யுகபுருஷன்

Sreevidhya
கற்பனை
5 out of 5 (3 )

யுகபுருஷன்

ஒரு வீட்டின் ஒவ்வொருவர் குணாதிசயமும் தனித்தனியாக இருந்து அத்தனை பேரும் சுதந்திரமாகவும் இருந்தால் கருத்துகளுக்கும் முரண்களுக்கும் கேட்கவேண்டியதில்லைதானே. அதுதான் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள எங்கள் வீடு. காலை பாலுடன் தமிழ் மலையாளம், ஆங்கிலம் என மூன்று நாளிதழ்கள் சகிதம் வந்து ‘அயிகிரி நந்தினி’யையோ ‘ஆனைமுகனையோ’ பாடிக்கொண்டிருக்கும் அம்மாவுக்கும் தனக்கும் காஃபி கலந்து குடித்தபின் எங்களை எழுப்பிவிடும் தாத்தாவின் குரலில்தான் நாள் தவறாமல் பொழுதுகள் விடியும் .
1942ல் பிறந்த தாத்தா மஹாதேவன் ராம்பக்தர். காலை, மாலை பூஜை தவறமாட்டார். விபூதியைக் குழைத்துப் பூசிக் கொள்வதை மறக்கமாட்டார். மாதாமாதம் குலதெய்வமான ‘நாலுசேரிக்காவு’ பகவதி கோவிலுக்கு தன் பென்ஷனிலிருந்து கொடை அனுப்புவார்.
வீட்டுக்கு அருகிலிருந்த வாசவி, கிருஷ்ணஸ்வாமி, காயத்ரி தேவி, சுப்ரமணியர், வேணுகோபாலன், ஶ்ரீ உத்தராயண மந்திர, இஸ்கான் ஜகந்நாதர், ஶ்ரீராம்புரா மாரம்மா ஆகியோர் தரிசனங்களை விட்டுவைக்கமாட்டார். யாரும் கேலி பேசமுடியாத ஆளுமை தாத்தாவுடையது. அதனால்தான் எப்போதாவது. சனி, ஞாயிறுகளில் மேட்னி பார்க்க காவேரி திரையரங்குக்குப் போனாலும் அங்கிருந்தே நேராக தாத்தாவுக்காக, அப்பா தவிர அனைவருமாக ராம் மந்திருக்கும் போய் வருவோம்.
உணவு மேசையில் வாய்க்கும் வயிற்றுக்கும் மனதுக்கும் ஒருசேர உகந்த சமையலால் அனைவரையும் இணைக்கும் கண்ணி அம்மா. எனக்குப் பிடித்த பனீர் பட்டர் மசாலா தாத்தாவுக்கும் பிடிக்கும். பாலனுக்குப் பிடித்த நூடுல்ஸ் பாஸ்தா எல்லாம் தாத்தாவுக்கு ஆகாதவை. இருந்தும் தடை போட்டதில்லை. ‘குழந்தைகளா, உங்கம்மா பாரதமாதா மாதிரி. உங்க எல்லார் இஷ்டத்துக்கும் இடம் தந்திருக்கா. அதைப் புரிஞ்சுண்டு அவளுக்கு நிம்மதி தரணும்’ என்பார் தாத்தா.
அப்பா காசிநாதன் வழக்கறிஞர். தாத்தாவுடன் அதிகமாகப் பேசமாட்டார். தாத்தாவை நாங்கள் குறை சொல்லவும் விடமாட்டார். அதேசமயம் அபூர்வமாக அவரும் தாத்தாவுமாக பேச ஆரம்பித்தால் கொசுத்தொல்லை முதல் காவேரி அரசியல் வரை அமர்க்களப்படும். தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் அப்பா கோவிலுக்கு வரமாட்டார். விஜயதசமி அன்று சாலையெங்கும் சிதறடிக்கப்பட்டிருக்கும் சாம்பல் பூசணிக்காய்கள் அவருக்குக் கோபம் ஏற்படுத்தும்.
சுதாவாகிய என்னிடமும் தம்பி பாலனிடமும் தாத்தா நிறையப் பேசுவார். ‘பாலன் நிறைய பொய் சொல்றான்’ என்று சிறுவயதில் தாத்தாவிடம் புகார் சொல்வேன். ‘பொய் கூடாது’ என்று சொல்லிவிட்டு எங்கள் இருவரையும் அமரவைத்து கம்பராமாயணத்தில் வரும் அயோத்தி நகர வருணனைப்பாடலை அப்போது கற்றுக் கொடுத்தார்.
‘வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை பல கேள்வி மேவலால்’
ராமநவமியன்று அம்மா நிவேதனம் செய்யும் சுக்குவெல்லப் பானம் அலாதியாக இருக்கும். பூஜையறையிலிருந்து தாத்தா அம்மாவை அழைத்து பாடச்சொல்வார். ‘ஏடி ருகநன்னு தய சூசெதவோ இனவம்சோத்தம ராமா’ அம்மாவின் இனிய குரலில் ஒலிக்கும் போது அனைவரும் அமைதியாகிவிடுவோம். தாத்தாவுக்கு கண்கள் கசிந்துவிடும்.
******
பாட்டியின் மறைவுக்கு சில மாதங்கள் முன்பு நாலுசேரிக்காவு பகவதி கோயிலுக்குப் போயிருந்தோம். அப்போதுதான் தாத்தாவின் குரலிலேயே எங்கள் மூதாதையர் கடந்து வந்த கடின நாட்கள் தொட்டு அயோத்தி ராமன் வரை எங்கள் மனக்கண்ணில் படமாக ஓடவிட்டு பதிவும் ஆனது.
1921 ல் எங்கள் முன்னோர் கேரளாவில், பாலக்காடு அருக்கே மண்ணார்க்காட்டிலுள்ள பரம்பரை வீட்டில் வாழ்ந்திருந்தபோது நிகழ்த்தப்பட்டதுதான் ‘மாப்ள லஹள’ என்று பெயரிடப்பட்ட வரலாற்றுக் கொடூரம். தாத்தாவின் தாத்தா ஊட்டியில் நீதிமன்ற ஆவணக்காப்பாளராக பணியிலிருந்தபோது பாட்டி மூன்று குழந்தைகளோடு மண்ணார்க்காட்டில் இருந்தார்.
*1வாரியம் குந்நத்து குஞ்ஞஹமது ஹாஜி தலைமையில் வாள்முனை மதமாற்றங்களும், மறுத்தவர்களைக் கொன்று கிணறுகளில் வீசியதையும் தாத்தா விவரித்ததை கண்ணிமைக்காமல் கேட்டோம். பெண்களுக்கு நேர்ந்தவற்றை தாத்தாவின் நாசூக்கான ஆங்கிலத்தில் கேட்டபோது என் அடிவயிறு கலங்கி சுருட்டிக்கொண்டது.
எங்கள் தாத்தாவின் பாட்டியும் மூன்று குழந்தைகளும் தனித்திருந்த முதிய முஸ்லிம் பெண்மணி ஒருவரால் இரண்டு மாதங்களுக்கு மேல் அவரது வீட்டு மேல் பரணில் மறைத்துவைக்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார்கள். ஊட்டியிலிருந்த தாத்தாவின் தாத்தாவை ‘இப்போது கேரளாவுக்குப் போகவேண்டாம். உயிர்பிழைக்க முடியாது’ என்று உடன் பணிபுரிந்தவர்கள் தடுத்திருக்கிறார்கள். கையூட்டு வாங்காத தாத்தா மீதிருந்த அக்கறையால் ஆங்கிலேய நீதிபதியும் அனுமதிக்கவில்லை. குடும்பத்தின் கதி அறியமுடியாமல் நடைப்பிணமாக நாட்களைக் கழித்த கொள்ளுத்தாத்தா பிரிட்டிஷ் ராணுவம் கலவரத்தை ஒடுக்கி அமைதி திரும்பியதும் குடும்பத்தை அழைத்துவந்து ஊட்டியில் குடியேறிவிட்டார்.
******
நூற்றாண்டுகள் பழையதான எங்கள் பக்கத்து வீடு ‘புகாரி மன்சில்’ல் பாயம்மா, மருமகள் யாஸ்மின், இரண்டு குழந்தைகள் மட்டுமே வசிக்கிறார்கள். மகன் பஷீர் தோஹாவிலிருப்பதாகக் கேள்வி. அப்பா சிறுவயதில் அவர்கள் வீட்டு நண்பனுடன் டி.வி.யில் ராமாயணம் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அவனுடைய அம்மா உள்ளிருந்து வந்து வெறுப்புப் பார்வையுடன் ‘ஷைத்தான்’ என்று சத்தமாகச் சொல்லி அணைத்து விட்டுப் போய்விட்டார். இதற்குப் பிறகு ‘புகாரி மன்சிலுக்கும்’ நமக்கும் போக்குவரத்து கூடாது என்று தாத்தா சொல்லிவிட்டார்.
புகாரி மன்சிலுக்கும் எங்கள் மஹாலட்சுமி நிவாஸுக்கும் போக்குவரத்து இல்லையென்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
இந்த ஊரடங்கு காலத்தில்தான் அப்படி இல்லையென்று தற்செயலாகக் கண்டுபிடித்தேன். எங்கள் வீடுகளுக்கு நடுவே இரண்டடி இடைவெளிதான். பின்மதியப் பொழுதுகளில் அம்மாவும் யாஸ்மினும் பேசிக் கொள்வதையும் சமையல் பொருட்கள் கொடுக்கல் வாங்கல் நடை பெறுவதையும் கவனித்தேன். சுண்டைக்காய் வத்தக்குழம்பை விலாவாரியாக விளக்கிவிட்டு கையில் புதினாவுடன் உள்ளே வந்த அம்மாவிடம் ‘தாத்தாகிட்ட சொல்றேன் இரு’ என்றேன். ‘நீ உன் பி.ஹெச்.டி வேலையைப் பாருடி’ என்றார். ‘அவகிட்ட என்ன பேச்சு?’ என்றேன்.
யாஸ்மின் வெளியே செல்லும்போது கண்கள் கூட சரியாகத் தெரியாத கருப்புப் புர்கா அணிவாள். ஆறு வயதுப் பெண்குழந்தைக்கும் முக்காடு. ‘நாம எல்லாம் ஒழுக்கமா இல்லைன்னு குத்திக் காட்டற மாதிரி இருக்கு’ என்று அம்மாவிடம் எரிச்சல்பட்டிருக்கிறேன்.
‘பாவம்டி அவ. நீ இருபத்தெட்டு வயசாகியும் பி.ஹெச்.டி முடிச்சுட்டுத்தான் கல்யாணம்ங்கிறே. அவளுக்கு 14 வயசில கல்யாணம். பஷீர் தோஹால வேற கல்யாணமே பண்ணிட்டான். பாய் அம்மாவுக்குப் பக்கவாதம். விட்டுட்டுப் போகாதேன்னு அழறாளாம். யாஸ்மின் தபால்ல எம்.ஏ படிச்சுட்டு டீச்சரா இருக்கா’ என்றார்.
******
ஆகஸ்ட் 5 காலை அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா. நேரடி ஒளிபரப்புக்கு முதல்நாளே அம்மா எச்சரித்தார். ‘சுதா, தாத்தா ஒரு வாரமா இதைத்தான் பேசறார்.. நீ பாட்டுக்கு ராமன் மேல் ஷாவினிஸ்ட். பெண்டாட்டிய தீயில இறக்கினான்னு விவாதம் பண்ணாதே’.
அதுக்குத்தான் அப்பவே விளக்கம் சொன்னாரே. ‘ராமனோட காலம் வேற. அரசனா மக்களுக்கும் மதிப்பு குடுத்தான். மனசில வலியோடத்தான் சொன்னான்’ னார். ‘ முழுசா கன்வின்ஸ் ஆகலதான். இருந்தாலும் தாத்தாவுக்காக அதோட விட்டுட்டேன்.’ என்றேன் அம்மாவிடம்.
காலை முதலே தொலைக்காட்சி முன் தாத்தாவுடன் அமர்ந்தோம். அம்மா மெல்லிய குரலில் அப்பாவிடமும் தாத்தாவிடமும் ஏதோ பேசியதில் ‘யாஸ்மின்’ என்று காதில் விழுந்தது. பாலன் என்னைப் பாரத்தான். நான் தெரியாது என்று கை விரித்தேன்.
தாத்தா அம்மாவிடம் 500 ஆண்டு காலப் போராட்ட வரலாறு, துறவிகள் உள்பட லட்சக்கணக்கானோர் கோவிலைக் காப்பாற்றப் போராடி உயிர்விட்டது என்று சொல்லிக்கொண்டே வந்தார்.
‘மசூதிய இடிச்சது தப்பு. சட்டப்படி நடக்க விட்டிருக்கலாம்’ என்றார் எங்கள் கம்யூனிஸ்ட் அப்பா.
‘உனக்குத் தான் ஸவாமியே கிடையாதேடா காசி. நான் முந்தி சேலத்துல வேலை பாத்தேனே. அந்தத் தெருவில தான் ராமர்சீதைய செருப்பாலடிச்ச ஊர்வலத்தைப் பார்த்தேன். நினைச்சா இப்பவும் வேதனையா இருக்கு. அதான் 2*கே.கே.முகமது சொல்லிட்டாரே, ‘மசூதிக்குக் கீழ இருந்த கோவிலை இடிச்சுத்தான் கட்டினான்னு’.
‘லக்ஷ்மி மாமி! வாசலில் குரல் கேட்டது. யாஸ்மின் தயங்கி நிற்பது தெரிந்தது. திரையைப் பார்த்துக் கொண்டிருந்த என்னையும் பாலனையும் முறைத்தவாறே அம்மா போய் ‘உள்ள வா யாஸ்மின்’ என்று அழைத்து வந்தார். அப்பா ‘உக்காரும்மா’ என நாற்காலியை நகர்த்தினார். தயங்கி அமர்ந்து தலை முக்காட்டைக் கீழிறக்கி அதைக் கொண்டே விசிறிக் கொண்டாள். அம்மா மின்விசிறியைப் போட்டார்.
சிறிது மவுனத்துக்குப் பிறகு ‘சேலம் சொந்த ஊரா?’ அன்று அவளைக் கேட்டார் தாத்தா. அவள் தலையசைத்தாள். ‘ஏம்மா, விவாகரத்துன்னா’ என்று அப்பா பேச ஆரம்பிக்க,
“இருங்க மாமா, அடிக்கல் நாட்டுறதப் பாத்துட்டுப் பேசலாம்” என்று திரையைப் பார்த்தாள். அம்மாவைத் தவிர மற்றவர்கள் மாறி மாறிப் பார்த்துக் கொண்டோம்.
வரலாறு சுமந்த அயோத்தி நகரம் திரையில் விரிந்தது. நீண்ட சரயு நீதி தீரம் அகல்விளக்குகளால் அழகேறி ஒளிர்ந்து கொண்டிருந்தது. தாத்தா உணர்வு வயப்பட்டு நடுங்கும் உதடுகளால் ராம் நாமம் சொல்லத்துவங்கியிருந்தார். கண்ணாடியைத் துடைத்து மாட்டிக் கொண்டார்.
திரையில் அயோத்தி வாசிகளான முஸ்லிம் பெண்கள் ஆரத்தி எடுப்பதைக் காட்டியதும் அனிச்சையாக யாஸ்மினைப் பார்த்தோம்.
”எல்லாருக்கும் குழப்பம் யாஸ்மின். நீயே சொல்லேன்” என்றார் அம்மா புன்னகையுடன்.
“என்ன மாமி சொல்ல?” என்றாள் கூச்சத்துடன். “யாஸ்மினுக்கு ராமனை ரொம்பப் பிடிக்கும். ஏன்னு கேட்டதுக்கு பாட்டாவே பாடிட்டா. அதைச் சொல்லுடி” என்றார்.
தாத்தாவும் அப்பாவும் சிறு சிரிப்போடு அவளைப் பார்த்தார்கள்.
‘வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்’
உலகம் துவங்கிய நாளிலிருந்து எந்த பெண்ணுக்கும் கிட்டாத, எந்த ஆணும் இன்று வரை தராத வரம்!
கம்பனின் வரிகள் யாஸ்மின் குரலில் தெளிவாகத் துவங்கி சிறியதொரு கமறலோடு முடிந்தன.
ஏந்திய வில்லோடு ரவி வர்மா ஓவியம் போல நெடிதுயர்ந்து திரையில் எழுந்தான் யுகபுருஷன்.
‘ராம ராம’ என்று உச்சரித்து மனநிறைவு கொண்டார் தாத்தா. கசிந்துவிட்ட கண்களைக் காட்ட விரும்பாத நான் சட்டென்று எழுந்து உள்ளே போனேன், யாஸ்மினுக்கு தேநீர் கலந்து வர.
************
சு.ஶ்ரீவித்யா

குறிப்பு 1*
கேரள தெற்கு மலபார் பகுதிகளில் 1921 ஆகஸ்ட் துவங்கி செப்டம்பர் வரை நீடித்த ‘மாப்ள லஹள’ அம்பேத்கர், அன்னி பெசன்ட் ஆகியோரால் பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் கொடூரங்களைக் குறிக்கிறது. துவ்வூர் என்ற இடத்திலிருந்த கிணறுகள் பிணங்களால் நிரம்பின. திரூரில் இஸ்லாமிய ஆட்சி அறிவிக்கப்பட்டு துருக்கிக் கொடி ஏற்றப்பட்டது. பிரிட்டிஷ் ராணுவத்தின் கூர்க்கா பிரிவு வந்து கலவரத்தை ஒடுக்கியது. 10,000 பேர் வரை உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரிட்டிஷ் கெஜட் தகவல்.

குறிப்பு 2*
1968 லிருந்து 1972 வரை இந்திய தொல்லியல் துறைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர் கேரளாவைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் கே.கே.முகமது. 2003 ல் அயோத்தியில் அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்ட போது 17 வரிசைகளில் 50 க்கும் மேற்பட்ட தூண்கள், இந்துக் கோவிலுக்குரிய கட்டுமானம் ஆகியன பாபர் மசூதிக்குக் கீழிருந்து கண்டெடுக்கப்பட்டன. முன்பே 1990 களிலும் சிற்ப வடிவங்கள் கிடைத்து நீதி மன்றத்தில் சமரப்பிக்கப்பட்டன. கே.கே.முகமது இவற்றை உறுதி செய்கிறார்.

செய்தி ஆதாரம் : 1. ‘மாப்ள லஹள’-25 ஆண்டுகால ஆய்வுக்குப் பின் திரூர் தினேஷ் என்பவர் எழுதிய நூல்.
2.தினமலர் நாளிதழ் மற்றும் கே.கே.முகமது அவர்களின் மலையாள யூடியூப் நேர்காணல்.

முகவரி (பணியிடம்)
சு. ஶ்ரீவித்யா,
ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர்,
டிரினிடி மகளிர் கல்லூரி,
நாமக்கல் 637 002.
செல் : 9600876819
ஈ மெயில் : tamilsree11@gmail.com


முகவரி (இல்லம்)
சு. ஶ்ரீவித்யா,
7, 2ஆம் தளம்,
ஶ்ரீ மஹாலட்சுமி எலக்ட்ரிகல்ஸ் வளாகம்,
மேட்டுத்தெரு, நாமக்கல்-637001
செல் : 9600876819
ஈ மெயில் : tamilsree11@gmail.com

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...