வேசி கதை

vinokrishnamurthy17
பெண்மையக் கதைகள்
4.9 out of 5 (20 )

பூப்படைந்த பெண் , 15 வயதாகிறது..

தன் நெற்றி பொட்டில் விழுந்த ஒரு துளி நீர் அவள் நித்திரையை கலைகின்றது. வெளியே மழை பெய்வதை உணர்கிறாள் . சட்டென எழுந்து, கூரை ஒழுகும் இடத்தில் எல்லாம் பாத்திரங்கள் வைத்தாள்.

தாழ் ஒட்டையில் கம்பி வைத்து கட்டி இருந்த கதவை மெல்ல திறந்து பார்க்கிறாள். வெளியே மிதமாக மழை பெய்து கொண்டிருந்தது. வாசலில் அமர்ந்து எதையோ சிந்தித்த வண்ணம் வேப்பம் குச்சியை வாயில் வைத்து கடித்து கொண்டிருந்தாள். மழை நின்று இருந்தாலும், மேகங்கள் சூழ்ந்தே இருந்தன. இன்னும் விடியாதது போலே தோன்றியது. மழை பெய்தால் நமக்கு இன்று பெரிய வேலை இருக்காது என்று நினைத்து கொண்டாள். அதுவுமில்லாமல் இன்று தனக்கு இரண்டாம் நாள். அடி வயிறு அடுப்பில் ஏற்றி வைத்தது போல இருந்தது.மெல்ல எழுந்து ஒரே ஒரு அறை கொண்ட அந்த குடிசையில் மூலையில் இருந்த அடுப்புக்கு அருகில் அமர்ந்தாள்!

நல்ல வேலையாக மழை சாரல் படாத இரண்டு விறகுகள் இருந்தது. அதை அடுப்பில் வைத்து தீ மூட்டினாள். கருப்பட்டி இட்டு கடுங்காபிப் போட்டு குடித்தாள்.

அதற்குள் மழை முற்றிலுமாக நின்று இருந்தது!ஒழுகும் இடத்தில் வைத்த பாத்திரங்களும் நிறைந்து விட்டன. அவற்றை எடுத்து குளியல் அறை வாளியில் ஊற்றி வைத்தாள்.

வீட்டிற்கு முன்புறம் இருந்த குளியலறை சென்று திரும்பினாள்!குளியல் அறை அருகில் இருக்கும் ரோஜா செடியில் ஒரு பூ பூத்து இருந்தது. அதை ஆசையாக பார்த்த வண்ணம் சிறிது நேரம் நின்று இருந்தாள். பிறகு அதை மெல்ல பறித்து தன் தலையில் வைத்து கொண்டாள்.

முந்தைய நாள் துவைத்து காயப் போட்டிருந்த தாவணியை இன்றும் உடுத்தினாள். காற்றின் ஈரப்பதம் காரணமாக முழுதாய் உலராமல் இருந்தது.. வேறு வழியும் இல்லை.. மாற்று உடுப்பு போன வாரம் கம்மாய் அருகே உள்ள முற்புதறில் சிக்கி கிழிந்து போனது.

குடிசையின் ஒரு மூலையில் தன் தந்தையின் படம் இருந்தது. அதற்கு அருகில் சென்று விளக்கேற்றினாள். பிறகு கண்களை மூடி ஏதோ முனுமுனுத்து கொண்டிருந்தாள்

மணி 7:30 தொட்டு இருந்தது. பள்ளிக்கு இன்னும் 20 நிமிடம் நடக்க வேண்டும். மிதிவண்டியில் சென்றாள் பத்து நிமிடம் தான். பக்கத்து வீட்டுல் தன் உடன் படிக்கும் தோழி பவித்ரா, மிதிவண்டியில் செல்வது வழக்கம். ஆனால் இதுவரை பவித்ரா இவளை உடன் அலைத்து சென்றதில்லை. இவளுடன் பேசுவதுமில்லை ... தாய் சொல்லை தட்டாமல் வாழும் ஒரு மகள் தான் பவித்ரா.

நமது கதை நாயகிக்கும் சற்று சுயமரியாதை அதிகமே.15 வயது தான் என்றாலும் சுயமாக சம்பாதிக்கிறாள். யாரிடமும் சென்று கையேந்தி நின்றதில்லை.

பள்ளிக்கு நடக்க ஆரம்பித்தாள். எப்போதும் போல் வாலிப ஆண்கள் முதல் வயதில் (மட்டும்) மூத்தோர் வரை கேலி பேச்சுகளை அம்புகளாய் அவள் மீது வீசினர். எதையும் கண்டு கொள்ளாமல் முன்னேறி சென்றாள்.பள்ளியில் இலவச சைக்கிள் அடுத்த வாரம் தரபோவதாக சொல்லி இருந்தனர். அதற்கு பிறகு இதையெல்லாம் காதில் கேட்க தேவையில்லை என்று நினைத்து கொண்டாள். பள்ளியை சேர்ந்தாகிவிட்டது. இவளது வகுப்பறையிலும் இவள் தனித்தே அமர்ந்திருப்பாள். ஆசிரியர்கள் கூட இவளை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.

இவளிடம் பள்ளியில் பேசும் ஒரே தோழி மாதவி. ஒரு திருநங்கையின் தத்து மகள்.மாதவியும் நிலாவும் தான் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். அதற்கு காரணம் சுற்றி உள்ள அனைவரும் அவர்களை ஒதுக்கி வைப்பதால் தான்.

வகுப்புகள் முடிந்தது. பள்ளியை விட்டு வெளியே வந்தாள். பள்ளி வாசலில் உடல் சற்று பருமனாக, வெற்றிலை இட்ட சிவந்த வாயுடன் கையில் நீல நிற சிறிய பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

இவளை கண்டவுடன் கை அசைத்து இவளை அழைத்தார். அவரை கண்டவுடன் முகம் சுருங்கி, வேண்டா வெறுப்பாக அவரை நோக்கி நடந்தாள்.

அவர் வாய் திறக்கும் முன் , "ஸ்கூல்க்கு வராத-னு எத்தனை தடவ சொல்றது"? என்றாள். "இன்னகி எனக்கு வேற பார்ட்டி கிடைக்கல , சீக்கிரம் கிளம்பு" என்றான். "இன்னைகி என்னால முடியாது, வயிறு வலி" என்றாள். சற்று யோசித்த பிறகு , " ஒரு மணி நேரம் தான் ஆகும், காசு வேனுனா அதிகமா வாங்கிக்க" என்றான்.
"எந்த இடம்" என்றாள். "போன வாரம் போன அதே கம்மாய் கிட்ட தான்" என்றான்.
மருத்துவ செலவிற்கு பணம் தேவைபட்டது. வேறு வழியில்லாமல் சென்றாள்.

வீடு திரும்பும் போது மணி 7. கொண்டு வந்த பணத்தை கூரையில் சொருகி வைத்தாள். குளியலறை சென்று குளித்து மாற்று உடைக்கு மாறினாள்.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் பள்ளி விடுமுறை. இருப்பினும் அதிகாலையில் எழுந்து புறப்பட்டாள். உடன் தான் இந்த வாரம் மொத்தம் சம்பாதித்த பணத்தையும் எடுத்து கொண்டாள்.

30 நிமிட காத்திருப்பு பின்பு ஒரு பேருந்து கிடைத்தது. நடத்துணரிடம் "GH"என்று கூறி பயணச்சீட்டு பெற்று கொண்டாள். பேருந்தில் மொத்தம் 10 பேர் தான் இருந்தனர். அதில் இருவர் இவளை அறிந்தது போல் அவர்களுக்குள் பேசி கொண்டு நகைத்தனர்.
கண்டும் காணாதவள் போல் இருந்தாள்.

மருத்துவமனை வாசலிலே பேருந்து நின்றது. இறங்கி நடக்க தொடங்கினாள். பல முறை வந்த அனுபவம் போல் யாரிடமும் எதுவும் கேட்காமல் நடந்தாள். போகும் பாதையில் புற்றுநோய் , தொழு நோய், போன்ற பல வார்டுகளை கடந்து சென்றாள். மருத்துவமனையின் மூலையில் சவகிடங்கிற்கு அருகில் ஒரு வார்டு இருந்தது, பெயர் HIV வார்டு என்று எழுதப்பட்டு இருந்தது. எந்த ஒரு தயக்கமுமின்றி உள்ளே நுழைந்தாள்.

பத்தாம் நண்பர் படுக்கை அருகில் சென்றாள் , 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் படுத்து கிடந்தாள். உடல் வலிமையின்றி காணப்பட்டது. இவள் மெதுவாக "அம்மா" என்று அழைத்தாள்.

கண்விழித்து இவளை கண்டவுடன் தன் நோய் அனைத்தும் குணமானது போல் எழுந்து அமர்ந்தாள் அந்த தாய்.

"என்னால சுத்தமா முடியல மா. மாரெல்லாம் வலிக்கிது. செத்தா கூட பறவாலை" என்று கூறி கண்ணீர் விட்டு அழுதாள் நிலாவின் தாய். "அந்த மனுசனும் போய்ட்டான். என்னையும் வெச்சிட்டு இப்படி கஸ்டபடுறியே" என அம்மா ஒப்பாரி வைக்க துவங்கினாள்.

ஆனால் நிலா எந்த வித உணர்ச்சியும் காட்டவில்லை. சிறு வயதிலே மிக அதிகமான இழப்புகளும் , வேதனைகளும் அவளின் மனதை கல்லாக மாற்றி இருந்தது. எதையும் தாங்கும் இதயம் என்ற அண்ணா வின் வார்த்தைகளுக்கு பொருத்தமான ஒரு பிறவியாக இருந்தாள் நிலா.சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு , வார்டு செவிலியரிடம் தான் சம்பாதித்த பணத்தை கொடுத்து தன் தாயை கவனித்து கொள்ளும்படி கூறிவிட்டு கிளம்பினாள்.

மருத்துவமனை வாசலில் மீண்டும் அதே நபர் ஆனால் இவளை பார்க்க வரவில்லை. எனினும் இவளை கண்டவுடன் கை அசைத்தான். இவளும் அருகில் சென்றாள். "இன்னைக்கும் வேல இருக்கு , வரியா ?" என்றான். "வரன் வரன்" என்று கூறி விறகு வெட்ட கிளம்பினாள் நிலா .

இக்கதை படிக்கும் போது சில இடங்களில் நிலா ஒரு வேசி போல் தோன்றி இருப்பாள். ஆனால் ஒரு மனிதனின் ஒழுக்கம் மற்றும் சுபாவம் என்பது நம் மனதில் நினைப்பதுயில்லை.

நினைப்பது எல்லாம் நிஜம் என்றால், நாம் வாழும் நிஜ வாழ்வின் அர்த்தம் என்ன!

இதில் வரும் கதாபாத்திரம் ஆணாக சித்தரிக்கப் பட்டு இருந்தால், யாருக்கும் எதும் தோன்றி இருக்காது. அதுவே இங்கு இருக்கும் மிக பெரிய உளவியல் வேறுபாடு.

அவளது தாய் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதற்கு காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் சமூகத்தால் அழிக்கப்படுவது நிலாவின் கணவுகளே.

திருநங்கைகளை வேற்று கிரக வாசிகள் போல் பார்க்கும் பார்வைகள் கூட ஒரு எடுத்துக்காட்டு தான். அவர்கள் வேசி தொழில் பார்க்கிறார்கள் என்று கூறும் சமூகம், அவர்களிடம் செல்லும் ஆண்களை எந்த பழியும் சொல்லாமல் இருப்பது வியப்பு தான்.

எல்லோரிடமும் அன்பு செய்வோம்..

வினோ..

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...