"பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது .... அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும் வளரும்போது சகல பூண்டுகளிலும் பெரிதாகி ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் " என்றார் இயேசு.
அதன்படி திருநெல்வேலி அத்தியக்ஷாதீன திருச்சபையின் ஆரம்பம் மிகச் சிறியது; அதன் வளர்ச்சியோ மிகப் பெரியது. 1778-ம் ஆண்டில் 14 பேரடங்கிய திருச்சபை 1960-ம் ஆண்டில் 9920 (80 குறைய 1 1/2 லக்ஷம்) கிறிஸ்தவர்களடங்கிய திருச்சபையாக வளர்ந்திருக்கின்றது. இது ஆண்டவரின் செயலே. அவருக்கே சகல கனமும் மகிமையும் உண்டாவதாக.
கிறிஸ்தியாநகர சேகர சபையும் அவ்வாறே வளர்ச்சியடைந்திருக்கின்றது. அற்பமான ஆரம்பத்தை ஆண்டவர் ஆச்சரியமாய் ஆசீர்வதித்திருக்கின்றார். காலாகாலங்களில் உத்தமமாய் உழைக்கக்கூடிய குருக்களையும் மற்றும் ஊழியரையும் ஆண்டவர் ஏற்படுத்தி, சபைகளை ஆதரிக்கின்றார். இச்சரித்திரத்தில் அது நன்கு விளங்கும்.
மறைந்துகிடந்த ஏடுகளையும் இலக்கியங்களையும் தேடி எடுத்து, அவைகளினின்று இச்சரித்திரத்தை உருவாக்கிய ஆக்கியோனுக்கு எம் நன்றி உரித்தாகுக. இச்சரித்திரத்தை வாசிப்பவர்கள், இவ்வாறே தங்கள் சொந்த சேகரசபை சரித்திரங்களும் எழுதப்படவேண்டுமென்ற ஆர்வங்கொள்வார்களென்பது எமது நம்பிக்கை .
கிறிஸ்தியாநகர சேகர திருச்சபையே, நீ என்றும் வளர்க; நீ என்றும் வாழ்க, கனிதரும் விருட்சமாக நீ என்றும் தழைத்தோங்குக!