புன்னை மரத்தடியில். . . என்னும் குறுநாவலை எழுதிய பின் என்னுள் எழுந்த கிளர்ச்சியின் விளைவே வேர்களின் மொழி. சிறுகதையாக எழுதத் தொடங்கிய "புன்னை மரத்தடியில்" குறுநாவலாக உருப்பெற்றது. எனவே சிறுகதைகளை எழுத முடியும் என்ற நம்பிக்கையின் எதிரொலிப்பு தான் "வேர்களின் மொழி".
வாழும் காலத்தின் ஊடாக பயணித்து சந்தித்த மனிதர்கள் எதிர்கொண்ட சவால்கள் மனதின் அடியாழத்தில் கனவுகளின் தொகுப்பு தான் "வேர்களின் மொழி" என்னும் சிறுகதை தொகுப்பு. உணர்ச்சிகளை தன்வயப்படுத்தி அவற்றிற்கு உயிரோட்டம் கொடுப்பதில் தான் கதையின் சாராம்சம் அடங்கியிருக்கிறது எனபதை நான் படித்த சிறுகதைகள் என் நெஞ்சத்தில் வேர்களாய் பதித்தன. அந்த வேர்கள் தங்கள் உணர்ச்சிகளை இதழாய் மலராய் கனியாய் பெற்றுத் தந்தன. மானுடம் பேசும் மொழியாய் இயலாத அவற்றைத் தமிழ் மொழியால் பேசவைத்ததன் விளைவு தான் இந்த சிறுகதை தொகுப்பு.