JUNE 10th - JULY 10th
மெய்யே துணை - ஈஸ்வரி
சமத்துவம் தேடும் உலகில்
சமாதானம் இல்லை!
தனித்துவம் தேடும் உலகில்
தன்மானம் கொள்ளை!
மகத்துவம் தேடும் உலகில்
மனிதமே எல்லை!
அன்பின் சமத்துவமும்
அன்பின் தனித்துவமும்
என்றும் மகத்துவமே! அது
வாழ்வில் சத்தியமே!
கூடிய அன்பில்
நாடிய சொந்தம் – அது
தேடிய அன்பில்
கூடிய பந்தம்!
“நிரஞ்சனா மனநல மருத்துவர்” என்ற பதாகை தாங்கிய அறையின் கதவை திறந்து வெளியே வந்த செவிலியர்,
"அடுத்து, டோக்கன் நம்பர் 52 வாங்க!"
நான் தான் என்று எழுந்து வந்து நின்ற இருபத்தி ஏழு வயதுப் பெண்ணைக் கண்டவர்,
"யாருக்கு பார்க்கணும், மேடம்…?"
"எனக்குத்தான்…!"
விழியை விரித்த செவிலியர், பெண்ணவளை ஆராய்ச்சிப் பார்வை பார்க்க,
"சிஸ்டர், இப்படியே பார்த்திட்டே இருக்கப் போறீங்களா…?"
விழியைத் தாழ்த்தியவர், "உங்க பெயரென்ன…?"
“சசி, வயது 27”
படிவத்தைப் பூர்த்தி செய்த செவிலியர், மருத்துவரின் முன் வைத்து விட்டு, "உள்ளே போங்க!"
“மனநல மருத்துவரைப் பார்க்க வந்தால், பைத்தியமாய் தான் இருக்கணுமா...?”
செவிலியர் புரியாமல் பார்க்க, “என்னைக் கண்ட நிமிஷத்தில் இருந்து, என்னையே உத்து உத்து பார்ப்பதால் தான் கேட்டேன்...!”
“அப்படி எல்லாம் இல்லை. இவ்வளவு அழகான பெண்ணுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்று யோசித்தேன்…”
“உள்ளே வாங்க. தெரிந்து கொள்ளலாம்” என்றவள் மருத்துவரின் முன் போய் அமர்ந்தாள்.
அங்கே 38 வயதில் இருந்த டாக்டர், “ஹாய் சசி!”
“ஹாய் டாக்டர்!”
“என்ன பண்றீங்க...?
“பன்னாட்டு நிறுவனம் ஒன்றில், டீம் லீடர்.”
“வாவ் சூப்பர்... சசி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு...!”
“தேங்க்ஸ் டாக்டர்.”
“பொதுவாய் ஒருத்தவங்ககிட்ட நீங்க அழகு என்று சொன்னால், அவர்கள் முகத்தில் ஒரு புன்னகை வரும். ஆனால், உங்க முகத்தில் எந்தப் புன்னகையும் பிரதிபலிக்க வில்லையே! என்ன பிரச்சனை...?”
“அது…”
“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா, ஹஸ்பெண்ட் என்ன பண்றாங்க...?”
“ஹ்ம்... அவரும் டாக்டர் தான். மகப்பேறு மருத்துவர்.”
“வாவ், நல்ல விசயம்…”
மௌனமாய் கைகளைப் பிசைந்து கொண்டே இருந்தவளை…
“உங்க ரெண்டு பேருக்குள்ளும் ஏதும் பிரச்சனையா...?”
“நோ நோ... அவர் ரொம்ப நல்லவர்…” என்றவள் நகத்தை கடிக்க,
மருத்துவர் புன்னகையோடு “என்னாச்சும்மா.. நீங்க சொன்னால் தானே, நான் அதற்கு சொல்யூஷன் சொல்ல முடியும்.”
“நான் சொன்னா, நீங்க என்னைப் பத்தி தப்பா நினைப்பீங்களா...?”
"தப்பா நினைப்பதற்கு என்ன இருக்கு...?"
“என்னைப் பத்திச் சொன்னா, நீங்க என்னை அண்டர் எஸ்ட்டிமேட் பண்ணி விட்டால்...”
உலகத்தில் மனிதர்கள், “கடவுளிடம் மட்டும் மனசில் இருப்பதை அப்படியே சொல்வாங்க. அதற்கு அப்புறம் மருத்துவராகிய, அதுவும் மனநல மருத்துவரிடம் சொல்வது மிகவும் நல்லது. அதனால் உங்கள் பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்க்க வேண்டியது என்னோட பொறுப்பு... சொல்லுங்க...”
“டாக்டர் எனக்கு ஒயின் மற்றும் பியர் குடிக்கும் பழக்கம் உண்டு. கூடவே, என் உடன் பணிபுரியும் ஆண் நண்பர்கள் உடன் சேர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உண்டு.”
"இதெல்லாம் உங்க கணவருக்கு தெரியுமா, சசி...?"
“தெரியாது டாக்டர்...!”
“தெரியாமல் எப்படி மெயின்டைன் பண்றீங்க...?”
“அவர் முதலில் டாக்டர் பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், இரவில் நாங்கள் சந்தித்துக் கொள்ளும் நேரம் குறைவு.
அப்படி சந்திக்கும் நேரங்களில் வாய் எல்லாம் கழுவி சாக்லேட் சாப்பிட்டு, நல்ல பிள்ளையாய் நடந்து கொள்கிறேன்...! இல்லை இல்லை, நல்ல மனைவியாய் நடிக்கிறேன்...!”
“இதுதான் உங்க பிரச்சனையா...?”
“இல்லை... இதெல்லாம் கொஞ்சம் தான். இன்னும் நிறைய இருக்கு. நான் வீட்டிற்கு ஒரே பெண்.”
“அப்பா அம்மா என்ன பண்றாங்க...?”
“அப்பா நான் டென்த் படிக்கும் போதுதான் தொழில் விசயமாய் அமெரிக்கா போனார். அம்மாவுக்கும் கொஞ்சம் உடல் நலம் சரியில்லாமல் போனதால், கூடவே கூட்டிட்டு போயிட்டார்.
இப்போ மொத்தமாக பாரின்ல இருக்காங்க. அவர் நாடு நாடா சுற்றுவார். அம்மாவும் அப்பாவுடன் சேர்ந்து போய் விடுவார். ரெண்டு பேரும் பயங்கர லவ். ஒருத்தரை விட்டுட்டு இன்னொருத்தர் இருக்கமாட்டார்கள்.”
“அப்போ, நீங்க அவங்களை எப்போ பார்ப்பீங்க...?”
“என் பிறந்த நாளோ, இல்லை, அவங்களுக்கு என்னை பார்க்கணும் என்று தோன்றினாலோ உடனே என்னைப் பார்த்துட்டுப் போவாங்க...”
“அப்ப, நீங்க எங்க தங்கியிருந்தீங்க...?”
“படித்தது வளர்ந்தது எல்லாம் ஹாஸ்டல். அப்படியே பழகிடுச்சு.”
“அவங்களும் உங்களை அவர்களுடன் வந்து தங்கச் சொல்லி கூப்பிட வில்லையா...?”
“படித்து முடித்ததும் கூப்பிட்டாங்க. நான் தான் போகலை.”
“ஏன்?”
“எல்லா குழந்தைகளும் அவங்க அம்மா அப்பாவுடன் இருக்கும் போது, நான் மட்டும் தனியா கிடந்ததால் அவர்களின் மீது ஒரு வெறுப்பு.”
“அவங்க கூடப் போகாமல் இருப்பதற்கு, அது மட்டும் தான் காரணமா?”
“இல்லை…”
“ஏன் போகல...?”
“லவ் பண்ணினேன்”
“உங்க கணவரையா...”
“இல்லை...”
“என்னுடன் வேலை பார்த்தவனை...” சொல்லும் போதே பெண் அவளின் கண்ணிலிருந்து கண்ணீர்...
“ஏன் மா உங்க லவ் பிரேக் அப் ஆகிடுச்சா...? எதனால்...?”
“என்னோட நம்பிக்கையை தூள் தூளாக உடைத்து விட்டான். அவனுடன் பழகிய பின் தான், எல்லா கெட்ட பழக்கமும் கற்றுக்கொண்டது.”
“ஒரு லவ்வர் எப்படி தன் கேர்ள் பிரண்டுக்கு கெட்டது எல்லாம் கற்றுக் கொடுப்பாங்க...?”
“அவன் வேற மாதிரி டாக்டர். அவன் என்னோடு பழகியதே என் பணத்துக்குத் தான் என்று பின்னாளில் புரிந்தது. விவரம் தெரிந்த நாளிலிருந்து யாருமே என்னுடன் நெருக்கமா இருந்ததில்லை... அதை அவனுக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டான்.
அதனால், சனி ஞாயிறு என் பிரெண்ட்ஸ் எல்லாம் வீட்டுக்கு போவாங்க... எனக்கு போர் அடிக்கும்...
என்ன செய்வது என்று தெரியாமல், வீக் எண்ட் ஆனா, பார்ட்டிகளுக்குப் போவேன். அங்க தான் அவன் அறிமுகம்.
வீகெண்ட் மட்டும் பப்புக்குப் போவேன். கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கம், அவனால் தினமும் தொடர்ந்தது...
ஹாஸ்டலில் இருந்து தனியாக வீடு எடுத்து தங்க பிளான் பண்ணினோம். வீடு வாங்குவதற்கு அப்பா பணம் கொடுக்கிறேன் என்றார். ஏனோ, எனக்கு அவர்களிடம் வாங்க விருப்பம் இல்லை.
நான் என் சொந்தப் பணத்தில் வாங்க முடிவு பண்ணினேன்... 50 லட்சம் வீடு...
20 லட்சம் என் சேமிப்பு. மீதி 30 லட்சம் லோன். லட்சக்கணக்கில் சம்பளம் என்பதால் லோன் கிடைத்து விட்டது. எங்க ரெண்டு பேர் பெயரிலும் வீட்டை எழுதிக் கொள்ளலாம் என்று நான் முடிவு செய்து கொண்டேன். பத்திரப் பதிவு அன்று தான் அவன் சொன்னான். அவன் பெயரில் வீட்டை எழுதனும் என்ற போதுதான் அவன் மேல் எனக்கு சந்தேகம் வந்தது...”
“உங்க வீட்டில, உங்கள் சம்பளத்தை எல்லாம் கேட்க மாட்டாங்களா...?”
“கேட்க மாட்டாங்க... வீட்டிற்கு நான் எந்தப் பணமும் கொடுப்பதில்லை. சம்பளம் வாங்கி தாராளமாக செலவு செய்வேன்.”
“வீடு வாங்கியாச்சா...”
“ஹ்ம். அவனின் மேல் சந்தேகம் வந்ததால் வாங்கிய வீட்டை என் பெயரில் எழுதிக் கொண்டேன். சண்டை போட்டான். அந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு, நான் ஹாஸ்டலில் தங்கினேன்.”
“உங்க ரெண்டு பேருக்கும் உறவு எப்படி இருந்தது...?”
“திருமணத்திற்கு முன், பாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பது என் கொள்கை. அதனால் அப்படித்தான் இருந்தது...”
“எதை வைத்து அவனை காதலித்தீங்க...?”
“என் கூடவே இருந்து 24 மணி நேரமும் என்னையே நினைச்சிட்டு இருப்பதால். வேலைக்கு போகல.. என்று நான் கேட்டபோது, எனக்கு கைநிறைய சம்பளத்துடன் வெளி நாட்டில் வேலை. உன்னை விட்டுட்டு போக மனசில்லை. அதான் வேலையை விட்டுட்டு உனக்காக இங்க தங்குவேன் என்று ஆரம்பத்தில் சொன்னான்.
ஏனோ, என்னை பார்த்துக் கொள்ள ஒருவன் இருக்கிறானே என்பது எனக்கு அப்போது அந்த வார்த்தை சந்தோசமா இருந்தது.”
எங்களின் இரண்டு வருடப் பழக்கத்தில் அவன் ஒரு நாள் வேலைக்குப் போய் நான் பார்த்ததே இல்லை...! எனக்காக என்ற போது கேட்கத் தோன்றவில்லை.
அதையும் மீறி ஏன் போலன்னு கேட்டதுக்கு அவன் சொன்ன பதில், "நீ சம்பாதிக்கிற... உங்க அம்மா அப்பா பணக்காரங்க. நீ வீட்டுக்கு ஒரே பெண்.. அப்புறம் தனியா நான் எதற்கு சம்பாதிக்கனும் என்றான்.”
அப்போ எல்லாம் புரியலை. ரெண்டு வருடங்களுக்கு முன், எனக்குள் என்ன நடந்தது என்று என்னால் இப்போது யோசிக்க முடியவில்லை. என் கூடவே அட்டைப் பூச்சியை போல் ஒட்டிக் கொண்டிருப்பதால் எனக்கு அது போதும் என்று மட்டும்தான் அப்போது தோன்றியது. தனிமையில் இருக்கும் எனக்கு, அவனின் கூட இருக்கணும் என்பது மட்டும் தான் பட்டச்சு. வேற எதுவும் படல. நாங்கள் சுற்றாத இடமில்லை.
அவனுடைய பெற்றோர் மதுரை பக்கம். ரொம்பக் கண்டிப்பு. ரெண்டு வீட்டிலும் பேசிவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்றான் அவன்.
அப்பா அம்மா வருடக் கடைசியில் வருவார்கள் என்பதால், அவர்களின் வருகைக்கு காத்திருக்கும் போது தான்,
எனது டீமில் ஒர்க் பண்ணும் பிரண்ட் ஒருத்தியின் திருமணத்திற்காக மதுரைக்குப் போயிருந்தேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும் போது, அவன் ஒரு பெண்ணுடன் கைகோர்த்து நின்றான் .
அவனுடன் இருந்த பெண் தாலி கட்டி இருந்தாள். மாசமாய் இருக்கிறாள் என்பது பார்த்ததுமே புரிந்தது.
அங்கே போய் அவன் சட்டையைப் பிடித்து சண்டை போட்டேன்.
அவன் கூட இருந்த பெண்ணும் இவள் யார் எனக் கேடக,
இவள் ஒரு மோசமான பெண் ஆம்பளைங்களை வளைத்துப் பிடிக்கும் ஒருத்தி என்று கூசாமல் பொய் சொன்னான்...
மொத்தமாய் உடைந்து நொந்து போன நொடி. இப்படி ஒருத்தன் என்னை ஏமாற்றி இருக்கிறான் என்று தெரியாமல் இருந்து விட்டேனே என்ற ஆதங்கத்தில் மனசு உடைந்து, என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் லீவு போட்டுவிட்டு முதல் முறையாய் என் அப்பா அம்மாவை பார்க்க, நானே அமெரிக்கா போனேன்.
அங்கே போன பின்னாடி தான் தெரிஞ்சது. என் அம்மாவுக்கு கேன்சர் அதற்கு ட்ரீட்மெண்ட்காகத்தான் அவங்க அமெரிக்காவில் இருக்கிறார்கள். இது தெரிந்தால் நான் வருத்தப்படுவேன் என்பதால் மறைத்துப் போயிருக்கிறார்கள் என்று.
சோர்ந்து போய் இருந்ததை பார்த்து அம்மா கேட்டாங்க ஏதும் லவ் ஃபெயிலியரா என்று.
அவன்தான் ஏமாற்றுக்காரன் என்று தெரிஞ்சுடுச்சே. கெட்டதிலும் நல்லது என்று நினைத்து அவனை அத்தோடு மறந்துவிடு. நான் என் இறுதிக்காலத்தை எண்ணிக் கொண்டிருக்கிறேன். எனக்கு பெரிய ஆசையே உன் கல்யாணத்தை பார்க்கனும் என்று தான். நாங்களே அடுத்த மாசம் இந்தியா வந்து உனக்கு கல்யாணம் பண்ணலாம் என்று நினைத்தோம். மாப்பிள்ளை கூட பார்த்து விட்டோம் என்று அவரின் புகைப்படத்தைக் காட்டினார்கள்.
அம்மா ஒரு டாக்டர் மாப்பிள்ளையை வரனாகக் காட்டினார்.
முதலில் மறுத்தேன். பின் அவரே வீட்டிற்கு வந்தார்... ரொம்ப டீசன்டாகப் பேசினார். எங்களின் தூரத்துச் சொந்தம். அவருடன் தினமும் போனில் பேசச் சொன்னார்கள், பெற்றோர்.
அடுத்து ஒரு ஆறு மாதம் பேசினேன். பொய் இல்லாத நல்ல ஆணாகத் தெரிந்தார். ஒரு கட்டத்தில் அவர் பிடித்துப் போக, நானும் திருமணத்துக்கு சம்மதித்தேன்.
உனக்கு இதற்கு முன்னாடி முதல் காதல் ஏதும் இருந்ததா என்று அவர் கேட்டார். கல்யாணத்துக்கு முன்னாடி எந்தப் பெண்ணும் கணவனிடம் முதல் காதலை பற்றி சொல்லக்கூடாது என்று கேள்விப்பட்டிருந்ததால் நான் அவரிடம் இல்லை என்று மறுத்து விட்டேன்.
அவருக்கும் எந்த முதல் காதலும் இல்லை.
ஒரு கட்டத்தில் மனம் மாறி, அப்பா காட்டிய வரனை மணந்து கொள்ளச் சம்மதித்தேன். பிறகுதான் தெரிந்தது திருமணத்திற்குப் பின் சென்னையில் தான் இருக்கப் போகிறோம் என்று...
என் காதலனை நினைத்து உள்ளுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது... ஒரு வருடம் பேசிப் பழகிய பின் அடுத்த ஒரு மாதத்தில் எனக்கும் டாக்டர் மாப்பிள்ளைக்கும் திருமணம் முடிந்தது.
என் கணவருக்கு இந்தியாவில் வேலை செய்வதுதான் விருப்பம்... சென்னையில் சொந்த கிளினிக் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், என் அம்மா இறந்து விட்டார்.
ஒரு வருட காலம் நல்லா போய்க் கொண்டிருந்தது. வீட்டில் தனியாக இருக்க வேண்டாம் என்று, நானும் வேலைக்குப் போக ஆரம்பித்தேன்.
அந்த நேரத்தில்தான் என் காதலன் மீண்டும் என் முன்னாடி வந்தான்.
தினமும் வந்து என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறான். நான் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் நீ வரணும். வராவிட்டால் உன் கணவனிடம் போய் மிரட்டுவேன். நம்ம வீடியோ கிளிப்பிங் எல்லாம் ஊரெல்லாம் காட்ட வேண்டாம் என்றால் பணம் வேண்டும் என்று அடிக்கடி மிரட்டவும், பயத்தில் நானும் கொஞ்சம் கொஞ்சமாய் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
அதிக குடிக்கு ஆளான நான், குடிபோதையை விட முடியாமல் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவனிடம் தெரியாமல் பாட்டில் வாங்கிக் குடிக்க ஆரம்பித்தேன். இப்போ அவனும் என்னை மிரட்டுகிறான்.
பணம் வாங்கிப் பழகியவன், இப்பொழுது மொத்தமாய் கோடி ரூபாய் பணம் கேட்கிறான்.
பணம் தராவிட்டால் கணவரின் மருத்துவமனைக்குப் போவேன் என்று மிரட்டியே என்னை டார்ச்சர் செய்கிறான்...
செத்துப் போய் விடலாமா என்று தோன்றியது. ஆனால் என் கணவர் நல்லவர். அவரை விட்டுப் போக மனசு வரலை. என்னை மிரட்டும் அவனை கொலை செய்து விட்டால் என் கணவனுக்கு அசிங்கமாகி விடுமோ என்று பயமாய் இருக்கு. அதனால் தான் உங்களிடம் ஒரு தீர்வு கேட்க வந்தேன்.”
“கேட்பாரற்று எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழ்ந்தவள் நீ. ஏராளமான சம்பளம். கமிட்மெண்ட்ஸ் என்ற ஒன்றே இல்லாமல் சுதந்திரமாய் வளர்ந்திருக்கிறாய்.
உன்னை காதலித்தவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்பது அவன் உன்னிடம் பேசியதும் நீயே புரிந்து இருக்கலாம் ஏனெனில் ஆண்களுடன் பழகக் கூடிய பணிச்சூழல் இருந்த நீ, எப்படி அவ்வளவு பெரிய மோசக்காரனை காதலனாய் ஏத்துக்கிட்ட என்று .தான் என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.
ஆணுக்குப் பெண் சமம் என்று சமுதாயத்தில் சொல்வார்கள். ஆனால் குடிப்பதிலும் சிகரெட் பிடிப்பதிலும் ஆணும் பெண்ணும் சமம் என்று யாருமா உனக்குச் சொன்னா...?
மிக மிக நல்லவனாய் இருக்கும் உன் கணவன் ஒரு பக்கம்... கிரிமினல் புத்தி கொண்டவ உன் காதலன் மறுபக்கம்.
உன் புகைப்படங்களை, வீடியோ கிளிப்பிங்ஸ்களை நெட்டில், எம்.எம்.எஸ்.சில் அனுப்பி, உன்னை அவன் நிர்மூலப்படுத்துவான் இன்று முதல் முறை உன்னிடம் மிரட்டும் போதே, நீ உன் வீட்டில் சொல்லி இருக்கணும்.
உன் கணவனிடம் இல்லா விட்டாலும் உன் அப்பாவிடம் சொல்லி இருக்கலாம் இல்லையா...?”
“அம்மா இறந்த தவிப்பில் அப்பா இருக்கிறார்... மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் அவரை, நானும் போய் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று தான்... அதைவிட என் அப்பாவுக்கு என்று ஒரு பெயர் இருக்கு. என் மாமனார் மாமியாரின் குடும்பமும் பெரிது. சொந்த பந்தங்களும் பெரிது. இதையெல்லாம் காட்டினால், என்னோடு சேர்ந்து அவர்கள் மானமும் போய்விடும் இல்லையா..?”
“நீ இனி பணம் தரவில்லை என்றால் உன்னை கொலை செய்யவும் துணிவான். அகால மரணம் தேவையா? பணத்தை தினமும் கொடுத்து, அவனுக்குப் பழக்கி விட்டாய்.
கோடி ரூபாய் கொடுத்தாலும் மட்டும் அவன் நிறுத்தி விடுவானா என்ன? நீ ஒரு பணம் காய்க்கும் மரம் என்று அவன் நன்கு அறிந்து கொண்டான். பின்னாளில் தொடர்ந்து பிளாக்-மெயில் செய்வான். கோடிக்கணக்கில் பணம் கறக்கப் பார்ப்பான்.
“அதுதான் டாக்டர் இப்போ நடந்து கொண்டிருக்கு... யாரையாவது ஆட்களை வைத்து கொலை பண்ணி விடலாமா என்ற எண்ணமும் எனக்குள் இப்போது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கு...”
“ஏன் அவனைக் கொலை செய்துவிட்டு வாழும் வயதில் போய் சிறையில் கழித்து ஆசைப்படுகிறாயா...”
அவள் கேட்டதும் குலுங்கி குலுங்கி அழ,
“அழாதே சசி...! உன்னை இரண்டு ஆண்கள் மிரட்டுகிறார்கள். அவர்கள் மிரட்டுவதற்கு ரீசன் ஒன்று உன் உடல், இன்னொன்று பணம்.
நீ உன் குடும்பத்திற்கு அசிங்கமாகி விடும் என்று பயந்து பயந்து அவர்கள் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுப்பதால் தான், அவர்கள் உன்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.”
டாக்டர் என் நிலைமையே இப்ப வேற ஒன்னு. அவங்களுக்கு நான் இணங்கிப் போகனும். இல்லை கொலை பண்ணனும். இதை விட்டால் வேற வழி இல்லை. ஆனால், என்னால் என் கணவருக்கு துரோகம் பண்ண முடியவில்லை. இப்ப நான் இருக்கிற மனநிலையில் பைத்தியம் பிடித்து விடும் போல இருக்கு. எனக்கு தீர்வு சொல்லுங்கள்.” என அழுதாள்.
“அழாதே. இப்போ நீ பயந்து போய் இருக்கிறாய். உன் மனம் பயத்தில் கண்டதையும் யோசிக்கிறது. இந்த நேரத்தில் பயத்தை விட்டு நல்லபடியா அறிவுப் பூர்வமாய் யோசி.
எவன் எவன் காலிலோ விழுந்து கெஞ்சுவதைக் காட்டிலும், உன் கணவனிடம் மனசு விட்டுப் பேசு. குடி பழக்கத்தையும் சிகரெட் பழக்கத்தையும் விடு. அந்த பழக்கங்களே, உன் வாழ்க்கையை புரட்டிப் போட்டு இருக்கு.”
“நான் அதைச் சொல்லி அவர் என்னை வேண்டாம் என்றால், என்னால் இப்போது என் கணவரை விட்டுவிட்டு இருக்க முடியாது டாக்டர்...”
“அவர் ஒரு டாக்டர். கண்டிப்பாக உன்னைப் புரிந்து கொள்வார்.
அவருக்கு விருப்பப்பட்டால் சேர்ந்து வாழ். இல்லா விட்டால் பிரிந்து கொஞ்ச நாள் போயிரு. உன் அப்பாவின் தொழில்களைத் கவனி. வாழ்க்கையில் படிப்பு என்பது நல்லது கெட்டதை ஆராய்ந்து சரியான வழியில் போவதற்குத் தான்.
மேலைநாட்டு கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்வதற்கு, குடியும் பப்பும் மட்டும்தானா, அவர்களிடமும் நல்ல விஷயம் இருக்கும். அதை ஃபாலோ பண்ணினால் போதும். கெட்டதை எப்பொழுதும் விட்டுவிட்டு நல்லதை எடுத்துக் கொள்வதுதான், ஒரு படித்த அறிவாளிக்கு உகந்தது.
நீ இவ்வளவு நேரம் மனசு விட்டுப் பேசியதில், ஒன்றைப் புரிந்து கொண்டேன். உன் கணவருக்கு உன்மேல் அன்பு அதிகம் என்று. எப்பொழுதும் அன்புக்கு மதிப்பு அதிகம். போய் உன் கணவரிடம் பேசு, அடித்தாலும் திட்டினாலும், அந்த நேரமே அவருக்கும் உன் மேல் காதல் இருந்தால் கண்டிப்பாக விட்டுப் போக மாட்டார்.” என்று அனுப்பினார்.
இரண்டு வார இடைவெளிக்குப் பின்...
சசிகலா மருத்துவரின் அறைக்குள் சென்று புன்னகையோடு அவரைக் கட்டிக் கொண்டாள். அதிலே புரிந்தது அனைத்தும் சுபம் என்று.
இவர்தான் என் கணவர் என்று அறிமுகப்படுத்த, அதில் புரிந்து போனது. அவள் அனைத்தையும் சொல்லி விட்டாள் என்று.
கூடவே கையோடு தன் கொண்டு வந்த செய்தித்தாளை நீட்ட,ப் அதை வாங்கிப் படித்த மருத்துவருக்கு புரிந்தது.
பேப்பரில் கொட்டை எழுத்துக்களில் “பெண்களை ஏமாற்றி படம் பிடித்து பணம் வாங்கும் இருவர்” என இருந்தது.
“டாக்டர் இவர் கரண். என் கணவர்...”
கரண் புன்னகையோடு “ரொம்ப நன்றி டாக்டர். நீங்க நல்ல வழியை அவளுக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கீங்க. ஒருவேளை உங்களை மீட் பண்ணாவிட்டால் அவள் தப்பு தப்பாய் செய்து திசை மாறி இருப்பாள். என்னால் அவளைப் பிரிந்து இருக்க முடியாது.” என்று நன்றி கூறி விடை பெற்றனர்.
மருத்துவருக்கு ஏனோ அத்தனை சந்தோஷம். சசியின் புன்னகை கண்டு.
தவறு செய்யாதவர்கள் மனிதரே கிடையாது. புரிந்து வாழ்வது தான் மனிதர்கள் என நினைத்தவர், அடுத்த நபருக்கான மணியை அடித்தார்.
சுபம்.
#278
48,400
1,400
: 47,000
29
4.8 (29 )
kskselvakumar86
வளரும் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் எனது கதை https://notionpress.com/ta/story/ssc/19561/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D#.YrfF
janumurugannovels
Nandhini Sugumaran.
நைஸ் ஸ்டோரி. ஈஸ்வரி மா..
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50