என் இனிய சிறார்களுக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள். நீதிக்கதைகள் என்பது சிறார்களின் வாழ்வை அருமையாக செப்பனிடும் ஒரு தெய்வீகப்பணி. அதை செய்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஓவ்வொரு கதையின் தாக்கமும் உங்களின் வாழ்வின் முன்னேற்றத்தை நிச்சயம் உறுதிப்படுத்தும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அடுத்தவர் மீது பொறாமை படுவதால் நம் உள்ளம் தான் பாதிக்கப்படுமே ஒழிய அதனால் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்பதை என் முதல் கதையிலேயே கூறியிருக்கிறேன். அதே போல் தான் நம் வீட்டில் இருக்கும் முதியோர்களையும் நாம் வளர்க்கும் கால் நடைகளையும் எப்படி பேணி அன்பு காட்ட வேண்டும் என்றும், தவறு செய்த யாவருக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் அளித்தால் நிச்சயம் எந்த சிறாரும் தவறு செய்திருந்தால் கூட திருந்துவார்கள் என்று “எழில் திருந்தினான் எப்படி” என்ற கதையில் கூறியிருக்கிறேன். அதேபோல் காட்டு விலங்குகள் பற்றியும் சற்று வேடிக்கையாகவும் அதே சமயம் கதையின் வாயிலாக சமயோஐpதத்தின் முக்கியத்தையும் காட்டின் வளம் அழியாமல் இருக்க வேண்டும் என்றால் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தையும் ஆழமாக கூறியிருக்கிறேன். என் அன்பு சிறார்கள் கதைகளை ஆழமாக படித்து வாழ்வை மேம்படுத்திக்கொள்ள என் இதயபூர்வ நல் வாழ்த்துக்கள்.