நெடும்புனல்
vதமிழ் இலக்கணத்தைத் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்று வகையாகக் கொண்டு யாப்பு அணி என்பனவற்றைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் முறையே செய்யுளியல், உவமவியல் என்பவற்றுள் அடக்குவர். பிற்காலத்தார் இலக்கணங்களை வடநூல் முறையைப் பின்பற்றி ஐந்தாகக் கொண்டனர். தொல்காப்பியர்காலத்துக்கு முன்னும் பின்னும் யாப்பு நூல்கள் பல தமிழில் இருந்தன. அவிநயம், காக்கைப்பாடினியம், சிறுகாக்கைப்பாடினியம், நற்றத்தம், பல்காயம், மயேச்சுவரம் முதலான யாப்பிலக்கண நூல்கள் யாப்பருங்கல விருத்திக்கு முன்னரே பல்கியிருந்தன. யாப்பருங்கலமும் யாப்பருங்கலக்காரிகையும் தோன்றிய பின்னர் அவை யெல்லாம் வழக்கொழிந்தன. அவற்றுள் தொல்காப்பியச் செய்யுளியல் ஒன்றே எஞ்சி நிற்கின்றது.
தொல்காப்பியர், செய்யுளியலில் முதல் நூற்பாவில் செய்யுள் உறுப்புகளாக முப்பத்து நான்கு உறுப்புகளைப் பட்டியலிடுவார்.(செய்.313). இவற்றுள் எழுத்து, அசை, சீர் முதலான இருபத்தெட்டு உறுப்புகளைச் செய்யுள் அடிப்படை உறுப்புகள் என்றும் அம்மை முதலான எட்டினைச் செய்யுள் பொருள் புலப்பாட்டுக்கு உதவும் உறுப்புகள் என்றும் வகைபடுதற்கியலும்.
வனப்புக் கோட்பாட்டு வளர்ச்சி.