ஒவ்வொரு படைப்பாளியின் எழுத்தும் அவன் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தின் நாட்குறிப்புகளே ஆகும். எழுத்தாளனது ஆன்மாவின் உயிர் எழுத்துக்கள், பிரபஞ்சத்தின் உயில் எழுத்துக்கள்.
இந்த குறுநாவலின் சாளரத்தின் வழியே வாழ்வின் பெருவெளியை தரிசிக்க வைத்திருக்கிறார்.
பின்னணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து காட்சியனுபவங்களை கண்ணெதிரில் நிறுத்தியிருக்கிறார். நிறை, குறை, பகை, பழி, அன்பு, காதல், பாசம், கோபம் இப்படி எல்லா உணர்வுடைய கதாபாத்திரங்களை இந்தப் புதினத்தின் கதைப்பின்னலோடு மிக இயல்பாக உலவவிட்டிருக்கிறார்.
மனசாட்சியின் குரல் இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒலிப்பதை நீங்கள் செவிமடுக்கலாம். வாசகர்களின் மனதிற்கு நெருக்கமான புதினமாக இந்த நூல் திகழ்கிறது.
எதிர்பார்ப்புகள் – ஏமாற்றங்கள் – தவறுகள் - சறுக்கல்கள் இல்லாத வாழ்க்கையே கிடையாது. இவற்றிற்கு இன்னொரு பெயர் ‘அனுபவம்’. கதையில் வரும் பிரதான பாத்திரமான ‘ராஜு’வானாலும் கதைக்குள் கதையாக வரும் (The Desolate Aspiration) அரவிந்த் ஆனாலும் இவற்றையெல்லாம் எதிர் கொள்ளும் சராசரி மனிதர்களாக புனையப்பட்டிருப்பது படிக்கும் வாசகர் மன நிலைக்கு நெருக்கமாக இருக்கிறது. கதை சூழலின் தேவைக்கேற்ப ஆங்காங்கே கவிதை வரிகளின் பிரயோகம் வாசகர் உணர்வின் உந்துதலை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில் அமைந்துள்ளது.