனம் துள்ளித் துள்ளி மாய்ந்தது. முதலில் முகத்தில் அறைந்த மாற்றம் கூந்தல். எத்தனை பின்னி அழுத்தினாலும் திமிறி படர்ந்திருக்கும் கூந்தலையல்லவா கொண்டிருந்தாள். இப்போதிருப்பதை கூந்தலென்ற வார்த்தையால் அல்ல, முடியென்றே கூறவியலாதவாறு சிதைந்து தலையோடு ஒட்டி பின் கழுத்துவரை நீண்டிருந்தது. கூந்தலை கைகளால் அழுத்தினால் திகைக்க வைக்கும் முகத்தின் திரட்சி, இப்போது வெறும் தோலாக கன்ன எலும்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்தது. திருப்பூரிலிருந்து வந்த அவள் கணவன் அம்மிணியை அழைத்துச் சென்றவுடன் அவளைப் பற்றி யாராவது எதையாவது சொல்லவந்தால் சைகையாலேயே மறுத்துவிடுவார். சில தருணங்களுக்குப் பிறகு எவருமே இவரிடம் அவளைப் பற்றி சொல்லாமலானார்கள். அவள் மகிழ்ந்திருப்பதை அறியாதிருக்கவே அவளைப் பற்றிய செய்திகளுக்கு செவி கொடுக்க மறுத்தான். அதுவே அவள் துயரடைந்த செய்தியையும் இவனை அடையாமல் செய்துவிட்டது.

எதிர்க்காற்று அடித்ததில் கட்டைகள் நன்றாக பற்றிக் கொண்டு கொழுந்து உயரந்தெழ எரிந்தது. ஆச்சியின் உறவினர்கள் ஓரிருவராக வர ஆரம்பித்தனர். வீட்டிலிருந்து வந்த சாரதா ஒரு பாத்திரத்தில் நீர் மொண்டு வந்து கட்டையின் மீது தெளித்து தீயை அணைத்து கட்டைகளை பிரித்து வைத்தாள். "அதான் விடிஞ்சிருச்சே.. இனி தேவையில்லையில்ல" என இவருக்கென்றில்லாமல் பொதுவாகக் கூறிவிட்டு இவரருகில் வந்தாள்.

"இப்ப ஒங்களுக்கு இங்க வேலையேதுமில்ல. நம்ம வீட்ல போயி இருங்க. நான் இங்க இருக்கிறவங்களுக்கு காப்பி கொடுத்திட்டு வந்திடறேன்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

சுந்தரம் வீட்டை நோக்கிச் சென்றார். எத்தனை பெண்களை கண்டிருப்பேன். அம்மிணியைப் பார்த்தவுடன் அவள்தான் எனக்கானவள் என எப்படித் தோன்றியது. தோன்றிய அக்கணம் முதல் மனதாழத்தில் அவ்வெண்ணம் ஆழப்பதிந்து பெருமரமென வளர்ந்து வியாபித்தது. அவள் யாருடைய மகளாயிருந்தாளென்ன, எவனுடைய மனைவியாக இருந்தாலென்ன மனம் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை. அவளையே எக்கணமும் எண்ணிக் கொண்டு அவளையே தொடர்ந்து கொண்டு... ஊழ்கச் சொல்லென அவள் பெயரையே மனதிற்குள் உச்சரித்தபடி, சுற்றிலும் அனல் சூழ அமர்ந்து இயற்றும் தவம்போல... ஊருக்காகவும் குடும்பத்திற்காகவும் விலகி விலகிச் சென்ற அப்பெண்ணும் ஏதோவொரு கணத்தில் தொடர்ந்து வந்த இவன் நேசத்தில் அனல்பட்ட உலோகமென மெல்ல மனம் குழைந்தாள்... அவன்மேல் தன் மனதைத் திருப்பினாள்... அதன்பின் ஊரென்ன உறவென்ன எதுவும் பொருட்டல்ல இருவருக்கும்.

எல்லாம் அவள் கணவன் தகவல் தெரிந்து வரும்வரைதான். அவள்தான் அவளேதான் தன்னுடையவள் என்று எண்ணியிருந்த உறுதியில் மெல்லிய மயிரிழைப் பிளவு தோன்றியது, அவள் கணவனைக் கண்டவுடன். இவன் சொல்லாமலேயே மிக நுண்மையான விலக்கத்தை அவள் உணர்ந்து கொண்டாள். இது திரும்ப ஒன்றிணைய முடியாதென்பதையும். என்ன நிகழ்கிறதென்பதை உணர்வதற்குள்ளேயே அவள் கணவனுடன் கிளம்பினாள். கடைசியாக இவன் பார்த்தது அவள் விழியினோரம் தொக்கி நின்ற ஒற்றைத் துளியை.

அம்மிணி சென்ற பிறகு இரண்டு மாதங்களுக்கு பித்துப் பிடித்ததுபோலத் திரிந்தார். அம்மாதான் வற்புறுத்தி சாரதாவை மணம் செய்து வைத்தார். சுந்தரம் எதுவுமே செய்யவில்லை, சாரதாவே அனைத்தையும் இயற்றினாள். வானை நோக்கி துடித்துக் கொண்டிருக்கும் தீ நாவென தாவிக் கொண்டிருந்த சுந்தரத்தின் மனதை நீர்மையின் இயல்பு கொண்ட தன் மனதிற்குள் ஒடுக்கினாள். எதற்குள்ளாவது அடைபடவே சுந்தரத்தின் மனம் அலைகிறது என்பதை உணர்த்தவள்போல இவனை தன்னுள் அடக்கினாள். எப்போதாவது தீக்கனவென எழுந்ததன்றி சுந்தரத்திற்கு அம்மிணியின் நினைவு எழவேயில்லை. சாரதா எழவிடவில்லை.

முதல் நாள் கடையில் வாங்கிவந்து உண்ட உணவின் நொதித்து ஊசிப்போன எச்சத்தைக் கண்ட அருவருப்பை சுந்தரம் உணந்தார். இவள் மேலா இத்தனை பித்தோடு திரிந்தோம். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அவளையே எண்ணி ஏங்கி, குமைந்து, தவித்து திரிந்தது இவளையா. தன் மீதே வெறுப்பு தோன்றியது. இப்படி உருமாறி அழியக் கூடிய ஒன்றிற்காகவா அத்தனை கொந்தளிப்பு. உலகமே அழிந்தாலும் பொருட்டில்லை அவள் அருகிருந்தால்போதும் என்று உருகியது இந்த நைந்து நாராய் திரிந்துபோன உடலை எண்ணியா.

சுந்தரத்தின் மனம் குமைந்து திரிந்து உலைந்து கொண்டிருந்தது. திண்ணைச் சுவரில் சாய்ந்தபடி எதையும் கவனிக்காமல் வெளியை வெறித்திருந்தார். சாரதா அருகில் அமர்ந்து இவர் கரத்தை மெல்ல பற்றி தன் கரங்களுக்குள் பொத்திக்கொண்டு அம்மிணியின் வாழ்க்கையைப் பற்றிக் கூறினாள். அவளுக்கு முதலில் பையன் பிறகு பெண் என இரு பிள்ளைகள் பிறந்ததை, ஐந்து வயதில் பையன் கழிவு நீர் வாய்க்காலில் விழுந்து இறந்து போனதை, மகன் நினைவிலேயே கணவர் இரண்டு வருடங்களில் மாண்டதை, ஏச்சுக்குப் பயந்து ஊருக்கு வராததை, ஏழு வயது பெண் பிள்ளையை காக்கவென பனியன் கம்பெனியில் பணி புரிவதை என எல்லாவற்றையும் விழியில் நீர் வழியக் கூறினாள். சுந்தரத்தின் மனதிற்குள் இது நுழைந்ததா என்பதை சாரதா கவனிக்கவில்லை. இதையா.. இதைத்தானா என்ற சொற்களை சுந்தரத்தின் வாய் உச்சரித்துக் கொண்டிருந்தது.

கேத வீடுகளில் காரியம் செய்பவரை மட்டும்தான் தேடுவார்கள். வேறு யார் இல்லையென்றாலும் நடக்கவேண்டிய வேலை நடந்து கொண்டேயிருக்கும். ஒரு ஆளுக்குப் பதிலாக வேறு ஆள் வந்து அவரின் வேலையை தொடர ஆரம்பித்து விடுவார்கள். அப்படித்தான் சுந்தரத்தை பெரிதாக யாரும் எதிர் பார்க்கவில்லை. உடலைத் தூக்கப்போகும் நேரத்தில் வேட்டு போட்டார்கள். சட்டென தன்னினைவிற்கு வந்த சுந்தரம் விரைந்து வந்து தானும் ஒரு கைவைத்து உடலைத் தூக்கினார். பெண்கள் பக்கம் பார்வையை திருப்பவேயில்லை.

மறுநாள் சுடலைக் காட்டுக்குப் போய் ஆச்சியின் எலும்புகளை எடுத்துக் கொண்டு பால் ஊற்றி நவதானியங்களை தூவ சென்றவர்களுடன் சுந்தரமும் சென்று வந்தார். அவர் முகத்தில் இருந்த சவக்களையை ஆச்சி இறந்த துயருக்கான காரணமாக பாவித்துக் கொண்டார்கள்.

மதியம் ஆச்சி வீட்டுக்கு எதிரே போடப்பட்டிருந்த கொட்டகையில் எல்லோருக்கும் உணவு அளித்தார்கள். வந்தவர்களெல்லாம் ஒவ்வொருவராக கிளம்பினார்கள். வெயில் தாழட்டும் என எண்ணிய சிலர் சுந்தரத்தின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஆச்சியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சில் கலந்துகொள்ளாமல் கேட்டுக் கொண்டிருந்தார் சுந்தரம்.

"ஆச்சி வந்துதானே இந்தக் குடும்பத்த நிமித்திச்சு" என்று கூறியவரைப் பார்த்தார் சுந்தரம். இரண்டு வாரங்களுக்கு முன்னால் அறந்தாங்கி சந்தையில் பார்த்தபோது "இன்னுமா அந்தக் கெழவி போய்சேரல... சரிசரி செஞ்ச அக்கிரமத்துக்கு அவ்ளோ சீக்கிரம் சாவு வந்திடுமா" எனக் கேட்ட ஆவுடையார் கோவில் சிவசாமிதான்.

"ஆச்சி மாதிரி கட்டுச்செட்டா குடும்பம் நடத்த யாரால முடியும்ங்கிறேன்" என்று அழுத்திக் கேட்டான் அரிமளம் சொக்கன். "மருமகளுக்கோ வேல செய்றவங்களுக்கோ எதையுமே ஈனாததாலதான் இப்படி சீப்பட்டுக் கெடக்குது" என்று சில நாட்களுக்கு முன் பேசியவன்தான் இவர்.

எதுவும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார் சுந்தரம். அவர்கள் கூறியதெல்லாமே ஆச்சி இறந்து அவர் உடலை எரித்து எஞ்சிய சாம்பலை சிறு செம்பில் வைத்துவிட்டு வந்திருக்கும் இந்த மனநிலையில். இப்போது இவர்கள் பேசுவதுதான் ஆச்சியைப் பற்றி எஞ்சப்போகும் செய்திகள் என்பதை உணர்ந்தார் சுந்தரம். ஒவ்வொருவரும் ஆச்சியின் ஒவ்வாத குணங்களையும் நடத்தைகளையும் கடந்து அவரின் எப்போதும் நிலைத்திருக்கும் சில மேன்மையான தருணங்களை மட்டும் பேசிப்பேசி தங்கள் நினைவுகளுக்குள் பதிந்து கொண்டார்கள்.

செம்பில் நீர் தீர்ந்திருந்தது. மொண்டு வர வீட்டினுள்ளே சென்ற சுந்தரம் சில பெண்கள் அமர்ந்திருப்பதைக் கண்டார். வெளிச்சத்திலிருந்து உள்ளே வந்ததால் அவர்களின் முகங்களை தெளிவாக காணமுடியவில்லை. ஆச்சியின் மருகளின் குரல் கேட்டது. மூன்று நாட்களாய் அழுது சோர்ந்தவளை சற்று இளைப்பாற்றுவதற்காக சாரதா அழைத்து வந்திருப்பாள் போல. "அத்தை ஒடம்புக்கு முடியாம கெடந்தப்ப... என்னென்னவோ சொல்லி திட்னப்ப எனக்கு ரொம்ப ஆங்காரமா இருந்துச்சு. ஆனா அவங்க இந்தக் குடும்பம் எப்பவும் சந்தோசமா இருக்கனும்ங்கற எண்ணத்தோடதான் எப்பவும் இருந்தாங்கங்கிறது இப்ப புரியிது..." குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே தண்ணீருடன் வெளியே வந்தார்.

வெயில் தாழ்ந்தவுடன் ஒவ்வொருவராகக் கிளம்பினார்கள். கேத வீட்டிலிருந்து கிளம்பும்போது சொல்லிவிட்டு செல்லக் கூடாதென்பதால் சொல்லாமலேயே கிளம்பினார்கள். திண்ணையில் சாய்ந்தமர்ந்து செல்பவர்களை நோக்கிக் கொண்டிருந்தார். வீட்டிற்குள்ளிருந்து இரண்டு பெண்கள் செல்வதையும் வெறுமனே பார்த்தார். அந்த ஒரு தடவை பார்த்ததற்கு பிறகு அம்மிணியை பார்க்கவேயில்லை. இப்போது அப்பெண்கள் செல்வதைக் கண்டதும் துடிப்புடன் நிமிர்ந்தார். இதையா.. இதையா... என்ற கேள்வி உள்ளே ஒலித்துக் கொண்டேயிருந்தது. வாசல் கதவை திறக்கும்போது திரும்பி ஒரு கணத்திலும் கணம் இவரை நோக்கிவிட்டு திரும்பினாள். அப்போது கண்டது அவளின் கூந்தலையல்ல, உடலையல்ல முகத்தைக்கூட அல்ல. விழியின் முனையை மட்டுமே. சாட்டை சொடுக்கி உடலை தீண்டிச் சென்றதென உணர்ந்தார். கூரிய முள்ளா, தேனின் வெம்மையா, பனியின் தொடுகையா எல்லாமுமா ஆம் ஆம் எல்லாமும்தானென மனதில் பெரும் குமுறல் எழுந்தது. அதையல்ல.. அதையல்ல... இதைத்தான் இதைத்தான் என்று வாய் அரற்றியது. அக்கணமே அவளை தழுவிக்கொள்ள வேட்கை எழுந்தது.. திண்ணையிலிருந்துவேகமாக குதித்து இறங்கியபோது,. சாரதாவின் பார்வை கூர்மையுடன் முதுகில் படுவதை உணர்ந்தார்.

கா. சிவா

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...