தமிழ்நாட்டின் நாகரீகம் அறியாத சிறு கிராமமொன்றில் இளம் பருவத்தைக் கழித்துப், பட்டமேற்படிப்பு படித்தும் வேலையின்றி இரண்டாண்டுகள் தவித்துப், பெற்றோருக்குச் சுமையாக இருந்து, பிறந்தற்கு மிகவும் வருந்தி, நிர்க்கதியாய் இருந்த காலத்தில் காஞ்சி மகாசுவாமிகளின் ஆசியால் வேலை கிடைக்கப் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை முடிந்தவரை செய்ய, மகான்கள் மற்றும் இறையருளேக் காரணமாகும்.
அரசு சார்ந்த குழுமம் (PSU) ஒன்றில் உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின்பு, மனிதருள் தெய்வமாக வாழ்ந்து, பலவாறான அற்புதங்கள் ஆற்றி, அடியவருக்கு அநேக விதத்தில் பேருதவி புரிந்து, சமாதியேற்ற உத்தம புருடர்களின் வரலாற்றைப் பாடலாக எழுத உத்வேகம் பெற்று, அதன் விளைவாக மகாசுவாமிகளின் வரலாற்றை விவரிக்க எடுத்த ஒரு சிறிய முயற்சிதான் இந்நூல். சிரடி மகான் ஆற்றிய அற்புதங்கள் சிலவற்றைப் பாடலாக “சிரடி சாயி திருவிளையாடற் புராணம்” (கிரி டிரேடிங் ஏஜென்சி பிரசுரம்) என்னும் புத்தகத்திலும், காஞ்சி மகாசுவாமி நிகழ்த்திய அற்புதங்கள் சிலவற்றைத் தொகுத்துப் பாடலாக “காஞ்சி மகாசுவாமி திருவிளையாடற் புராணம் (முதலாம்பாகம்)” (Notion Press, சென்னை பிரசுரம்) என்னும் புத்தகத்திலும் ஆசிரியர் எழுதியுள்ளார். இராகவேந்திர சுவாமிகள் திருவிளையாடற்புராணம், இராமகிருட்டிணர் திருவிளையாடற்புராணம், தூய அன்னை சாரதாதேவி திருவிளையாடற்புராணம் என்பன ஆசிரியரின் இதர நூற்களாகும். இந்நூற்களையும் படித்து மகான்களின் ஆசிகளுக்குப் பாத்திரமாக ஆகுமாறு ஆசிரியர் வேண்டுகிறார். நம்பிக்கையுடன் படிக்கும் அடியார் அனைவருக்கும் மகாசுவாமிகள் பதினாறு வகைச் செல்வங்களையும் அருளுமாறு நூலாசிரியர் மனப்பூர்வமாக வேண்டுகிறார்.
புத்தக விற்பனையால் கிடைக்கும் தொகையெல்லாம் காஞ்சி சங்கர மடத்திற்கு நேரடியாகச் செலுத்தப்படுகிறது. தமிழ்கூறும் நல்லுலகு இப்புத்தகத்தையும், ஆசிரியரையும் ஆதரித்தால், இதுபோன்ற பல நூற்கள் எழுதிப் பிரசுரிக்க ஏதுவாகும். மகாசுவாமி பாதமே சரணம், மகாசுவாமி பாதமே துணை!