அவன் முடி'வெடுத்தான்

காதல்
5 out of 5 (1 )

காலம் காலமாக காதலர்கள் சந்திக்கும் கடற்கரை.

மாலை ஐந்து மணிக்கு வருகிறேன் என்று சொல்லி ஐந்தரையாகியும் வராத தன் காதலன் ரவியை கடுப்பாக காத்திருந்தாள் அடுத்த மாதம் இருபத்தி ஒன்று வயதாகும் மாலதி.

பொறுமை இழந்து சற்று மெதுவாக கடலை நோக்கி நடந்தாள், தலையை திருப்பி திருப்பி ரவி வருகிறானா என்று பார்த்தாள். பின் கரையோர மணலில் உட்கார்தாள்.

பத்து நிமிடம் கழித்து தன் பின்னால் ரவி நிற்பதை உணர்தாள். வேண்டுமென்றே கொஞ்சம் காத்திருந்து அவன் பக்கம் திரும்பினாள்.

திரும்பியவள் அதிர்த்தாள், "ஐயோ!" என்று சற்றே உரக்க கத்தினாள்.

"ஐயோ, என்னாச்சு!" என்றான் ரவி குழப்பமாக.

"என்ன இது மொட்டை! என்றாள் அவனை பார்த்து.

"அதுக்கா கத்துற! இது மொட்டை இல்லைப்பா, கம்ப்ளீட்டா ட்ரிம் பண்ணியிருக்கேன். எப்படி சூப்பரா?" என்றான் தன் தலையை தடவியபடி ரவி.

"போடா...."என்று இழுத்தாள் மாலதி. "இது மொட்டை இல்லாம என்னடா? சுத்தமா ஒன்னும் இல்லைனா அது வழுக்கைடா! எவன்டா உன்னை இப்படி செய்ய சொன்னது?" என்றாள் ஆத்திரமாக மாலதி.

"யாரு சொல்லணும்?, தோணிச்சு செஞ்சேன்" என்றான் ரவி.

"என்னை கேக்கணும், எனக்கு மொட்டை தலையே புடிக்காது, அய்யோ என்ன பண்றது!"

"நான் தானே மொட்டை அடிச்சேன், நீ ஏன் அதுக்கு இப்படி டென்ஷன் அடிக்கிற?" என்றான் ரவி.

"உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்!, எனக்கு மொட்டை தலையை பார்த்தாலே வாந்தி வரும், புரியுதா?"

"அதுக்கு! என் தலையில வாந்தி எடுக்கப்போறியா?"

"இல்லை, உன் முஞ்சியில வாந்தி எடுக்கிறேன்" என்றாள் அவனை முறைத்து.

"சரி, விடுப்பா" என்று பேச்சை மாற்ற முயன்றான் ரவி.

"முடியாது, உன் மொட்டை தலையோட எனக்கு உன் பக்கத்தில் உட்கார்ந்து பேச முடியாது"

"அதுக்கு!" என்று கொஞ்சம் சீரியஸ் ஆனான் ரவி.

"எவ்வளவு நாள் ஆகும்" என்றாள் மாலதி.

"எதுக்கு?" என்றான் கேள்வியுடன் ரவி.

"முடி வளர" என்றாள்.

"ஏன்! நீ டானிக் தரப்போறியா முடி வளர?, என்ன விளையாடுறியா!"

"இதை பார், நீ பைத்தியக்காரத்தனமா நல்லா இருந்த முடியை எடுத்திட்டு இப்படி மொட்டை தலையோட வந்து நிக்குற. எனக்கு மொட்டை தலையோட உன் கூட சரி வராது. தப்பா நினைச்சுக்காதே, இப்படி உன் மூஞ்சியை பார்க்கவே பிடிக்கலை”.

அவளை உற்று நோக்கினான் ரவி, அவள் தொடர்ந்தாள்.

"ஐயோ! இத்துனூண்டு முடியோட உன் தலையில கை வெச்சாலே குத்துமே!" என்றாள்.

ரவி தன் மனதிற்குள் இவளுக்கு வயது இருபதா! அல்லது, பத்தா! என்று நினைத்துக்கொண்டான்.

"சொல்லு, முடி பழையது போல் ஆக எவ்வளவு நாள் ஆகும்" என்று கேட்டள் மாலதி.

"ஒரு ரெண்டு மாசம் ஆகும், அது எதுக்கு இப்ப உனக்கு?" என்றான் ரவி.

"அது வரைக்கும் என்னை பார்க்க வராதே" என்றாள் சட்டென்று.

"என்ன விளையாடுறியா?, நான் என்ன கொலையா பண்ணேன்! யாருமே மொட்டை அடிக்கறதில்லயா?" என்றான் ரவி ஆத்திரமாக.

"மொட்டை தலையை தூரத்தில வெச்சு பார்க்கலாம், கிட்ட வெச்சு பார்க்க முடியாது" என்றாள்.

"நான் வேணும்னா கொஞ்சம் தூரமா உக்காந்துக்கறேன்" என்றான் ரவி.

"இங்க இருந்து உன் வீடு எட்டு கிலோ மீட்டர் தூரம்தானே, நீ ஒரு எட்டு கிலோ மீட்டர் தூரமா உக்கார்துக்கோ. உன் முடி வளர்ற வரைக்கும் என்னை பார்க்க வராதே" என்றாள்.

அவன் அவளை ஆச்சர்யமாக பார்த்தான். இவள் இதை ஒரு காரணாமாக வைத்து என்னை கழட்டி விட பார்க்கிறாளா என்று வந்த எண்ணத்தை அழித்தான். "குழந்தை அடம் பிடிப்பதை போல் அல்லவா பேசுகிறாள்!".

"எப்படி நல்லா இருந்த முடி, இப்படி வந்து நிக்கறியே!" என்றாள் சங்கடமாக.

"நான் என்ன அவுத்து போட்டுட்டா நிக்கிறேன், நீ ரொம்ப சீன் போடுற, மாலதி". என்றான் லேசான கோபத்துடன்.

"உன் கிட்ட மொதல்ல பிடிச்சதே உன் ஹேர் ஸ்டைல் தான்" என்றாள்.

"மொட்டை தலை கூட ஒரு ஸ்டைல் தான். வேணும்னா நீயும் மொட்டை அடிச்சிக்கோ, அப்ப நம்ம ரெண்டு பேறும் ஒண்ணாயிடுவோம்" என்றான் கிண்டலாக.

மணலில் உட்கார்திருந்தவள் சட்டென்று எழுந்தாள். தன் உடையில் ஒட்டியிருந்த மணலை தட்டி விட்டுக்கொண்டாள்.

"உன்கிட்ட சொல்லி இனி புரியவைக்க முடியாது, இனிமே பேசினா நமக்குள்ள பிரச்சினை தான் வரும், நான் போறேன், ரெண்டு மாசம் கழிச்சு நாம் பார்க்கலாம்". என்று சொல்லி விருட்டென்று போயேவிட்டாள்.

ரவி அவள் திரும்பி நடப்பதை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான், பின் "மாலதி!"என்று உரக்க கத்தினான், அவள் திரும்பி பார்க்காமலேயே நடந்தாள்.

என்ன செய்வதென்று தெரியாமல் ரவி தன் மொட்டை தலையை தடவியபடி விழித்தான்.

அடுத்த நாள் ரவி, மாலதிக்கு போன் செய்து பேசினான், அவளின் முடிவில் எந்த மாற்றமும் இல்லாதது கண்டு ஆச்சர்யப்பட்டேன். இனி அவளிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று புரிந்தது.

ஒரு வாரம் காத்திருந்து போனில் அவளுக்கு மெசேஜ் செய்தான் "நான் எதிர்பார்த்ததை விட முடி நல்லா வளர்ந்திருக்கு, நேரில் பார்க்கலாமா?".

"போட்டோ அனுப்பு" என்று பதில் வந்தது.

அனுப்பினான்.

"டேய் திருடா, பழைய போட்டோ அனுப்பினால் எனக்கு தெரியாதா!" என்று பதில் வந்தது.

தயக்கத்துடன் தன் முகத்தை நேரடியாக கிளிக் செய்து அனுப்பினான்.

"ஐயோ! நோ!" என்று அலறியது அவளின் பதில்.

அதன் பின் ரவி அவளை நேரில் காணும் முயற்சியை சற்று தள்ளி போட்டான். அவன் நினைத்ததை விட அவள் உறுதியாக இருந்தாள்.

பின் ரவி, முடி சீக்கிரம் வளர இன்டர்நெட்டில் தேடினான். ஆளாளுக்கு ஒரு உபதேசம் சொன்னார்கள். சிலர் தலைக்கு என்னையும் மருந்துகளும் எடுத்துக்கொள்ள சொன்னார்கள். ஆனால் அதற்கு கீழே கருத்துக்களில், "இதை எதுத்துக்கொண்டதால் எனக்கிருந்த கொஞ்ச நஞ்சம் முடியும் போய் விட்டது" என்று பதிவிட்டுருந்தார்கள். ரவி அதை படித்து பயந்து, அந்த முயற்சியை கை விட்டான்.

இரண்டு நாள் கழித்து பொறுமை இழந்து, "மாலதி முடி வளர்ற வரைக்கும் விக் வெச்சுகிட்டு உன்னை பார்க்க வரட்டுமா?" என்றான்.

"எதுக்கு? கடற்கரை காத்துல அது பறந்து போகவா!, அதிலிருக்குற முடியெல்லாம் யாரோடதோ!, அதை என்னால் தொடவும் முடியாது" என்றாள்.

அலுவலகத்தில் நண்பன் குமார், ரவியை கவனித்து "என்னடா ஆச்சு உனக்கு?" என்று கேட்டபோது சொன்னான்.

"டேய் மொட்டை அடிச்சால் மட்டும் தானே பிரச்சினை, தாடி மீசையெல்லாம் எடுக்கறதில பிரச்சினை இல்லை தானே" என்று கிண்டலடித்தான்.

ரவி மேற்கொண்டு அவனிடம் இதை பற்றி பேசுவதை விட்டுவிட்டான்.

மாலதியை சந்திக்காமல் நாட்கள் வீணாவது போல் தோன்றியது

எதுவும் சரி வராமல், அவனின் முடியும் சரியாக வராமல், பல்லை கடித்து இரண்டு மாதத்தை ஓட்டியே விட்டான் ரவி.

ஒரு வழியாக "போட்டோ அனுப்பு"என்று அவளிடமிருந்து மெசேஜ் வந்தது.

அனுப்பினான்.

"என்னடா இது!" என்றாள்.

"என்ன செய்யறது, என் முடி மெதுவாக தான் வளரும் போல் இருக்குறது, இது போதாதா?, என்றான்.

"ம்.... கொஞ்ச நாள் கூட காத்திருந்து தொலைக்கிறேன்" என்றாள்.

மீண்டும் ஒரு மாதம். பல்லை கடித்தான்.

"போட்டோ அனுப்பு" வந்தது.

அனுப்பினான்.

"யெஸ்ஸ்ஸ்!" என்று பதில் வந்தது. கூடவே நிறைய முத்தங்களும் அனுப்பியிருந்தாள்.

"அப்பாடா!" என்று தன் கட்டிலில் நிம்மதியாக விழுந்தான் ரவி.

அதே கடற்கரை, கண்ணில் கண்ணீருடன் அவனை கட்டி பிடித்தாள். அவன் முடியை இழுத்து சிரித்தாள். போனில் தந்த முத்தங்களை நேரில் கொடுத்தாள். மூன்று மாதம் காத்திருந்தது அவனுக்கு மறந்தே போனது.

"இந்த மூணு மாசம் எப்படி கழிச்சேன்னு சொன்னால் நீ நம்ப மாட்டாய். பேசாமல் உன்னை வந்து பார்த்திடலாமுன்னு நினைச்சிருக்கேன், ஆனால் உன் தலை ஞாபகம் வந்து சும்மா இருந்துட்டேன். இடையில உன்னை வந்து பார்த்தால் நான் ஏதாவது பேசி நமக்குள்ள சண்டை வருமோன்னு பயந்து என்னை கட்டுப்படுத்திக்கிட்டேன்" என்றாள் கண்களை துடைத்தபடி.

"எப்பா! இனி ஜென்மத்துக்கு மொட்டை அடிக்க மாட்டேன்பா!" என்றான்.

அவள் வாய் விட்டு சிரித்தாள்.

அதே வாரம், ரவியின் அலுவலகம். அங்கு அவனின் டீம் லீடர், ரவி மற்றும் நான்கு பேரை தன் அலுவலக அறைக்கு அழைத்து பேசினார்.

"பாருங்கள் நண்பர்களே, ஒரு நல்ல செய்தி. துபாயில் நாம் எதிர்பார்த்த ஒரு ப்ராஜெக்ட் கிடைத்துள்ளது, ஒருவேளை இந்த வார கடைசியிலேயே ப்ரொஜெக்ட்டை துடங்க சொல்லியிருக்கிறார்கள். எனக்கு தெரியும் இது உங்களுக்கு போதிய அவகாசம் இல்லைதான், ஆனால் எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது, உங்களால் இது முடியும் என்று. விசா மற்றும் டிக்கெட் தயார் ஆனதும் நீங்கள் துபாய் போக வேண்டி வரும். மூன்று அல்லது நான்கு மாதத்தில் இந்த ப்ரொஜெக்ட்டை முடித்து விட முடியும் என்று உங்களிடம் இருக்கும் நம்பிக்கையில் நான் கிளைன்டிடம் உறுதியளித்திருக்கிறேன்" என்று அங்கு அவர் முன் நின்றுருந்தவர்கள் தலையில் ஐஸும், ரவியின் தலையில் இடியையும் போட்டார்.

"இதை பற்றி நாளை நாம் விரிவாக பேசலாம்" என்று முடித்தார் அவர்.

அவரின் அறையை விட்டு வெளியில் வந்த ரவி தன் நண்பன் குமரிடம், "டேய், இது எனக்கு பயங்கர ஷாக்டா" என்றான்.

"ஏன் டா?"என்று கேட்ட குமாரிடம், மாலதியும் தானும் ஒரு வழியாக இப்பொழுதுதான் மூன்று மாதத்திற்கு பின் சந்திக்க ஆரம்பித்திருக்கிறோம் என்பதை சொன்னான்.

"மறுபடியும் ஒரு பிரிவா!, அது ரொம்ப கஷ்டம்டா" என்றான்.

"டேய் உனக்கே தெரியும் இந்த மாதிரி ப்ராஜெக்ட் வேலையா போனால் நாம் அதிலேயே மூழ்கி விடுவோம், நம்ம நினைப்பு அந்த ப்ரொஜெக்ட்டை பிரிச்சினை இல்லாமல் சரியான நேரத்திற்கு முடிப்பதில் தான் இருக்கும். ரெண்டு மாசம் அல்லது மூணு மாசம் எல்லாம் போகிறதே தெரியாது” என்று சமாதான படுத்தினான் குமார்.

அவன் சொல்வதை ஆமோதித்தான் ரவி.

“என் நிலைமை சரிடா, மாலதி என்ன செய்வா? அவளுக்கும் ஏதாவதொரு ப்ராஜெக்ட் கிடைத்து அவளும் பிஸி ஆகிவிட வேண்டும் என்று வேண்டி கொள்ளவா?" என்றான் அப்பாவியாக ரவி.

சமாதான படுத்த முயன்ற குமார், ரவியின் பேச்சை கேட்டு கடுப்பானான்.

"அப்படீன்னா, நான் துபாய்க்கு வரலைன்னு போய் சொல்லு, உனக்கு இங்க வேலை பாக்கி இருக்கிறதா பாப்போம்!" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் குமார்.

ரவிக்கு அன்று அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. மாலை தன் இரு சக்கர வண்டியில் வீடு திரும்பும்பொழுது மிகவும் சிரமப்பட்டு ஓட்டினான்.

மூன்று மாதத்திற்கு பின் மாலதி தன்னை சந்தித்தபொழுதிருந்த அவளின் கலங்கிய முகம் ஞாபகம் வந்தது, இனி ஒரு பிரிவை அவள் தாங்கி கொள்ள மாட்டாள் என்பது நிச்சயம். நாளை சந்திக்கலாம் என்று வேறு சொல்லியிருக்கிறாள். எப்படி துபாய் செல்லும் காரியத்தை அவளிடம் சொல்வது?.

"மாலதி நான் வேலை விஷயமா ஒரு மூன்று அல்லது நான்கு மாதம் துபாய் செல்லவேண்டும், நாம் மீண்டும் கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்க வேண்டி வரும்" என்று சொன்ன மாத்திரம் அவள் மயக்கம் போட்டு விழுந்தாலும் விழுந்துவிடுவாள்.

யோசித்தபடியே வண்டியை செலுத்திக்கொண்டிருந்தவன், தன் வீட்டை நெருங்குவதற்குமுன் ஒரு முடிவுடன் வண்டியை அணைத்து நிறுத்தினான்.

தான் வழக்கமாக செல்லும் அந்த சலூன் கடைக்கு உள்ளே சென்று.

"மொட்டை அடிக்கணும் என்றான்.

***********************************

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...