செகப்பி!!!

jiyajanavi
பெண்மையக் கதைகள்
4.8 out of 5 (51 )

செகப்பி!!

"ஏய் செகப்பி தபால்காரர் வந்துட்டாரு புள்ள.. ஓடியா.. ஓடியா.." என்று பக்கத்து வீட்டு மல்லிகா கூப்பிடவும், தன் வீட்டு கொல்லைப்புறம் கத்தரி செடிகளுக்கு பாத்திக் கட்டிக் கொண்டிருந்தவள் வேகமாக ஓடி வந்தாள். வழிந்து ஊற்றும் வியர்வையை தன் முந்தானையால் துடைத்தபடி…

மூச்சிரைக்க தபால்காரரை.. கண்களில் எதிர்பார்ப்போடும் முகம் முழுக்க நம்பிக்கையோடும் பார்த்தாள்.

அந்த தபால்காரர் முருகனும் "இல்ல தங்கச்சி இன்னைக்கு ஒன்னும் வரல உனக்கு.. அவருக்கும் வேலை பொழுதுக்கும் இருக்கும் இல்ல.. போடுவாரு நீ வருத்தப்படாத!!" என்று ஆறுதல் மொழியோடு சென்றுவிட்டார்.

உலகுக்கே ஒரு காலத்தில் சோறு போட்ட நெற்களஞ்சியம் தஞ்சை!! அதன் அருகே உள்ள சிற்றூர் தான் செகப்பி மற்றும் வல்லாளனின் பூர்வீகம். அரசியல்வாதிகளைப் போல மழையும் பொய்த்து போக…

விவசாயம் நலிவுற்ற விவசாய குடியை சேர்ந்த வாலிபர்களை போல..

ஏர் கலப்பையை ஏறெடுத்து வைத்துவிட்டு ஏறிவிட்டான் ஏரோபிளேன் சவுதியை நோக்கி வல்லாளன்!!

அவ்வூரில் அவனை போல நிறைய இளைஞர்கள் பசுமை சூழ்ந்த தமிழகத்தை வறட்சியாக விட்டுவிட்டு வறண்டு கிடக்கும் பாலைவனத்தை பூஞ்சோலையாக மாற்ற கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் உழைப்பின் பணம் இங்கே குடும்பத்திற்கு வயிறார சாப்பிட.. தங்கைகளை கடன்பட்டு கட்டிவைக்க.. பிள்ளைகளை தங்களைப் போல் கஷ்டப்படாமல் படிக்கவைக்க என்றுதான் பயன்பட்டது.

மாறாக விவசாய பூமிகள் எல்லாம் கால்முளைத்த கட்டிடங்களாக நிமிர்ந்து நிற்கின்றன!!

நாடே டிஜிட்டலில் முன்னேறிக் கொண்டிருக்க.. இன்னும் செல்போன் டவர் கூட சரியாகக் கிடைக்காத குக்கிராமம் அது. நோக்கியா பட்டன் வைத்த மாடல் போன் தான் அவளிடம் உண்டு. போனிலும் வல்லாளன் அதிகம் கதைக்க மாட்டான். இரண்டு நல விசாரிப்பு முக்கிய விஷயம் மட்டுமே பகிர்வான். மற்றபடி அனைத்தையும் தபாலில் எழுதி தான் போடுவான். அந்த ஊரில் இவளை போல் சிலரால்தான் அந்த தபால்காரருக்கே அங்கு வேலை.

"இந்த மாதம் வரும் தபாலும் வரல.. பணம் அனுப்பினாரா தெரியலையே?" என்று யோசனையோடு மீண்டும் கத்தரிக்கு பாத்தி கட்டினாள்‌. முழுதாக அவனது சம்பளத்தை மட்டுமே நம்பாமல் கூலி வேலைக்கு செல்வது, வீட்டுக்கு பின் தோட்டம் வைப்பது, முருங்கைக்கீரை முருங்கைக்காய் விற்பது போன்ற வேலைகளை செய்து அன்றாட தேவைகளை இழுத்துப் பிடித்து பார்த்துக்கொள்வாள். இந்நாட்டு சகஜ இல்லத்தரசி போல.. வல்லாளன் சம்பளம் முக்கால்வாசி அவன் வாங்கி சென்ற கடனுக்கே சரியாகிவிடும்.

பிள்ளைகள் வரும் நேரம் அரக்க பறக்க குழம்பும் சோறும் வைத்தாள், ஆறில் நான்கில் இருக்கும் குழந்தைகளோ "இன்னைக்கும் வெறும் குழம்பு தானா மா.. தொட்டுக்க காய் ஒன்னும் செய்யலையா?" என்று ஏக்கமாக கேட்க, அன்னைக்கு மனம் உருகியது.

"அப்பா ரெண்டு மாசமா பணம் அனுப்பல கண்ணு. வந்த உடனே கரியும் சோறு ஆக்கி போடுறேன் சரியா?" என்றவுடன் பிள்ளைகள் நாளைய கற்பனையில் இன்றைய உணவை முடித்தனர்.

"இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பிள்ளைகளட்ட சொல்றது? ஏன் தபால் போடல? உடம்பு முடியாம இருக்காரோ?" என்ற‌ எண்ணம் தோன்ற உடனே எழுந்தவள் மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடித்து மாடத்தில் விளக்கு முன்வைத்து "ஆத்தா.. என் புருஷனுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது" என்று வேண்டிக்கொண்டாள்.

படுக்கையிலும் கணவனின் நினைவே.. "ஒழுங்கா சாப்பிட்டு இருப்பாரா? இல்லை எப்போதும் போல சப்பாத்தியை சுட்டு சுட்டு அதுக்கு பேரு என்னவோ சொல்லுவாரே… குப்புஸ்… அதையே தான் தினமும் தின்கிறாரோ பாவம்" என்று கணவனுக்காக கரைந்தது மனம்.

கூடவே அவனது கைகளின் அணைப்புக்கும், மார்பின் சூட்டுக்கும், கொஞ்சல் மொழிகளுக்கும், மிஞ்சும் கோபத்திற்கும், அரட்டும் அன்புக்கும் ஏங்கியது அவளது பெண் மனம்!! கூடவே அவர்கள் களித்து கொண்டாடிய மோக இரவுகளின் ஞாபகங்கள் அவளை தீயாய் தின்க..

சட்டென்று எழுந்தவள் பீரோவின் அடியிலிருந்து கணவனது சட்டை ஒன்றை எடுத்து வந்து, அதை மார்புக்கு மத்தியில் அணைத்தவாறு உறங்க முற்பட்டாள்.

நித்தம் நித்தம் வெளிநாட்டுக்கு சென்ற கணவன் சீக்கிரம் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் கற்பனையில் அவனோடு குடும்பம் நடத்தும் இளம் பெண்கள் ஏராளம் இங்கே! அதில் செகப்பியும் ஒருத்தி!!

"ஒருவேளை பணம் பேங்க்கு நேரா அனுப்பிச்சு இருப்பாரோ? எதுக்கும் டவுனுக்கு போயிட்டு வரணும்" என்று நினைத்தவள், அன்று காலை பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் பஸ் நிறுத்தம் இடத்திற்கு வேக வேகமாக சென்றாள்.

வெயிலோன் சுள்ளென்று சுட்டெரிக்க பழைய ரப்பர் செருப்பை போட்டுக் கொண்டு வேக வேகமாக வந்த செகப்பிக்கு ஆறாக பெருகியது வியர்வை. வழக்கம்போல முந்தானையே கைகுட்டையாய்!!

வெயிலுக்கு பயணிகள் ஒதுங்க என்று அரசாங்கம் கட்டிக்கொடுத்த பேருந்து நிறுத்தம் இப்பொழுது வெட்டி வீணர்களின் அரட்டைக் கச்சேரி நடத்தும் இடமானது. ஆண்களாக அங்கே அமர்ந்து சீட்டு ஆடிக்கொண்டும், புகை பிடித்துக் கொண்டும் இருக்க இவள் சற்று ஒதுங்கியே நின்றாள்.

"ஏ செகப்பி எங்க டவுனுக்கு போறியா? யாரை பார்க்க?" என்று வார்த்தைகளில் பல வண்ணமாய் பேசினான் சிங்காரம். அந்த வெட்டி வீணர்களின் தலைவன்!! தந்தை சேர்த்து வைத்த பணத்தை வட்டிக்கு விட்டு வரும் காசில் உட்கார்ந்து திங்கும் விஐபி.

அவனுக்கு பல நாட்களாக செகப்பி மீது ஒரு கண்!! அவளது இளமையும் நிறமும் அவளை நெருங்க துடித்தது. எப்படியும் கணவன் இல்லாமல் தனியாக இருப்பவள் தானே.. கொஞ்சம் முயன்று பார்த்தால், மடிந்து விடுவாள் என்று என்னென்னவோ பேசிப் பார்த்தான். கூடவே "கஷ்டபடுகிறாய் வட்டிக்கு பணம் தருகிறேன். உனக்கு மட்டும் இரண்டு வட்டி!" என்று எவ்வளவு தூண்டில் போட்டாலும் சிக்காத விலாங்கு மீனாய் செகப்பி இருக்க அந்த கடுப்பு அவனுக்குள் உண்டு.

"பேர பாரு சிங்காரமாம்!! விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டுன மாதிரி, அவனும் அவன் போட்டு இருக்கிற பூப்போட்ட சட்டையும்.. வெத்தலை பாக்கு போட்ட கறை பல்லும்.. த்தூ" என்று அவன் பக்கம் பாராமல் திரும்பி நின்று கொண்டாள்.

அவன் எழுந்து அவள் அருகே வரும் முன் பஸ் வந்துவிட, அவசரமாக ஏறி முன்னால் நின்று கொண்டாள் செகப்பி. "அப்படி இவ எங்க போறா? கண்டுபிடிப்போம்!!" என்று அவனும் அந்த பஸ்ஸில் முன்பக்கம் தொத்திக் கொண்டு மெல்ல அவள் பின்னே நின்றான். வேர்த்து நனைந்த ரவிக்கையில் அவளின் அழகை கொஞ்சமும் கூச்சமில்லாமல் பார்த்து நின்றவனைக் கண்டவள், முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொள்ள அதற்கும் உதட்டை இளித்துக் பார்த்தான்.

இடையிடையே குண்டும் குழியில் பஸ் ஏறி இறங்கி குலுங்கும் போது அவளது முதுகை முட்டினான். சடன் பிரேக் டிரைவர் போடும் இடங்களிலெல்லாம் அவளது இடையை உரசினான்.

இவன் செய்யும் சேட்டையை பார்த்துக் கொண்டிருந்த அந்த நடத்துனர் "யோவ் ஆம்பள ஆளுக்கு முன்னால் என்ன ஜோலி? பின்பக்கம் போய் யா! எவ்வளவு சொன்னாலும் இந்த எரும மாடுகளுக்கு எல்லாம் உரசுர புத்தி போகவே போகாது" என்று சத்தமாக கூற எதிர்த்துப் பேச வழியில்லாமல் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டான்.

"ஏன்மா திருப்பி அவனை இரண்டு அறை கொடுக்கக்கூடாது?" என்று நடத்துனர் செகப்பியிடம் கேட்க, "திரும்ப அந்த ஊருக்கு தனியா போகணும் ணே.. போற வழியில ஏதாவது வம்பு பண்ணா?" என்றவளின் பேச்சு நியாயமாக பட டிக்கெட்டை அவளிடம் கொடுத்துவிட்டு அடுத்த பயணியை நோக்கி சென்றார்.

இவ்வாறாக இரண்டு பேருந்து மாறி தஞ்சாவூரை அடைந்து அவள் அக்கவுண்ட் வைத்திருக்கும் கிளையை அணுகி பாஸ்புக்கை நீட்டினாள்.

"என்னமா? என்ன வேணும்? பணம் வந்துச்சானு தெரியலையா? கொஞ்சம் வெயிட் பண்ணு மா! எவ்வளவு கூட்டம் இருக்கு பாரு?" என்று அவளை காக்க வைத்தனர்.

அங்கே இங்கே என்று அலைக்கழிக்கப்பட்டு ஒருவழியாக மேனேஜரை பார்க்க அனுமதி தந்தனர். அதற்கே மதியம் கடந்து விட்டது. கையில் வைத்திருக்கும் பணம் திரும்பி போக பேரூந்துக்கே சரியாக இருக்கும். இதில் எங்கிருந்து மதிய உணவை அவள் சாப்பிட?

அந்த மேனேஜரோ "இங்கே பார்க்க முடியாது மா. நம்ம மெயின் பிரான்ச்க்கு போ! ஒருவேளை பணம் வந்து பெண்டிங் இருந்தால் கூட அவங்க உடனே பிராசஸ் பண்ணா கையில் கொடுத்துடுவாங்க. அவங்க ஓகே பண்ணி அது நமக்கு வரதுக்கு இன்னும் நாளு பிடிக்கும். அதனால அங்கு போவது பெஸ்ட்! மூணு மணிக்கு மூடிடுவாங்க பேங்க.. சீக்கிரம் போ" என்று விரட்டினார்.

மலங்க மலங்க விழித்தபடி நின்றாள் செகப்பி. அவளைப் பொறுத்த மட்டில் இந்த பேங்க் மட்டுமே பரிச்சயம். இதிலேயே அங்கே இங்கே என்று அவளை பந்தாடினார்கள். இதில் மெயின் பிரான்ச் எப்படி போக? என்று அங்கிருந்த செக்யூரிட்டி இடம் விசாரிக்க, அவரோ அந்தப் பெண் மீது பாவப்பட்டு ஷேர் ஆட்டோவில் ஏற்றி விட்டார்.

இங்கே மதியம் சாப்பிடாமல் அலைந்து கொண்டிருந்தவளின் நிலை அறியாமல், ஊரு சென்ற சிங்காரமோ "யாரையோ பார்க்க செகப்பி சிங்காரித்து போனாள்" என்று பற்ற வைத்து விட்டான்.

வதந்(தீ)தி காட்டுத்தீயாய் பற்றி எரிய அது காற்றுவாக்கில் அவள் மாமியார் காதில் விழ, திண்ணையில் படுத்து இருந்த மரிக்கொழுந்து எழுந்து வேக வேகமாக மகன் வீட்டை நோக்கி வந்தாள், முந்தானையை உதறி சொருகிக் கொண்டு…

வீட்டில் அவள் இல்லாமல் வெறும் பூட்டிய வீடே வரவேற்க… ஆங்காரத்தோடு வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தார். பக்கத்து வீட்டு மல்லிகா எட்டி பார்த்து

"வாங்க பெரியம்மா.. எங்க வீட்ல செகப்பி இல்ல? திண்ணையில் உட்கார்ந்து இருக்கிறீக?" என்று பொதுவாக அவள் கேட்டு வைக்க..

"ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை வெரட்டுச்சாம். அது போல… இந்த மோகினியை கட்டிட்டு வந்ததும் என் புள்ள என்ன விட்டு வந்துட்டான். இப்போ என் மொவன் இல்லாத நேரம் பார்த்து.. இந்த சிறுக்கி சீவி சிங்காரிச்சுட்டு டவுனுக்குப் போய் இருக்காளாம்.. டவுனுக்கு!! யார் கூட போனானு யாருக்கு தெரியும்? என் மொவன் மழைன்னு பார்க்காம.. வெயிலுனு பார்க்காம கஷ்டப்பட்டு வேலை செஞ்சு துரும்பா இளைச்சு சம்பாதிக்கிறத இவளுக்கு அனுப்பி வச்சா.. இவ என்னவோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மினிக்கிட்டு டவுனுக்குப் போய்ட்டு இருக்காளா? வரட்டும் அவ!! இன்னைக்கு அந்த சிறுக்கி சீவி சிங்காரிக்குற கொண்டையை அறுத்து எடுத்துடறேன்" என்று திண்ணையில் உட்கார்ந்து ஆங்காரமாய் கத்திக் கொண்டிருந்தார்.

கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் அந்தரங்கமும் அனைவருக்கும் அத்துப்படி!! அதுவும் வெண்கலக் குரலில் சண்டையிடும் மரிக்கொழுந்து, வீட்டில் நடக்கும் அனைத்தையும் ஒப்பாரியில் கொட்டி விடுவார். இதில் எங்கே இருந்து ரகசியம் காக்க?

பேருதான் மரிக்கொழுந்து வாயைத் திறந்தால் வண்ட வண்டையாக தான் வரும்!!

மல்லிகாவுக்கு தன் ஒன்றுவிட்ட பெரியம்மாவையும் தெரியும். தன் தோழி செகப்பியையும் தெரியும்.

"இங்க பாரு பெரியம்மா யாரோ எவனோ பேசினானு இங்கே வந்து ஒரண்டையை இழுக்காத.. அந்த புள்ள பத்தி உனக்கு நெசமா தெரியாது? எங்க நெஞ்ச தொட்டு சொல்லு? இத்தன நாள பக்கத்து வீட்ல தானே நான் இருக்கேன். எனக்கு தெரியாம என்ன நடக்கும் சொல்லு? அனாவசியமா பிரச்சினை பண்ணாத!! நீயே உன் புள்ளையை குடும்பத்தை சந்தி சிரிக்க வைக்காத! அந்தப் புள்ள சொக்கத்தங்கம்!! அம்புட்டு தான் சொல்லுவேன். கெளம்புற வழியை பாரு" என்றாள்.

"ஆமா சொக்கத்தங்கம்!! இவ அப்படியே உரசிப் பார்த்தா... போடி போக்கத்தவளே!! பூட்டின கதவுக்கு பின்னால என்ன நடக்குது யாருக்கு தெரியும்? என் புள்ள இவள நம்பி மோசம் போய்ட்டான்!! என்று கத்தும் மரிக்கொழுந்தை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு போய்விட்டாள் தன் வீட்டுக்கு மல்லிகா.

மெயின் பிரான்ச்க்கு சென்ற செகப்பி அங்கே விழி பிதுங்கி நின்றாள். சாதாரண கிளைலேயே அங்கு போ.. இங்கு போ.. என்று பந்தாடினார்கள். இதுவோ மெயின் பிரான்ச் கேட்கவா வேண்டும்?

இவள் அங்கும் இங்கும் சுற்றுவதை பார்த்த புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண் தான் அவளை அழைத்து அவளது பாஸ் புக்கை செக் செய்து "இன்னும் பணம் வரலை அக்கா.. உங்களுக்கு பெண்டிங்ல எந்த பணமும் இல்லை. மினிமம் பாலன்ஸ் கூட ஐந்நூறு ரூபா இருக்கனும். இருநூறு தான் இருக்கு. மெயின்டன் பண்ணலைன்னா பணம் பிடிப்பாங்க கா பார்த்துக்கோங்க!!" என்று அனுப்பி வைத்தாள்.

ஒரு பக்கம் பணம் வரவில்லையே கடன்காரர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற பயம்.. இன்னொரு பக்கம் கணவனுக்கு ஏதேனும் உடல்நிலை சரி இல்லையோ என்ற கவலை… இன்றாவது பிள்ளைகளுக்கு நல்ல சோறு ஆக்க வேண்டுமே என்ற ஏக்கம்.. இப்படி பலவித எண்ண சூழல்களில் சிக்கி ஒரு வழியாக அவர்கள் ஊர் வந்து சேர மாலை 6 மணிக்கு மேலாகிவிட்டது.

அதற்குள் பள்ளியிலிருந்து பிள்ளைகள் வந்துவிட.. வாசலில் அமர்ந்திருந்த அப்பத்தாவை பார்த்து "அம்மா இல்லையா? எங்க போனாங்க?" என்று கேட்க, திரும்பவும் ஒரு ஒப்பாரியை ஆரம்பித்துவிட்டார் அவர்.

அவர் ஒப்பாரிக்கு பயந்து பிள்ளைகளும் கலக்கத்தோடு அமர்ந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்களும் சேர்ந்து அழ ஆரம்பித்து விட்டார்கள்.

"இப்படி என் பேர பிள்ளைகள பசியில போட்டுட்டு ஊர் சுத்த போய்ட்டா!!" என்று அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளை கொண்டு திட்டித் தீர்த்தார் மரிக்கொழுந்து.

வேகமாக செகப்பி நடந்து வந்து கொண்டிருந்ததை பார்த்த அவ்வழியே சென்ற இவள் தெருவை சேர்ந்த பையன், "அக்கா இருட்டிச்சு.. இப்ப தனியாப் போகாதிங்க. ஏறுங்க நான் வீட்ல விட்டுடுறேன்" என்று கூற தயங்கினாலும் மதியம் சாப்பிடாததால் உடலில் இருந்த சோர்வும்.. பிள்ளைகள் வந்திருப்பார்கள் தனியாக இருந்தால் அழுவார்களே என்று பாசமும் அவளை சற்று தயக்கத்தோடு ஏற வைத்தது.

இவள் வீட்டுக்கு செல்ல.. யாரோ ஒரு ஆம்பளையோடு வண்டியிலிருந்து இறங்கியவளை பார்த்ததும் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்த மரிக்கொழுந்து வெடித்தே விட்டார்.

"வாடி வா... என் சீர்கெட்ட சிங்காரி பெத்த சிறுக்கி… எவன் கூட போய் ஊர் சுத்திட்டு வர்ற? போகும்போது ஒருத்தன்.. டவுன்ல ஒருத்தன்.. இப்ப வரும்போது ஒருத்தனா? ஆத்தாடி ஆத்தா என் மொவன் இல்லாததும் போதும் நீ ஆட்டமா ஆடுற… வைக்கிரேண்டி உனக்கு ஆப்பு!!" என்றவர் அதுவரை திண்ணையில் இருந்து கத்திக்கொண்டு இருந்தவர், தெருவுக்கு வந்து "இந்த நியாயத்தைக் கேட்க ஆளில்லையா? இந்த ஊரில் மானம் போச்சா? நீதி செத்துப் போச்சா? இப்படி வேசி வேலை பார்க்கிறவள தெருவுக்குள் வச்சிருக்கீங்களே" என்று ஆரம்பித்து விட்டார்.

இந்த அம்மா கிட்ட பேசி புரிய வைக்க முடியாது என்று நினைத்தவள் விடுவிடுவென்று கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்று அரைத்து வைத்த மாவில் தோசை சுட்டு பிள்ளைகளுக்கு கொடுத்தாள் பொடியோடு..

அதற்குள் தெருவே கூடி விட்டது அவர்களது வீட்டு வாசலில்.. பிள்ளைகள் சாப்பிட்டதும் பாயை விரித்து போட்டவள் "படுங்க..!!" என்று பிள்ளைகளை படுக்க வைத்துவிட்டு வாசலுக்கு சென்றாள்.

அங்கே மரிக்கொழுந்து மரியாதையை காற்றில் பறக்க வைத்து கத்திக் கொண்டிருக்க.. "வாய மூடு அய்த்த!!" என்று இவள் சத்தத்தை உயர்த்த ஒருகணம் திகைத்து பார்த்தார்.

"என்னை என்ன மரிக்கொழுந்துனு நினைச்சிங்களோ? உங்க பவுசு தான் ஊருக்கே தெரியுமே!! அதான் என் புருஷன் கல்யாணம் ஆனதும் என்னை தனியாக வைத்து விட்டு போயிட்டாரு. என் புருஷனுக்கு என் மேல நம்பிக்கை இருந்தா போதும்!! வேற எந்த சிறுக்கிக்கும் நான் என்ன பத்தின விளக்கம் கொடுக்கணும்னு அவசியம் கிடையாது. என்னை கட்டுனவர் வந்து கேட்கட்டும் என் ஒழுக்கத்தைப் பற்றி... என் கற்பை பற்றி‌‌…" என்றாள்.

அதற்குள் அந்த தெருவில் பெரிய மனிதரைப் போன்ற தோற்றத்திலும் சிறு எண்ணம் கொண்ட ஒருத்தன் "நெருப்பில்லாமல் புகையுமா புள்ள? ஏதோ இருக்க போய் தானே கேட்கிறாங்க பெரியவங்க.. விளக்கம் சொல்லுவியா?" என்று கேட்க... மரிக்கொழுந்து "அப்படி கேளுங்க ஐயா.. நல்லா நாக்க புடுங்குற மாதிரி" என்றார்.

கேள்வி கேட்டவரை பார்த்து "ஒவ்வொருத்தரும் முதுகிலும் ஒரு முட்டை அழுக்கு இருக்கு. அதையெல்லாம் திறந்து பார்த்தா நாறிடும் உங்க பவுசு.. மரியாதை எல்லாம்... திறக்க வா?" என்றவள் கேட்க, கூட்டம் முணுமுணுப்போடு கலைந்தது.

திரும்பி மரிக்கொழுந்தை ஒரு முறை முறைத்தவள் "வயசான காலத்துல நேரத்தோடு வீடு போய் சேருங்க.. இருட்டிச்சு, கண்ணு தெரியாம கீழ விழுந்து கிடக்காதீக.. அப்படி கிடந்தா.. உங்களுக்கு ஆக்கிப் போடவும் தொடைக்கவும் நான் தான் வரணும்" என்றவாறு உள்ளே சென்றவள் கதவை வேகமாக அடைத்தாள்.

அவ்வளவு நேரம் வீரமாக சத்தமாக பேசி வந்துவிட்டாள் தான். ஆனால் மனது அடித்துக் கொண்டது. 'ஆம்பள இல்லா வீட்டில் ஒரு பெண்தானே அனைத்தையும் பார்க்க வேண்டும். குடும்பத்தின் சமையலில் இருந்து சுற்று வேளை பிள்ளைகள் படிப்பு வெளி வேலை என்று!!

நான் பேசும் ஒவ்வொருவரையும் என்னோடு இணைத்து வைத்து பேசினால்... கேட்கவே நாராசமாக இருக்கிறதே' என்று காதை பொத்திக் கதறினாள்.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் அவளுக்கு கவலை இல்லை. அவளது மணவாளன் வல்லாளன் இருக்க…. அவளது கவலை எல்லாம் கணவன் உடல்நலத்தை பற்றியே..

ஊரில் பற்றிய வதந்தியை நம்புவானா வல்லாளன்??

அதேநேரம் சவுதி ஏர்போர்ட்டில் பிள்ளைகளுக்கு மனைவிக்கு என்று வாங்கிய பொருட்களோடு போர்டிங்கில் நுழைந்தான் வல்லாளன்!!

மனதிலோ சொல்லாமல் கொள்ளாமல் போய் நின்றால் மனைவியின் முக பாவனைகள் எப்படி இருக்கும் என்ற ஆசையோடு!!

முற்றும்!!

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...