காணும் இடங்களிலெல்லாம் சக்தியடா என்பார் பாரதி. பெண் என்பவள் தெய்வம் என்கின்றனர் பெரியவர்கள். ஒரு பெண் நினைத்தால் ஒருவனுக்கு சிறகு பொருத்தி சிகரம் ஏற்றவும் முடியும். அதே சமயம் சிதைத்து சின்னாபின்னமாக்கவும் முடியும். திருமண வாழ்க்கையின் அர்த்தத்தை உணராத பல பெண்கள் யாரோ சொல்வதற்காக, தன் வாழ்க்கையை விவாகரத்துக்கு பலிக் கொடுக்கும் பெரும் தவறை செய்வது, தன் தலையில் மண்ணை வாரி இறைப்பதற்கு சமம். அதற்குப் பிறகு அந்த பெண்களின் வாழ்க்கை, புயலில் பறக்கும் புழுதியாய் மாறுவது என்பதுதான் நிதர்சனம். விவாகரத்தை நோக்கி சென்ற எந்த பெண்ணும் தன் வாழ்க்கையின் ஒரு அடையாளத்தை இழந்துதான் நிற்கிறார்கள். தாம்பத்ய வாழ்க்கையின் அர்த்தத்தை அறியாமல், அவசரப்பட்டு எடுக்கும் பெண்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது. பொறுமையின்றி வாழக்கூடிய வாழ்க்கையில் கிடைப்பது என்பதைவிட, இழப்பதே அதிகம் என்பதை இந்த நாவல் சொல்லும்.
பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஆறாவது புலம் பொறுமை என்பதுதான். அந்த சகிப்புத்தன்மையும், அது கொடுக்கும் நம்பிக்கையுமே சுக வாழ்க்கையின் அஸ்திவாரம். இதுவும் கடந்து போகும், பொறுமை இருந்தால் என்பதே இந்நாவலின் மையக்கரு.