கிழிஞ்ச கதவு

Rizwan
பெண்மையக் கதைகள்
4.8 out of 5 (10 )

கிழிஞ்ச கதவு..

ரிஸ்வான்


பொன்னி வெள்ளனையே எந்திரிச்சி காலைக் கடனுக்கு நொச்சி பொதரு பக்கமா

ஒதுங்க போயிடுச்சி..பொன்னிக்கு ஒடம்புல கூச்ச நாச்சம் அதிகம்..இருட்டா இருக்கும் போதே இதெல்லாம் முடிச்சிக்கிடனும்..பொறவு பொல பொலன்னு விடிஞ்சி போச்சுன்னா பொட்டச்சிங்க அவசரத்துக்கு ஒதுங்க மறைவு தேடி அலையனும்..


காலோடு கழண்டு வர அவஸ்தையில வேர்க்க விருவிருக்க மறுபடியும் சாயிங்காலம் இருட்டுற வரையில அடக்கி ஆளனும்..

பொன்னி எல்லாத்தையும் முடிச்சிட்டு குடிசைக்கு திரும்புச்சி…..


களிமண் செவத்துமேல கூரைக்கு பழைய கிழிஞ்ச கித்தான் போட்டுமூடுன குடிசை. ஓடைஞ்சி ஒத்தை அல்லுல தொங்கிகிட்டு கெடக்குற மரக்கதவு..ஓட்டக் கதவுன்னாலும் குடிசைக்குள்ளாற குந்திக்கிட்டு கதவை சாத்திக்கிட்டா புதுசா ஒருபூமிக்கு வந்துதனியா இருக்கிறாப்போல மனசுல நிம்மதி வந்துரும்.


பொன்னியும் முருவனும் சட்டிப்பானை செய்யிற குயவர் குலத்தொழிலு,நேரம் சரியில்ல எல்லாத்துலயும் நட்டம்…கடன் தொல்லை பன்னண்டாயிரம் கழுத்துல சுத்துன பாம்பாட்டம் முகத்துக்குநேரா சீறி பாஞ்சிகிட்டே இருந்துச்சி…ரோட்டுல யாராச்சும் சத்தமா பேசினாக்கூட கடன் தந்தவங்க யாரோவந்து சத்தம் போடுறதா நெனைச்சி குடிசை குள்ள இருக்குற பொன்னிக்கும்,முருவனுக்கும் வயத்தை கலக்கும்..முள்ளு குத்துன நத்தைப்போல சறுக்குன்னு கூட்டுக்குள்ளார இழுத்துக் குங்க.


வயத்துக்கு கஞ்சியும் மனசுக்கு நிம்மதியும் இல்லாம தவிச்ச நேரத்துலதான் மேஸ்திரி பூமிநாதன் ஊருபக்கமா செங்கல் சூளை வேலைக்கு ஆள்பிடிக்க அலைஞ்சி திரிஞ்சிகிட்டு இருந்தாரு.


சேம்பர் மேஸ்திரி வெறும்வாயில வெண்ணை வடியபேசி முருவனையும் பொன்னியையும் மடக்கி போட்டாரு இன்னிக்கி வந்து கடன்காரவுங்களுக்கு பணத்தை பைசல் பண்ணிட்டு நெற்குன்றம் பக்கம் இருக்குற சேம்பருக்கு கூட்டிக்கிட்டு போயிடறதா வாக்கு கொடுத்து இருந்தாரு.


பொன்னி குடிசைக்கு போனப்போ கடன் கொடுத்தவங்க குடிசை எதுக்க நின்னுகிட்டு இருந்தாங்க.


அடசாமியே… இன்னும் பொழுதுகூட விடியல…ராத்திரி நிம்மதியா தூங்குச்சீங்களோ இல்லையோ…


அதுங்களையும் குத்தம் சொல்ல முடியாது தொழில் செத்துப்போன காலத்துல புள்ளை குட்டிங்களோட பசிபட்டினியில செத்து கெடந்த அப்ப வயத்து செலவுக்கு காசுகுடுத்து பசிபட்டினியில இருந்து உசுர எழுப்பி உக்கார வச்சிதுங்க…கடங்கொடுத்தவங்களும் அம்புட்டு ஒன்னும் லாவா தேவிகாரங்க இல்ல ஒழைச்ச காசுல இடுக்கி வச்சி இருக்குற அன்றாடம் காய்ச்சிங்கதான்..


தே….எம்புட்டு நேரமா எல்லாரும் வந்து வாசல்ல நிக்காங்க…உனக்கு எங்கிருந்துதான் இந்த தரித்திரம் புடிச்ச தூக்கம் வருமோ..எந்திரிச்சி வெளியே வா..


முருவன் நெஞ்சு மேலக்கெடந்த வள்ளியை தரையில கெடத்திட்டு வெளியே வந்தான்.


சத்த நேரத்துல மேஸ்திரி பூமியும் டிராக்டர்ல வந்து இறங்கினாறு..


சேம்பர் மேஸ்திரி பட்டுன்னு மடியை அவுத்து ஊருகடன் எல்லாம் பணம் பைசல் பண்ணி முடிச்சதும்

குடிசையில இருந்த அலுமினிய சட்டி பானை,உடுத்துற கந்தல் துணிகளை அள்ளி நைஞ்சிப் போன கோனியில மூட்டைக் கட்டிக் கிட்டு குழந்தை வள்ளியையும்,தங்கராசுவையும் தோளில் தொத்த வச்சிக்கிட்டு புதுதிசையை நோக்கி கெளம்பிடுச்சிங்க..


பொழைப்பு இல்லாத ஊருல பொணமா கெடக்குறதை விட காத்தடிக்கிற திசையில தூசா பறக்குறதுதான் நல்லது..சாமி இருக்கு பாத்துக்கிடும்ங்கிற .நம்பிக்கையில…


சிதிலமாகி நைஞ்சிப் போன தன்னோட குடுசையோட ஓடைஞ்ச ஓட்டக்கதவை தூக்கி நிக்கவச்சி கொக்கிமாட்டி ஒத்தைப் பூட்டு போட்டுட்டு கிளம்பும் போது கண்ணுல தண்ணி வந்துடுச்சி முருவனுக்கு மனசுல வலி… பொன்னியும் டிராக்டரில் ஒக்காந்துகிட்டு குடிசையை பாத்து அழுதுச்சி எம்புட்டு சந்தோசமா வாழ்ந்த ஊடு..சொதந்திரமா காத்துபோல அலைஞ்சி திரிஞ்ச ஊரு..


டிராக்டரில் மும்பே ஆளுங்க உக்காந்து இருந்தாங்க..வெயிலுக்கு மறைப்பா டிராக்டர் வண்டியில கித்தான் கூடாரம் போட்டு இருந்துச்சி..


முருவனுக்கும் பொன்னிக்கும் மேஸ்திரி பூமிநாதன் வானம் ஒசரத்துக்கு ஒசந்து விசுவரூவம் எடுத்து நிக்கிற சாமிபோல தெரிஞ்சாரு…


மத்தியானம் ரோட்டாரமா வண்டிக்கடையில வயிறுகுளிர சொம்பு நெறைய கேழ்வரகு கூழும் உள்நாக்குல சுள்ளுன்னு கருந்தேள் கொட்டுறாப்போல கருவாட்டுக் குழம்பும்…வாங்கி குடுத்து வயித்த குளிரவச்சு ஊருக்கு கூட்டியாந்தாரு..


மக்கியா நாளு விடியல்ல ஆறு மணிக்கெல்லாம் செங்ககல்லு அறுக்குற மைதானத்துல வேப்ப மரத்துக்கீழ இருக்குற பாறாங்கல்லு மேல மேஸ்திரி பூமிநாதன் உக்காந்து இருந்தாரு ..


பழைய ஆளுங்க கஞ்சி பானையில கையை விட்டு கலக்கி நீச்சத்தண்ணியை கலக்கி குடிச்சிட்டு சூளை தொழிலுக்கு கெளம்பிடுச்சிங்க..


சூளை மைதானத்துல நின்னு மேஸ்திரி பூமிநாதன் ஒழைப்பெடுக்குற மக்களை பாத்து கத்தஆரம்பிச்சாரு..


கண்ணா வேலையைப் பாருங்க..மொதலாளி இப்ப வருவாரு..உங்களால என்னை வைஞ்சி பொரிக்கடலையா வாரியெடுத்து வாயிலேப் போட்டு மெல்லுறாரு..காலங்கதாத்தால பொஞ்சாதி புள்ளைங்க மூஞ்சக்கூட பாக்காம வெள்ளன உங்ககிட்ட வந்து மாரடிக்கேன்


சனங்க மேஸ்திரியை சட்டைப் பண்ணல அதுங்க வேலையில வழிச்சிவாறி சுருட்டிக் கிட்டு கெடந்துச்சிங்க


தே..பூஞ்சா இன்னும் தூங்கிகிட்டு கெடக்கானுங்களே..புது முறைக்காரவுங்க போயி எழுப்பி இங்க கூட்டியா..சத்த நாழியில ஓனரு வந்துருவாரு..


எல்லாம் நீ நேத்து புடிச்ச எலிங்களா…ப்ச்..

உங்கிட்ட சிக்கி என்ன சீரழியப் போவுதுங்களோ பாவம்…இந்த பாவமெல்லாம் உன் பொண்டாட்டி புள்ளைங்களதான் சேரும்..


தே..கிழவி காலங்கதாத்தால வெறுப்பேத்தாதே...சொல்றதை செய்யீ...


நான் கெழவிதான்டா சின்னப்பயலே..பதினாறு வயசுக்கு கொமரிண்ணு உம்பக்கத்துல வந்து ஒரசிக்கிட்டா நிக்கேன்…நான் எல்லாத்தையும் ஆண்டு முடிச்சவ…என் வயசு வரைக்கும் நீஇந்த பூமியில தங்குவியாப் பாரு…கம்முனாட்டி


மேஸ்திரி பூமிநாதன் காதுல வாங்கி காத்துல விட்டுட்டு கம்முனு நின்னுகிட்டு இருந்தாரு .கெழவியை ஒன்னும் புடுங்க முடியாது..பக்கத்து ஊருக்காரக்கிழவி..


அஞ்சாறு மணிக்காலம் டிராக்டரில் குலுங்கி குலுங்கி வந்தஅசதி…பூஞ்சா கூப்பிட்டதும் எல்லாரும் வாறி சுருட்டிக்கிட்டு ஓடியாந்தாங்க..


வணக்கம் மேஸ்திரி…


நான் சொல்லுறதை புத்திய தொறந்து வச்சு கேட்டுக்குங்க…நேத்து உங்க ஊருகடன பைசல் பண்ணிட்டு வந்தாச்சு.. அவங்க அவங்க கடன் தொகைக்கு தக்கன ஒழைப்பத்தரணும்..உங்க வலதுகையை அடமானம் வச்சி சாமிசத்தியமா கடன்வாங்கி இருக்கீக..உங்கவலது கை ஒழைப்பு பூரா ஒனருக்கு சொந்தமாக்கிட்டீங்க நீங்கபட்ட கடனை உங்கஒழைப்பு காசால அடைச்சிட்டு ஊருபாத்து போயி சேரலாம்..ஒழைப்புகாசு பணத்தோட.


ஊடால ஏதாச்சும் சுணக்கமுன்னா உங்கஆயுள் பரியந்ததுக்கும் கடன்தொகை பூர்த்தியாகம இங்கிட்டுதான் செரமம் எடுக்க வேண்டி வரும் தெளிவா,மொறைய,உறுதியா சொல்லிப்புட்டேன்…


நாளு ஒண்ணுக்கு பெரியாளுங்க ஆயிரம் முறை கல்லு சீவனும்,அதுக்கு அந்தால முதலாளி விசுவாசக் கல்லு நூத்தம்பது சீவனும். இந்த சேம்பரு முழுக்க முழுக்க கைமாலு சேம்பரு ஆகைனாலே மண்ணை வெட்டி அள்ளிக்கொட்டி சேறுகூட்டி சாந்தாக்கி வெறும் காலால மிதிச்சி மொண்டலு (புல்லு,பூண்டு) நீக்கி சேடைகலக்கி விடனும் களிமண் சாந்துக்கு மண்ணு எடுக்கும்போது மண்ணு வெண்ணை மாதிரி நெகிழ்ந்து வாட்டம் குடுக்குமான்னு பாக்கணும் மண்ணுல உப்புச்சாடி இருக்கான்னு நாக்கால நக்கி சொவை பாக்கணும் உப்பேறி போயிருந்தா சூலையில வேகாம அரிக்காங்கல்லா உதிந்துரும் ,..களிமண் சாந்தைக் கூட்டி கல்லு அறுத்து, காத்தாற வெயில்ல பதமா ஓணத்தி சூளைக்கு கட்டடம் கட்டுற பதத்துல தரணும். கல்லு வெந்ததும் சூடு ஆறவுட்டு..டிராக்டர்ல ஏத்தி களஞ்சியத்துல கொண்டுபோயி அடுக்கணும்.


சூளை வேலையும் செய்யறதுக்கு சூளை தொழில் பழகனவங்க இருக்காங்க அவங்களுக்கு ஒத்தாசையா இருக்கணும்.. எல்லாரும் பகுந்து கிட்டு செய்யணும்


பாதியாளுங்க (சின்ன புள்ளைங்க)ஐனூறு கல்லுங்க சீவனும் உங்க கூட இருக்குற நண்டு சிண்டுங்க கணக்குல இல்ல..நீங்க இஷ்ட்டப் பட்டா கூடமாட தொணைக்கு வச்சிக்கிடலாம்..ஆனால் ஏதாச்சும் அசம்பாவிதம் ஆச்சுன்னா உங்க பொறுப்பலதான் ஏக்கணும்..


மேஸ்திரி பேசபேச கூடியிருந்த சனங்களுக்கு வேர்த்துச்சு..பொன்னி சுத்துமுத்தும் வேடிக்கை பாத்துகிட்டு நின்னுகிட்டு இருந்துச்சி..ஒன்னும் வெளங்கிக்கிடல..


இன்னும் சொல்லுறேன்…இங்க வெள்ளன அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் சூளையில தொழில்ல எறங்கியாவனும்…

பகல்ல கஞ்சி குடிக்க அரைமணிக் காலம்..சோலிய முடிச்சிட்டு அறுத்த கல்லை கணக்கு குடுத்துட்டுதான் குடிசைக்கு போவனும்..குடிசைக்கு மறைப்போ,கதவோ,தட்டியோ வச்சி மறைக்க கூடாது..ஏன்னா குடிசைக்குள்ள என்ன நடக்கு,உள்ளே யாருசோலிக்கு போவாம ஒண்டிக் கெடக்காங்கன்னு தெளிவா வெளியில இருந்து நான் பாக்கணும்..அர்த்தமாச்சா..


ஏன்யா பொம்மணாட்டிங்க,வயசுப் பிள்ளைங்க உடுப்பு மாத்த கை கால் அசதிக்கு நீட்டி சொதந்திரமா படுக்க வேணாமா,புருஷன் பொண்டாட்டி ராத்திரியில தொட்டுக்காம எப்படி தூங்கறது..வயசுப் புள்ளைங்க,பொம்மணாட்டிங்க அவசரத்துக்கு தீட்டுத்துணி மாத்திக்க மறைப்பு வேணாமா..ரொம்ப அநியாயமா இருக்கே..


அதெல்லாம் நீங்கதான் சூதானமா பாத்து செஞ்சிக்கணும்...பெரிசு..அடிக்கடி நீவாயை தொறக்காதே..முடியலைன்னா வாங்கன துட்டை வட்டியும் முதலுமா பைசல் பண்ணிட்டு கிளம்பு..யாரும் உங்களை மொசக் குட்டியாட்டம் அமுக்கி புடிச்சி கூட்டியாருல..


சொந்தக் கடனை அடைக்கிற வலுவை சாமி எங்களுக்கு கொடுத்து இருந்தா நாங்க ஏய்யா இப்படி லோல்பட்டு ஊருஊரா புள்ளைக்குட்டிங்களோட லொங்கழியிறோம்..


வயதுக்கு கஞ்சிஊத்தி மழைக்கு ஒண்டுறதுக்கு எடம் கிடைய்க்குமில்ல அதுபோதும் விடுசாமி எங்களை ரெண்டு ரெண்டுபேரா ஏருகலப்பையில கட்டிவேணுமுன்னா உன்பூமியை உழுதுக்க சாமி..


பொறவு முக்கியமான சேதிஒன்னு இருக்கு…


என்னது… மேஸ்திரி கிட்ட சொல்லாம யாரும் தூக்கு மாட்டிக்கிட்டு நாண்டுக்க கூடாதா…


யோவ் பெருசு..வாய்த்திமிரை அடக்கு பொறவு வீணா நொந்துப்போவ…


இங்கன சுத்துப்பட்டுல முந்திரிக காட்டுல காட்டு நாயிங்க தொந்தரவு சாஸ்தி..உசுருக்கு ஆபத்தானது..ஆகையினால யாரும் குடிசையில கறி,மீனுன்னு கவிச்சி வாசனை வர்றா மாதிரி சோறு பொங்காதீங்க ..வாசனைக்கு காட்டு நாயிங்க உள்ளவந்து எல்லாத்தையும் திண்டுபுட்டு,அறுத்து வச்சிருக்க பச்சை கல்லுங்களை காலாலக்கீறி செதைச்சி மூத்திரம் பெயிஞ்சிட்டு போயிறும் பொறவு உங்க உழைப்பும்,வவுத்துக்கு ஆக்கிவச்ச சோறும்தான் பாழு…சூதானமா இருங்க இருட்டுனப்பொறவு யாரும் சூளைக்கு அந்தால கழியறதுக்குப் போவாதீங்க..காட்டு நாயிங்க எட்டி தொண்டகுழியை கவ்விரும்..உசுருக்கு ஆபத்து….போயி பொழப்பை பாருங்க…


எல்லோரும் மேஸ்திரி பூமிநாதன் காட்டிய வெத்து பத்திரத்துல வலது கைகட்டை விரலைவச்சி அழுத்தி கைநாட்டு வச்சிட்டு தொழிலைப்பாக்க கெளம்பிடுச்சிங்க..


பொன்னியும் முருவனும் ஒன்னும் புரியாம மனசு குழம்பி நின்னுச்சுங்க…

நாய்வாயில இருந்து தப்பிச்ச சுண்டெலி நரிவாயில சிக்கின கதையாயிடுச்சு வாழ்க்கை..


களிமண்ணைக் கொழைக்கிறது சட்டி பானை செஞ்சி சூளை போடுறதுன்னு பொன்னிக்கும் முருவனுக்கும் காலம் காலமா மண்ணுலதான் பொழைப்பு..இருந்துச்சி அதால செங்கல் சூளை தொழில் ஒன்னும் சிரமமா தோணலை..ஆனால் வேலை சொமையும் மேஸ்திரி பூமியோட நச்சரிப்பும் தாங்கமுடியல…நாயைப் போல பிராண்டிகிட்டே கெடப்பாரு..


பொன்னிக்கு அதெல்லாம் கூட கஷ்ட்டமா படலை..மறைப்பு இல்லாம பா'ன்னு தொறந்து கெடக்குற குடிசையில பொழங்குறதுதான் மனசுல சங்கடமா,இருந்துச்சி.


வயசானவரு சொன்னாப்போல பொம்பளைங்க அசதியில கைகால் நீட்டி சொதந்திரமா படுக்க வேணாமா..உடுப்பு மாத்திக்க,தீட்டுவந்தா தீட்டுத் துணி மாத்த மறைப்பு வேணாமா…வெளிஆம்பள ஊட்டுவுள்ள பாக்குறான்னு மனசுல பட்டுச்சுன்னா எந்த பொம்பளைக்கு இதெல்லாம் செய்ய தோணும்..…மனசுக்கு சங்கடம் இல்லாம உள்ள எப்படி இருக்கத்தோணும்..ச்சே


அதாலையே பொன்னி இருட்டு இருக்கும் போதே வெள்ளனயெ எந்திரிச்சி உக்காந்துக்கும். அசந்து தூங்குனா தூக்கத்துல துணி வெலகிடும்னு ஒடம்புல ஒரு அச்சம் இருக்கும்..ஒருநாளும் இல்ல நாளு அசந்தாப்போல தூக்கம் இழுத்துக் கிட்டு போயிடுச்சுன்னா வெளிச்சம் கண்டதும் ஏதோ வீதியில அம்மணமா படுத்து கெடக்காராப்போல வாறிசுருட்டி எந்திரிச்சிக்கும்…


ஊடுண்ணா வாசல் இருக்கணும் மறைப்புக்கு கதவு இருக்கணும்..இல்லன்னா கந்தல் கோணி மறைப்பாச்சும் இருக்கணும்..அப்பதான் பொம்மணாட்டிங்க கண்ணை அசந்து தூஙகமுடியும் இங்க அதெல்லாம் இல்ல..அந்த கருப்புபன்னி மேஸ்திரிக்கு எல்லாத்தையும் வித்தாச்சு , .

ஆனால் அதுலஒரு வெஷயம் இருக்கு பொட்டச்சிங்க அசந்து தூங்கும்போது துணிவிலகி கெடந்தா எட்டநின்னு பாக்குறதுக்கா இருக்குமுன்னு பொன்னி மனசுல பட்டுச்சு.


அந்த அரிப்பெடுத்த நாயிதான் சூளையில எல்லாமும். ஓனரு எப்பவாச்சம் வருவாரு அஞ்சு நிமிஷம் நாக்காலியில குந்திட்டு வரவுசெலவு மேப்பார்வை பாத்துட்டு கெளம்பிருவாரு பூந்தமல்லியில சேம்பர் ஆபிசு.


சூளையில ஒழைக்கிற மனுஷங்க ஆருகிட்டயும் பேச்சுவார்த்தை வச்சிக்க மாட்டாரு..எதுண்டாலும் மேஸ்திரி பூமிநாதான் வாய்வழியாத்தான் ஒனருக்குப் போவனும் வரனும்..


ஓனரு சொன்னாரு,திட்டுனாருன்னு வேலை சொணங்கி கெடக்குன்னு கத்துனாருன்னு அதுவா மனசுல தோணறதை ஏதாச்சும் கொண்ணாந்து ஊத்தும்.


ஒனரு அறைக்குள்ள இருக்குற வரைக்கும் இந்த மேஸ்திரி பன்னி தரையில கூட ஒக்காராது..அம்புட்டு மருவாதை ஒனரு போனதும் அதே நாக்காலியில உக்காந்துகிட்டு ராஜாங்கம் பண்ணும்..பூஞ்சாக்கிழவி இதெல்லாம் வந்து சொல்லும்..


உங்களுக்கு பூஞ்சாக் கிழவியை பத்தி ஒன்னும் சொல்லல இல்ல..பேரு பூஞ்சோலை எல்லாரும் பூஞ்சாக் கிழவின்னு கூப்பிடுவாங்க..ஒனரு ஆபிசை பெருக்கி கூட்டி சுத்தம் செய்யற வேலை

பொறவு சின்ன சின்ன வேலை இருக்கும்..


மேஸ்திரிக்கு கெழவி கொஞ்சம் ஒஞ்சு போய் உக்காந்தா கண்ணுக்கு ஒப்பாது..வேண்டுமுனே ஏதாச்சும் வேலை வைப்பாரு ..பூஞ்சாக் கிழவி அசராது போடா என் இவனேன்னு வைஞ்சிட்டு போயிறும்


பூஞ்சாக்கிழவி முறைவாசல் வேலைசெய்ய வந்தஆளு இல்ல. பக்கத்துல இருக்குற வெள்ளவேடுதான் சொந்தஊரு அந்த ஒதாவுல கெழவி பூமியை மெரட்டும்..மேஸ்திரிபூமிநாதன் இங்க வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்தே இங்கபாடு எடுக்குது ஓனரு கொன்னாந்து வச்சஆளு அதனால மேஸ்திரிக்கு பூஞ்சாக்கிழவி மேல எப்பவும் ஒரு ஒதைப்பும் காண்டும் இருக்கும்.


மேஸ்திரி இருவத்து நாலுமணி நேரமும் செங்கல் சூளையயை சுத்தி சுத்தி வந்து பொட்டச்சிங்களை மோந்து பாத்துகிட்டு காலைத்தூக்கி மோள்ரதுக்கு அலையும்..இங்க எவளும் அசைய மாட்டாளுங்க..இருந்தாலும் நப்பாசை புடிச்ச நாயீ..


ஒருநாள் ஓனரு..ஆபிசுல வந்து வழக்கமா உக்காந்துகிட்டு..மேஸ்திரி கிட்ட வண்டியில சேம்பர் கல்லு இருக்கு கொண்டா பூமின்னு சொன்னாரு..


கல்லுநல்லா மழுமழுன்னு பீங்காமாதிரி பிசுரு தட்டாம இருந்துச்சி. மேஸ்திரி பேப்பரை விரிச்சி அதுமேல வச்சாரு.


இந்தக்கல்லை யாரு அறுத்துது..மேஸ்திரி..

அவங்களை கூட்டியா நான் பாக்கணும்..


மேஸ்திரி பூமிக்கு வயத்தை பொறட்டுச்சு மொதலாளி இதுவரைக்கும் கல்லு அறுக்குற முறைக்காரவுங்க கிட்ட பேசுனதே இல்ல..பேசவும் விட்டதுமில்ல..

புதுசா இருக்கு…


ஏதாச்சும் சொல்லனும்னா நானே சொல்லிடுறேன்..நீங்க பேசறது மரியாதையா இருக்காது..


நீ போயி கூட்டியா மேஸ்திரி…


எதுக்கா இருக்கும்…மேஸ்திரிக்கு வயிறுல ஏதோ உருண்டுக்கிட்டு சங்கடமா இருந்துச்சி..சரியில்ல ஆரம்பத்துலயே ஒழிக்கணும்..இதுங்களை…மேஸ்திரி யோசிச்சிகிட்டே வெளியே வந்தாரு.


முறைவாசல் நாய்களை நான்போயி கூப்புடனமா…திமிருஏறுச்சு மேஸ்திரிக்கு


எதுக்கால இருந்த பூஞ்சாக்கிழவி கிட்ட முருவனையும், பொன்னியையும் கூட்டியார சொலிட்டு காத்துக்கெடந்தாரு..


சத்த நாழியில முடிச்சிட்டு வந்துடுறேன்..இல்லண்ணா களிமண் சாந்து வீணாயிரும்…ஆத்தா


இதுவரைக்கும் ஓனரு ஆரையும் கூப்புட்டு பேசுனது இல்ல..முருவா நீதான் மொதல்ஆளு சுருக்கா வந்துடு இல்லன்னா கோவமாயிடுவாரு.


சரி ஆத்தா..


மொதலாளி..கூப்புட்டதும் வரலை பாருங்க..அதுங்களுக்கெல்லாம் மருவாதி தெரியாது.


வணக்கம் முதலாளி..


பின்னாடி வந்து நிக்கிற முருவனையும் பொன்னியையும் பாத்து மேஸ்திரிக்கு சங்கடமாயிடுச்சி.


அச்சுல களிமண் சாந்து அப்பிகிட்டு இருந்தேன் முதலாளி கொஞ்சம் தப்பினாலும் சாந்து ஈரம் ஓணங்கிடும் பொறவு பதம்வராது...கூப்புட்டதும் ஓடியார முடியலை மன்னிக்கணும் முதலாளி..


ஓனரை சாமின்னு மருவாதையா கூப்புடு..


மேஸ்திரிபூமி முருவன் காதோரமா முணுமுன்னுதாரு..


பரவாயில்லையா..நீ எந்தஊரு விழுப்புரம் பக்கம் வண்டிக்காவனூரு.


எத்தனை வருசமா கல்லுசீவுற..


இப்பத்தான் ஒருவாரமா..சாமி..எங்க குலத்தொழிலு மட்பாண்டம் செய்யிறது..

குயவருங்க...கெட்டகாலம் தொழில் நயிஞ்சிபோச்சு..கடன்தொல்லை..


இந்த கல்லை யார் சீவனது


நானும் பொஞ்சாதியும்…எனக்கு கைப்பதம்னா..பொன்னிக்கு கால்பதம். காலால பக்குவமா மிதிச்சி களிமண்ண கடைஞ்சி வெண்ணை எடுக்கும்…


ஓணரு…சிரிச்சாரு…


நெசமாவா..தொழில்புத்தி, கைவாட்டம் இருக்குயா உங்ககிட்ட..நான் கூப்புட்டதும் கைவேலையை ஒதறி போட்டுட்டு ஓடியாராம முடிச்சிட்டு வந்து நிக்கிறியே..தொழில்காரங்க நீங்க ..உன்னை கவனத்துல வச்சிக்கிறேன். உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட வந்துக்கேளு..

உனக்கு நெறைய வேலைஇருக்கு…

நீபோயி தொழிலை கவனி பொறவு கூப்புட்டு பேசுறேன்..


சரிங்க சாமி..


சாமின்னு கூப்பிடாத..முதலாளின்னு கூப்புடு….போயி தொழிலை பாருங்க..


மேஸ்திரி பூமிநாதானுக்கு எங்கேயோ சறுக்கி கிட்டுப்போயி பள்ளத்துல உழுவுராப்போல இருந்துச்சி..என்னாச்சி ஓனருக்கு…சட்டுன்னு சரிஞ்சிட்டாரு..

முறைவாசல் செய்றவங்களை கூப்புட்டு பேசுறாரு..கவனிக்கணும்..இல்லன்னா நம்ம பொழப்பு நாறிடும்.


இவங்க சீவரது செங்கல்லு இல்ல மேஸ்திரி வைரக்கல்லு..நம்ப SRB சேம்பரு ஓணரு கார்த்திகேயன் கூட இந்த செங்கல்லை பாத்து அசந்துட்டாரு..இவிங்கமேல கவனம் வையி..தொழில்காரனுங்க பொறவு யோசிச்சு முடிவு பண்ணலாம்..இவங்களுக்கு ஒப்பந்த பத்திரம் எப்படி போட்ட


வழக்கமா முறைகல்லு அறுக்குறவங்களுக்கு எழுதராப் போலத்தான்…வலது கையை அடமானம் போட்டு..கடனா பணம் வாங்குனதா…


முருவன் சோடிக்கு பொறவு நான் சொல்லுறபடி மாத்தியெழுது..

முருவனும் பொன்னியும் முறைவாசல் செய்றவங்க இல்லை முறையா தொழில் செய்றவங்க..நாம அவங்களை மதிக்கனும்


சரிங்க முதலாளி..

ஓணரை வண்டி வரைக்கும் போயி வழி

அனுப்பிட்டுவந்தாரு மேஸ்திரி..


முருவன்மேல மனசுக்குள்ள பொறாமை பத்திகிட்டு எரிஞ்சிது..இவ்வளவு சுருக்கா மொதலாளி மனசுல ஒக்காந்துட்டானே..


முருவனை ஒழிக்கணும்..


மாமா நமக்கு விடிவு காலம் பொறக்கும் போலத்தோணுது..நேரிடையா சாமிதரிசனம் கிடைச்சிடுச்சி..


அவசரப்பட்டுடாத பொன்னி முதலாளிங்க மனசு எப்பவும் லாபத்தைதான் தேடும் ஒன்னு புரியுது நாம அறுத்துகல்லு மொதலாளிக்கு புடிச்சிருக்கு..

மேஸ்திரி மூஞ்சை பாத்தியா கடுப்புல வெடிக்குது..அவரு அவ்வளவு சுளுவா ஒனருகிட்ட நேரா நாமபோவுறதுக்கு வழிவிட மாட்டாரு.. நாமும் மேஸ்திரியை தாண்டிபோவ வேணாம் பொழைப்புல மண்ணு விழுந்திடும்.


போவட்டம் மாமா நம்மளுக்கு எதுவும் வேணாம் நம்மகுடிசை வாசலுக்கு கோணி மறைப்பாவது போட்டுக்கறதுக்கு உத்தரவு வாங்கிக்க..அதுபோதும் ராத்திரியில ஒம்மேல ஆசையா கையப்போடக்கூட அச்சமா இருக்கு..சாமி நம்பள மாதிரி ஏழைப்பாழைங்களுக்கு காசு இல்லாம கொடுத்த சொகம் அது மட்டும் தானே மாமா..


முருவனுக்கு பொன்னி மனசுல இருக்குற ஏக்கம் புரிஞ்சுது..


வா முருவா..


சாயிந்திரம் அறுப்புகல்லு கணக்கு முடிக்கப் போனப்ப மேஸ்திரி சிரிச்சிகிட்டே முருவனை வரவேத்தாரு..


கல்லுஅறுப்பு எல்லாம் முடிஞ்சிதா..

உனக்கு தொழில்ல கைசுத்தம்யா ஆனால் கொஞ்சம் சுறுசுறுப்பு பத்தாது…ஒன்னைப் பத்தி ஓனருகிட்ட சொன்னப்ப நீஅறுத்த கல்லப் பாத்துட்டு அசந்துட்டாரு..உனக்கு யோகம் இருக்குயா..


அதெல்லாம் ஒண்ணுமில்ல மேஸ்திரி..எல்லாம் நீங்க காட்டுன வழிதான்..கணக்கு எடுத்துக்குங்க..

அப்புறம் மேஸ்திரி ஒருசின்ன உதவி வேணும்..


சொல்லுயா..செஞ்சிப்புடுவோம் ஓணரு உத்தரவு குடுத்து இருக்காரு..


ஒண்ணுமில்ல மேஸ்திரி சின்னப் புள்ளைங்க குளுரு தாங்காதுங்க...வாச மறைப்புக்கு ஏதாச்சும் செஞ்சா நல்லா இருக்கும்..


செஞ்சிருவும்யா..நாளைக்கே தச்சனை வரவச்சி மரக்கதவு போட்டுருவோம்..


மேஸ்திரி பேச்சுல கிண்டல் இருந்துச்சி..


வேணாம் மேஸ்திரி நாங்களே மறைப்புக்கு ஏதாச்சும் போட்டுக்குறோம் அனுமதி குடுத்தாப் போதும்..


ஒன்இஷ்ட்டம் முருவா.நீவாசலுக்கு மறைப்பு போட்டுக்க.. ஒனருகிட்ட பேசறேன்..போயிட்டு வா..


முருவனுக்கு சந்தோசமாயிடுச்சி..


மேஸ்திரிக்கு உள்ளுக்குள்ள பத்தி எரிஞ்சுகிட்டு இருந்துச்சி..


மக்கியா நாளே முருவன் களஞ்சியத்துல கல்லு இறக்கப் போவும் போது..வழியில வெள்ளவேடுல மளிகை கடையெல்லாம் தேடித் துழாவி மொறட்டு அரிசி கோணிப்பை ஒன்னை விலைக்கு வாங்கி வந்து வாசலுக்கு மறைப்பு கட்டினான்..பொன்னிக்கு தெரியாம…


பொன்னி சாயிங்காலம் வந்து வாசல் மறைப்பை பாத்தப்போ..சந்தோஷம் தாளால ..தன்னோட குடிசையை சுத்தி கோட்டை செவுரு எழுப்புனாப்போல நிம்மதி..


முருவன் பொண்டாட்டியோட சந்தோசத்தை பாத்து ரசிச்சிக்கிட்டு இருந்தான்..


ராத்திரி மாமன் மேல உரிமையோடு தைரியமா கை போட்ட போது ஒடம்பு சிலுத்துச்சி பொன்னிக்கு..சொகமா இருந்துச்சி..


மாமா எம்புட்டு நாளாச்சு உன்மூச்சுக் காத்து என் மாருல படுறாமாறி ஒண்ணாப் படுத்து..

மனசுக்கு நிம்மதியா,சந்தோசமா இருக்கு மாமா..


பொன்னியின் இடுப்பை கைகளால் வளைத்து இறுக்கினான் முருவன்..


பொன்னி வாறிசுருட்டி எந்திரிச்சிது..


வெளியே மேஸ்திரி நின்னு கத்திகிட்டு இருந்தாரு..


பொழுது விடிஞ்சிடுச்சி.

ரொம்ப நாளுக்கு பொறவு ராத்திரி கிடைச்ச சந்தோஷத்துல கண்ணு அசந்துடுச்சி..


முருவன் எந்திரிச்சி வெளியேப் போனான்..


வாயா..புது மாப்பிள்ளை மொதலிரவை கொண்டாடிட்டு வாரியா..இப்ப தெரியுதா நான் ஏன் எல்லா குடிசை வாசலுக்கும் மறைப்பு போடக் கூடாதுன்னு அடம் பிடிக்கேன்னு.


உள்ளே கேட்டுக்கிட்டு ஒடுங்கி கிட்டு இருந்த பொன்னிக்கு மானத்துல ஊசிவச்சி குத்துறாப்போல மானக்கேடா இருந்துச்சி…

அழுக வந்துடுச்சி..


ஒருநாளைக்கு புருஷன் கூடபடுத்து சந்தோசமா இருந்தது கூடவா உன் மனசுக்கு ஒப்பல….சாமி


நாழியாச்சு..போயி பொழைப்பை பாருங்க..வயித்துக்கு சோறு இருந்தாதான் மத்தது எல்லாம்….


பொன்னி காதுல விழுந்துச்சி..ச்சே என்ன என்ன வாழ்க்கை….


பொன்னி ஒடம்பு துணியை..சரி செஞ்சிகிட்டு..குடிசையை விட்டு வெளியே வந்துச்சி ..உலகத்தைப் பாக்க மனசுக்குள்ளாற கூச்சமா இருந்துச்சி..பொன்னிக்கு…


அப்பட்டமா பொன்னியை மொறைச்சி பாத்தாரு…மேஸ்திரி..


பொன்னிக்கு கூச்சத்துல ஒடம்பு நத்தை போல சுருங்குச்சி..


ஏம்மா..வயத்துப் பொழைப்புக்கு போவுற எண்ணமில்லையா…ஆம்பளைக்குதான் புத்தி பீ திண்ணப் போவுதுன்னா பொம்மணாட்டி உனக்காச்சும் புத்தி வேணாம்…போங்க போயி பொழப்பை கவனிங்க…


பொன்னிக்கு சிவு'க்குன்னுச்சி..ஒடம்புல.


முருவனும் பொன்னியும் கிளம்பினாங்க..


கொஞ்சம் இருங்க…


மேஸ்திரி கையில இருந்த சாவிகொத்துல கோர்த்து வச்சிருந்த சின்ன பேனாக் கத்தியை விரிச்சி..முருவன் குடிசை வாசலுக்கு கட்டியிருந்த மறைப்பு கோணியை முருவன் மேல இருக்குற ஆத்திரம் தீர பாளம் பாளமா கிழிச்சாரு…

பொன்னி கண்ணெதிரே…


பொன்னிமனசு தாளாம அழுதுகிட்டே முருவன் பின்னாடி போயிடுச்சி..


எம்புட்டு நாளாச்சி உன்கூட படுத்து..மாரெல்லாம் சுடுது மாமா..உன் மூச்சு காத்துல..இம்புட்டு சூட்டையா ஒனக்குள்ள அடக்கி வச்சிருக்க..


ம்ம்..நீயுந்தான்...ஒன்னோட மாராப்பு ஒதுங்கும் போதெல்லாம் அதுல உன் மனசோட ஏக்கங்களைப் புரிஞ்சிக்கிறேன் பொன்னி…


பொன்னி….


ம்ம்ம்..சொல்லு மாமா.


இன்னும் சும்மா பேசிக்கிட்டே இருப்பியா…மத்ததெல்லாம்…இடுப்பு சேலையை தொட்டான்..


ச்சீய்…..


பொன்னிமனசு தொழில்ல நிக்கல..ராத்திரி ஒருநாள் கிடைச்ச சந்தோஷம் ஞாபகத்துல வந்து வந்து கலைஞ்சி போயிக்கிட்டு இருந்துச்சி..செத்துடலாம் போல எண்ணம் வந்துச்சி..


பொன்னி வேதனையோட குடிசையை பாக்க..


நேத்து ராத்திரி புருஷன் பொண்டாட்டி சந்தோஷத்துக்கு காவல் காத்து பாதுகாப்பா இருந்த கோணிக்கதவு…


கந்தல் கந்தலா கிழிஞ்சி காத்துல ஆடிக்கிட்டு இருந்துச்சி…பொன்னியோட சந்தோசத்தைப் போல…


ரிஸ்வான்.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...