ஓய்வு

janumurugannovels
பெண்மையக் கதைகள்
4.9 out of 5 (22 )

ஓய்வு

அடுக்களைக்குள் நின்று கொண்டிருந்த வேதவல்லி, கடிகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு தன்னையே திட்டிக் கொண்டாள்‌.

தேநீர் பொங்கி வர, அதை வடிகட்டி அவள் வெளியே எடுத்து வரும் முன்னே, "ஏன்டி வேதவல்லி, காலைல டீ போட்ற நேரமா இது? மணி என்னென்னு பார்த்தீயா? ஏழாச்சு! உனக்கு வேணா இது பழக்கமா இருக்கலாம். ஆனால், என் வீட்ல நான் அப்படி பழகலை!" என வசைபாடி விட்டார் பத்மாவதி.

"சாரி அத்தை, ஒரு நாள் லேட்டாகிடுச்சு!" என மன்னிப்பை வேண்டிக் கொண்டே அவரிடம் தேநீரை நீட்டியவள், தனது அறைக்கு சென்று தூங்கும் கணவன் ராகவனை எழுப்பி அவனுக்கும் கொடுத்து விட்டு, சூட்டுடன் தானும் குடித்துவிட்டு மீண்டும் அடுக்களைக்குள் புகுந்தாள். இட்லியை அடுப்பில் வைத்து விட்டு குளிக்க சென்றால் நேரம் சரியாக இருக்கும். இல்லை என்றால் அலுவலகத்தில் திட்டு வாங்க நேரிடும் என எண்ணியவள், "அத்தை, இட்லி சுட்டு சட்னி, சாம்பார் வச்சுட்றேன்!" என கூறினாள்.

"இட்லி வேணாம் வேதா. உளுந்து கம்மியா போட்டு ஆட்டிட்ட போல. இட்லி கல்லு மாதிரி இருக்கும். அதனால நீ தேசை தான் சுடணும். அவருக்கும் தோசை தான் வேணுமாம்!" என பத்மாவதி கட்டளை இட, மறுவார்த்தை எதுவும் பேசவில்லை அவள்.

விறுவிறுவென உள்ளே நுழைந்தவள், தோசைக் கல்லை வைத்து தோசையை வார்க்க ஆரம்பித்தாள். ராகவன் கிளம்பி கீழே வர, "ம்மா..." என குரல் கொடுத்தான் அவர்களது ஆறு வயது மகன் பிரதாப்.

"இதோ வர்றேன் டா!" என்றவள், தோசையை சுட்டுக் கொண்டே சாம்பாரை பக்கத்து அடுப்பில் வைத்துவிட்டிருந்தாள்.

தங்கள் அறைக்குள் நுழைந்தவள், பிரதாபின் பள்ளி சீருடையை அணிவித்து விட்டு, அவனை பள்ளிக்கு தயார் செய்து வெளியே அழைத்து வர, ராகவன் உணவு மேஜையில் அமர்ந்து இருந்தான்.

"ஏய் வேதா! என்னடி பண்ற உள்ள? என் பையன் எவ்ளோ நேரம் உனக்காக காத்திட்டு இருப்பான். ஒழுங்கா புருஷனுக்கு சோறாக்கி போட வக்கில்லை உனக்கு!" என வாய்க்கு வந்த படி அவளை திட்டிக் கொண்டே, ராகவனுக்கு உணவை எடுத்து வைத்தார். ராகவன் எதுவும் பேசாமல் உண்ண, இது தான் சமயம் என்று மேலும் தூபம் போட ஆரம்பித்தார் பத்மாவதி.

"ஏன்டா, ஊரு உலகத்துல மருமகளுக எல்லாம் எப்படி இருக்காங்க. எனக்கும் வந்து வாச்சிருக்கு பாரு. எல்லாம் உன்னை சொல்லணும் டா. சீமையில இல்லாத அழகி இவ. இவளை தான் கட்டுவேன்னு அடம்புடிச்சு கட்டுன? நானா பார்த்துக் கட்டியிருந்தா, ஒரு நல்ல அடக்க ஒடுக்கமான பொண்ணா பார்த்து இருப்பேன். இப்படிலாம் அவளை லேட்டா எழ விட்டு இருப்பேனா? நானா பார்த்து கட்டியிருந்தா கேள்வி கேட்டு இருப்பேன். இழுத்துட்டு வந்தவ தானே? எப்படி இருப்பா?" பத்மாவதி பேசுவதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டே, பிரதாப்பிற்கு உணவை ஊட்டி, மதிய உணவை டப்பாவில் அடைத்து அவனை பள்ளி பேருந்தில் ஏற்றி விட்டு வந்தாள். இன்னும் அரைமணி நேரம் மட்டுமே இருக்க, அதற்குள்ளே அவள் அலுவலகம் கிளம்ப வேண்டும். ஆனால், அவள் ராகவன் முகத்தை பார்த்து நின்றிருந்தாள்.

பத்மாவதியின் பேச்சே இப்படி தான் அவளறிந்த வரை. அவர் பேசும் போது ராகவன் அவளுக்காக பரிந்து பேசுவான். ஆனால், இன்று அவன் எதுவுமே பேசாது சாப்பிட, லேசாக உள்ளே உடைந்தது அவளுக்கு. தனது அறைக்கு சென்றவள், குளிக்க கூட தோன்றாமல், அப்படியே அமர்ந்து விட்டாள். தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது பெண்ணுக்கு. பரிவாக, ஆதரவாக இரண்டு வார்த்தைளுக்கு மனம் ஏங்கியது.

வேதவல்லி திருமணம் முடிந்து வந்த இந்த எட்டு வருடத்தில் ஒரு நாள் கூட தாமதமாக எழுந்ததில்லை. ஒரே ஒரு நாள் அலுவலக வேலை அதிகமாக இருக்க, தாமதமாகவே உறங்கினாள். அசதியின் காரணமாக அவளால் எழ முடியவில்லை. ஒரு மணி நேரம் தான் தாமதமாக எழுந்திருப்பாள். அதற்கு இத்தனை பேச்சுக்கள் பத்மாவதியிடம். அவரது வார்த்தை கூட அவளை வலிக்க செய்யவில்லை. ராகவனின் அமைதி அவளை வலிக்க செய்தது.

அவளாக ஆசைப்பட்டு ராகவனை திருமணம் செய்து கொண்டாள். அவளது வீட்டில் ஒருவருக்கும் விருப்பமில்லை. ஆனால், அடம்பிடித்து இவனை தான் திருமணம் செய்ய வேண்டும் என செய்து கொண்டாள்‌. ராகவனுக்கு மூன்று தங்கைகள், மூவருக்கும் அவள் வந்த பிறகு தான் திருமணம். அவன் ஒற்றை சம்பாத்தியம் மட்டுமே வீட்டில். அவனுடைய அப்பா, பெயருக்கு கூட அப்பாவாக இருக்கவில்லை. சூதாட்டத்தில் மொத்தத்தையும் இழந்தவர், இப்போதும் அதை விடாமல் தொங்கி கொண்டிருப்பவர். அவரை வைத்துக் கொண்டு மூன்று தங்கைகளையும் கட்டிக் கொடுப்பது என்பது இயலாத காரியம் என அவன் அறிந்ததே.

திருமணத்திற்கு முன்பே வேதவல்லிக்கும் இதெல்லாம் தெரியும். தெரிந்தும் அதை அவள் பெரிது படுத்தவில்லை. அவளுக்கு ராகவன் மீது அத்துனை காதல். இருவரும் சேர்ந்தே தங்கைகளை கட்டிக் கொடுக்கலாம் என அவனிடம் பேசி தான் திருமணம் செய்து கொண்டாள். திருமணம் முடிந்த அன்றிலிருந்து ஓடிக் கொண்டிருக்கிறாள். மூத்த தங்கை திருமணம், அவளுக்கு தலை தீபாவளி, தலை பொங்கல், வளைகாப்பு, குழந்தைக்கு பெயர் வைப்பது, மொட்டை எடுத்து காது குத்துவது என அனைத்தும் செய்து முடிய, அடுத்த தங்கை. அவளுக்கு செய்து முடிய, அதற்கு அடுத்த தங்கை. சும்மா வாய் வார்த்தைக்காக அல்லாமல், உண்மையாகவே இருவரும் சேர்ந்து தான் அத்தனையும் செய்து முடித்தனர். இதற்கு இடையில் எதாவது ஒரு தங்கை வீட்டில் சண்டையிட்டுக் கொண்டு இங்கே வந்து, தன்னால் முடிந்த வரை எதாவது பணத்தை வாங்கி விட்டு செல்வாள். அதற்கும் வேதா தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் கடன் வாங்கி கொடுக்க வேண்டும்.

மூன்று பேருக்கும் செய்து ஓய, அடுத்தாக வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினார். ராகவன் முதலில் இருந்தது வாடகை வீடு தான். இப்போது வேதா வந்த பிறகு தான் வங்கியில் கடன் வாங்கி இந்த வீட்டை கட்டியுள்ளனர். அந்த கடனை அடைப்பதற்காக மறுபடியும் கணவனும் மனைவியும் ஓடிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு இடையில் பத்மாவதி வேறு அவளை தினமும் வசைபாடுவார். அவள் எது செய்தாலும் குற்றம் காணும் குணம் அவளுடையது. ஆரம்பத்திலே இதை புரிந்து கொண்டதால், ஒரு நாளும் அவரை பற்றி ராகவனிடம் அவள் குறை கூறியது இல்லை. ஆனால், அவர் அப்படி அல்ல. தினமும் அவன் சாப்பிட வரும் போது வேதாவை கரித்துக் கொட்டிக் கொண்டு தான் இருப்பார். அவன் வேதாவிற்கு ஆதரவாக இரண்டொரு வார்த்தைகள் பேசுவான். அந்த வார்த்தைகளிலே பத்மாவதி பேசிய பேச்சுக்கள் எல்லாம் பின்னுக்கு சென்று விடும் பெண்ணுக்கு. ஆனால், அந்த வார்த்தைகள் கூட அவன் இன்று உதிர்க்கவில்லையே! மனம் கனத்துப் போனது பெண்ணுக்கு.

காலையில் எழுந்து தேநீரை தயாரித்து எல்லோருக்கும் கொடுத்துவிட்டு, சமைத்து முடித்து, அவள் அலுவலகத்திற்கு கிளம்பி, பிரதாப்பையும் கிளப்பி அனுப்பி விட்டு, எல்லோருக்கும் உணவை பரிமாறி விட்டு, ராகவன் கிளம்பியதும் தானும் அலுவலகத்திற்கு கிளம்பி விடுவாள். பிரதாப்பிற்கு மட்டும் மதிய உணவு எதாவது ஒன்றை செய்து அனுப்பி விடுவாள். அவளும் ராகவனும் அலுவலகத்திலேயே உண்டு கொள்வர்.

பத்மாவதி அவருக்கும் அவரது கணவருக்கு மட்டும் தான் மதிய உணவு சமைக்க வேண்டும். அதற்கே அத்தனை பேச்சுக்கள் அவளை பேசி விடுவார். ஒரு கட்டத்தில் அவளே மதிய உணவை சமைத்து வைத்து விட்டு போவதாக கூற, ராகவன் தான் பத்மாவதியை சத்தம் போட்டான். அவனில்லாத போது அமைதியாக இருந்தவர், அவன் அலுவலகம் சென்ற பின் அவளிடம் அதற்கும் ஒரு பாடு பேசி தீர்த்து விட்டார்.

மாலை அவள் வர ஏழு மணியாகி விடும். சில சமயங்களில் இன்னும் தாமதமாகும். எப்படி இருந்தாலும் அவள் தான் சமைக்க வேண்டும் இரவு உணவை. அமைதியாக அதை சாப்பிட்டால் கூட பரவாயில்லை. தாமதமாக வந்ததற்கு ஒரு திட்டு, சாப்பாட்டில் உப்பில்லை, உரப்பில்லை என்று பல திட்டுகள் பரிசாக கிடைக்கும் அவளுக்கு.

இப்படி எதற்கு ஓடிகிறோம் என்று தெரியாமலே எட்டு வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறாள் பெண். காரணம் ராகவன், அவளுடைய மகன் பிரதாப். திருமணம் முடிந்து அவர்கள் வெளியே சென்று சுற்றிய நாட்களை கைவிட்டு எண்ணி விடலாம். ஞாயிறு விடுமுறை கூட அவள் தாமதமாக எழ கூடாது. பத்மாவதி எழும் நேரத்திற்கு தேநீர் சுட சுட இருக்க வேண்டும். இல்லை என்றால், வீட்டில் ஒரு சண்டை. அவருக்கு பயந்து என்று கூறா விட்டாலும், ஞாயிற்று கிழமையாவது தன் கணவன் வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும் என விரைவாக எழுந்து விடுவாள் பெண். இப்படி அவனுக்காக அவனுக்காக என்று பார்த்து, தனக்காக என்று அவள் யோசிக்க, ஒன்றுமே இல்லையே! இவ்வளவு தானா தான் வாழ்ந்த வாழ்க்கை? தனக்கென பேச கூட நாதியில்லாது போய்விட்டதா? என மனது விம்ம, அலுவலகத்திற்கு விடுப்பு கூறி படுத்து விட்டாள்.

"என்னடி வேலைக்கு போகாம படுத்துட்ட? நல்லா லீவை போட்டு சுகம் கண்டுட்ட... வேலை போச்சுன்னா, அப்புறம் வீட்டு கடனை யாரு டி அடைப்பா? வாய் கிழிய பேசுன தானே? நான் கட்டுறேன் அத்தைன்னு!" மேலும் மேலும் அவர் பேச, விழிகளிலிருந்து நீர் வழிந்தது பெண்ணுக்கு. எப்போதும் போல அவருக்கு பதிலளிக்காமல் அமைதியாக இருந்தாள்.

நேரம் மதியத்தை நெருங்க, எழுந்து சென்று மதிய உணவை சமைத்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள். அவள் விடுமுறை நாட்களில் வீட்டிலிருக்கும் போது மதியம் சமைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

காலையிலும் அவள் உண்ணவில்லை, மதியமும் உண்ணவில்லை. சாப்பிடு என்று கேட்க கூட ஆள் இல்லை என்று தோன்ற, கழிவிரக்கத்தில் மீண்டும் அழுகை வந்தது.

மாலை பிரதாப் பள்ளி முடிந்து வர, எழுந்து தேநீரை தயாரித்து அனைவருக்கும் கொடுத்தவள், குழந்தைக்கு சாப்பிட தின்பண்டங்களை கொடுத்துவிட்டு, எழுந்து குளித்து தயாரானாள். ராகவன் வருவதற்குள் இரவு உணவை சமைத்து முடித்து இருந்தாள்.

ராகவன் உள்ளே நுழைந்ததும், "உன் பொண்டாட்டி இன்னைக்கு வேலைக்கு போகலை டா. சும்மா ரூம்குள்ளே படுத்துக்கிட்டா. என்னென்னு கேட்டதுக்கு பதில் கூட பேசலை!" என்ற பத்மாவதின் குரலே அவனை வரவேற்றது.

அவன் அறைக்குள் நுழைய, வேதா அமைதியாக அமர்ந்து இருந்தாள். உடையை மாற்றி வந்தவன், எதுவும் அவளிடம் கேட்கவில்லை. அவளாக அவனிடம் பேசினாள்.

"நான் என் அம்மா வீட்டுக்கு போகணும். ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு வர்றேன்!" என வேதவல்லி கூறி விட்டு அவன் முகத்தை பார்த்தாள். போகாதே! என்று ஒரு வார்த்தை கூற மாட்டானா? என எண்ணி அவள் பார்க்க, "சரி வா, நானே விட்டுட்டு வர்றேன்!" என அவன் கிளம்ப, விழிகள் பளபளத்து அப்போதே விழுந்து விடுவேன் என இமைகளில் தொங்கி நின்றது விழிநீர். அதை கடினப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டவள், அவனுடன் புறப்பட்டாள்.

"டேய்! நீ என்னடா அவ‌ சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டிட்டு இருக்க? இதென்ன சத்திரமா? அவ இஷ்டத்துக்கு வர்றதுக்கும் போறதுக்கும். அவ மட்டும் போனா, அப்படியே அவங்க அம்மா வீட்ல இருந்துக்க சொல்லு டா!" பத்மாவதி கத்த ஆரம்பிக்க, "ம்மா... கொஞ்சம் அமைதியாக இருங்க!" என அவரிடம் ராகவன் குரலை உயர்த்த, அப்படியே அடங்கி விட்டார் அவர்.

தனது இருச்சக்கர வாகனத்திலே வேதாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு, அவளது பெற்றோரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்பி விட்டான். அவன் சென்றது தான் தாமதம், "என்னாச்சு டி வேதா? முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு?" என கேள்விகளால் அவளை குடைய ஆரம்பித்தார் தீபா.

"ம்ப்ச்... ம்மா, இங்க வந்தாலே நான் என் புருஷனோட சண்டை போட்டு தான் வரணுமா? சும்மா உன்னையும் அப்பாவையும் பார்க்கலாம்னு வந்தேன்!" என்றவளின் குரல் அவளது உள்ளத்தை எடுத்துரைத்து. ஆனால், தீபா அதற்கு மேல் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. கேட்டாலும் தன் மகள் பதில் கூற மாட்டாள் அழுத்தக்காரி என அவர் அறிந்ததே. எது நடந்தாலும் கட்டிய கணவனை மட்டும் எங்குமே விட்டுக் கொடுத்தது இல்லை வேதவல்லி.

"சரி, சாப்டியா நீ? மூஞ்சியை பார்த்தாலே சாப்டாத மாதிரி இருக்கு. வா சாப்பிட!" என தீபா அவளை அழைத்து சென்று சாப்பாட்டை ஊட்ட சென்றார். திருமணத்திற்கு முன்பு, வீட்டிலிருக்கும் போது எல்லாம் அவர் தான் வேதாவுக்கு ஊட்டி விடுவார். இல்லை என்றால் சாப்பிட மாட்டாள் பெண். ஒற்றை பெண் என கேட்டது எல்லாவற்றையும் வாங்கி கொடுத்து செல்லமாக வளர்த்து விட்டனர் அவள் பெற்றோர்கள்.

அந்த பழக்கத்திலே அவர் ஊட்ட முனைய, கண்கள் கலங்கியது அவளுக்கு. சாப்பிட்டாயா? என கேட்க கூட அங்கு ஆளில்லை. ஆனால், இங்கு தன் தாய் தன் முகத்தை பார்த்தே சாப்பிடவில்லை என கணித்து விட்டார். இதழ்களில் விரக்தி புன்னகை ஒன்றை தவழ விட்டவள், உணவை உண்டு முடித்தாள்.

மறுநாள் வழக்கம் போல ஆறு மணிக்கு விழிப்பு வந்து விட, ராகவன் என்ன செய்து கொண்டிருப்பான்? பிரதாப் பள்ளி கிளம்பி விட்டானா? என அவர்களை சுற்றியே எண்ணம் ஓடியது அவளுக்கு. இருந்தும் ராகவனுக்கு அழைக்கவே இல்லை.

ராகவன் அலுவலகத்திற்கு கிளம்பி வர, அப்போது தான் தேநீரை அவன் முன்னே வைத்தார் பத்மாவதி. அமைதியாக அவன் எடுத்துப் பருக,

"பாட்டீ, எனக்கு பசிக்குது. ஸ்கூலுக்கு டைமாச்சு... பூரி வேணும்!" பிரதாப், பாதி பள்ளி சீருடையை அணிந்தும் அணியாமலும், கையில் பையுடன் கேட்டான்.

"டேய்! இது என்ன ஓட்டலா? டெய்லி பூரி, தோசை, சப்பாத்தி போட்றதுக்கு. இட்லி தான் சுட முடியும். எனக்கே அடுப்படில நிக்க முடியலை! முட்டி வலிக்குது!" என அவர் நாற்காலியில் அமர, ராகவன் பிரதாப்பை தூக்கி வந்து அவனுக்கு உடையை சரியாக அணிவித்து அவனை பள்ளிக்கு தயார் செய்தான்.

அரை மணி நேரம் கடந்தும் பத்மாவதி இட்லி சுட்டுக் கொண்டிருக்க, பிரதாப் பள்ளி பேருந்து சென்று விட்டது.

"பாட்டீ, ஸ்கூல் பஸ் போய்டுச்சு." பிரதாப் கத்த, "அட இருடா!" என இட்லியையும் சாம்பாரையும் உணவு மேஜையில் வைத்தார்.

"ஐ டோன்ட் லைக் சட்னி, ஐ வாண்ட் சாம்பார் பாட்டீ!" பிரதாப் அடம்பிடிக்க, "சாம்பார் எல்லாம் இனிமேல் வைக்க முடியாது டா. இஷ்டமிருந்தா சாப்பிடு, இல்லைன்னா போடா!" என அதே இட்லியையே அவனுக்கு மதிய உணவிற்கும் டப்பாவில் அடைத்து விட்டார், பொடியை வைத்து.

"பிரதாப், சுகர் வச்சு சாப்டு!" என இட்லியை அவனுக்கு ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டு முடித்த ராகவன், அவனை பள்ளிக்கு அழைத்துச் சென்றான். தாமதமாக வந்ததால், வகுப்பாசிரியரை பார்க்க சொல்லி காத்திருக்க வைத்துவிட்டனர். அதனால் தாமதமாகே ராகவன் அலுவலகம் செல்ல, அவனுடைய மேலதிகாரி அவனை காய்ச்சி எடுத்து விட்டார்.

மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிரதாப், தாமதமாக சென்றதால், அன்று அவனுக்கு தண்டனை கிடைத்ததாகவும், மறுநாள் விரைவாக எழ வேண்டும் என பத்மாவதியிடம் கூற, ராகவன் முன்பு எதுவும் பேசமுடியாது தலையை மட்டும் அசைத்தவர், மறுநாள் விரைவாக எழுந்து சமைத்தார்.

இரண்டு நாட்கள் கடந்து இருக்கும், "டேய் ராகவா! நான் என்ன மெஷினா? இல்லை மனுஷியா? எல்லா வேலையும் என்னால தனியா செய்ய முடியலை. முட்டி வேற வலிக்குது. உன் பொண்டாட்டியை முதல்ல கூட்டீட்டு வாடா!" என படுத்துக் கொண்டார் பத்மாவதி.

கடையில் தான் வாங்கி வந்த உணவை பிரித்து பிரதாப்பிற்கு ஊட்டிக் கொண்டிருந்த ராகவன், "என் பொண்டாட்டி மட்டும் என்ன மெஷினா மா? எட்டு வருஷமா வேலை பார்த்துட்டே, வீட்லயும் ஆக்கி போடணும்னு அவளுக்கு என்ன அவசியம்?" அமைதியாக கேட்டவனை பார்த்து விழித்த பத்மாவதி, "அது... அவ இந்த வீட்டு மருமக டா. அதனால வீட்ல எல்லா வேலையும் செய்யணும்!" என்றார் சற்று தடுமாறி.

"ஓ... வீட்டுக்கு உழைக்கணும் சரி. அவ எதுக்கு மா வேலைக்கு போகணும். பேசாம அவளை வேலையை விட்டு நிப்பாட்டிடலாமா?"

"டேய்! வீட்டு லோனை அவ தானே அடைக்கணும்!"

"அதான் ஏன் அடைக்கணும்னு கேட்குறேன். நான் தான் உங்க புள்ளை, நான் தான் அந்த லோனை அடைக்கணும். அவ எதுக்கு அடைக்கணும். அவ எதுக்கு உழைச்சுக் கொட்டணும்?" அழுத்தமாக அவன் வினவ, பத்மாவதி என்ன சொல்வது என தெரியாமல் தடுமாறினார்.

"பதில் இல்லைல உங்க கிட்ட? ஹம்ம்... அவசியமே இல்லாமல் இந்த வீட்டுக்காக உழைச்சு ஓடா தேஞ்சுட்டு இருக்கா அவ. அவளை புகழ்ந்து பேசலைனாலும் பரவாயில்லை, அவளை கரிச்சுக் கொட்டாமலாவது இருக்கலாம் இல்லை? அது கூட உங்களால முடியாத போது, அவ ஏன் இங்க வரணும்? அவ அங்கையே கொஞ்சம் நாள் இருக்கட்டும். நீங்க வீட்டைப் பார்த்துக்கோங்க!" அசராமல் பத்மாவதி தலையில் இடியை இறங்கினான்.

"டேய் ராகவா! அப்படி எல்லாம் சொல்லாத டா. உன் பொண்டாட்டியை நான் எதுவும் சொல்ல மாட்டேன். அவளை கூட்டீட்டு வா டா!" என பத்மாவதி கெஞ்ச, "உங்களை நம்ப முடியாது!" என்றான் அவன்.

"உண்மையா டா!"

"இனிமே அவ எது சமைச்சாலும் அமைதியா சாப்டணும். இட்லி சுட்டா, அதான் சாப்பிடணும். தோசை கேட்க கூடாது. அவளை திட்ட கூடாது. சண்டே அவ லேட்டா தான் எழுவா. சீக்கிரம் எழ சொல்ல கூடாது. இதுக்கு எல்லாம் ஓகேன்னா, அவளை நான் கூட்டீட்டு வரேன்!" ராகவன் கூற, வேறு வழியின்றி சம்மதித்தார் பத்மாவதி.

மறுநாள் மாலை ராகவன் வேதவல்லியை அழைக்க செல்ல, எதுவும் பேசாமல் அவனுடன் வந்து விட்டாள் பெண். தாய் வீட்டில் நான்கு நாட்களுக்கு மேல் இருந்தால், அது கணவனை தான் பாதிக்கும் என எண்ணியவள், அமைதியாக அவனுடன் வந்து விட்டாள். அவள் உள்ளே நுழைந்ததும், பத்மாவின் ஏச்சு பேச்சுகளை எதிர்பார்க்க, அவர் வாய் பசை போட்டது போல ஒட்டியிருந்தது. அவளைப் பார்த்து முறைத்தாலும், அவர் எதுவும் பேசவில்லை.

"ம்மா... வந்துட்டீங்களா?" என பிரதாப் அவளை ஓடிவந்து அணைத்துக் கொண்டான். அவனை தூக்கி முத்தமிட்டவள், தனது அறைக்கு சென்று உடை மாற்றி விட்டு, சமையலறைக்குள் புகுந்து தேநீரை தயாரித்து எடுத்து வந்து பத்மாவதிக்கும் அவர் கணவருக்கும் கொடுத்து விட்டு, தனது அறைக்கு சென்று ராகவனுக்கு கொடுத்தாள்.

தேநீரை எடுத்துக் கொள்ளாமல் அவளையே ராகவன் பார்க்க, "டீயை எடுத்துக்கோங்க!" என்று கூறியவளின் கையை பிடித்து இழுத்து தன்னருகே அமர்த்தியவன், அவளது உள்ளங்கையை பிடித்து உற்று நோக்கினான்.

பின் அவளது முகத்தை உற்றுப் பார்த்தான். வேதா என்னவென்று அவனை பார்க்க, "தூங்காம உழைச்சு உழைச்சு கருவளையம் வந்துருந்துச்சு என் பொண்டாட்டிக்கு. அது சரியாகிடுச்சான்னு பார்த்தேன்‌. இப்போ மறைஞ்சுடுச்சு!" என அவளது இமைகளில் முத்தமிட்டவன், "வேலை செஞ்சு செஞ்சு கை எல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் இப்போ ஓகேவான்னு பார்த்தேன்!" என இரண்டு உள்ளங்கையிலும் முத்தமிட்டவன், "சாரி வேதா!" என்றான். லேசாக புன்னகைத்தாள் பெண்.

"ஏன்னு கேட்க மாட்டீயா?"

"தோணலை எனக்கு!"

"நான் சொல்றேன். வாரத்துல ஏழு நாள், மாசத்துல முப்பது நாள், வருஷத்துல முன்னூத்தி அறுபத்து அஞ்சு நாள் ஓடிட்டே இருக்க என் பொண்டாட்டிக்கு ஓய்வு கொடுக்கணும்னு தோணுச்சு. அதான், இங்கையே உன்னை லீவ் போட்டு இருக்க சொல்லி இருக்கலாம். பட், என்னை பெத்தவங்க சரியில்லை. அதான் உன் அம்மா வீட்டுக்கு போக சொல்லாம்னு நினைச்சேன். நான் சொன்னா நீ போக மாட்ட. அதான், அம்மா பேசும் போது அமைதியா இருந்தேன். அப்புறம் நீயா உன் அம்மா வீட்டுக்கு போன. எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் உழைச்சு தேஞ்சுப் போன என் மனைவிக்கு ஓய்வு கொடுக்கணும்னு தோணுச்சு. அதான் கொடுத்தேன். சாரி மா!" என கூறியவனின் உதட்டில் கையை வைத்தவள், தலையை புரிந்தது போல அசைத்தாள். அவன் இதழ்கள் மலர்ந்தது. இந்த புரிதல் தானே இத்தனை நாட்களாக அவர்களது வாழ்க்கையை காக்கும் அச்சாணி.

"சரிங்க, நான் போய் நைட்டு சமைக்கிறேன்!" என வேதா நகர, அவளது கையை விட்டான். வேதவல்லி அவளது இயல்பு வாழ்க்கைக்குள் நுழைந்தாள்.

சுபம்...

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...